சென்னை ராமானுஜம் ஐடி பார்க் மின்தூக்கி.
‘இங்க எதுக்குடி வறானுங்க? ரெண்டு பேரும் நடக்கறதுக்கு வேற எடமே கிடைக்கல்லியா?’ அந்த 20+ கேட்டது.
‘இல்லடி, மஹாப்ஸ்ல வாக் போறாங்க. அப்புறம் ஹோட்டல்ல பேசறாங்க. அதான் ஒரே போலீஸ் இங்கெல்லாம்’ மற்றொரு 20+ சொன்னது.
‘அப்டி மஹாப்ஸ என்னடீ இருக்கு?’ 20+கள் சிரித்தன.
‘என்னவோ இருக்கட்டும். அது யாரு? சி ஜின் பி யோ என்னவோ சொல்றாங்களே’
‘அவுரு சைனாவோட பிரதமர், பிரைம் மினிஸ்டர் டி’
‘டது’ = ‘டாள்’, என்றும் வாசிக்கலாம். அறிவுத்திறன் பளிச்சிட்டதால் ‘டாள்’ ‘டது’ என்றும், ‘தனர்’ , ‘தன’ என்றும் திணை மாறியுள்ளன.
சீனத் தலைவர் சீ ஜின் பிங்ம் பாரதப் பிரதமர் நரேந்திர மோதியும் மஹாபலிபுரத்தில் சந்திக்கவிருப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டன இந்த 20+கள்.
கொஞ்சமேனும் அறிவுத்திறன் அற்ற 20+களை உருவாக்கியுள்ளோம் என்று தெரிகிறது. ‘மொக்க’, ‘டம்மி’, ‘சீன்’,’கலாய்’ இன்னபிற புரியாத சொல்லாக்கங்களை உருவாக்கியுள்ளதைத் தவிரவும், சில பத்தாயிரங்களைச் சம்பாதிக்க வழி செய்யும் கல்வியைக் கற்றதைத் தவிரவும் இந்த இளவட்டங்களை முழு மொந்தைகளாக ஆக்கியுள்ளோம் என்றே தோன்றுகிறது.
இரு தலைவர்களும் மஹாபலிபுரம் செல்வதால் அவ்வூருக்குக் கிடைக்கும் உலகப் பார்வை, அதனால் ஏற்படும் சுற்றுலா வாய்ப்புகள், அதன் மூலம் தமிழகத்தில் ஏற்படச் சாத்தியமுள்ள வெளி நாட்டு மூலதனங்கள், பொதுவாகத் தமிழகத்தை நோக்கி அதிகரிக்கக்கூடிய உலகப் பார்வைகள்.. இப்படி எத்தனையோ.
இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாத, தெரிந்துகொள்ளத் திறன் அற்ற இளைய தலைமுறை அச்சமூட்டுகிறது.
பாரதப் பிரதமரின் இந்தோனேசியப் பயணத்தால் விளைந்த நன்மைகள் யாவை என்று அந்த இரு பெண்களிடமும் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்தோனேசியா எங்கே இருக்கிறது என்று கேட்டுவிட்டால் என்ன செய்வதென்று வாய்மூடிக் கடந்து சென்றேன்.
மாபெரும் வரலாற்று நிகழ்வு நடக்கவிருக்கிறது. உலகில் அதிக மக்கட்தொகை கொண்ட தேசத்தின் தலைவர், இன்றைய நிதர்ஸன உலகின் பெரும் சக்தி படைத்த நாட்டின் தலைவர் நமது மாநிலத்திற்கு வருகிறார். அவரை அழைத்து வருவது உலகின் மற்றுமொரு பெரிய தேசத்தின் தலைவர். கடந்த 70 ஆண்டுகளில் எத்தனைத் தலைவர்கள் இவ்வாறு தமிழகத்திற்கு வந்துள்ளனர்? வருவோரெல்லாம் டில்லியில் இறங்கிப் பேசிவிட்டு, தாஜ் மஹாலில் படம் எடுத்துக்கொண்டு சென்று விடுவர் – பாரதத்தின் ஒளிப்பிரதி ஏதோ தாஜ் மஹால் தான் என்னும் பாவனையை வளர்த்துக் கொண்டு. தற்போது தேசத்தின் பன்முகத்தன்மையை, கலாச்சார வலிமையை உணர்த்தும் மஹாபலிபுரம் நிகழ்வு பாரதத்தின் மீதான ஒட்டுமொத்தப் பார்வையையும் மாற்றவல்லது. பாரதம், கணவன் மனைவியின் கல்லறையன்று, அது சில ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மங்களின் சங்கமம், மனிதன் கல்லின் ஊடாகத் தனது மேன்மையைக் காலத்திற்கும் நிற்கும் வகையில் உணர்த்தியுள்ள உன்னத நாகரிகம் என்பதே.
ஒருவேளை மஹாபலிபுரத்தில் இருந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியானால் எப்படியிருக்கும்? ‘Bandung Declaration’, ‘Warsaw Pact’, ‘Shimla Declaration’ என்று நாம் இன்றளவும் பேசும் ஒப்பந்தங்கள் போல் ‘Mahabalipuram Declaration / Pact’ என்று ஏற்பட்டால் எப்போதுமே வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாநிலமாகத் தமிழகம் நிலைத்திருக்கும். இந்த வரலாற்றுப் பிரக்ஞை ஊறவே ஊறாத ஒரு ஆட்டுமந்தைக் கூட்டத்தை நமது முட்டாள் கல்வித் திட்டத்தின் மூலம் உருவாக்கிவிட்டிருக்கிறோம் என்று நினைக்கையில் வெட்கமே ஏற்படுகிறது.
தமிழகம் என்றில்லை, பொதுவாகப் பல மாநிலங்களிலுமே இதே கதை தான் என்கிறார் என் நண்பர். தமிழகத்தில் சினிமா, மற்ற இடங்களில் வேறு விஷயங்கள் காரணம். அவ்வளவுதான் வேறுபாடு என்கிறார் அவர்.
கொஞ்சம் நிம்மதி.
#NarendraModi #XiJinPing
Vanakkam Sir,
ஒளிப்பிரதி word meaning in English ?
Thanks
Ramkumar
LikeLike
Photocopy / ( also called Xerox copy erroneously)
>
LikeLike