சிங்கப்பூர் பெருமாள் கோவிலில் நாமத்வார் அமைப்பின் ஏற்பாட்டில் பூஜ்யஶ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் சீடர் எம்.கே.ராமானுஜம் ‘Ancient Wisdom and Timeless Happiness’ என்னும் தலைப்பில் இன்றிரவு அருமையான சிறப்புரையாற்றினார்.
ஸம்ஸ்க்ருதம், தமிழ், ஆங்கில் மூன்றிலும் புலமை பெற்றவராகக் காணப்படும் ராமானுஜம், சங்கராத்வைத நூல்கள், பாகவதம், மஹாபாரதம், இராமாயணம் என்று வெளுத்து வாங்குகிறார். கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தவர், ஊழ்வினையைத் தெய்வானுக்ரஹத்தால் மாற்ற முடியும் என்று நிரூபணங்களுடன் தெரிவித்தார்.
பெரிய பதவியில், பெரும் பொருள் ஈட்டும் நிலையில் இருந்த இவர், தற்போது தன்முனைப்புப் பேச்சு, தார்மீகப் பேருரைகள் என்று நிகழ்த்திவருகிறார்.
‘தெய்வதான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்’ என்னும் குறளில் தெய்வம் என்பது கடவுள் என்பதாக இருக்காது என்னும் பொருள் படும்படிப் பேசினார். ஏனெனில், சம்ஸ்க்ருதத்தில் தெய்வம் என்பது Destiny, ஊழ், கர்மா என்னும் பொருளையும் தரும் என்பதாகச் சொன்னது சிறப்பு. வினைப்பயனை இறையருளால் மாற்ற முடியும், அதற்கு ‘முயற்சி’ என்பதை ‘சிரத்தை’ என்னும் பொருளில் பார்த்தால் புரியும் என்பதாகப் பேசினார். ‘தெய்வ’ என்னும் சொல் மஹாபாரதத்தில் ஊழ், கர்மா, Destiny என்று வருமிடங்களைச் சொன்னது சிறப்பு.
‘ஊழையும் உப்பக்கம் காண்பார்’ குறளையும் இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
காணொளி உள்ளது. நாமத்வார் அமைப்பினர் எடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டால் நான் இணைப்பு தருகிறேன்.
மன நிறைவான நிகழ்வு. நாமத்வார் அமைப்புக்கு நன்றி.
Leave a comment