தேரழுந்தூர் வந்த திருமங்கையாழ்வார் பெருமாளைப் பாடியதை விட ஊரைப் பாடியுள்ளார்.
நெல் வயலில் மீன் பிடித்து உண்ண வேண்டிக் குருகு என்னும் பறவைகள் வயலிற்கு வருகின்றன. பொன்னியின் கருணையால் வயல்களில் நீர் தளதளத்து நிற்கிறது. குருகு என்பது அதிக உயரம் பறக்க முடியாத பறவை. பெரும்பாலும் சிறிய செடிகளில் வாழும் அப்பறவை தனது அளவிற்கு ஏற்றது போல் ‘ஆரல்’ என்னும் சிறிய மீனைக் கவ்விக்கொண்டு, மேலும் மீன் கிடைக்குமா என்று பார்க்கிறது.
அப்போது வயல் நீரில் இருந்து பெருத்த வாளை மீன் ஒன்று பெரும் பூரிப்புடன் ஒரு துள்ளல் துள்ளி மேலெழும்புகிறது. அதைப் பிடித்து உண்ணலாம் என்று எண்ணும் குருகு அதன் அருகில் சென்று பிடிக்க முயல்கையில் வாளை மீனின் பெரிய உருவம் கண்டு அச்சமுற்றுப் பின்வாங்குகிறது. இப்படிப்பட்ட வளம் மிக்க ஊரான திருவழுந்தூரில் பாரதப் போரில் தேரோட்டியதன் மூலம் எதிரிப்படைகளை அழித்த கண்ணன் எழுந்தருளியுள்ளான்.
அந்தப் பாடல் இதோ:
பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை மாள,
பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும்,
நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள்,
ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!
ஊருக்குக் கொடுத்த விளக்கத்தின் அளவு பெருமாளுக்கு இல்லையே என்று எண்ண வேண்டாம். அங்குதான் வியாக்யானகர்த்தர்கள் வருகிறார்கள். குறிப்பாகப் பெரியவாச்சான் பிள்ளை.
கண்ணன் தேரோட்டினான். தேரோட்டுவதன் மூலம் எதிரிகளை அழித்தான். ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும் அழித்தான். ஆயுதம் ஏந்தவில்லை என்றாலும் அவனை அழிக்க எதிரிகள் சூழ்ச்சி செய்தனரே. அப்படியிருந்தும் அவன் தேரோட்டி வென்றான். சரி, அவன் தேரோட்ட வேண்டிய காரணம் யாது?
கூரத்தாழ்வார் உடையவரின் சீடர். வயோதிகர். பெரும் ஞானி. அவர் தனது தள்ளாத வயதில் சீடன் ஒருவனுக்குப் பாடம் சொல்லுகிறார். கண் தெரியாததால் சுவடியைச் சீடனின் கையில் கொடுத்து வாசிக்கச் செய்து தான் பொருள் கூறுவார். ஆக, சுவடி வைத்துள்ளவன் சீடன். ஆனால், சீடனுக்கோ தான் பாடம் கற்பதைப் பிறர் கண்டால் நகைப்பர், தன்னைச் சிறியவனாக எண்ணுவர் என்று கவலை. இக்கவலையைக் கூரத்தாழ்வான் அறிந்தேயிருந்தார்.
ஒரு நாள் பாடம் நடக்கும் வேளையில் சீடனைக் காண அவனது நண்பன் வருகிறான். இதை உணர்ந்த கூரத்தாழ்வான் சீடன் கையில் இருந்த சுவடியத் தான் வாங்கிக் கொள்கிறார். தான் சீடனிடம் பாடம் கற்பது போலவும், சீடனே குரு என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். சீடன் மகிழ்கிறான். ஆனாலும் குரு கூரத்தாழ்வான் தான். பாடம் கற்பவன் சீடன் தான். தன் நிலையைக் குறைத்துக் கொண்டாவது பாடம் சொல்லிக்கொடுப்பது நல்லாசிரியனின் இயல்பு. அவ்வாறே, கீதாசார்யனான கண்ணன், தன் நிலையைக் குறைத்துக் கொண்டு, தேரோட்டியாக அமர்ந்து, சீடனான அர்ச்சுனனுக்குப் பாடன் எடுத்தான், போரில் வெற்றி பெற உதவினான்.
பாடலில் முதல் இரண்டு வரிகளுக்கும் பின்னர் வரும் இரு வரிகளுக்கும் என்ன தொடர்பு? தேரோட்டுவதற்கும், வாளை மீன், குருகினங்கள் முதலியவற்றுக்கும் தொடர்பு யாது?
பீஷ்மர், துரோணர் முதலிய மாரதர்கள் கண்ணனை, ‘ஒரு தேர்ப்பாகனுக்குக் கூடவா ஈடு கொடுக்க முடியாது?’ என்கிற எண்ணத்தில் அணுகுகின்றனர். ஆனால் வீழ்த்த முடியவில்லை. இவ்விடத்தில் கண்ணன் வாளை மீன் போலவும், பீஷ்ம துரோணாச்சாரியார்கள் குருகினங்கள் போலவும் தோன்றுகின்றனர். எனவே உவமை, உவமேயம் என்பதாக பின்னிரண்டு வரிகளும், முன்னிரண்டு வரிகளும் முறையே அமைந்துள்ளன. திருமங்கையாவார் என்ன சாதாரணமானவரா? உண்மையில் கவிப்பேரரசு என்னும் பட்டம் பெற இவர் ஒருவரே தகுதியானவர்.
இப்பாடலில் ‘தேவ தேவன் ஊர் போலும்’ என்பது கவனிக்கத்தக்கது. பெருமாளின் பெயர் ‘தேவாதிராஜன்’. இதையே தேவ தேவன் என்கிறார் ஆழ்வார்.
வாளை, குருகினம் என்பதெல்லாம் உயர்வு நவிற்சி என்று கடந்து சென்றுவிடலாம் தான். ஆனாலும் மூன்றில் ஒரு பங்காவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஊரின் சுபிட்சம் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்களேன். ‘அலைத்து வரும் பொன்னி வளம்’ என்று பிறிதொரு பாசுரத்தில் சொல்கிறார் ஆழ்வார். எனவே நீர் வளம், அதனால் மீன் வளம், குருகு முதலிய பறவைகள் முதலியன பெருகியிருந்திருக்க வழியுண்டு.
வயல்களை விட்டுவிடுவோம், பிளாட் போட்டது போக, மீதமுள்ள இடத்தில் நெல் பயிராகிறது. போர்வெல் மூலம் நீர் இறைக்கிறார்கள். கோவில் புனருத்தாரணத்துக்குப் பின்னர், 10 ஆண்டுகள் மட்டுமே கடந்துள்ள நிலையில், தற்போது மழை பெய்தாலும் புஷ்கரணியில் நீர் நிற்பதில்லை. அந்தி மூன்றும் அனல் ஓம்பும் வேதியர் வேள்வி செய்ததால் வானம் முன்னரே பொழிந்தது என்று முதல் பாசுரத்தில் கண்டோம். இப்போது மழை பெய்தாலும் புஷ்கரணியில் நீர் இல்லை. காரணம் புரிகிறதா?
எப்படி இருந்திருக்கிறோம். இன்று எப்படி இருக்கிறோம்? சன்னிதித் தெருவில் ஒருமுறை நடந்தாலே நாம் தற்போது இருக்கும் அழகு தெரிந்துவிடும்.