நாயகி பாவத்தில் இருந்த திருமங்கையாழ்வார், கனவு நிலையில் சஞ்சரிக்கிறார். திடீரென்று நனவு நிலைக்கு வருகிறார். தேரழுந்தூரின் வீதிகளில் இருந்து பேரிரைச்சல் மீண்டும் கேட்கிறது.
என்ன இரைச்சல் என்று கூர்ந்து நோக்குகிறார். பஞ்சு போன்று மென்மையான பாதங்களை உடைய நற்குடிப் பெண்கள் பொன்னாலான சிலம்பணிந்து, பேரிரைச்சல் ஏற்படும்படியாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பேரிரைச்சலாம். இப்படிப்பட்ட ஊரில் வாழும் ஆமருவியப்பனைப் பற்றி எண்ணத் துவங்குகிறார். மீண்டும் பரவச நிலைக்கு, கனவு நிலைக்குச் சென்றுவிடுகிறார் ஆழ்வார்.
அடடா, ஆலிலைக் குழந்தை என்று எண்ணிக் கருணையோடு நோக்கினால், ஆமருவியப்பன் புன்முறுவலுடன் அருகில் அமர்ந்து, நெஞ்சத்துள்ளும், கண்ணுள்ளும் குடியேறிவிட்டான். இப்போது என்னை நோக்கிக் கைகூப்பி நிற்கிறானே? ஏன் இப்படி நிற்கிறான் ?
ஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன? என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.
கண்ணன் வெண்ணையை முழங்கையால் எடுத்து உண்டுகொண்டிருக்கும் போது யசோதை தாம்புக்கயிற்றால் அடிக்க வர, அவளை நோக்கிக் கண்களைக் குவித்து, இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கோரினான் அல்லவா? அதைப்போன்றே என்னிடமும் கைகூப்புகிறானே? ஓ, காரணம் புரிந்துவிட்டது. பேரின்ப அனுபவத்தைக் கொடுத்ததால் வஞ்சிக்கொடி போன்ற என் இடை நோவு எடுத்தது என்பதால் கைகூப்புகிறான் கண்ணன் என்று கனவு நிலையில் நினைக்கிறாள் நாயகியான ஆழ்வார்.
இப்படியான கனவு நிலையில் உள்ள பரகால நாயகி, திடீரென்று தெருவில் இருந்து எழும் சிலம்பு ஒலிகளால் கனவு நிலை நீங்கப்பெற்று மீண்டு எழுகிறாள்.
வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே
சிலம்புகள் ஒலிக்க ஆடும் தேரழுந்தூர்ப் பெண்களை ‘நற்பாவைமார்கள்’ என்று அழைக்கிறார். முந்தைய பாடல்களில் ‘அம்பு அராவும் மடவார்’ என்றார். இப்போது அவர்கள் நற்குடியைச் சேர்ந்தவர்கள், பாவையர்கள் என்கிறார்.
தங்கம் என்ற பொருளைத்தரும் ‘ஹாடகம்’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல் மருவி, ‘ஆடகம்’ என்று பாடலில் வருகிறது.
கனவு நிலையும், நனவு நிலையும் மாறி மாறி வரும் நிலையில் ஆழ்வார் பேசுவது கண்ணன் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும், பரகால நாயகி வடிவத்தின் வழியே அவர் கொண்டுள்ள காதலையும் உணர்த்துவன. இந்த இரு நிலைகளையும் திருக்குறளின் காமத்துப் பாலில் உள்ள பல குறட்பாக்களில் காணமுடிகிறது என்பது ஒரு சிறப்பு.