வெண்பா எழுதுவது எளிதல்ல. வேதாந்த தேசிகனின் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் 1008 வடமொழிச் சுலோகங்களையும் வெண்பா வடிவில் எழுதியுள்ளார் ஒரு பெரியவர். ஆத்தூர் வீரவல்லி ஸந்தான ராமன் என்பது அந்த அடியாரின் பெயர்.
ஸந்தான ராமன் மன்னார்குடி, தேரழுந்தூர், பம்பாய் என்று சென்று படித்துவிட்டு மதுரையிலும், சென்னையிலும் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். நெய்வேலியில் இருந்தவாறு 1008 வெண்பாக்களை இயறியுள்ளார். இவ்வளவுக்கும் அவருக்குக் கண்பார்வை -15 என்கிற அளவில் இருந்துள்ளது.
சுத்தானந்த பாரதியார் இம்மொழிபெயர்ப்பைச் செய்யப் பணித்துள்ளார் என்று எழுதுகிறார் இவ்வடியார். 1969ல் இந்த நூல் வெளிவந்துள்ளது. ‘எனக்குத் தமிழிலும் புலமை இல்லை, ஸம்ஸ்க்ருதமும் போதிய பாண்டித்யம் இல்லை, இறையருளால் எழுதினேன் என்று நூலின் முன்னுரையில் தெரிவிக்கும் இவ்வடியார் 1989ல் நெய்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
உதாரணத்திற்கு அவர் எழுதிய ஒரு வெண்பா:
வேதமும் வேதத் தமிழ்மறையும் கல்லாதார்ஏதுமிலா தேத்தி யிணையடியை – போதுய்யமாறன் சடாரியாய் மாறிப் பிறந்தானேகூறவோ சொல்லீர் குணம்
‘ஏ பாதுகையே, மக்கள் வேதத்தைக் கற்றிருக்க வேண்டும். அதனுடன், வேதத்தின் தமிழாக்கமான திருவாய்மொழியையும் (நம்மாழ்வார் பிரபந்தங்கள்) கற்றிருக்க வேண்டும். அதனால் தான் நீ நம்மாழ்வார் வடிவெடுத்து வந்து திருவாய்மொழி இயற்றினாய். இருப்பினும், இவற்றைக் கல்லாதவரும் உய்ய வேண்டுமே என்பதற்காக, நீ சடாரி வடிவாய் வந்து அனைவருக்கும் அருள்கிறாயே’
ஸ்வாமி தேசிகன் ஓரிரவில் பாடிய ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் நூல் ரங்கநாதரின் பாதுகையைப் பற்றியது அன்று, நம்மாழ்வாரைக் குறித்துச் செய்த போற்றி நூல் என்பதாக இந்த வெண்பா அமைகிறது.
ஒவ்வொரு வெண்பாவும் ஆழ்ந்த பொருளுடையதாக அமைந்துள்ளது. தமிழின் சுவை, பக்தி நெறியின் பெருமை, நம்மாழ்வாரின் பெருமை, திருமாலின் கருணை, சரணாகதித் தத்துவம் என்று பொருள் வெள்ளம் கரை புரண்டோடும் இந்த நூல் கீழ்க்கண்ட விலாஸத்தில் உள்ளது எனத் தெரிகிறது. அன்பர்கள் பயனடையுங்கள்.
ஶ்ரீ பகவன் நாம பப்ளிகேஷன்ஸ்
ராம மந்திரம், 2 வினாயகம் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை.
தொ.பே: 4893736