‘என்ன தம்பி, ஊரா, வெளியூரா?’ தாடி வைத்த ஓட்டுனரின் இறுக்கமான முகத்தைத் தளர்த்த Ice-Breaker.
‘வெளியூர்.’
‘எந்தப் பக்கம்?’
‘சிதம்பரம்’
‘அட, நம்ம பக்கம் தான். எனக்கு தேரழுந்தூர், மாயவரம் பக்கம்.’ அவர் முகத்தில் லேசான புன்முறுவல்.
‘வந்து எவ்ளோ நாளாச்சு?’
‘நாளீல்லீங்க. வருசம் 10 ஆச்சுது’
‘அப்ப சரி. நீங்க மெட்ராஸ் காரர் தான்.’
‘இல்ல சார். என்ன இருந்தாலும் சிதம்பரம் மாரி வராது..’ இது அமல்ராஜ்.
‘அது சரி. சொந்த ஊர் எப்பவுமே அப்படித்தான்.’
‘அதில்லீங்க. வந்து 10 வருஷம் ஆச்சு. ஆனா, எதுக்கு ஓடறேன், ஏன் ஓடறேன்னே தெரியல்ல. ஊர் என்ன சேர்த்துக்க மாட்டேங்குது. அன்னியமாவே இருக்கு சார்.’
‘அப்டியா சொல்றீங்க?’
‘அட ஆமாங்க. காலைல ஏழு மணிக்கு ஓட்ட ஆரம்பிச்சா, சோறு தண்ணி நேரத்துல கிடையாது. நேரங்கெடைச்சா சாப்பாடு, இல்லாட்டி டூட்டி கிடைக்காத போது சாப்டுக்குவேன். ஒரு வகைல நானும் இந்தக் காரும் ஒண்ணுதான். காருக்கும் எங்க போறோம்னு தெரியாது, ஏன் போறோம்னு தெரியாது. எனக்கும் அப்டித்தான்.’ அடுத்த வேதாந்த பாடம் துவங்கியது போன்று உணர்ந்தேன். அவரைப் பேச விட்டு அமைதியானேன்.
‘ஊர்லேர்ந்து பிரண்டு பேசினான். ஒரு பத்து மணி இருக்கும். ‘என்னாடா சாப்டியான்னான்?’ ‘இல்ல’ன்னேன். ‘காலைல என்ன சாப்டே’ன்னான்.’இனிமேதான் சாப்டணும்’னேன்.’டேய் பாவி, இப்டியே போனா செத்துடுவ டா. வேளைக்குத் தின்னமுடியாமா அப்டி என்னடா வண்டி ஓட்றது?’ன்னான். ரொம்ப பயமாயிடுச்சு.’ என்றார்.
‘பிரண்ட் என்ன பண்றார்?’
‘பெருசா ஒண்ணும் இல்லை. காலைல ஆறு மணிக்கு எந்திரிக்கறான். எட்டு மணி வரைக்கும் வயலுக்குப் போயி மாடு கன்னு மேயவுட்டு, வயலப் பார்த்துட்டு பத்து மணிக்கி கார்ப்பெண்டர் கடை வெச்சிருக்கான்ல, அங்க போயிருவான். மதியம் ஒரு மணிக்கு வீடு. சாப்பாடு, ஒரு மணி நேரம் தூக்கம். மறுபடியும் மரவேலை, அஞ்சு மணிக்கு வயல், ஏழு மணிக்கு டீக்கடைல ஊர் பிரண்ட்ஸ்ஸொட அரட்டை, எட்டு மணிக்கு வீடு, பத்து மணிக்கு தூக்கம். வாழ்க்கைன்னா இது தான் சார் வாழ்க்கை’
‘அப்ப ஊருக்குப் போகலாம்ல?’
‘அது இப்ப முடியாது சார். ஊருக்குப் போனா வேலை ஒண்ணும் தெரியாது. விவசாயம் செய்யத் தெரியாது. அங்கயும் வண்டி ஓட்டணும்னா பிரயோஜனமில்லை. அப்பாரு ஐ.டி.ஐ. படிடான்னு சொன்னாரு. நான் ஊர் சுத்தினேன். இப்ப கைவேலை ஒண்ணும் தெரியல்ல. வண்டி ஓட்றது மட்டும் தான் வழி.’
‘எத்தனை நாள் வண்டி ஓட்டுவீங்க?’ சுயத் தாழ்ச்சிப்பேச்சைக் குறைக்க நடுவில் ஊடுறுவினேன்.ராஜாஜியின்தொழிற்கல்வியைப் புறக்கணித்த தமிழ்ச் சமூகத்தின் மீதிருந்த வருத்தம்அதிகமானது.
‘முப்பத்தஞ்சு வயசாச்சு. அம்பது வயசு வரைக்கும் வண்டி ஓட்டணும். அதுக்குள்ள புள்ளைங்கள்ளாம் படிச்சுடும். அம்பது வயசுல சேர்ந்தது போதும்னு ஊருக்குப் போயி ஒக்காந்துடணும். இதான் என் பிளான்,’ என்ற அமல்ராஜின் கண்களில் தீவிரம் தெரிந்தது.
‘இப்ப ஏதாவது சேர்த்திருக்கீங்களா?’
‘ஒண்ணும் இல்லை சார். நிறைய சம்பாரிக்கறேன். ஓலா புண்ணியத்தில நிறைய காசு வருது. ஆனா ஒண்ணும் நிக்க மாட்டுது. இந்த ஊரு எல்லாத்தையும் புடுங்கிக்குது,’ என்ற அமல்ராஜ் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.
‘ஊர்ல இவ்வளவு சம்பாரிச்சேன்னு வெச்சுக்குங்க, நான் தான் ராஜா. ‘
எல்லாத் தொழில்களுமே அப்படித்தான் என்ற ஞானம் உள்ளிறங்குவதை உணர்ந்தேன். ஊரும் நாடும் வேறுபடலாம், ஆனால் அடிப்படை உண்மைகள் வேறுபடுவதில்லை என்று அசரீரி ஒலிக்கக் கேட்டேன்.
‘முன்னாடியெல்லாம் ரொம்ப கோவம் வரும் சார். போட்டு ஒடச்சுடுவேன். இப்ப, கார் ஓட்டறதுல ரொம்ப பொறுமை வந்திருச்சு. முப்பத்தஞ்சு வயசுல வாழ்க்கையே கண்ணு முன்னால தெரியற மாதிரி இருக்கு. சட்டுனு உள்ள பூர்ற டூ வீலர் காரனப் பார்த்தா பாவமாத்தான் இருக்கு. முன்னெல்லாம் அவன் சட்டையப் புடிப்பேன். இப்பலாம் ‘போயிட்டுப் போறான், அவனுக்கு என்ன அவசரமோ’ன்னு தோணுது. ‘இங்க மெட்றாஸ்லதான் எல்லாரும் ஓடணும். ஊரு தான் அவன் உள்ள பூந்து ஓட்றதுக்குக் காரணம். அவன் என்ன செய்வான்’னு நினைச்சு மன்னிச்சு விட்டுடறேன்.’
நான் மவுன விரதம் அனுஷ்டித்தேன்.
‘எனக்கு அம்பது வயசுக்குள்ள ஊருக்குப் போகணும். அந்தப் பையனுக்கு இன்னும் முன்னாடியே ஊருக்குப் போகணுமோ என்னவோ. போயிட்டுப் போறான். அதோ டூ-வீலர்ல ஒட்டிக்கிட்டுப் போவுதே ஒரு பொண்ணு, அது வாழ்க்கை பெசகாம நல்லா வரணுமேன்னு தோணுதுங்க. வண்டி ஓட்ற தா*ளி அவளைக் கல்யாணம் பண்ணி நல்லா வெச்சுக்கணும்னு மனசு ஏங்குது. எனக்குப் பொட்டப்புள்ள இருக்கில்ல?’ என்ற அமல்ராஜ் பொறுப்பான, சமூக அக்கறையுள்ள தந்தையாக நின்றார்.
இறங்குமிடம் வரவே, ‘தம்பி, எல்லாம் நல்லா நடக்கும். உடம்பப் பார்த்துக்குங்க. உங்கள நம்பி பிள்ளைங்க இருக்காங்க. வேளைக்குச் சாப்பிடுங்க. சீக்கிரம் சிதம்பரம் போயி சந்தோஷமா இருங்க,’ என்றவனை வித்தியாசமாகப் பார்த்தார் அமல்ராஜ்.
கனவு மெய்ப்பட வேண்டும்.
ஓலா என்னும் ஞான ரதம், அதில் உலா வருகையில் கிடைப்பது ஞான தரிசனம்.