ஊரையும், வீதியையும், வயலையும், வீதி வாழ் மறையோரையும், ஊரில் உள்ள அம்பு போன்ற கண்களை உடைய பெண்களையும் பாடிய திருமங்கை மன்னன், இப்போது மீண்டும் கழநியைப் பாடுகிறார். ஊர் அவரைத் திக்குமுக்காட வைத்துள்ளது போல. திடீரென்று பெரு மகிழ்ச்சியும், அது தொடர்பான மாந்தர்களும், தகுந்த சூழ்நிலையும் ஏற்பட்டால், அளவு கடந்த மகிழ்ச்சியில் பல செய்திகள் ஒரே நேரத்தில் தோன்றுவது போல் திருமங்கையாழ்வார் தேரழுந்தூரின் சூழலையும், மாந்தரையும், தேவாதிராஜனையும் ஒரு சேரக் கண்டு பேரானந்தத்தில் திளைக்கிறார் போலும்.
தன் குஞ்சிற்கு இரை தேட ஆண்பறவை தனது பெண் துணையையும் அழைத்துக் கொண்டு தேரழுந்தூரின் வயல்களுக்கு வருகிறதாம். வயல்களில் சேறால் நிரம்பி வழிகின்றனவாம். அச்சேற்றில் இறங்கி, சிறிய மீன்கள் அகப்படுமா என்று பார்க்கின்றனவாம் தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும். அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த ஊரில் உள்ள தேவாதிராஜன் எழுந்தருளியுள்ளான். அவன் யாரென்றால், பிரளய காலத்தின் போது சிறு ஆலிலை மேல் பள்ளிகொண்டிருந்த, தன் கால் விரலைத் தானே சுவைத்துக்கொண்டிருந்த, குழந்தை வடிவிலான, பெருங்கருணையுடைய திருமால் ஒருவன் இருந்தானே, அவனே என் கண்ணுள்ளும், உள்ளத்துள்ளும் மனத்திலுள்ளும் புகுந்துகொண்டு உறைகிறானல்லவா, அவனே இத்தேரழுந்தூரில் நின்றுகொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே
முன்னர் வந்த பாடல்களில் ஊரின் வயல்களில் நீர் நிரம்பி வழிகிறது என்றும், வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன என்றும் சொன்ன ஆழ்வார், இப்போது தன் குஞ்சுகளுக்கு இரை தேட சேற்றில் இறங்க வேண்டிய காரணம் யாது? என்று சிந்திக்க விழைவது இயற்கையே. ஆனால் வியாக்யானம் செய்த பெரியவாச்சான் பிள்ளை நம்மைப் புள்ளபூதங்குடி திவ்ய தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவ்வூரின் பாடல் : ‘பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய், புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ள பூதங் குடிதானே’ என்பது. இவ்விடத்தில் ‘குஞ்சினால் பெரிய மீன்களை உண்ண முடியாது என்பதால் சேற்றில் சிக்கியுள்ள சிறிய மீன்களைத் தேடுகின்றன புள்ளினங்கள்’ என்று வியாக்கியானம் அமைகிறது. இதையே நமது தேரழுந்தூர்ப் பாசுரத்திற்கும் கொள்ளலாம் என்கிறார் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா ஶ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார், தனது பேருரையில். ஆக, தேரழுந்தூரில் சேற்றில் இறங்கி மீன் தேடிய பறவை ஏன் அவ்வாறு செய்தது என்பது புரிகிறது.
முந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார். என்ன இருந்தாலும் இராமனும், கண்ணனும் சற்று வயதானவுடன் வீரத்தைக் காண்பித்தான். கண்ணனாவது பிள்ளைப் பிராயத்தில் காண்பித்தான். ஆனால் ஆலிலை மேல் வந்த மாலவன் சிறு குழந்தை. தான் உண்ணத் தகுந்தது யாது என்று அறியாமல் தனது கால் கட்டைவிரலையே எடுத்துச் சுவைக்கும் அளவிற்குச் சிறு பிராயம். அத்துடன் பிரளய காலத்தில் ஆலிலை மேல் வருகிறான். ஆகவே குழந்தை வடியில் என் உள்ளத்திலும், கண்ணிலும், மனத்திலும் குடிகொண்டான் என்கிற எண்ணம் போலும்.
ஆண்பறவை தனியே சென்று குஞ்சிற்கு உணவு சேகரிக்காதா? பெண் பறவையுடன் சேர்ந்து தான் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இவ்விடத்தில் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் வெளிப்படுகிறது. ஜீவர்கள் தாங்கள் மோக்ஷம் பெற ஆசார்யன் வழியாகச் சென்றாலும், திருமகளே பெருமாளிடம் அதற்குப் பரிந்துரைக்கிறாள். எனவே, தாயும் தந்தையுமாகவே திருமகளும் திருமகள் கேள்வனும் ஜீவாத்மாக்களாகிய நமக்கெல்லாம் அருள்கிறார்கள் என்னும் நிலையை உணர்த்துகின்றன இப்பறவைகள் என்று பார்ப்பது ஒரு சுவையே.
( ‘புள்’ என்னும் அருமையான தமிழ்ச் சொல்லை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘புள்ளும் சிலம்பின காண்’ என்னும் ஆண்டாளின் பாசுர வரியையும் ஒப்பு நோக்கலாம்).