‘நீங்கள்ளாம் அவ்ளோதான். உங்க தரம் அவ்ளோதான். பொருளாதரம், அயலக உறவுகள், தொழில் துறை சார்ந்த கருத்துகள், அறிவியல் புத்தாக்கம் குறித்த செய்திகள் / கருத்துகள், அறிவியல் ஆய்வுகள் குறித்த கருத்தரங்கங்கள், ப்ளாக்செயின், ஏ.ஐ., ஸ்டார்ட் அப் – இதெல்லாம் பத்தி நீங்க எப்பவாவது பேசியிருக்கீங்களா? நீங்க பேசறது எல்லாமே யாராவது ஏதாவது சொன்னா அதை எதிர்த்து பேசறது மட்டும் தான். மத்தில எதாவது சொன்னா, அது என்ன ஏதுன்னே புரிஞ்சுக்காம உடனே எதிர்க்கறது. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் ஹிந்திய எதிர்ப்போம்னு குதிக்கறது; மாசம் ஒரு தரம் உரிமை, இலங்கை, தமிழ், இனமானம் இப்பிடி ஏதாவது ஒண்ணு பத்தி கத்தறது. இது தவிர வேற எதாவது எப்பவாவது பேசியிருக்கீங்களா?’
நம் அரசியலாளர்களைப் பற்றி மற்ற மாநிலத்தவர் யாரும் இப்படிச் சொல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் பதைபதைக்கிறது. என்னதான் தமிழகத் ‘தலைவர்’கள் எதிர்மறையாகவே பேசிவந்தாலும், சாதி பற்றிக் காழ்ப்பாகப் பேசினாலும், நமது தெய்வங்கள், கோவில்கள், பண்பாட்டு அடையாளங்கள் என்று அனைத்தையும் பழித்துப் பேசினாலும், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, நகைப்புக்கிரிய சொற்களைப் பயன் படுத்தினாலும், அவர்கள் அனைவரும் என் தாய்மொழி பேசுபவர்கள் என்னும் ஒரே காரணத்தால், என் பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றுடன் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிறுமை எனக்கே ஏற்படுவதாகத் தோன்றுகிறது (அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்).
உதாரணமாக: எப்போதுமே பெரியார், சுயமரியாதை என்று கத்தினால் அலுப்பு தான் வருகிறது. கொஞ்சமாவது மாற்றிக் கொள்ளுங்கள். ஆண்டாள் விஷயமாக வைரமுத்து சொன்னத் தவறு என்று எந்தத் தமிழக அரசியல்வாதியுமே சொன்னதாக நினைவு இல்லை – ராமதாஸ் தவிர. ஆண்டாளைப் பழிப்பதால் நீங்கள் அடையப்போவது ஒரு சாடிஸ்ட் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கும்.அவளுக்காகக் குரல் கொடுக்காதது நீங்கள் தமிழுக்குச் செய்த இழுக்கு.
அதேபோல் வைரமுத்து மேல் அவதூறுகள் வந்த போது பெண்ணுரிமை, சமூகநீதி, ‘பெரியார்’ வழியில் பெண்களின் உயர்வு என்று விதந்தோதியதெல்லாம் என்னவாயிற்று என்று எண்ணிப் பார்த்ததுண்டா? பெண்ணுரிமைக் காவலர்கள் காணாமல் போன மர்மம் என்ன?
எட்டுவழிச் சாலை வேண்டாம் என்றால், பொருளாதார ரீதியில் மாற்று ஏற்பாடு என்னவென்று சொல்லுங்கள். உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வழி சொல்லுங்கள். Defence Corridorல் வேறு என்னென்ன உற்பத்தி செய்யலாம் என்று சிந்தித்துச் சொல்லுங்கள்.
கூடங்குளம் – எதிர்ப்பு. நியூட்றினோ – எதிர்ப்பு. மீத்தேன் – எதிர்ப்பு. செயற்கைக்கோள் – எதிர்ப்பு. தேர்வு – எதிர்ப்பு. மொழி – எதிர்ப்பு. ஆற்றோரம் மரம் நடுதல் – எதிர்ப்பு.
எல்லாமே எதிர்பு. அப்படியானால் எதற்குத்தான் ஆதரவு? ராஜீவின் கொலையாளிக்கு மட்டும் தான் உங்கள் ஆதரவா?
ஆகவே தமிழக அரசியலாளர்களே: எந்த விஷயமாக இருந்தாலும் சற்று ஆராய்ந்து, வாசித்து, காதுகொடுத்துக் கேட்டுப் பின்னர் பேசுங்கள். உதாரணம்: மாஃபோய் பாண்டியராஜன் போல் நிதானத்துடன் பேசுங்கள். உங்கள் பேச்சுக்களில் 5 விழுக்காடாவது அறிவியல், கணினி என்று பேசுங்கள். 2-3 மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது அறிவியல் தொடர்பான கருத்துக்களைக் கூறுங்கள். வேறுமெனே இனமானம், தொல்குடி என்று முழங்கினால் தற்போதைய millennial சமூகமும், மற்ற மாநில கவனிப்பாளர்களும் உங்களைப் புறந்தளிவிடுவர்.
அவ்வாறு நடப்பதை நான் எனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதுகிறேன். கொஞ்சம் பார்த்து நடந்துகொள்ளுங்கள்.
‘நீ எழுதறது வேஸ்ட்’ என்று சொல்பவர்கள் கவனத்திற்கு: என் கடமையைச் செய்கிறேன். செவியிருப்பவர்களுக்குக் கேட்கும்.
Leave a reply to VEDHIYAN YOGANATHAN Cancel reply