2017-ஜூன்
10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள்.
வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம் அது என்பதால் இயல்பாகவே ரத்தத்தில் தமிழ் உள்ள பெண் அவள்.
பள்ளிக்குச் சென்றவளிடம் தலைமை ஆசிரியர்,’ 10வதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துட்டு காமர்ஸ் போறியா? பயாலஜி குரூப் போ. படிச்சு ஸ்கூலுக்கு ரேங்க் எடுத்துக் குடு’ என்று சொல்ல, குழந்தையும் சரியென்று தலையாட்டிவிட்டது.
கெமிஸ்றி புரியவில்லை, பிசிக்ஸ் ஆசிரியருக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை->புரியவில்லை,தமிழும் கணிதமும் மட்டும் விரும்பிப் படித்தாள்.
+1ல் சரியாகப் பயிலாததால் ஆசிரியர்களிடம் திட்டு. ’10வதுல எப்படி மார்க் வாங்கின?லக்கா?’என்பது போன்ற கேலிப் பேச்சுக்கள்.
சொல்லமுடியாமல் தவித்துள்ள குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. ஓட்டை மருத்துவர்கள் அனாசின் முதல் அமிர்தாஞ்சன் வரைகொடுத்துள்ளார்கள்.மைக்ரேன் என்று சொல்லி அதற்கும் மருந்துகள்.
தலைவலி குறையவில்லை.
யோகாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகி, ஶ்ரீஶ்ரீ யோகாமையத்தில் சேர்ந்தாள்.அந்த மையத்தின் தலைவி குழந்தையைப் பூரணமாக ஆராய்ந்து, இவள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது எனச் சொல்ல, அடுத்து அக்கு பிரஷர் மையம். சிகிச்சை பலனின்றி மன நல மருத்துவர்.
தீர ஆராய்ந்த மருத்துவர் குழந்தைக்கு உடல் உபாதைஒன்றுமில்லை. மனம் சார்ந்த அழுத்தம் என்று விளக்கியுள்ளார்.அதுவரையாரிடமும் பேசாத அப்பெண் குழந்தை,மருத்துவரிடம் பள்ளி, படிப்பு, தேர்வு, இவை சார்ந்த அழுத்தங்கள் என்று சொல்லியுள்ளது.
‘உங்களுக்குக் குழந்தை முக்கியமென்றால் பாடத்தைத் திணிக்காதீர்கள்’ என்னும் அறிவுரையுடன்,விளையாட்டு,பொழுதுபோக்கு, விருப்பமான பாடம்,இசை-என்று இருக்கும்படிச் சொல்லியுள்ளார் மருத்துவர்.
குடும்பம் பெரும் கவலையில் உள்ளது.
ஆசிரியர்களே/பள்ளித் தாளாளர்களே/பெற்றோரே:
- குழந்தைகள் இன்னது படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள்.
- முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தால் வழி காட்டுங்கள்.
- உங்கள் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டிப் பிள்ளைகளைப் பலியாக்காதீர்கள்.
தமிழ் நாட்டுப் பிள்ளைகள் அபிமன்யூவைப் போல் ஒரு வியூகத்தில் சிக்கியுள்ளார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள். வெளிவர வழி தெரியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். பள்ளிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், பெற்றோர் தத்தமது சுய பெருமைக்காகவும் பிள்ளைகளின் ரத்தத்தையுறிஞ்சுகிறார்கள்.
2018 – மே
குழந்தையை ஒரு வாரமாகப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவளது தாய் சொன்னார். தலைவலி குறைந்தபாடில்லை. வேறு ஊருக்குச் சென்று வரலாமே என்று பேசிப்பார்த்தேன்.
‘அடுத்த வாரம் வீக்லீ டெஸ்ட் இருக்கே. மார்க் வரல்லேன்னா?’ என்கிறாள் குழந்தை.
தெய்வம்தான் துணைநிற்க வேண்டும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
சரியான நேரத்தில் சரியான அலசல்
LikeLike
நன்றி ஐயா
LikeLike