The side that is not spoken about, generally.

#MeToo விஷயத்தில் பாடகர் சின்மயி முதல் பல பெண்கள் வைரமுத்துவால் பாலியல் கொடுமைக்கு / துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே. #MeToo போராட்டம் 2018ல் நடந்தது. ஆனால் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. ‘கவிப்பேரரசு’ என்று அறியப்படும் ஆளுமைக்கு விருதுகளும், சாமரங்களும் மட்டுமே வீசப்பட்டுவந்தன.

இன்னிலையில் SilverscreenIndia என்னும் இணைய இதழில் க்ருபா கே என்பவர் ஆங்கிலத்தில் வைரமுத்து குறித்தும், அவரது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுடன் எடுத்த பேட்டிகள் குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையில் விவகாரங்கள் பலதும் எழுதப்பட்டிருந்தன.

இதைக்குறித்து காலச்சுவடு பதிப்பகத் தலைவர் கண்ணன் அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். அதில் பதிவிட்டிருந்த எழுத்தாளர் பெருமாள்முருகன் இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்றும் கேட்டிருந்தார். ‘மொழி பெயர்க்க காப்புரிமை விலக்க ஒப்பந்தம்’ கிடைக்குமா என்று நான் கேட்க, கண்ணன் அவர்கள் க்ருபா கெயைச் சுட்டியிருந்தார். நானும் SilverscreenIndiaவின் ஃபேஸ்புக் தளத்தில் அனுமதி கேட்டிருந்தேன். இதற்கிடையில் கண்ணன் அவர்களின் ஃபேஸ்புக் சுவற்றில் க்ருபா கெ ‘பதில் எழுதுகிறேன்’ என்று தெரிவித்தார். நான் தேடிப் பார்த்தேன். என் அறிவுக்குப் புலப்படவில்லை. ஆனாலும் அவர் அனுமதி கொடுத்ததாகவே  அனுமானித்து, கட்டுரையை எழுதலாமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அவ்வமயம் தமிழ் தி ஹிந்துவில் நடுப்பக்கத்தில் வைரமுத்துவை விதந்தோதி மூன்று கட்டுரைகள் வந்தன. ஜெயமோஹன் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். (ஜெயமோஹன் கண்டித்தது வைரமுத்து ஞானபீடப் பரிசுக்கு அடிபோடுகிறார் என்பதால்). ஆனாலும் பரவலாகப் பலரும் கண்டித்துச் சுட்ட, ஹிந்து நிர்வாகம் மறு நாள் மன்னிப்புக் கோரியது.

மறுநாள் பாடகர் சின்மயி ஒரு காணொளி வெளியிட்டார். ‘உங்கள எல்லாம் நம்பி நாங்களும் பொண்ணா பொறந்து இந்த ஊர்ல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். பல பாலியல் குற்றம் பண்ணின வைரமுத்து அரசியல் செல்வாக்கால சந்தோஷமா உலா வறார். தி.மு.க.வுக்கு நெருக்கம். அதால அவருக்கு, அவர் பண்ணின பாலியல் தொல்லைகளுக்கு எந்த தண்டனையும் இல்ல. ராதா ரவி பி.ஜே.பி.ல இருக்கார். என் பாட்டு வாய்ப்பெல்லாம் கெடுத்தார். தப்பு பண்ணினவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்க. வன்முறைக்கு ஆளான எல்லா பெண்களும் இன்னும் கஷ்டத்துல இருக்காங்க. உங்கள எல்லாம் நம்பி இந்த உலகத்துல நாங்க எப்பிடி வாழறது? உங்க தங்கைய, அம்மாவ, மனைவிய, மகள எங்களோட நிலைல வெச்சு பாருங்க. என்னமோ போங்க…’ என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

ஒரு தந்தையாக, ஒரு அண்ணனாக, ஒரு கணவனாக, ஒரு நேர்மையான குடிமகனாக, ஒரு தமிழ் / ஆங்கில எழுத்தாளனாக என் மன உணர்ச்சிகள் கொந்தளித்து எழுந்தன. பெண் இனத்தின் ஒட்டுமொத்தக் கதறலாக இது மனதில் நின்றது. பா.ஜ.க. நாங்கள் மாற்றத்தைத் தருகிறோம் என்றது. ஆனால் ராதாரவியைச் சேர்த்துக்கொண்டுள்ளது. மற்ற கட்சிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பெண்ணியவாதிகள் கனிமொழி அம்மயார், ‘தோழர்’ கவிதா கிருஷ்ணன், ‘தோழர்’ பிருந்தா கராத், தேசிய பெண்கள் ஆணையம் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று தெரியாது. கேட்டும் பலனில்லை. வைரமுத்துவின் நிலையில் ஒரு பா.ஜ.க. கவிஞர் இருந்திருந்தால் இந்நேரம் உலகம் இரண்டுபட்டிருக்கும்.

அலுவலக வேலை முடிய வெகு நேரம் ஆனது. இரவில் உறங்க முடியவில்லை. மன உலைச்சல். ஆகவே அந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினேன். கண்ணனின் ஃபேஸ்புக் தளத்தில் மீண்டும் க்ருபா கெவிற்கு நினைவூட்டினேன். அப்பொதும் அவர் அனுமதி அளித்திருந்ததாகவே தோன்றியது. ஒரு பதிலுக்குப் பின் அவர் வேறு பதில் எதுவும் எழுதவில்லை.

கட்டுரையின் ஒரு பாகத்தை எழுதினேன். முடித்து ஒருபாடு அழுது தீர்த்தேன். காமுகன் ஒருவன் பெரிய னிலையில் உள்ளான். அவனுக்குப் புனிதர் பட்டம், நாளும் ஒரு அங்கீகாரம். இத்தகையவனை அழைத்து திருப்பாவை பற்றிப் பேசச் சொன்னார்கள். அவன் தன் அறிவின் நிறத்தைக் காட்டி ஆண்டாளைக் கொச்சைப்படுத்தினான். அவனது இழிச் செயல்கள் குறித்த எந்தவொரு தமிழ்க் கட்டுரையும் இல்லை. தமிழ் ஊடகங்கள் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. அவனுக்கு மேலும் ஓத்து ஊதிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே அக்கட்டுரையை வெளியிட்டேன். இரண்டாம் பகுதியும் எழுதத் துவங்கிவிட்டேன்.

வெளியிட்ட 2 மணி நேரத்திற்குள் கட்டுரை வைரல் ஆனது. இனையத்தில் பலமுறைகள் பகிரப்பட்டு, கருத்துரைக்கப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தொலைக்காட்சி ஊடகம் ஒன்று என்னுடன் பேச முயன்றது.

அப்போது SilverscreenIndia ட்விட்டரில் வந்து கட்டுரையை நீக்கச் சொன்னது. அவர்களே தமிழில் வெளியிட இருப்பதாகச் சொன்னது. ‘காப்புரிமை ஆசிரியரிடம் உள்ளது’ என்றது. ‘நான் ஆசிரியரிடம் பேசிவிட்டேன். அனுமதி அளித்துவிட்டார்’ என்றேன். சற்று நேரம் கழித்து ‘காப்புரிமை தங்களுடையது’ என்றது. அவர்களுக்கு ஏதோ நெருக்குதல், அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை ஊகிக்கிறேன். தவறாகவும் இருக்கலாம்..

கட்டுரையை நீக்கிவிட்டேன். க்ருபா கெ விற்கு இந்தச் சம்பவங்கள் குறித்து மின்அஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கலாம்.

சுபம்.

 

2 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    ஆங்கிலக் கட்டுரை லிங்க் கிடைக்குமா சார்? காப்புரிமை என்ற பெயரில், இதனை மறைத்து விடுவர். உங்கள் கட்டுரையை இந்த தளத்தில் பிரசுரிக்கவே இல்லையே சார்.

    Like

  2. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    மன்னிக்கவும் சார். நீங்கள் முன்பு பதிவிட்டுள்ளீர்கள். நான் தான் கவனிக்கவில்லை. Silver Screensல் தேடுகிறேன்.

    Like

Leave a comment