‘தம்பிக்கு எந்த ஊரு?’ ஓலா ஓட்டுனரைக் கேட்டேன்.
‘ஏன் கேக்கறீங்க?’ வியப்புடன் கார்த்தீசன்.
‘இல்லை, வீவிதி அளவு மெட்றாஸ் மாதிரி தெரியல, அதான்.’
‘சரிதாங்க. நான் மெட்றாஸ் வந்து ரெண்டு நாளாகுது. எனக்குத் திருத்துறைப் பூண்டி.’
‘அதான பார்த்தேன். ஊரு பிடிச்சிருக்கா?’
‘இல்ல சார். உண்மையா சொன்னா இல்ல. கடுப்பா வருது.’
‘ஏன் அப்டி சொல்றீங்க?’
‘என்னமோ தெரியல. இந்த ஊர் மட்டும் அப்டிதான் இருக்கு.’
‘அது சரி. வேற எங்க இருந்தீங்க?’
‘துபாய்ல. ஆனா அங்க டிரைவர் இல்ல. சூப்பரவைசர்.’
‘ஓ, இப்ப ஏன் ஓட்டறீங்க?’
‘வேலை முடிஞ்சு போச்சு. ஆபீஸ்ல பாலிடிக்ஸ் தாங்கல. முடிச்சுக்கிட்டு வந்துட்டேன்’
‘வேற வேலை செய்யலாமே?’
‘தெரியாதே. ஹெவி வெஹிகிள் லைசன்ஸ் இருக்கு. லாரி வரைக்கும் ஓட்டுவேன். இப்ப ஓலால ஓட்டறேன்’
‘…’
‘சார் ப்ராமினா?’
‘ஆமா. என்னா விஷயம்?’
‘இல்ல வீவிதி பத்தியெல்லாம் கேக்கறீங்களே. பேச்சும் காட்டுது’
‘வேற வேலை தெரியாதுன்னீங்களே, ஊர்ல என்ன வேலை செய்யறாங்க?’
‘நாங்க விஸ்வகர்மாங்க. சிலை செய்யறவங்க. ஆனா நான் கத்துக்கல. இப்ப பீல் பண்றேன்.’
‘ஏன் தம்பி கத்துக்கல?’
‘விதி சார். எவ்ளோ பெரிய கலை? ஒவ்வொரு கோவில்ல போகும் போதும் சிலை, கோவில் இதெல்லாம் பார்த்தா அழுகையா வரும். ஓரளவு தெரியும். ஆனா செய்யத் தெரியாது. பெரியவங்களோட போச்சு. இனிமே கத்துக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா? நாங்களும் பூணூல் போடுவோம்.’
‘கேள்விப்பட்டிருக்கேன்.’
‘ஆமா சார். பாட்டி சொல்லும். நாமும் பாப்பாரவங்களும் ஒண்ணு. அவுங்க வேதம் படிப்பாங்க. நாம வேதம் வழி சிலை செய்வோம். தினமும் காலைல சிற்ப புஸ்தகத்தையும் தொழில் கருவி உளி இதெல்லாம் வெச்சு கும்புடுவோம். இப்ப எல்லாமே கனவாப் போச்சு..’
‘இப்ப கத்துக்கலாமே’
‘எங்க சார். வயத்துப் பொழைப்பே பெருசா இருக்கு.’
‘…’
‘நீங்க வேதமெல்லாம் சொல்லுவீங்களா?’ யாரோ தலையில் அடித்தது போல் உணர்ந்தேன்.
‘இல்லப்பா. அதுக்கு பாக்கியமில்ல. அதுக்கான படிப்பு படிக்கல.’ குற்ற உணர்ச்சியில் குறுகினேன்.
‘அப்டியா சார். என்ன செய்யறது? எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும் சார்.’
‘…’
‘பூணுல் எதுக்கு சார் போடறாங்க? தெரிஞ்சுக்க கேக்கறேன். தப்பா நெனச்சுக்காதீங்க.’
‘வண்டி ஓட்றதுக்கு முன்னாடி எதுக்கு லேர்னர்ஸ் லைசன்ஸ் எடுக்கறாங்க? அது மாதிரி தான் இதுவும். படிக்கறதுக்கு ஒரு ஆரம்பக் குறியீடு.’
‘ஓ ஆமாம். எங்கள்ள சில்ப சாஸ்த்ரம் படிக்கறதுக்கு முன்ன போடுவாங்க. ஆனா நான் படிக்கல்ல. நான் போடல. வருத்தம் தான் அதுல.. நீங்க சொல்லுங்க சார்..’
‘அது ஒரு அடையாளம் தம்பி. இனிமே நீ குருகுலவாசம் பண்ணனும், குரு சொல்றதக் கேட்டு படிக்கணும், பிரம்மச்சாரியா இருக்கணும், ஞானம் மட்டுமே வேணும்னு ஒரு தாகம் ..’ இப்படின்னு ஒரு குறியீடு’
‘புரியுது, மேல சொல்லுங்க..’
‘எல்லாத்துக்கும் மேல ஒழுக்கமா இருக்கணும். ‘மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ வள்ளுவர் சொல்றாரு. வேதம் சொல்றத மறந்தாலும் பரவாயில்ல, ஆனா பார்ப்பான், பிராம்மணன் தன்னோட ஒழுக்கத்த விடக் கூடாது’ ங்கறார். அதுக்கு முன்ன ஒரு நாடு நல்லா ஆளப்படுதான்னு பார்க்கறதுக்கு பார்ப்பான் வேதம் ஓதறானா? அந்த ஊர் மாடுகள்கிட்ட பால் வளம் இருக்கா? இருந்தா அந்த அரசன் நல்லா ஆட்சி பண்றான்னு சொல்றார். ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்’ இதுவும் வள்ளுவர். வேதம் ஓதறது முக்கியம்னு சொல்றார். ஆனா அதே சமயம் ஓதாட்டாலும் மன்னிக்கலாம், ஆனா ஒழுக்கம் தவறினா சர்வ நாசம் அப்படிங்கறார்.’
‘உண்மைதான் சார். ஆனா ஒண்ணு. பார்ப்பான்னு சொல்றீங்களே. பரவாயில்லியா?’ அப்பாவியாய்க் கேட்டார் கார்த்தீசன்.
‘தம்பி, பார்ப்பாங்கறது நல்ல வார்த்தை. வள்ளுவரே பயன் படுத்தறார் பார்த்தீல்ல. ‘பார்ப்பு’ பறவை. ‘அனன்’ போன்றவன். பறவையைப் போன்றவன் பார்ப்பனன். முட்டைக்குள்ள ஒரு உயிர், முட்டைய உடைச்சுட்டு வந்தா இன்னொரு உயிர். ‘த்விஜன்’ அப்டீன்னு சம்ஸ்க்ருதத்துல சொல்வாங்க. இரு பிறப்பாளன் – இது தமிழ். பூணூல் போடறது முட்டை ஓட்டை உடைச்சுட்டு வர்றது. அஞ்ஞானம் உடைஞ்சு ஞானம் அடையறதுன்னு பொருள்’
‘இவ்ளோ நல்ல விஷயங்கள் இருக்கு இல்லியா சார்? நாம ஒண்ணுமே தெரியாம இருக்கோமேன்னு நினைச்சா வெறுப்பா இருக்கு சார்..’
‘அதிருக்கட்டும் தம்பி. மேல என்ன செய்யப் போறீங்க?’
‘நல்ல வேலை தேடிக்கிட்டு இருக்கேன் சார். ஹெவி வெஹிக்கிள் ஓட்டுவேன். சொந்தக்காரங்க சிங்கப்பூர்ல இருக்காங்க. ஆனா போயி கேக்க மனமில்லை. நானே சொந்தமா பெரியாளா ஆகணும் சார். உழைச்சு சாதிக்கணும் சார். துபாய்ல விட்ட பணத்த மீட்டணும்..’
உழைக்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ள இளைஞர்கள் இருக்கும் வரை நாட்டிற்கு எந்தக் கேடும் இல்லை. நாடு சுபிட்சமாகவே இருக்கும் என்னும் எண்ணம் தோன்றியது.
‘நல்லது தம்பி. உங்க நம்பர வெளியிடறேன். யாராவது வேலைக்கு எடுத்துக்கிட்டாங்கன்னா அவங்ககிட்ட சேர்ந்து வாழ்க்கைல முன்னுக்கு வாங்க’ என்றேன்.
‘ரொம்ப நன்றி சார்’ என்ற கார்த்தீசனின் கைப்பேசி எண்: +91-9197914-87783
பி.கு.: அவர் தற்போது ஊபரில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
Quite interesting. Cultural values are embedded in DNA of an individual person amidst running after materialistic pursuits. And that is the biggest charm of time immemorial Sanaadana Dharma.
LikeLike
உங்களை ஃபேஸ்புக்கில் ரசிப்பவன். குறிப்பாக, திருப்பாவை குறித்த விஷயங்கள். இந்த விஷயம் fb யிலும் போட்டுள்ளீரா?
LikeLike
yes sir
LikeLike