பொ.யு. 900
திருமங்கையாழ்வார் தேரழுந்தூருக்கு வருகிறார்.
‘யாரோ தேவாதிராஜனாம், மிக்க அழகுடையவனாம். அப்பெருமானைக் கண்டு செல்வோம்’ என்று வயல்கள் சூழ்ந்த ஊர்களைக் கடந்து தேரழுந்தூருக்கு வருகிறார்.
ஊரில் பெருமாள் இல்லை. பல ஆபரணங்களுடன் மன்னன் நிற்கிறான். ‘யாரோ மன்னன் போல் தெரிகிறது. இவனைப் பார்க்கவா வந்தோம்?’ என்று நொந்துகொண்டு திரும்புகிறார்.
தேவாதிராஜன் சைகை செய்ய, ஆழ்வாரின் கால்களில் மலர்களால் ஆல விலங்கு. நகர முடியவில்லை. திரும்பிப்பார்க்கிறார். ஆமருவியப்பன் (எ) கோஸகன் (எ) தேவாதிராஜன் காட்சியளிக்கிறான்.
பெருமாளைப் பற்றிப் பின்வரும் பாசுரம் பாடுகிறார் ஆழ்வார்.
‘தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே’
‘வயோதிகம் இல்லாமையால், தீரா இளமையுடன் நித்ய கர்மங்களை விடாமலும், மூன்று வேளையும் அக்னி ஹோத்ரமும் செய்துவரும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் ஊர் இது. இவர்கள் செய்யும் வேள்விகளால் மழை பொழிகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால், இவர்கள் செய்யும் வைதீகக் காரியங்களின் பலனான, இவர்கள் வேள்வியைத் துவங்கும் முன்னரே வானம் மழையைப் பொழிந்துவிடுகிறது. அப்படியான தேரழுந்தூரில் உள்ள கண்ணன் யாரென்றால், தன் தந்தையின் காலில் விலங்கை நள்ளிரவில் உடைத்தான் அல்லவா, அவனே நிற்கிறான் ஆமருவியப்பன் உருவில். அப்படியான ஊரே தேரழுந்தூர்’ என்பதாகப் பொருள்படும்படிப் பாடுகிறார்.
வானம் முன்னமேயே மழையைப் பொழிந்துவிடுகிறது. அந்தணர்கள் மூன்று வேளையும் அனல் ஓம்புகின்றனர். அப்படி ஒரு காலம் இருந்துள்ளது.
அன்று ஆழ்வார் காலில் மலர்களால் கட்டப்பட்ட சங்கிலியுடன் நின்ற இடம் ஆழ்வார் கோவில் என்று சன்னிதித் தெருவில் தனிச் சன்னிதியாக உள்ளது.
அப்படியான தேரழுந்தூர் இன்று எப்படி உள்ளது என்பதை ஒருமுறை விஜயம் செய்து பாருங்கள். மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ள திவ்யதேசம்.
Leave a reply to Gopalakrishnan Cancel reply