ஒரு மொழியில் பூரண தேர்ச்சி பெற்றவர்களால் பிறிதொரு மொழியை வெறுக்கவியலாது. மாறாக, தேர்ச்சி பெற்ற மொழியின் வழி மற்ற மொழிகளையும் அறிந்துகொள்ள தீவிர முனைப்பே ஏற்படும். அவற்றில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது பூரணமான கல்வியின் அறிகுறி.
எனது காலஞ்சென்ற பெரியப்பா ஸ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார் அவர்கள், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். கம்பனில் ஊறியவர். 18 நூல்கள் எழுதியுள்ளார். சம்ஸ்க்ருதத்தில் போதிய பாண்டித்யம் பெற்றவர். ஆங்கிலத்தைப் பட்டறிவால் அறிந்துகொண்டவர். மணிப்பிரவாளத்தைத் தனது சொந்த முயற்சியால் தெளிந்தவர்.
தனது இராமாயண உபன்யாசத்தில் வால்மீகி, கம்பன், ஆழ்வார்கள், ஆங்கில உரையாசிரியர்களின் கருத்துகள் முதலியவற்றை ஒப்பிட்டுப் பேசி வந்த அவர், துளசி ராமாயணம் புரியவேண்டும் என்பதற்காகத் தனது 55வது வயதில் இன்னொரு ஆசிரியரிடம் ஹிந்தி கற்றுக் கொண்டார். அதன் பின்னர் தனது உரைகளில் துளசி, கபீர் தாசர் என்று அவர்களையும் கொண்டு வந்தார். ‘மிதிலையில் மூவர்’ என்னும் தலைப்பில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் காட்டும் மிதிலை நிகழ்வுகளை அருமையாகச் சித்தரிப்பார். பின்னர் ‘திரிவேணி இராமாயணம்’ என்றும் ஒப்பாய்வு உரைகளை நிகழ்த்தினார்.
இவை போதாதென்று, தியாகையர் கிருதிகள் புரிய வேண்டும் என்பதால் அவ்வப்போது தெலுங்கு பேசும் வைஷ்ணவப் பெரியவர்களிடம் பேசி, தெலுங்கு கீர்த்தனைகளின் பொருளை உள்வாங்கிக் கொண்டார். தியாக ராஜ கீர்த்தனைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவர் நீண்ட நாட்கள் படித்துக் கொண்டிருந்தார்.
தனது இறுதி நாட்கள் வரை சம்ஸ்க்ருதத்தில் முனைவர் பட்டம் வாங்கவில்லை என்கிற ஏக்கம் இருந்தது தெரியும். அவருக்கு அதற்கான நேரம் இருக்கவில்லை. இறுதிவரை வால்மீகி, நாராயண பட்டத்ரி, கம்பன், ஆழ்வார்கள் என்றே அமரரானார்.
‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்’ என்று திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்க்காரர்களைப் பற்றிச் சொன்னதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார் அப்பெரியவர்.
ஆக, மொழி வெறி ஆகாது. மொழியின் பால் தூய காதல் இருப்பின், மற்ற மொழிகளை வெறுக்கவியலாது. தனது தாயிடம் அன்பு செலுத்தும் குழந்தை, பிறிதொரு தாயை வெறுப்பதுண்டோ ?
V R Sounder Rajan
February 7, 2018 at 2:28 am
நல்ல பதிவு உபய வேதாந்திகளுக்கு மீண்டும் வேலை /வேளை வந்திருக்கிறது .
LikeLike
பா.ஸ்ரீநிவாசன்
February 10, 2018 at 2:08 am
மிக நல்ல பதிவு.
அமரர் உயர்திரு ஆ.இராமபத்திரன் அவர்களிடம் தமிழ் கற்றமை என் வாழ்வில் கிட்டிய பெரும் பேறாகும்.
LikeLike
Amaruvi Devanathan
February 11, 2018 at 12:17 am
நன்றி ஐயா. தொடர்ந்து இணைந்திருங்கள்.
LikeLike
Dhivakaran Santhanam
February 10, 2018 at 10:51 pm
Noble soul!! Wish I had such motivation!!
LikeLike
Lakshmi Narasimhan
February 11, 2018 at 1:48 pm
Excellent writing Mr. Amaruvi.
LikeLike
Siva Prasath
July 15, 2018 at 10:02 pm
நானும் அமரர் உயர்திரு ஆ.இராமபத்திரன் அவர்களின் மாணவன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் படிப்பைவிட ஒழுக்கம் மிக முக்கியம் என்பதை எப்போதும் போதித்துக்கொண்டிருந்தவர். நான் என்றென்றும் மறக்கமுடியாத ஒரு நல்லாசிரியர். இந்த பதிவிற்கு மிக்க நன்றி.
LikeLike