தேரழுந்தூரின் வீதிகளில் மட்டுமே ஆடல் ஓசை கேட்கவில்லையாம். திருமங்கையாழ்வாரின் காதுகளில் வேறொரு இசையும் நாட்டியமும் கேட்கின்றனவாம்.
தேரழுந்தூரில் மிகப்பழையதான குளங்கள் உள்ளனவாம் (தற்போதும் உள்ளன). அவற்றில் மிக நெடுங்காலமாகவே நீர் நீறைந்து இருப்பதால் அருகில் உள்ள வயல்கள் வளமாக உள்ளன. குருகினங்கள், வாளை மீன்கள் முதலியனவற்றை முன்னரே பார்த்தோம். தற்போது நீர் நிலைகளின் மிகுதியால் அவற்றில் தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன.
தாமரைப் பூக்களில் தேன் அதிகம் இருப்பதால் அவற்றை அளவிற்கு அதிகமாகப் பருகிய வண்டினங்கள் போதை ஏறி, அதனால் சுரம் தவறாமல் பாடுகின்றனவாம். பாடல் ஒலியால் உந்தப்பட்ட அன்னப்பறவைகள், அருகில் உள்ள வயல்களில் இறங்கி, ஆணும் பெண்ணும் இணையாக நடனத்தில் ஈடுபடுகின்றனவாம். நாதம், அதன் பின் பரதம் என்று ஏற்பட்டது போல், வண்டுகளின் ரீங்கார இசை, அதனால் ஏற்பட்ட அன்னங்களின் நடனம் என்று களை கட்டிய வயல்களை உடைய ஊராக உள்ளது தேரழுந்தூர்.
ஆண், பெண் அன்னங்களின் கூட்டுக் களியாட்ட நடனத்தைக் கண்ட திருமங்கையாழ்வார், மீண்டும் கனவு நிலைக்குச் செல்கிறார். அவருக்குத் தான் பரகால நாயகியாக, ஆமருவியப்பனிடம் பெற்ற பேரானந்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. ‘ஆனந்த அனுபவங்களை அளித்துவிட்டு, என் இடையில் உள்ள ஆடைகள் நெகிழுமாறு என் அழகுகள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டு என்னைவிட்டுப் பிரிந்து சென்ற தேவாதிராஜன் வசிக்கும் ஊரன்றோ இந்தத் தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்?’ என்று கனவு நிலையில் இருந்து கேட்கிறார் பரகால நாயகியான திருமங்கையாழ்வார்.
ஆமருவியப்பன் நீங்கியதால் தனது ஐம்புலன்களும் தன்னைவிட்டு நீங்கிவிட்டன என்கிறார் ஆழ்வார். பரமாத்மா அன்றி ஜீவாத்மா ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே
ஆமருவியப்பன் தன்னை விட்டு நீங்கினாலும் அவரைப் ‘புனிதர்’ என்று பரகால நாயகி அழைக்கிறாள். இது அவள் ஊடலால் ஏற்பட்ட கோபத்தால் சொல்கிறாள் என்கின்றனர் உரையாசிரியர்கள்.
‘மன்னு முது நீர்’ என்னும் பயன்பாட்டால், தேரழுந்தூரில் மிகப் பழங்காலத்தில் இருந்தே நல்ல நீர் நிலைகள் உள்ளதை அறிய முடிகிறது.
ஆதி நாள் முதல் நீர் தேங்கியுள்ள குளங்கள், அவற்றால் வளம் பெற்ற, வாளை மீன்கள் நிரம்பிய வயல்கள், தாமரைப்பூக்களில் நிரம்பியுள்ள தேனைக் பருகிப் போதையில் பாடும் வண்டுகள், அதைக் கேட்டு நடனமாடும் அன்னப் பறவைகள் என்று இருந்த ஊர் என்பதை எண்ணும் போது தற்போதைய தேரழுந்தூரின் நிலை கண் முன் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை.