- 1-5 வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி + கட்டாய ஆங்கிலம்.
- 6ல் இருந்து கட்டாயமாக ஏதாவது ஒரு தொழிற்கல்வி.
- வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இல்லாத மூன்றாவது மொழியாக ஏதோ ஒரு இந்திய மொழி.
- இவற்றை நடைமுறைப்படுத்த 5 ஆண்டுகள் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
அ: தாய்மொழி வழிக் கல்வி
1-3 வகுப்பு வரை ஆங்கிலம் புரியாமல் நான் பட்ட பாடு நினைவில் இருந்ததால் கேட்டிருந்தேன். சிங்கப்பூரில் வளர்ந்த என் மகன் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசுவதைக் கண்டும் இந்தப் பரிந்துரையைச் செய்தேன்.
ஆ. 6 முதல் தொழிற்கல்வி
நெசவு, தச்சு, சிற்பம், மின்னியல், பானை செய்தல், அடிப்படை வீடு கட்டும் கலை முதலியனவற்றை மனதில் கொண்டு பரிந்துரைத்தேன். பத்தாம் வகுப்புடன் நின்று, தொழில் செய்யவும் அல்லது பணி செய்துப் பொருள் ஈட்டிப் பயிலவும் வேண்டிய மாணவர்களுக்குப் பயன்படும் என்பது என் எண்ணம்.
இ. மூன்றாம் மொழி
இந்த மொழியில் வெற்றி பெற்றே ஆக வேண்டியதில்லை. ஏதோ ஒரு இந்திய மொழி என்பதால் தமிழகத்தில் யாரும் நாகாமீஸ், அஸாமீஸ் வாசிக்கப்போவதில்லை. அனேகமாக அனைவரும் ஹிந்தி பயில்வர் (விருப்பத்துடன்). இதனால் சாதுர்யமாகக் காரியம் சாதிக்கலாம் என்பது என் எண்ணம். இதில் வெளி நாட்டு மொழியைக் கூடுதலாகப் பயிலவும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
இவற்றில் அனேகமாக எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுள்ளனர். தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை இந்தப் புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றும் உள்ளது. அது: 6ம் வகுப்பில் இருந்து கணினிப் பயிற்சி. மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
வங்கிகள் சார்ந்த மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால் என்னால் ஒன்றை உறுதியாகக் கூற முடியும். எந்த ஒரு கணினி மொழியைக் கற்றாலும் கணினி சார்ந்த பிறிதொரு மொழியைக் கற்க எந்தத் தடையும் இருந்ததில்லை. பல மொழிகள் தெரிந்திருப்பது வரப்பிரசாதமே.
சொந்தக் கதை: தமிழ், ஆங்கிலம், பேசி, எழுதும் அளவிற்கு இந்தி, பேசிப் புரிந்துகொள்ளும் அளவிற்கு மராத்தி, தற்போது மறந்துவிட்டாலும் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கற்ற ஜப்பானிய மொழி என்று வாழ்ந்துவருகிறேன். பல மொழிகளில் பரிச்சயம் இருப்பதால் என் தமிழறிவு அழியவில்லை. மாறாக மேம்பட்டுள்ளது. உராந்து பார்த்து, ஒப்புமைகளைக் கண்டு வியந்து, மொழி சார்ந்த அழகியல்களைக் கண்டு மனம் உருகுவதற்குப் பன்மொழிதி திறன் உதவுகிறது.
புதிய கல்விக் கொள்கையில் என்னைக் கவர்ந்த அம்சம் : முதலாமாண்டு பட்டப்படிப்பிற்குப்பின் சான்றிதழ், இரண்டாமாண்டிற்குப் பின் பட்டயம், மூன்றாம் / நான்காம் ஆண்டிற்குப் பின் பட்டம் என்று அமைந்துள்ளது. சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் தலைவர் வைத்யசுப்பிரமணியன் இந்தப் பரிந்துரையை அளித்திருந்தார். அதனையும் அரசு ஏற்றுள்ளது.
+1, +2 பயிலும் போது எனக்கு உயிரியல், வேதியியல் முதலியவற்றில் விருப்பம் இருந்ததில்லை. ஆனாலும் அவற்றைப் பயின்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. எனக்கு விருப்பமான உயர் இயற்பியலைத் தேர்ந்தெடுத்துப் பயில வாய்ப்பு இல்லை. தற்போது இது மாற்றப்பட்டுள்ளது. எனக்குக் கிடைக்காதது என் பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது. நன்று.
35 ஆண்டுகளுக்குப் பின் பாரதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியே இந்தக் கல்விக் கொள்கை. ஊழியர்களை விடுத்து, வேலைகளை உருவாக்குபவர்களை, தொழில் முனைவோரை உருவக்கும் அதிரடியான கல்விக் கொள்கை இது என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.