அம்பாள் உபாசகர்கள் / பக்தர்கள் / பாடகர்கள் கவனத்திற்கு:
தேரழுந்தூரில் எழுந்தருளியுள்ள அம்பாள் மேல் ‘அம்பாள் நவமணிமாலை’ என்று 9 பாடல்களை 1960-63ல் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா முனைவர். இராமபத்திராச்சாரியார் எழுதியிருந்தார். ஊரில் இருந்த ‘அம்பாள் மாமி’ என்னும் மாதுசிரோமணியின் மீது பராசக்தி ஆவிர்பவித்து, அப்போது தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றிருந்த பெரியப்பாவை எழுதப் பணித்தாள். சன்னதம் வந்தவர் போல் ஒரே மூச்சில் எழுதினார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.
அப்பாடல்களை வெகுநாட்களாகத் தேடி வந்தோம். அவற்றின் ஒரு பிரதி இப்போது கிடைத்துள்ளது. இந்த 9 பாடல்களையும் இசை சேர்த்துப் பாட வேண்டும், பாடல்கள் எல்லாரையும் சென்று சேர வேண்டும் என்று இசை + தமிழ் ஞானத்துடன், விருப்பமும் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள். இதில் ஏதாவது பணம் வந்தால், தேரழுந்தூரில் குடிகொண்டிருக்கும் நெல்லியடியாள் கோவில் நித்ய கைங்கர்யத்திற்குத் தரலாம் என்று தோன்றுகிறது. மற்றபடி தெய்வ சங்கல்பம்.’அம்பாள் பஞ்ச ரத்ன மாலை’ என்று 5 பாடல்களையும் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல் மட்டும் கிடைத்துள்ளது. மற்றவை கிடைத்ததும் தொடர்புகொள்கிறேன்.

அம்பாள் நவமணி மாலை
இயற்றியவர் : தேரழுந்தூர் இராமபத்திராச்சாரியார்
1.
செழுஞ் சுடரின் ஒளிக் கொழுந்தே ! செங்கண் மால் உடன் பிறப்பே !
செஞ்சடையான் உளவிருப்பே ! செம்மை நெறி பிறழாத உளத்தினுக்கு எளியாய்,
செக முழுதும் ஆன முதலே !
ஒழுங்கு நெறி செல்லாத உளத்தினை உடைய நான் உன்னருளை நாடலானேன் ;
உன்மத்த நிலையன்றி ஒருதுணையும் நான் காணேன் ஒழியாத அவலமுடையேன் ;
செழுந்தமிழால் உன்னையே பாட நான் எண்ணினேன், செந்தமிழ் வளத்தை அருளாய்,
செந்தமிழின் சுவையுணரும் கந்தனையும் ஈன்று என் கலிதீர்க்க வந்த காமீ !
அழுங்குழவியாம் என்றன் அவலத்தை நீக்கியே, அருள் மாரியைப் பொழிந்திடாய்,
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
2.
கயிலாய வெற்பிலுறை கருநீல கண்டனுடன் கடி பூசல் கொண்டதாலோ !
கண நாதனாம் உன்றன் கணபதியின் உரு கண்டு கடுங்கோபம் கொண்டதாலோ !
ஒயிலாகவே கங்கை ஒப்பில்லா இறைமுடியை உறைவிடமாக் கொண்டதாலோ !
மயில்மேவு குமரேசன் மங்கை குற வள்ளியை மகிழ்ந்து மணம் கொண்டதாலோ !
மாநில மதில் நினது சேய்களுக்காக நீ மனம் நெகிழ்வுற்றதாலோ !
அயில்வேல் போல் ஒளிவீசி அன்பர் அக இருள் நீக்கும் அருள் விளக்காகி நின்றாய் !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே !
3.
‘ஓம் பரப்ரஹ்மஸ்வ ரூபிண்யை நம’ என்று ஓயாதுரைத்து நின்றேன் ;
ஓவாதே உன் நாமம் உள்ளந்தனிற் கொண்டு உணர்வை இழந்து நின்றேன் ;
தேம்பியே நின்று நீ தோன்றாமை கண்டு நான் தேடித் திகைத்து நின்றேன் ,
திருவுருக் கொண்டு நீ தரிசனம் தாராத காரணம் தான் என்னை கொல் ?
சோம்பியே நின்று நான் சோகிப்பதா? என்றன் சோர்வைத் தவிர்க்க வல்லாய் !
சொல்லால் உனைத் தூற்ற எண்ணினேன் ஆனால் நீ சொல் மாலை புனைய வைத்தாய்;
ஆம்பலின் அகவிதழை ஒத்த நின் அடியிணையை அடைய நான் ஆவலுற்றேன் !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே !
4.
தாய் முகம் நோக்கி, முந்தானை பிடித்தவள் தாமரை அடிகள் தன்னைத்
தன் கைகளால் பற்றித் தாரணியில் வீழ்ந்து தன் தாமரை விழிகளாலே,
பாய்கின்ற அருவி போல் பெருநீர் பெருக்கிப் புலம்பிடும் சிறுபிள்ளை போல்,
பாவி நான் புலம்பிடப் பார்வதியே! நீ இனம் பாராதிருத்தால் நன்றோ ?
தாயாக எண்ணித் துதித்தல் தான் தகுதியோ? தண்ணருள் சிறிதும் இல்லாய்,
தனியாக நான் படும் துயரங்களுக்கு எல்லை தாரணியில் இல்லை அம்மா !
ஆய்கின்ற வேதத்தின் உள்ளே ஒளிர்கின்ற அன்னை பராசக்தியே !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர்தீர்த்தருளும் அழகொளி சேர் தீப உமையே !
5.
பூவாற் பொலிந்திடும் பொன்னகல் விளக்கினை புல்லனேன் கண்டு நின்றேன்;
பொற்குழம்பாகப் பரந்திட்ட நெய்யினைப் புகழிலேன் பார்த்து நின்றேன்;
தாவிலாத் திரியினைத் தான் அந்த நெய்யிலே தகவிலேன் கண்டு நின்றேன்;
தண்ணொளிப் பிழம்பினைத் தான் அங்கே கண்டு நான் தணிவிலா உவகை கொண்டேன் !
யாவுமே கண்ட நான் என் தாயைக் காணாதே ஏமாற்றம் தான் அடைந்தேன்,
எங்கவள் சென்றாளோ? யான் என்று காண்பேனோ? ஏய்க்காதே என்னை அம்மா !
ஆவினைக் காணாத கன்று போல், இன்று நான் அலறித் துடித்து நின்றேன்.
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
6.
கற்பனைக் கெட்டாத கருணை உமையே ! என்றன் காண்பரிய பேரின்பமே !
கறைக் கண்டன் காதலி ! கருணை முகில் சோதரி ! கந்தனையும் ஈன்ற தேவி !
மற்புயத் தொருவனாம் மகிடாசுரக் களையை மாள்வித்த மாய முதல்வீ !
மகவுக் கிரங்கியே மெழுகாய்க் கரைந்திடும் மனமேவு மாரி உமையே !
நற்பயன் ஒன்றிலேன், நல்வினையும் செய்திலேன், நயமான உரையும் அறியேன்,
நல்லோரை நாடிலேன், நாணிலேன் அன்னையே ! நாயினும் கடையனானேன்.
அற்புளங் கொண்டு நின் அடியிணை அடைந்துயும் அன்பரை அளிக்கும் அன்னாய் !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
7.
கார் கொண்ட கூந்தலாம் காட்டினைத் தான் கொண்ட கருணாகரி வருகவே !
கயவரையும் காத்திடக் கண்ணருள் பொழிந்திடும் காமாட்சியே வருகவே !
பேர் கொண்ட பிள்ளைக்குப் பாலமுதை ஊட்டிய பேரருளாளீ வருகவே !
பாவியேனாம் என்றன் பேரிடரை நீக்கிய பைந்தமிழன்னாய் வருகவே !
சீர்கொண்ட நெஞ்சிலேன் செய்பிழை பொறுத்திடும் செந்தமிழ்ச் செல்வி வருகவே!
ஆர் கொண்டார் அருவீடு அன்னை அருள் இன்றியே, ஆதலால் விரைந்து வருவாய் !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
8.
கல்லினும் வன்மையுடைக் கள்வனாம் என்னையும் காத்தருள நின்ற தாயே !
கருணைக் கடற்கெல்லை காசினியில் இல்லையோ, கயவனையும் காத்திடாயோ!
நல்லியல்பிழந்த நான் நாணமுடன் உன்றனை நாடித் துதிக்கலானேன்,
நாவினால் நிந்தித்த நீசனேன், அன்னையே! நாதியும் ஒன்றும் இல்லேன்;
வல்லமை ஒன்றிலேன், வண்மையும் தானிலேன், வாழ்ந்திடும் வகையுமறியேன்;
வஞ்சருக்கு அஞ்சி நின் பஞ்சினும் மெல்லடியில் வீழ்ந்து நான் விம்மி நின்றேன்.
அல்லலை அறுத்தெனை ஆட்கொள்ள வந்திடாய் அன்னை பராசக்தியே !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
9.
எத்திசையும் ஏத்தும் உன் இணையடிதனில் அன்பை ஏழையேன் கொண்டு நின்றேன்;
என்மாசுகளை உன்றன் அன்பால் அழித்துடன் ஏற்றமதனைத் தந்திடாய்.
வித்தைபல கற்கவே வேண்டி நின்றே உன்றன் விழியருளை நாடி நின்றேன்,
வேதாந்தமே ! உலகின் நாதாந்தமே ! என்றன் வாழ்வினை விளக்கும் ஒளியே !
பத்தில் ஒன்றே குறையும் பாவினைப் பாடினேன், பாடிடும் புலமை இல்லேன்,
பத்திதனையே கொண்டு பாக்கள் குறையே கண்டு, பாவியேன் பிழை பொறுப்பாய்.
அத்திகிரி யாளனின் அன்புடைத் தங்கையே ! அருளினைப் பொழியும் ஒளியே !
அழுந்தை தனில் எழுந்தருளி அன்பர் இடர் தீர்த்தருளும் அழகொளி சேர் தீபவுமையே !
சரஸ்வதி பூஜை நன்நாளில் இந்த செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! இசை தெரிந்த.. நட்பு வட்டாரங்களில் இதை பகிர்கிறேன் ..இசையுடன் அவை வெளிவரட்டும்!
LikeLike
நன்றி.
LikeLike