மாணவர்களே, Charles Wheelan என்பார் எழுதிய ‘Naked Statistics’ என்றொரு நூலைப் பரிந்துரை செய்கிறேன்.
புள்ளியியல் கடினமான பாடம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால் அதன் அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் பல தருணங்களில் பெரிதும் பயன்படும்.
ஆனால், நமது பாடநூல்கள் மாணவர்களுக்குச் சுவை ஏற்படாவண்ணமே பாடப்புத்தகங்களை வடிவமைக்கின்றன. எனவே, பாடப்புத்தகத்தில் மட்டுமே புள்ளியியலைப் படித்தால் அதன் மீது வெறுப்பே மிஞ்சும். ஆகையால் பாடப்புத்தகம் தவிர்த்து, ஆனால் பாடத்துடன் தொடர்புடைய பிற நூல்களையும் படிப்பது, குறிப்பாகப் புள்ளியியல் துறையில் பெரிதும் பயன்படும்.
அதிலும் மேற்சொன்ன நூல் மெலிதான நகைச்சுவையுடனேயே புள்ளியியலைச் சொல்லிச் செல்கிறது. வாழ்க்கையின் பல தருணங்களில் நமக்கு ஏற்படும் கேள்விகள், குழப்பங்கள், Netflixற்கு நமக்குப் பிடித்த படம் எப்படித்தெரிகிறது?, பிரிண்டருடன் Extended Warranty வாங்கலாமா போன்ற நிகழ் கேள்விகளைக் கேட்டு அவறுக்கு விடையும் அளிக்கிறார் ஆசிரியர்.
Regression என்றால் என்ன?, Selection Bias என்றால் என்ன? Correlationஐ எப்படிப் புரிந்துகொள்வது என்பனவற்றிற்கான விடைகளை அனைவருக்கும் புரியும் உதாரணங்களுடன் நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறார்.
நூலை நன்கு புரிந்துகொள்வதற்கு நல்ல ஆங்கில அறிவு தேவை. ஆகவே உங்கள் புள்ளியியல் ஆசிரியருடன் சேர்ந்து இந்த நூலைப் படிக்கலாம். நூலின் அத்தியாயங்களை ஒருமுறைக்கு இருமுறைகள் வாசிப்பது நல்லது.
முடிந்தால் புள்ளியியல் பேராசிரியர் யாரையாவது தமிழில் எழுதவும் சொல்லலாம்.
விடுமுறை நாட்களில் ஒரு வாரம் முயற்சி செய்தால் நூலை முடித்துவிடலாம். இன்னூலாசிரியர் Naked Money, Naked Exonomics என்று வேறு இரு நூல்களும் எழுதியுள்ளார். இவர் ஊடகவியலாளர்.
மேலும் நூல்கள் பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.
நன்றி.
