சீனாவேறென்ன செய்யும்?
மாவோ ஜெடொங் அளவிற்கு சி ஜின் பிங்ற்கு பிம்பம் கொடுத்தாகிவிட்டது. சி மரணம் அடையும் வரை அதிபராக இருக்கும் அளவிற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியாகிவிட்டது.
மஹாத்மா காந்தியின் பொன்மொழிகள் பாடப்புத்தகங்களில், சாலைகளில், பேருந்துகளில் இருப்பது போல் சி-யின் சொற்களும் எழுதப்பட்டுவிட்டன. அப்படி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தியாகிவிட்டது.
அதே நேரம் பாதி ஆப்பிரிக்காவைக் கடனாளியாக்கி அவர்களிடம் இருந்து கிஸ்தி பெறுவது அல்லது செய்துகொடுத்த கட்டமைப்பை (துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இத்யாதி)ப் பறித்துக்கொள்ளுதல் முதலிய செயல்களையும் செய்து ‘நானும் ரவுடி தான், அமெரிக்கா போல’ என்கிற பிம்பத்தையும் ஏற்படுத்தியாகிவிட்டது. இதற்குப் பலியான முக்கியமான நாடு இலங்கை. ஹம்பந்தோட்ட துறைமுகம் ஒரு சான்று.
தென் சீனக் கடலின் நாடுகள் அனைத்துடனும் சண்டை – கடல் என்னோடது, கனிமம் என்னோடது – கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், பிலிப்பைன்ஸ் என்று எல்லாருடனும் தகராறு. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவு அமைத்து அதில் ராணுவத் தளங்களையும் அமைத்தாகிவிட்டது. இருந்தாலும் தென் சீன நாடுகள் பயப்பட மறுக்கின்றன. டிஜோப்தி என்னுமிடத்தில் ராணுவத் துறைமுகமும் கட்டியாகிவிட்டது.
‘தாய்வான் என்னோடது’ என்று எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் பா.ஜ.க. பெண் எம்.பி. மீனாட்சி லேகி தாய்வான் தினத்தில் காணொளி மூலம் கலந்துகொண்டார்.
RCEP என்கிற ஆசியக் கண்ட நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் அனேகமாக ஒப்பந்தம் ஆகும் போது இந்தியா கெடுத்தது – விட்டிருந்தால் சீனப் பொருட்களுக்கு இந்தியாவில் எந்தத் தடையும் இல்லாமல் விற்க முடியும். சிங்கப்பூரில் நடந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் மோதி திட்டவட்டமாக ‘கையெழுத்திட முடியாது’ என்று வெளியேறிவிட்டார். ஆக, அந்தக் கனவிலும் மண்.
நிக்கோபார் தீவுக்கு அருகில் உள்ள இந்தோநேசியத் தீவில் பாரதம் துறைமுகம் கட்டுகிறது – இலவசமாக. பாரதத்தின் வர்த்தகத் தேவைகளுக்காக என்பது பேச்சானாலும், ஆழ்-துறைமுகம் கட்டுவது பாரதத்தின் நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்குவதற்கு என்று பாதுகாப்புத் துறை பேசிக்கொள்கிறது. இதற்காக பிரதமர் மோதி இந்தோநேசியத் தலைவர் ஜோகோவியுடன் ஈராண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
சீனாவிற்கு எதிரான மங்கோலியாவில் ( கடல் இல்லாத நாடு) கனிம வளங்களை எடுக்க இந்திய நிறுவனங்கள் உதவுகிண்றன.
சீனாவில் பி.ஆர்.ஐ. – Belt Road Initiative – ற்குப் பாரதம் பெரும் தடையாக உள்ளது. மலேசியா அனேகமாக பி.ஆர்.ஐ.ல் இருந்து விலகியேவிட்டது. இந்தோநேசியாவிற்கும் இத்திட்டத்தில் பல கேள்விகள் உள்ளன.
2000-2004ல் வாஜ்பாய், ஜப்பானின் ஷின்சோ அபே, ஆஸ்திரேலியாவின் பிரதமர் சேர்ந்து மூவர் கூட்டணி அமைக்க முற்பட்டனர் – Trilateral Alliance. இதைச் சீனா அப்போதே எதிர்த்தது. 2004-14 வரை இது நடைபெறவில்லை. 2014ல் பாரதம் இம்முயற்சியில் மீண்டும் இறங்கியது. ஜப்பானில் ஹின்சோ அபே மீண்டும் பிரதமரானார். ஆனால் இம்முறை இது நால்வர் கூட்டணியானது. இதில் அமெரிக்காவும் சேர்ந்துகொண்டு Quadrilateral Alliance ஆனது. இதை ‘Diamond Necklace Strategy’ என்று சீனா எதிர்க்கிறது. ஆனால் சீனா மட்டும் ‘String of Pearls’ முறையில் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாமாம்.
1998 அணு ஆயுதச் சோதனைக்குப் பின் பாரதத்தின் மீது அதிக அளவு பொருளாதாரத் தடைகள் கொண்டுவந்த நாடுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா. ஆனால், இன்று இவையே பரதத்தின் ஆகச் சிறந்த நண்பர்களாக உள்ளன. 1998ல் பாரதத்திற்கு யுரேனியம் ஏற்றுமதியை நிறுத்திய ஆச்திரேலியா, தற்போது இந்த ஏற்றுமதிக்காகவே ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. இது பாரதத்தின் வெளியுறவுத் துறைக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. காரணம் யாரென்று தெரியும் – உலகம் சுற்றும் பிரதமர் என்று அழைக்கப்பட்டவர்.
இந்த நால்வர் கூட்டணி பி.ஆர்.ஐ.க்கு எதிராக வேறு வர்த்தகத் தடங்களை உருவாக்கத் திட்டமிடுகிறது. இது சீனாவின் உலக நாயகக் கனவுகளை நேரடியாகப் பாதிக்கும் ஏற்பாடு.
இந்த நிலையில் பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு, அதற்குப் மீளாக் கடன் கொடுத்துத் தனது பி.ஆர்.ஐ. கனவுகளை மெய்ப்பிக்கச் சீனா முயன்றது. 370 சட்ட நீக்கத்தால் அதற்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அங்கும் சரிவு. சீனாவிடம் அதிக அளவில் கடன் பெற்றதால் பாகிஸ்தான் பற்றிப் பேச ஒன்றுமில்லை.
இப்படியான நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கனிம வளம் தேட சீனா முயன்று அதற்கான சர்வதேச அமைப்புகளின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இது பாரதத்தையும் அதன் அண்டை நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் செயல்.
அதே நேரம் தென் சீனக் கடல் நாடுகளில் முக்கியமான நாடான வியத்நாம் பாரதத்திடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைக்கான ஒப்பந்தம் செய்துள்ளது. கம்யூனிஸ்ட் வியத்நாமே நம்பாத நாடு சீனா என்பது சீனாவின் பெருமைகளுள் ஒன்று.
வியத்நாமுடன் உள்ள புரிதல் ஒப்பந்தப்படி, பாரதத்தின் ஓ.என்.ஜி.ஸி. விதேஷ் நிறுவனம் அந்த நாட்டை ஒட்டியுள்ள கடலில் எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்குப் பாதுகாவல் என்று பாரதக் கடற்படையின் சில போர்க்கப்பல்கள் நிற்கின்றன. இதையும் சீனா எதிர்க்கிறது. ஆனால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் எதிர்ப்பை மட்டும் தெரிவிக்கிறது.
தவிரவும் தற்போது ஹாங்காங் பிரச்னையில் உலகம் சீனாவை எதிர்க்கும் நேரத்தில், பாரதம் எந்தக் கருத்தையும் பெரிய அளவில் சொல்லவில்லை. ஹாங்காங் விஷயத்தில் பாரதம் வாய்மூடி இருக்க வேண்டிய தேவை சீனாவிற்கு இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் ஜனநாயக உரிமைகள் விஷயத்தில் பாரதத்தின் சொல்லுக்கு ஏற்றம் உண்டு.
இது தவிரவும், தற்போதைய கொரோனா விஷயமாக அமெரிக்காவும் பிற நாடுகளும் சீனாவின் செயல்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் ஆராய வேண்டும் என்று கேட்டுள்ளன. இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவராகப் பாரதம் பொறுப்பேற்கிறது. ஆக, சீனா தொடர்பான, பாதிக்கக்கூடிய அளவில் விசாரணை செய்யாமல் இருக்க, பாரதத்திற்கு அழுத்தம் தர வேண்டிய நிலையில் சீன அதிபர் சி ஜின் பிங் உள்ளார்.
இத்துடன் ஜப்பான் சீனாவில் இருந்து வெளியேறும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு என்று 2 பில்லியன் டாலர் உதவித்தொகையை அளித்துள்ளது. அந்த நிறுவனங்கள் பாரதம் வரும் என்பது வெளிப்படை. இந்த நேரத்தில் பிரதமர் மோதி ‘ஆத்ம-நிர்பர்’ திட்டம் அறிவித்தார். ஏற்கெனவே ‘மேக் இன் இந்தியா’ திட்டமும் உள்ளது. ஆக, ஆப்பிள் முதலிய நிறுவனங்கள் பாரதத்தில் முதலீட்டைப் பெருக்கியுள்ளன ( ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒரு உதாரணம்).
இதனால் சி ஜின் பிங் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் உடையத் துவங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது செல்வாக்கு குறைந்தால், பதவிக்கு நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே கொரோனாவால் கெட்டபெயர். ஆக, தன்னைக் காத்துக்கொள்ள சி செய்யும் நடவடிக்கைகளே பாரதத்தின் எல்லைப் பிரச்னை.
இதன் ஒரு யுக்தியாக, பாரதத்திற்கு முப்பரிமாண சங்கடம் அளிக்க வேண்டி. நேபாளின் கம்யூனிஸ்ட அரசையும் தொந்தரவு செய்து, பாகிஸ்தானுக்கும் போட வேண்டிய ரொட்டித் துண்டுகளைப் போட்டு சீனா வேலை செய்தது. தற்போது லடாக் எல்லையில் பாரத வீரர்களின் பலிதானம்.
பாரதத்திம் / அமெரிக்கா/ இங்கிலாந்து / ஆஸ்திரேலியா மற்றும் சீனாவிற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று உண்டு. மற்ற நாணுவங்கள் தேசத்திற்கானது. சீன ராணுவம் சீன கம்யூனிஸ்ட கட்சியினுடையது. கட்சியின் நலனைக் காக்க, கூலிப்படையாகச் செயல்படும் பெரும் கூட்டம். ஆகவே ஆபத்தான ஒரு பெரும் திரள்.
அடிபட்டுள்ள தெரு நாயை எல்லாக் கோணங்களில் இருந்தும் தாக்கினால் அது மேலே விழுந்து பிடுங்கும். சி ஜின் பிங் அந்த நிலையில் இருக்கிறார்.
சீனாவுடனான எல்லைப் பிரச்னையை உருவாக்கிக்கொடுத்த நமது முதல் பிரதமருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.