நண்பர்களே,
குப்பையில் விட்டெறிந்த எச்சில் சோற்றை யாரும் விரும்பி உண்பதில்ல. அதன் ருசியைப் பாராட்டுவதில்லை.
அச்சோற்றை வேண்டுமென விரும்பி, உண்டு, பின்னர் சோறு சரியில்லை, உடலில் உபாதை வருகிறது என்று புலம்புவதில்லை.
குப்பையில் இருந்து எடுத்து உண்ணும், உடலில் பல நோய்களைக் கொண்டிருக்கும் தெரு நாய்களை யாரும் அணுகி, அவற்றின் உணவைப் பங்கு போட்டுக் கொள்வதில்லை.
குப்பைத்தொட்டியில் உள்ள சோற்றை உண்ணும் தெரு நாய்களிடம் யாரும் போட்டிக்கு நிற்பதில்லை. விலகியே செல்வர்.
தொட்டியில் உள்ள சோற்றை உண்ணத் தங்களுக்குள் சண்டையிடும் உடல் முழுவதும் புண்கள் உள்ள நாய்களை மதித்து, அவை குரைப்பதைக் கேட்டு, அதன் பின் ‘நாய் குரைப்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று யாரும் புலம்புவதில்லை. முடிந்தால் அதிலிருந்து விலகுவர்.
வீதி = தனியார் தொலைக்காட்சி
தொட்டி = விவாதத் தலைப்புகள்
நாய்கள் = மதம், சாதி, மொழி, நிற வெறி கொண்டு பேசுவோர்
தனியார் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களின் அரசியல் வாழ்விற்கு நமது நேரத்தையும், பணத்தையும், மன நிம்மதியையும் நாமே விரும்பி விலையாகக் கொடுக்கலாமோ?
ஆக, நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.
மத நல்லிணக்கம் அற்ற, அனைவரையும் ஒன்றிணைக்காத, மனித மனங்களை மேம்படுத்தாத பேச்சுக்கள், அவற்றைப் பேசுவோர், அவற்றை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள், அவற்றைத் தாங்கி வரும் ஏடுகள், இவற்றிற்கு ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள் முதலியோரைப் புறக்கணிப்பது.
Boycott – பஹிஷ்கரிப்பு – இது காந்தியடிகள் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம். ஒவ்வாதனவற்றை விலக்குவது. அருகில் செல்லாதிருப்பது. ‘செய்யாதன செய்யோம்’ என்று ஆண்டாளும் சொல்கிறாள்.
இதைச் செய்யாமல், டிவி.விவாதம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, நெறியாளர் மத நம்பிக்கையை இழிவுபடுத்துகிறார், விவாதம் செய்வோர் தரம் தாழ்ந்து பேசுகின்றனர் என்று வருத்தப்படுவது ஏனோ?
செய்ய வேண்டியவை:
- மத, சாதி, மொழி நல்லிணக்கம் இல்லாத தொலைக்காட்சி ஒளிவழிகளையும், எழுத்து ஊடகங்களையும் புறக்கணிப்பது.
- அவற்றுக்கான சந்தா செலுத்தாமல், பஹிஷ்கரிப்பது.
- அவற்றுக்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களின் பொருட்களை வாங்காதிருப்பது.
- இவ்வாறு செய்கிறோம் என்று அவர்களுக்குச் சொல்வது.
சரி, பொழுது போக என்னதான் செய்வது?
- நூலகம் செல்லுங்கள்.
- நல்ல இசையைக் கேளுங்கள்.
- Podcast என்று ஒரு அபாரமான வழிமுறை உள்ளது. அறிஞர்களின் பேச்சுக்கள், ஆராய்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
- (முடிந்தால்) அரசின் காட்சி ஊடகத்தைப் பாருங்கள் / கேளுங்கள். தற்போது All India Radio செயலி வந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பு உள்ளது.
நம்மைக் காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்கிறார். அவர் என்ன குறைந்து போனார்? என் நண்பன் அமெரிக்காவில் இருக்கிறான். அவன் வீட்டிலும் அப்படியே.குறையொன்றுமில்லை.
பி.கு.:
- தெரு நாய்கள் என்பது ஒரு குறியீடே. அவற்றை அவமானப்படுத்தும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.
- நான் தனியார் காட்சி ஊடகம் எதையும் பார்ப்பதில்லை.