ஒரு போன் வாங்க வேண்டுமென்றால் என்னவெல்லாம் தெரிந்துவைக்க வேண்டியுள்ளது ?கடைக்குப் போனோமா,கலர்,மாடல் தேர்வு செய்தோமா என்றில்லாமல், அந்தக் கருவியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி,வடிவமைத்த பொறியாளர், என்று எல்லாருக்கும் தெரிந்ததைவிட தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
அதிலும் இவைஎல்லாம் வெவ்வேறு வகையில் தொடர்பு படுத்தி,எல்லா பர்முடேஷன் காம்பினேஷன்களிலும் அலசி ஆராய்ந்து பார்த்து, பினனர் ஒன்றைத் தேர்வு செய்தால், மைக்ரோசிம், நானோசிம்,என்று புதிய பயமுறுத்தல்கள் வந்துவிடுகின்றன.
இந்த அழகில் ஏதோஒன்றைத் தேர்வு செய்து ஒருவழியாக வாங்கி வந்தால், அந்த ஓஎஸ் லாலிபாப், குச்சிமிட்டாய் என்று ஏதாவது ஒன்றை’அப்டேட்’ செய்யட்டுமாவென்று கேட்கிறது. செய்ய வேண்டுமா,செய்யாவிட்டால் போன் வேலைசெய்யுமாவென்று பயந்து அப்டேட் செய்ய அனுமதித்தால் ஏதாவது ஒரு டிரைவர் இல்லையென்று துப்புகிறது. இதற்காக இணையத்தில் துழாவி,கட்டிப் பிடித்து,சண்டைபோட்டு, கதறியழுது ஏதொ ஒன்றைத் தேர்வு செய்தால், ‘நீ லாலிபாப் அப்டேட் பண்ணிட்டியா? அப்ப,கேமராவேலை செய்யாது.தெரியாதா உனக்கு?’என்று நண்பர்கள் கேட்கிறார்கள்.
என்ன கொடுமைசார் இது? ஒரு போன் வாங்க வேண்டும் என்று நினைப்பது இவ்வளவு பெரிய பாவமா?ஒரு 5நிமிட வேலைக்கு என் நாளேல்லாம் பாழாகி, மன உளைச்சல் ஏற்பட்டு, வீட்டில் ‘அர்ச்சனை’வாங்கி (ஒரு வேலைக்குப் போனாமுழுசாகேட்டுக்கறதில்ல?), ஞாயிறு இரவு ஒருவாறு போன் வேலைசெய்யத் துவங்கினால்,திங்கட்கிழமைநினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. ஒரு உழைப்பாளி ஒரு ஞாயிறு அன்று கூட நிம்மதியாக இருக்க முடியாமல் அப்புறம் என்ன சார் உங்க டெக்னாலஜி அட்வான்ஸ்மெண்ட்?
எப்பாடுபட்டாவது வேலை செய்ய வைத்தால், ‘உன்னோடது எவ்வளவு எம்.பி.?’ என்று கேட்கிறார்கள்? ‘எனக்குத் தெரிஞ்சு 545 எம்.பி.’ என்றா சிரிக்கிறார்கள். எம்.பி. என்பது கேமிராவின் திறன் இலக்கமாம். இந்தக் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது சட்டமா சார்?
மாதாமாதம் ப்ராஸசரின் திறன் ஏற்றுகிறேன் என்று ஏதோ ஏற்றிக்கொண்டே போகிறார்கள். உங்கள் கையில் உள்ள போனில் உள்ள கணினியின் திறன் அப்பல்லோ-11ல் இருந்த கணினியின் திறனை விட ஆயிரம் மடங்கு அதிகம் என்ற பீற்றல் வேறு. ஐபோனை வைத்துக் கொண்டு நிலாவுக்கா போக முடியும்? என்ன பேத்தல்?
இந்த அழகில் ஐபோன் ஆண்டிராய்டுடன் பேசாது. இவற்றைப் பேச வைக்க நான் பிரும்மப் பிரயத்னம் பட வேண்டும். ஐபோனுக்குள் ஒரு உபன்யாசத்தைப் போடுவது அவ்வளவு எளிதன்று. விஷ்வக்சேன பூஜை முதல், ஆஞ்சனேய ஆராதனம் வரை பண்ணி, ஐடியூன்ஸ் என்று பலதையும் போட்டு, கெஞ்சி, கூத்தாடி, ‘உடையார் முன் இல்லார் போல் ஏக்கறுங் கற்றார்’ போல் ஸ்டீவ் ஜாப்ஸை வேண்டிக்கொண்டு, ஒரு வழியாகப் பதிவேற்றம் செய்து விட்டோம் என்று நினைத்தால், ஐக்ளவுட் பாஸ்வோர்டை உட்செலுத்து என்று சொல்லி வெறுப்பேற்றி இது வரை ஒரு முறை கூட ஐடியூன்ஸ வழியாகப் பதிவேற்றம் செய்ததில்லை.
இந்த அழகில் வருஷா வருஷம் பெருமாளுக்கு ப்ரும்மோற்சவம் போல் புதிய போன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாங்கியே ஆக வேண்டும் என்று மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக விளம்பரங்கள். நான் செய்தித்தாள் படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
ஒரு போனில் பேசுவதைத் தவிர அனைத்தும் செய்ய வேண்டும் என்று வந்துவிட்டோம்.
ஒரு வங்கிச் சேவைக்குப் போன் செய்தால் எத்தனைஇம்சைகள்? நம்பர் 1அழுத்து, நம்பர் 3அழுத்து என்று தொல்லையோதொல்லை. தெரியாமல் கேட்கிறேன் – எனக்கு ஒரு பிரச்னை என்று நான் போன் செய்தால்,என்னைடமே வேலை வாங்கினால் எப்படி?
ஒரு கடைக்குச் சென்று ஒரு பேனா வாங்கினால்,எத்தனை கலர்,எத்தனைவிதம்?எனக்குத் தேவையொரு பேனா. அதில் இங்க் போட்டால் எழுத வேண்டும். எழுதும் ஆசையேபோய்விடும் போல் இருக்கிறது சார்.
கேமராவைப் பற்றி நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.ஏன் சார் எஸ்.எல்.ஆர் அது இதுன்னு சொல்றாங்களே, இதெல்லாம் எப்படி?’அவ்வளவுதான்.அரைமணி நேரம் பேசுகிறார். கேமெராவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எத்தனை பாஸ்வோர்டுகள் ( இதில் கடவுச் சொல் என்று தனித் தமிழ் வேறு ). வங்கிச் சேவைக்கு, நூல் நிலையத்திற்கு, அலுவலகத்திற்கு என்றே ஆறேழு, ஏடிஏம் பின்கள், ஈ-மெயில் பின்கள், போன் பின்கள்… முடியலை சார்.
இதைவிடக் கொடுமை, சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் அப்பாவிடம் போனில் பேசுவது. அதுவும் வாட்ஸப் வந்த பிறகு எளிமை என்றார்கள். முதலில் வாட்ஸப் கால் பண்ணப் போகிறேன் என்று சாதாரண போனில் அழைக்க வேண்டும். பிறகு வாட்ஸப்பில் அழைக்க வேண்டும். அடித்துக்கொண்டே இருக்கும். மீண்டும் சாதாரண கால். ‘ஏம்ப்பா எடுக்கலை?’ என்றால் ‘போன் அடிக்கவில்லை’ என்கிறார். ஒருவழியாக வாட்ஸப்பை ஆன் பண்ணச் சொல்லி 15 நிமிடங்கள் சாதாரணக் காலில் பேசினால் அப்போது மண்டையில் உறைக்கும்: ‘அப்படியாவது வாட்ஸப்பில் தான் பேச வேண்டுமா? இத்தனை நேரம் சொல்ல வேண்டியதைச் சொல்லி இருக்கலாமே?’ என்று.
வாழ்க்கையை மேன்மேலும் கடினமாக்கிக் கொண்டே போகிறொம் என்று தோன்றுகிறது.’No time to stand and stare’என்பார்கள். ‘No time to update ourselves with technology’ என்கிறேன் நான். ஒரு டெக்னாலஜி வந்து, புரிந்துகொண்டு, பயன்படுத்தத் துவங்கும் போது அது பழசாகிவிடுகிறது.
‘அண்ணாச்சி, கமர்கட் குடுங்க’ என்று கேட்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ‘எந்த கலர் தம்பி’ என்று அண்ணாச்சி கேட்டதில்லை.
அந்த நாட்களும் திரும்பி வரப்போவதில்லை.
தொடர்பில் இருக்க இங்கே சொடுக்கி விரும்பவும் https://facebook.com/aapages