சாமி

‘சித்தப்பா,  இத்தன நாழி கழிச்சு நீங்க தேரழுந்தூர் போக வேண்டாம். சொன்னா கேளுங்கோ. பாண்டிச்சேரில பஸ் ஏறினதுலேர்ந்து நீங்க தூங்கிண்டே வரேள். வாங்கோ, இன்னிக்கி ராத்திரி நம்மாத்துல படுத்துக்கோங்கோ. நாளைக்குக் கார்த்தால தேரழுந்தூர் போய்க்கலாம்’ மாயவரம் பஸ் ஸ்டாண்டில் சித்ரா* கெஞ்சினாள்.

‘என்ன சொல்ற நீ? தேரழுந்தூர்ல சித்தி ஒடம்புக்கு முடியாம இருக்கா. ஜூரம் அடிக்கறதுன்னு சொல்றா. நான் போயே ஆகணும்.’

‘போங்கோ சித்தப்பா. நாளைக்குக் கார்த்தால போங்கோ. இங்கேர்ந்து அரை மணி நேரம் தானே. இப்ப பதினோரு மணி ஆறது. டவுன் பஸ்ஸும் கிடைக்காது,’ முடிந்தவரை போராடிப் பார்த்தாள் சித்ரா.

‘முடியவே முடியாது. காவேரிப் பாலம் வரைக்கும் போயிட்டா ஜங்ஷன்லேர்ந்து கும்பகோணம் போற டவுன் பஸ் எதாவது வரும். நான் கோமல் ரோடு போய், அங்கீருந்து போற வர வண்டி எதுலயாவது போயிடுவேன். நீ ஆத்துக்குப் போ. தனியா வேற போற..’

‘நன்னா இருக்கு. பதினோரு மணிக்கு ஜங்ஷன் பஸ் வர்றதே துர்லபம். அதுல கோமல் ரோடுல வேற நிக்கப் போறேளா. 78 வயசாறதா இல்லியா. பிடிவாதம் பிடிக்காதீங்கோ.’

‘என்ன சாமீ? எங்க போகணும்? என்ன பிரச்னை?’ அதுவரை அருகில் நின்றிருந்த காதர் கேட்டார்.

‘ஒண்ணுமில்ல, தேரழுந்தூர் போகணும், பஸ் வரல்ல. அதான்..’

‘இதுக்கு மேல பஸ் வராது. ஒண்ணு பண்ணுங்க ஆட்டோ பிடிச்சு காவேரிப் பாலம் போனா ஒரு வேளை பஸ் வரலாம். டே மஜீது, ஆட்டோ வருமா பாருடா’

‘இல்ல ஆட்டோவெல்லாம் வேண்டாம். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.’

‘போங்க சாமி. காசு ரொம்ப கேப்பானேன்னு பாக்கறீங்களா? இருங்க இதோ வரேன்.’

‘வாங்க ஏறிக்கங்க. பின்னால ஒக்காருவீங்கல்ல? மஜீது, பின்னாடியே டிவிஎஸ் 50ல வாடா.காவேரிப் பாலம் கிட்ட கொண்டு விடுவோம். பெரியவரு விழுந்துடாம பார்த்துக்கிட்டே வா. நீங்க போங்கம்மா. அட்டோ எடுத்துடுங்க. நான் கொண்டு விடறேன் ஐயாவ.’

‘பார்த்துப் போங்க. ஹார்ட் பேஷ்ண்ட் இவர். எங்க சித்தப்பா’

‘புரிஞ்சுதும்மா. நீங்க பேசறத கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். சாமி, ஏறிட்டீங்களா? பின்னாடி கம்பிய புடிச்சுக்குங்க.’

பாண்டிச்சேரியில் அன்று காலை ஏழு மணிக்கு வர வேண்டிய வாத்யார் மதியம் பதினொரு மணிக்கு வந்து   பெரியப்பாவிற்குத் திவசம் முடிய மாலை நான்கு மணியாகிவிட்டிருந்தது. பிறகு கிளம்பி, இரவில் மயிலாடுதுறையில் இறங்கி அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள தேரழுந்தூர் செல்ல வேண்டும்.

‘இறங்கிக்கோங்க சாமி. மஜீது, ஜங்ஷன்ல பஸ் வருதா பாருடா. இரு, அங்க ஒரு டவுன் பஸ் தெரியுது. சாமீ, பஸ் கும்மோணம் போவுது. கோமல் ரோடுல இறங்கிடறீங்களா?’

‘சரிங்க. உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நான் போய்க்கறேன்.’ அப்பா.

‘விடுங்க சாமி. கண்டக்டர், ஐயாவ கோமல் ரோடுல இறக்கி விட்டுடுங்க. பெரியவரு, கண்ணு அவ்வளவா தெரியாது. பார்த்து இறக்கி விட்டுடுங்க. சாமி, அப்ப நான் வறேன். இந்தாங்க. வீட்டுக்குப் போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்க. வரேங்க.’ பாய் கிளம்பிச்ச் சென்றார்.

கோமல் ரோடில் அரை மணியாக நிற்கிறார் அப்பா. தேரழுந்தூர் செல்ல பஸ் இல்லை. மணி 11:40. கோமல் ரோடு டீக்கடையும் மூடிக்கொண்டிருந்தார்கள்.

‘சாமி, இப்ப இங்க வண்டி ஒண்ணும் இல்லியே, தேரழுந்தூர் போகணுமானா காலைலதான் பஸ் வரும்’ டீக்கடைக்காரர் அக்கறையுடன் தகவல் சொல்ல அப்பாவிற்கு இன்சுலின் போட்டுக்கொள்ளவில்லை என்று நினவு. ஒருவேளை போட்டுக்கொண்டோமோ? பிரஷர் மாத்திரையும் போட்டுக்கலையே..

‘ஐயா, எங்க போகணும்?’ டூவீலர் நின்றது. வேட்டி அணிந்த 20 வயது ஆடவன் கேள்வி.

‘தேரழுந்தூர்ப்பா. பஸ் ஒண்ணும் வரல்ல..’

‘என்னங்க, பன்னண்டு மணிக்கி ஏதுங்க பஸ்ஸு? நான் சிறுபுலியூர் போறேன். தேரழுந்தூர் தாண்டி தான் போகணும். வண்டில ஏறிக்குவீங்களா?’

வண்டி மெதுவகவே சென்றுகொண்டிருந்தது. குளிர் முகத்தில் அறைய, கண்களை மூடிக்கொண்டிருந்தார் அப்பா.

‘சாமி, தேரடி வந்துடிச்சு. எங்க போகணும் உங்களுக்கு?’

‘இங்கயே இறங்கிக்கறேன். ரொம்ப தேங்க்ஸ்பா. நான் வரேன்’

‘அட இருங்க சாமி. உங்க வீடு எங்க சொல்லுங்க. விட்டுட்டுப் போறேன்.’ பிடிவாதமாக அந்த ஆண்.

‘இல்லப்பா, இங்கேரருந்து நூறு அடிதான். சன்னிதித் தெருல தான் இருக்கு. நான் போய்க்கறேன். நீ இன்னும் போகணுமே..’

‘அட என்ன கஷ்டங்க சாமி. ஏறுங்க. எங்க அப்பான்ன கொண்டு விட மாட்டேனா?’

‘உன் பேரென்னப்பா?’ வீட்டு வாசல் வரையில் கொண்டு விட்டுச் சென்றவனைக் கேட்டார் அப்பா.

‘சுடலை சாமி. நான் வரேன். ஜாக்ரதையா உள்ள போங்க. இனி ராவுல வராதீங்க.’ பைக் திரும்பும் சப்தம் தூரத்தில் கேட்டது.

தூரத்தில் ஏதோ கிராமத்து ஒலிபெருக்கியில் முனகல்:

‘கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும் சுடலை மாட சாமி,

மாட சாமி, சாமியும் நான் தான், பூசாரி நீதான், சூடம் ஏத்திக் காமி.’

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

7 thoughts on “சாமி”

 1. 10/15 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
  ஆனாலும், இப்போதும் தைரியமாக செல்லலாம்.

  Like

   1. ஓ! பெரியவர் நலமாக சென்றடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
    அலங்கார வளைவு வரை சென்றது ஒன்றுமில்லை சார். கும்பகோணம் செல்லும் இரவு பேருந்துகள், ஆர்ச்சில் நிற்கின்றன.
    ஆனால், அங்கிருந்து தேரழந்தூருக்கு, அந்த வளைந்து வளைந்து செல்லும் சாலையில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றது….சுடலை சாமி (அ) முருகன் சாமி (அ) அரங்கன் சாமி தான் என உறுதியாகக் கூறலாம்.
    அடியவர்களை ஆண்டவன் என்றும் காப்பான்.

    Like

 2. இந்த காதர், மஜீது போன்றவர்களைத்தான் நாம் ‘வந்தே மாதரம் பாடி உன் தேச பக்தியை நிரூபி; இல்லையேல், பாகிஸ்தானுக்கு நடையைக்கட்டு’ என்று மிரட்டிகொண்டிருக்கிறோம். சுடலை சாமி போன்றவர்களை, தள்ளி நில், மேலே படாதே, தீட்டு, தனி வரிசையில் நில், எங்கள் கோஷ்டியில் நிற்காதே என்றெல்லாம் இழிவுபடுத்துகிறோம்.

  Like

  1. இல்லை திரு ரவிகுமார். இங்குள்ள காதர், மஜீது நடவடிக்கை வேறு, வட இந்தியாவில் உள்ள காதர், மஜீது நடவடிக்கை வேறு.
   மயிலாடுதுறை மணிக்கூண்டு கடைவீதியில், யாரும் எந்த இஸ்லாமிய நண்பர் கடையில் எதுவும் வாங்கி, யாருடைய டாக்சியிலும் செல்ல முடியும், பத்திரமாக. ஆனால், டில்லி சாந்தினி சவுக்கிலோ, மீரட்டிலோ அவ்வாறு முடியாது. இரண்டு இடங்களிலும் இருந்த என் போன்றோர் இதை அறிவர்.
   பாகிஸ்தானுக்கு நடையை கட்டு என்றது அங்குள்ள பாதிக்கப் பட்டவர்கள்.
   நம்மவர்கள் மறைந்த நம் ஜனாதிபதி வழி வந்தவர்கள். இவர்கள் வேறு.

   Like

 3. அது என்ன வட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், இங்குள்ளவர்கள் என்று புது பிரச்சினையை கிளப்புகிறீர்கள்? அப்படியானால், ஆந்திராவில் உள்ள முஸ்லிம்கள், கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள்? நானும் டில்லியிலும் மீரட்டிலும் இருந்திருக்கிறேன்; வித்தியாசமாக உணர்ந்ததில்லை. மதவெறி என்பது ஒரு நோய், வடக்கிற்கும் தெற்கிற்கும் பொதுவாக உள்ளது. அந்த வெறியால் பீடிக்கப்பட்டவர்கள் முஸ்லிம் மதத்திலும் இருக்கிறார்கள்; இந்து மதத்திலும் இருக்கிறார்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: