‘புரியற மாரி சொல்லணும். ‘நினைக்கப்படும்’நு சொன்னா என்னய்யா அர்த்தம்? வள்ளுவன் தான் கொளப்பறான்னா நீரும் ஏன் கொளப்பறீரு?’ போனில் கடுகடுத்தார் அண்ணாச்சி.
‘புரியல அண்ணாச்சி, அண்ணி திட்டினாங்களா’ என்றேன் கேள்வியாய்.
‘கும்மோணம் திமிரு கெடந்து செளம்புதீரு. நாங்கள்ளா தின்னவேலி தெனாவட்ட காட்டுனா பூமி தாங்காதுவே’ குரலில் கொஞ்சம் உண்மையான கடுப்பு.
‘சரி சொல்லுங்க, என்ன விஷயம்? வாட்ஸப்லயும் திட்டு வாங்கணும்னு எழுதியிருக்கு,’ என்றேன் பவ்யமாய்.
‘மனசுல வெச்சுக்காதேயும் அய்யரே. வள்ளுவர் பத்தி பேஸ்புக்குல எளுதினீரே, அதுல ‘நினைக்கப்படும்னு’ போட்டிருக்காம்லா. உம்ம வெளக்கம் புரியலயே,’ என்றார்.
‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்
செவ்வியான்கேடும் நினைக்கப் படும்’ அதானே பிரச்னை?’ என்றேன்.
‘விளக்கம் சொல்லுவே. புரியற மாரி,’ அண்ணாச்சி.
‘நல்லவங்க கஷ்டப்படறதும் கெட்டவங்க நல்லா வாழறதும் பத்தியும் யமன் நினைச்சுப் பார்ப்பாராம்,’ என்றேன், மேலும் அர்ச்சனைகளை எதிர்பார்த்து.
‘ஐயா சாமி, இது தெரியுது. அதென்ன ‘நினைக்கப்படும்’? யாரு நினைப்பான்? கெட்டவங்க நல்லா இருக்கறத யமன் நினைச்சா என்ன, கட்டைல போனா என்ன? வள்ளுவரு என்னதான் சொல்ல வறாரு?’
கோபத் தொனியில் அண்ணாச்சி.
மனதில் வெகுளி சிறிதும் இல்லையென்பதை நான் அறிவேன்.
‘அண்ணாச்சி, ஊழ் வினையால ஒருத்தன் நல்லா இருப்பான், நாசமாப் போவான். ஆனாலும் இந்த ஜென்மத்துல நல்லது செஞ்சவன் கஷ்டப்படறதும், கெட்டது செஞ்சவன் நல்லா இருக்கறதும் பத்தி யமன் சிந்திச்சு நல்லது கெட்டது செய்வான்,’ இதான் பொருள்.
‘பொறுமைய கெளறாதீரும். வேகமாச் சொல்லும்,’ அண்ணாச்சி.
‘ப்ராரப்த கர்மா, சஞ்சித கர்மா தெரியுமில்லையா? அதைத் தான் சொல்றாரு வள்ளுவரு. மொத்த சேமிப்புல இருக்கற கர்மா சஞ்சித கர்மா. இப்ப வந்திருக்கற வேலை ப்ராரப்த கர்மா. இது முடிஞ்சுடும். பிறகு சஞ்சித கர்மா எவ்வலவு இருக்குன்னு யமன் பார்ப்பான். இப்படி ஒரு பொருள் இருக்கு பாருங்க,’ என்றேன்.
‘நல்லாத்தான் இருக்கு. ஆனா, வள்ளுவர் எதுக்கு ‘நினைக்கப்படும்னு’ குழப்பணும்? வெட்டு ஒண்ணுனு ‘இதாண்டா படுவா. யமன் கணக்கு பாக்கான்’ அப்டின்னு சொல்லலாம்ல,’ என்றார் மகிழ்ச்சியுடன்.
‘வள்ளுவரு மட்டுமா தெரிஞ்சே தனக்குத் தெரியாத மாதிரி சொல்றார்? நம்மாழ்வாரும் அப்டியே சொல்றார்,’ என்றேன்.
‘அதான பார்த்தேன். அய்யங்கார் ஆழ்வாரத் தொடாம இருக்க மாட்டாரேன்னு.. சொல்லும், மேல சொல்லும்,’ என்றார். குதூகலம்.
‘நரஸிம்மரோட பெருமைய சொல்லிண்டே வறார். திடீர்னு அவரோட பெருமைய யாரால சொல்ல முடியும். ஆராய வேணும்’ அப்டீன்னு பொட்டுனு முடிச்சுடறார். அதுல அவருக்கு ஒரு திருப்தி. படிக்கறவன் ஆராஞ்சு பார்க்கட்டும்னு விட்டுடறார்,’ என்றேன்.
‘என்னய்யா பாட்டு அது?’ அண்ணாச்சி.
‘எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்துஇங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்பஅங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றியசிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே‘
அண்ணாச்சி தழுதழுத்தவாறே, ‘இவ்ளோ எல்லாம் சொல்றீரே, அந்த குறளுக்கு ஒரு உதாரணம் சொல்லுங்க பார்ப்போம்,’ என்றார் குறும்புடன்.
“புதிய ‘பாரத ரத்னா’” என்றேன் பணிவுடன்.
Leave a comment