‘வேண்டாம். இப்பத்தான் சாப்டேன். நாக்கிலேயே இருக்கு’
‘அதில்ல, இது புதுசா போட்டிருக்கற கஷாயம். யூடியூபில பார்த்தேன்’
‘இப்பதானே பல் தேய்ச்ச உடனே குடுத்தியே, அதுக்குள்ள இன்னொண்ணு வேண்டாமே’
‘ஆங், ரொம்பத்தான். காபி சாப்டதை சொல்லிக்காட்டறேளாக்கும்.’
‘ஓ அதுக்கு காபின்னு பேர் இருக்கான்ன?’ ‘தோ பாருங்கோ, சாப்ட்டா சாப்பிடுங்கோ, விட்டா விடுங்கோ. நாங்க எல்லாரும் சாப்பிடப் போறோம். நீங்களும் சாப்பிடல்லேன்னா எங்களுக்கெல்லாம் வயத்த வலிக்குமேன்னு நினைச்சா..’
‘போகட்டும். இந்தக் காபில என்ன இருக்கு?’
‘அப்பிடிக் கேளுங்கோ. சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுகுறிஞ்சான், இஞ்சி, தேன், எலுமிச்சம்பழம், மிளகு..’
‘அந்த சபீனா, கோலப்பொடி எல்லாத்தையும் விட்டுட்டியே. அதையும் போட்டுடு. எதுக்கு விட்டுவெப்பானேன்’
‘ஆமாமா, ரொம்பத்தான். மருதாணி, அரளி வெரை விட்டுட்டேளே. அதையும் போட்டுடவா?’
‘சரி போகட்டும். இப்ப இந்தத் தண்ணியக் குடிச்சா என்ன ஆகும்? எதுக்கு இது?’
‘அதத் தெரிஞ்சுக்கத்தான் உங்ககிட்ட குடுக்கறேன். என்னவெல்லாம் ஆறதுன்னு பார்க்கணும்.’
கொஞ்சம் விவகாரமான விஷயம் என்பதை உணர்ந்துகொண்டேன்.
‘எலுமிச்சம் பழம் பிழிஞ்சியா?’ ( குறிப்பு: கவனத்தைத் திருப்பும் முயற்சி).
‘அடடா. இல்லியே. இதோ பிழிஞ்சுடறேன். கொஞ்சம் இருங்கோ’
‘மெதுவாவே வா. வரும்போது, பிழிஞ்ச எலுமிச்சை தோல் இருக்குமோனோ, அதையும் எடுத்துண்டு வா.’
‘ஏன் எதுக்கு?’
‘இல்ல, கொரோனாவுக்காக இனிமே சாப்பிடாதது இல்ல. யார் என்ன சொன்னாலும் கரைச்சு சாத்துமுது மாதிரி குடிகக்றோம். இதே ரீதில போனா, எலுமிச்சம்பழத் தோல் இருக்கோனோ அதத் தலைல தேச்சுக்க வேண்டியது தான்’
‘ஓ அதுக்கா. கல்யாணம் ஆனதுலேர்ந்தே எலுமிச்சம் பழத் தோலத் தலைல தேச்சுண்டுதான் இருக்கேன்’
எதிரணி பலம் பெறுவதை உணர்ந்து கொண்டு டேக்டிகலாகப் பின் வாங்க எண்ணி ‘ஆமா, கொரோனாவுக்காக ஏதாவது திருக்கண்ணமுது பண்ணச் சொல்லி யாரும் வீடியோ போடல்லியா?’
‘ஏன், இப்ப பண்ற கண்ணமுதுக்கு என்னவாம்?’
‘இல்ல, புதுசா கேக், டம்ப்லிங்னு இன்னோவேஷன் பண்றாளே, ஆனா எப்பவுமே ஒரே பயத்தம்பருப்பு, இல்லேன்னா சேமியான்னு ஒரு கண்றாவியா இருக்கே, இதுல ஒண்ணும் இன்னொவேஷன் இல்லியா. யாரும் வீடியோ போடலியா?’
‘இருக்கே. அதுக்கு அக்கார அடிசில்னு பேர். ஆண்டாள் 1200 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்காளே – ‘நூறு தடா அக்கார அடிசில் சொன்னேன்’, ‘மூட நெய் முழங்கை வழிவார..’ மறந்துட்டேளா?’
‘அதுக்கில்லை, அதுக்கப்புறம் இந்னொவேஷன் இல்லையேங்கறேன். ‘சாலிடான கண்ணமுது’, ‘லிக்விடான மைசூர்பாகு’ இப்பிடி புதுசா பண்ணலாமேன்னு சொல்றேன். வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேண்டாமா?’
‘சேஞ்ச் எல்லாம் பட்சணத்தோட இருக்கட்டும்’ இந்த மூஞ்சிக்கு இவ்வளவு அமைந்ததே அதிகம் என்னும் உள் உறைப் பொருள் உள்ளதைச் சுட்டுகிறாள் என்பதை அறிவேன்.
இருந்தாலும் காதில் விழாத மாதிரி, ‘கொரோனா காலத்துக்கு ஏத்த மாதிரி ஏதாவது கொழுக்கட்டை பண்ணலாமோனோ?’ என்றேன்.
‘அதத்தான் சொன்ன வந்தேன். கபசுர கொழுக்கட்டைன்னு ஒண்ணு பண்ணப்போறேன். அதுக்கு கொஞ்சம் இஞ்சி வேண்டியிருக்கு’ என்றாள் என் முகத்தைப் பார்த்து (குறியீடு உள்ளது என்பது பொருள்).
‘கார்த்தால காபி சாப்டதுலேர்ந்தே அப்டித்தான் இருக்கேன். இன்னும் வேற இஞ்சி வேணுமா?’ (முயற்சியில் மனம் தளராமல்).
‘இன்னிக்கி விநாயகர் சதுர்த்தி’
‘தெரியுமே’
‘ஆவணி ஹஸ்தம்’
‘தெரியுமே. 44ம் பட்டம் அழேசீங்கர் திருநக்ஷத்ரம்.’
‘ம்ம்ம்.. சரீஇ. இந்த ஜென்மத்துல அவ்வளவு தான்..’ (‘சரி’யை அளபெடையுடன் வாசிக்கவும்)
சடாரென உறைத்தது.
சட்டென்று எழுந்து ‘ஹேப்பி பர்த் டே’என்றேன்.
‘இஞ்சி வாய்ண்டு வரச்சே, ஒரு டியூப் லைட்டும் வாயிண்டு வாங்கோ’
(குறியீடு எதுவும் இல்லை, நேர் ஈடு என்பதை வாசகர்கள் அறிவர்).
வாசகர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.