தமிழகக் கிராமங்களில் மீள் குடியேற்றம் அவசியம் என்பது குறித்து ‘ஒரே நாடு’ ஆசிரியர் திரு.நம்பி நாராயணன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
வேலையில் உள்ள போது எங்கெல்லாமோ இருக்கவேண்டியுள்ளது. ஆனால், வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அவ்வண்ணமே இருக்க வேண்டிய தேவை என்னவென்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
சென்னை, மும்பை, முதலிய பெருநகரங்களில் புறாக்கூடு வாழ்க்கை ஓய்வு பெற்ற பின்னரும் தேவையா? வசதிகள், மருத்துவம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு 75 வயது வரையாவது பூர்வீகக் கிராமங்களில் வசிப்பது நமது முன்னோர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன் அல்லவா?
60-70 களில் வேலை நிமித்தம் வெளியேறிய மக்கள் மீண்டும் குடியேற வேண்டும். கைங்கர்யங்கள் நிறைய உள்ளன. ஊரில் சனாதன, சம்பிரதாயக் கூட்டம் அதிகமாகும், நங்கைநல்லூர் போன்ற புதிய நகரங்களில் நடக்கும் நித்யப்படி உற்சவங்கள் பூர்வீகக் கிராமங்களில் நடக்க வேண்டும்.
இந்த மீள் குடியேற்றத்திற்குத் தமிழகத்தில் உள்ள சமூக அமைப்புகள் துணை நிற்க வேண்டும். தாம்பிராஸ், வன்னியர் சங்கங்கள், தேவர் அமைப்புக்கள், இன்னபிற சமூக அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும் என்று எழுதமுடியவில்லை. அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான அமைப்புகள் முனைந்து செயல்பட வேண்டும்.
கிராமங்கள் தற்போது முன்னேறியேயுள்ளன. மின்வசதி, செல்போன் வசதி, இணையம், வங்கி என்று பலதும் ஏற்பட்டுள்ளன. பிரயாண வசதிகளும் அப்படியே.என்ன இருந்தாலும் சென்னை,மும்பைபோன்ற வசதிகள் இரா.அதேசமயம் அவ்விடங்களில் உள்ள அவலங்களும் இரா. நெருக்கடி, விபத்துக்கள், மரியாதை குறைந்த பேச்சுக்கள் முதலியன.
கிராமங்களில் சென்று செய்வதென்ன என்னும் கேள்வி எழலாம்.கிராமங்களில் சென்று வசிப்பது என்பதேநாம் செய்யும் பெரும் சேவைஎன்று சொல்வேன்.நகரங்களில் உள்ள வசதிகளைக் கிராமங்களில் ஏற்படுத்த சிலராவது முயல்வர்.அவ்வழியாகக் கிராமங்கள் முன்னேற்றம் அடையும். தற்போது ஏ.டி.எம். வசதிகள் கூட வந்துவிட்டன.அப்துல்கலாம்’ PURA – Providing Urban Amenities in Rural Areas’என்று கனவு கண்டார். ஓரளவு மெய்யாகி வருகிறது.
முன்னெல்லாம் தேரழுந்தூர் செல்லும் போது மெழுகுவத்திக் கட்டு வாங்கிச் செல்வதுண்டு.எப்போதாவது மின்சாரம் வரும் என்பதால்.தற்போது அதற்கான தேவையே இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக, கிராமங்களில் உள்ள பாரம்பரியக் கோவில்கள் பயனடையும். சிவன்களும்,பெருமாள்களும்,குலதெயவங்களும் மகிழ்ச்சியில் திளைப்பர்.
உதாரணம் சொல்கிறேன்:50களில் தேரழுந்தூர் உற்சவத்தில் கோவிலில் இருந்து சன்னிதித் தெரு வழியாகத் தேரடிக்கு எழுந்தருளப் பெருமாளுக்கு 2:30மணி நேரம் ஆகும்.தற்போது 8 நிமிடங்கள். இந்த திவ்யதேசத்தில் உற்சவங்கள் நடக்கின்றன.பலதில் பெருமாளுக்கு அன்னம் கூட இல்லை.
வில்லிவலம் என்றொரு கிராமம்.பரம வைதீகர்கள் வாழ்ந்த பூமி.என் தாயாரின் சொந்த ஊர்.அங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் என தாய்வழிப் பாட்டனார் தினமும் ஆராதனம் செய்தார்(தனது போஸ்ட் ஆபீஸ்,மணியம் வேலைக்கு இடையில்).பின்னரேஉணவு.தற்போது கோவிலில் தினமும் ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கு மட்டும். கைங்கர்யத்துக்கு ஆள் இல்லை. ஆள் இல்லையென்பதும் உண்மை, மனதில்லை என்பதும் அப்படியே.
நாவல்பாக்கம் முதலான ஊர்களில் இருந்து ‘இது வில்லிவலம் பெருமாளுக்கு’, ‘இது இன்ன பெருமாளுக்கு’ என்று டப்பாவில் சாதம் கொண்டு வந்து கண்டருளப் பண்ணிய காலமும் உண்டு. இப்போது மாலை வேளையில் ஒரே ஒரு விளக்கு. ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்பது போக, ஆதிகேசவன் ஒருவேளை சோற்றுக்காகக் காத்திருக்கிறார்.
இந்த மீள் குடியேற்றம் காலத்தின் கட்டாயம். கிராமமே நமது ஆன்மீகத்தின் வேர். ‘நான் 106திவ்யதேசம் சேவிச்சுட்டேன்’ என்பது பெருமை தான். ஆனால் அதைச் சென்னை, மும்பையில் அமர்ந்து கொண்டு சொல்வது நிச்சயம் பெருமையன்று. ‘திவ்ய தேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக் கொண்டு வாழ வேண்டும்’ என்பது எம்பெருமானாரின் கட்டளை.
மீள் குடியேற்றம் குறித்துப் பண்பாட்டு அமைப்புகள் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
‘இதற்காக நீ என்ன செய்தாய்?’ என்று கேட்கலாம். என்னால் பலதையும் பொதுவெளியில் சொல்ல முடியவில்லை. அனைவருமாக என்ன செய்யலாம் என்று வார இறுதியில் பேஸ்புக் கான்பரன்ஸ் பண்ணலாம்-உங்களுக்கு விருப்பம் இருந்தால். (www.facebook.com/amaruvidevanathan)