மாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.
பிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.
சூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.
அத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.
வட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.
சீனா தனது சோஷலிசப் பொருளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

இந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.
பின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.
பிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் நிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.
ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தேவை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன?
- தென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.
- அனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.
- யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)
- ஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்
- அமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்
- அமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது
பாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.
இது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).
கவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு 2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.
இது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்தியாவுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.
நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.

சிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)
இம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:
- இந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்
- இணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- போதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Enterprise Singapore – National Skills Development Corp கூட்டியக்க ஒப்பந்தம்
சிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.
இந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
நான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.
இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.
ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.
இவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.
பேஸ்புக்கில் இணைந்திருக்க :
https://www.facebook.com/amaruvidevanathan
தரவுகள்:
- http://www.thejakartapost.com/academia/2018/05/30/indian-pm-modis-oleh-oleh.html
- https://www.straitstimes.com/singapore/lets-have-indian-and-singapore-students-take-part-in-joint-hackathon-modi-to-pm-lee
- https://www.straitstimes.com/singapore/modi-in-spore-for-three-day-official-visit
- https://www.businesstimes.com.sg/government-economy/singapore-startups-to-gain-faster-access-to-indias-startup-ecosystem
- https://www.republicworld.com/world-news/south-asia-news/on-pm-modis-visit-india-and-singapore-sign-8-mous-heres-all-you-need-to-know
- http://theindependent.sg/modi-does-a-lee-kuan-yew-to-stamp-out-corruption-in-india/
- India Rising – Ravi Velloor