வாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும்? இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம்.
பெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் கூட்டுறவு வங்கியில் தாற்காலிக பியூன் வேலை. பின்னர் அதற்கான தகுதிகள் இல்லையென்று சொல்லி அனுப்பிக் குஞ்சு கிருஷ்ணன் கோவிலில் வேலை கொடுத்தார்கள். குஞ்சு கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யத் தகுதி உண்டு என்று பொருள் கொள்க.
ஒரு பெண்ணும் ஆணுமாக இரு தங்க விக்கிரகங்கள் பிறந்தன. சோறிருந்தால் மட்டுமே விக்கிரகமானாலும் பளபளக்குமாதலால் விக்கிரகங்கள் வதங்கியேயிருந்தன. அறிவு மட்டும் பிரகாசமாயிருந்தால் போதும் என்று குஞ்சு கிருஷ்ணன் நினைத்தான் போல. குழந்தைகள் படிப்பில் பிரகாசித்தனர்.
பாலக்காட்டையர் மனையில் சமையல் செய்யக் கூப்பிட்டார்கள். சாரதைக்குப் போக இஷ்டம். ஆசாரக் குறைவென்று சொல்லி நம்பூதிரி சமூகக் கட்டுப்பாடு தடுத்ததால் அந்த வருமானமும் இல்லை.
தரித்ரம் பின்னாலேயே வரும் என்பதை நிரூபிக்க வேண்டி, நேராகச் சென்ற லாரி தானாகத் திரும்பி, தெருவோரம் சென்றுகொண்டிருந்த நம்பூதிரியின் காலைக் காவு கொண்டது. கையில் வீட்டில் சமைத்த சாதம் இருந்ததைக் கண்டுபிடித்த சமூகம், குஞ்சு கிருஷ்ணனுக்குக் கோவிலில் நீராடியே சமையல் செய்து நைவேத்யம் செய்யவேண்டிய நம்பூதிரி வீட்டில் இருந்து சோறு கொண்டு சென்று நைவேத்யம் செய்ததைக் கண்டு பிடித்துப் பணி நீக்கம் செய்தது.
இருந்த வேலையும், இலவச இணைப்பாய் ஒரு காலும் போன நம்பூதிரி, சாரதையின் நகையை வைத்து ஒரு பெட்டிக் கடை வைத்தார். நாற்சந்தியின் அருகில் இல்லாததாலும், உத்தமோத்தம வைசிய வியாபார யுக்திகள் கைவரப் பெறாத நம்பூதிரியின் கடையும் நொடித்து, உள்ளதும் போனது.
குடும்பம் குடியிருக்கும் சாரதையின் பூர்வீக வீட்டை விற்கலாம் என்றால் அதற்கு அவள் உடன்படவில்லை. ‘பிதுரார்ஜிதம் ஏதாவது ஒன்றாவது இருக்கட்டும், பெண் குழந்தை வேறு இருக்கிறதே’ என்ற சாரதையின் கெஞ்சலில் இருந்த நியாயம் நம்பூதிரிக்குப் புரிந்தது.
நம்பூதிரி, ஒற்றைக் காலுடன், ஊர்ப் பெரிய மனிதரான எம்.எல்.ஏ.யின் இரு கால்களிலும் விழுந்ததால் அவரது குடும்பக் கோவிலில் பட்டனானார். 200 ரூ சம்பளம்.
குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் நல்ல முன்னேற்றம். படிப்புச் செலவிலும் தான். நம்பூதிரி வீட்டை விற்றுவிடும் படி சாரதையிடம் கெஞ்சினார். வீடும் போனால் நடுத் தெருதான் என்பதால் சாரதை ஒப்புக்கொள்ளவில்லை.
‘வெள்ளிக் கிழமைக்குள் பணம் கட்ட வேண்டும்’ என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, ‘இன்னிக்குள்ள முடிஞ்சுடும்’ என்று சொல்லிச் சென்ற நம்பூதிரி ஆசாரியின் கடையில் நல்ல மாம்பிடி போட்ட கத்தியை வாங்கினார்.
‘அப்பா வந்துட்டார்’ என்று வந்து நின்ற மகளின் கழுத்தில் கத்தியைச் சொருகிய நம்பூதிரி, இரண்டே வெட்டில் மகனையும் சாரதையையும் சாய்த்தார். மனைவி போகும் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தன்னை விளக்கேற்றினார்.
‘பிச்சை எடுக்க விடமாட்டேன்’ என்று சொன்னபடியே அவர் எரிந்ததாக மறு நாள் பேப்பரில் செய்தி வந்தது, ஐந்தாவது பக்கத்தில்.
‘அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடரும்’: பாஸ்வான் அறிவிப்பு. முதல் பக்கத்தில்.
——————————————–
20-10-1997 அன்று டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதிய கதை.