திருமங்கையாழ்வார் திகைக்கிறார்.
என்ன இந்த ஊரில் எப்போதுமே கார் காலமோ? எப்போதுமே கரு மேகம் சூழ்ந்தே காணப்படுகிறதே என்று எண்ணி அண்ணாந்து பார்க்கிறார்.
தேரழுந்தூரில் உள்ள மாளிகைகள் மீதுள்ள கொடிகள் அசைந்தாடுகின்றன. அக்கொடிகள் மழை மேகங்கள் உள்ள உயரத்திற்குத் தெரிகின்றன. ஊரின் அகண்ட வீதிகளில் எப்போது சென்றுகொண்டிருக்கும் தேர்களினால் ஏற்பட்ட தூசியும், அம்பை ஒத்த கண்களைக் கொண்ட பெண்கள் தங்கள் கூந்தல்களுக்கு நறுமணம் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தும் அகில் புகையும் சேர்ந்து உயரக் கிளம்பி, இன்னொரு கார்மேகப் படலமாகக் காட்சியளிக்கிறது என்பதை உணர்கிறார்.
அப்படியான ஊரில் எழுந்தருளியுள்ள தேவாதிராஜன், முன்னர் ஆலிலை மேல் குழந்தையாகக் கிடந்தவன் தன்னை வெளிப்படுத்தும் முகமாக,’ நான் குழந்தை என்று நினைத்துக் கலங்கினீரே ஆழ்வீர், நான் யார் தெரியுமா? இருளும் பகலும் யாமே ஆவோம். மண்ணுலகமும் விண்ணுலகமும் யாமே ஆவோம். இந்த உலகங்கள் அனைத்தும் யாமேயாதலால் குழந்தை உருவில் இருந்தாலும் எமக்குத் தீங்கு ஒன்றும் நேராது’ என்று உணர்த்தும் விதமாகப் பின்வரும் பாசுரம் அமைகிறது.
பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.
பகலில் சூரியனாக ஒளியை அளிப்பவனும், இரவில் இருளாக நின்றும், அதே நேரம் ஒளி வழங்கும் சந்திரனாகவும் திருமாலே திகழ்கிறான். பகலை இரவாக்கவல்லவனும் அவனே. ஜெயத்ரதனைக் கொல்லப் பகலை இரவாக்கியவன் அன்றோ இந்த ஆமருவியப்பன்?
‘பாரும் விண்ணும் தானேயாய்’ என்னும் சொல்லாடலில், (விண்ணுலகம், பரமபதம் )நித்யவிபூதியும், (பாருலகம்) லீலாவிபூதியும் சுட்டப்படுகின்றன.
எப்போதுமே கார்காலம் போன்று தோற்றம் அளிக்கும் வீதிகளை உடைய தேரழுந்தூர் என்பதில் நாம் காண வேண்டிய இன்னொரு சுவை உண்டு. முதல் பாடலில் ( தந்தை காலில் பெருவிலங்கு) தினமும் மூன்று முறை அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்களது நித்யகர்மாக்களின் பலனாக முன்னதாகவே மழை பொழிகிறது என்றார் ஆழ்வார். அந்தி மூன்றும் அனல் ஓம்புதல் காரணம். மழை காரியம். ஆனால் காரியம் முதலிலேயே நடந்துவிடுகிறது. ஏனெனில் அந்தணர்கள் சளைக்காமல் தினமும் மும்முறை நித்யகர்மாவைச் செய்கின்றனர். அதை நினைவில் கொண்டால், ஒரு வேளை முடிந்து அடுத்த வேளை துவங்கும் முன்னர், ஒரு நித்ய கர்மா முடிந்து அடுத்த கர்மாவிற்கான நேரம் வரும் வரை மழை பொழிந்துகொண்டே இருக்க வேண்டும். எனவே எப்போதும் கருமேகங்கள் சூழ்ந்த ஊராகவே உள்ளது தேரழுந்தூர் என்று எண்ணிப்பார்ப்பது சுவையானது.
‘நிகரில் சுடரா இருளாகி’ என்னும் சொற்கோவை இன்று (05-ஏப்ரல்-2020) விசேஷமாகிறது. இன்று இரவு 9.00 மணிக்கு நாம் விளக்கேற்றினோம், இருளையும், பிணியையும் அகற்ற வேண்டி.