விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்
கொஞ்சம் ஊன்றி வாசிக்க வேண்டும். பொறுமை அவசியம். சினிமா, அரசியல் முதலியவை இருக்காது. இவை வேண்டுவோர் இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மேலே வாசிப்பதென்று முடிவெடுத்துவிட்டீர்களா? சரி. தேச நலனில் அக்கறை கொண்டவர் போல. அப்புறம் உங்கள் இஷ்டம்.
பேராசிரியர் சுகாத்மே என்றொருவர் ஐஐடி மும்பையில் இருந்தவர். 1994ல் நூலொன்று எழுதினார். ‘The Real Brain Drain’ என்பது அந்த நூலின் பெயர். அவரது ஆராய்ச்சி சொல்பவை:
1973-77 காலகட்டத்தில் ஐஐடி மும்பையில் பயின்றவர்களில் 30.8% வெளி நாடுகளில் இருந்தனர். அவர்களில் 82.6% பேர் அமெரிக்காவில். 10% பேர் ஐஐடியில் சேரும் முன்னரே நாட்டை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்துள்ளனர். 35% ஐஐடியில் பயிலும் போது முடிவெடுத்துள்ளனர். 50% பேர் ஐஐடியில் பயின்று, இந்திய நிறுவனங்களின் வேலைக்குச் சேர்ந்து, 2-3 ஆண்டுகள் கழித்து, பாரதத்தை விட்டு வெளியேற முடிவெடுத்தனர். இவர்களில் இந்த 50% பேரைப் பற்றி அரசு கவலை கொள்ள வேண்டும் என்கிறார் பேரா.சுகாத்மே.
மேற்சொன்னவர்களில், 25% பேர் மீண்டும் பாரதம் வந்து பணியாற்றியுள்ளனர். சிறிது காலத்திலேயே மனம் வெறுத்து, மீண்டும் மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்கிறார் பேராசிசியர்.
ஐஐடியில் பயின்று அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் சௌரப் ஶ்ரீவஸ்தவா சொல்வது : ‘நீங்கள் இந்த அதிபுத்திசாலி, அதிகத் திறமை கொண்ட பொறியாளர்களை உருவாக்கிவிட்டீர்கள். ஆனால், யானைக்குத் தீனி போடாவிட்டால் அது அமைதியாக இருக்குமா?’ அவர் தீனி என்று சொல்வது பணத்தைப் பற்றி இல்லை.
அமெரிக்காவில் இருந்து பாரதத்தில் பணி புரிய விருப்பம் தெரிவித்து மீண்டும் வந்த பொறியாளர்கள் மனம் ஒடிந்து திரும்பியதன் காரணங்களாகப் பேரா.சுகாத்மே சொல்வன: ‘the apathy, vagueness, arrogance, noncommittal atitude and corruption and nepotism in Indian organizations’. மற்றுமொரு காரணத் தொகுப்பு ‘the job content in private firms would be too poor to provide any job satisfaction, while material rewards in public sector organisations were felt to be too inadequate’
மீண்டும் மீண்டும் நாம் புரிந்துகொள்வது: திறமைக்கு, தொழில் அறிவுக்கு, செயல் ஊக்கத்திற்கு மதிப்பில்லை என்பதே.
இதைப் பற்றி ‘The IITians’ என்றொரு நூல் உள்ளது. முன்னாள் ஐஐடி மாணவரும் அவுட்லுக் இதழாசிரியருமான சாந்தீபன் தெப் எழுதியது. ஐஐடி சிஸ்டத்தின் வழியாகச்செல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் நிதி நிலைமை யாது, அவர்தம் பெற்றோரின் பொருளாதார நிலை என்ன, சிஸ்டத்தால் வடிவமைக்கப்பட்டபின் அவர்களது நிலை என்ன, அவர்கள் அடையும் உயரங்கள் எத்தகையவை என்பது பற்றி நுணுக்கமாக அலசி ஆராய்கிறது இந்த நூல். கடுமையான வறுமையில் இருந்து வரும் சிறுவர்கள் அமெரிக்காவில் எத்தகைய உயர் நிலையை அடைகிறார்கள் என்பதையும் சான்றுகளுடன் சொல்லிச் செல்கிறது இந்த நூல்.
ஆனால், அப்படியான ஐஐடி சிஸ்டம், ஆராய்ச்சிப் பிரிவில் பின் தங்கியுள்ளது ஏன் என்றும் ஆராய்கிறது சாந்தீபன் தெப்பின் அருமையான நூல். அங்கு ஒரு முக்கிய அறிக்கையை நாம் காணவேண்டியுள்ளது.
மெக்கின்ஸி அறிக்கை
2000ம் ஆண்டு, மெக்கின்ஸி நிறுவனம் பாரத அரசிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தது. ‘Shaping the Knowledge Economy in India : The need to set up a national mission for technology education’ என்பது அதன் பெயர்.
பாரதத்திற்கு ஆண்டொன்றுக்கு எத்தனை பொறியாளர்கள் தேவை, எத்தனை பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று கள ஆய்வுக்குப் பின் நீண்ட அறிக்கை சமர்ப்பித்த மெக்கின்ஸி நிறுவனம், பாரதத்தின் ஐஐடிக்களின் மிகப்பெரிய பிரச்னையே அதிக அளவில் தரமான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்பதே என்று தலையில் அடித்தாற்போல் சொன்னது.
மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் ஒன்றுண்டு. 1993-98 வரை, அமெரிக்காவின் எம்.ஐ.டியில் ஒவ்வொரு ஆசிரியரும் தத்தம் துறை சாந்து 45 ஆய்வுக்கட்டுரைகள் ஆண்டொன்றுக்கு வெளியிட்டுள்ளனர். ஸ்டான்ஃபோர்டின் பொறியியல் கல்லூரியில் 52 ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச அறிவியல் இதழ்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால், ஐஐடி ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளே வெளியிட்டுள்ளார். 1996-97ல் எம்.ஐ.டி.யின் ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு 102 காப்புரிமைகள் கிட்டியுள்ளன. ஐஐடியி மூன்றிலிருந்து ஆறு வரை மட்டுமே.
ஐஐடியின் தரம் ஏன் இவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்த மெக்கின்ஸி நிறுவனம், ஐஐடியின் இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள் தத்தம் துறை சார்ந்து பணியாற்றுவதைக் காட்டிலும், பொதுவான பணிகள் (Administration etc) செய்வதில் தங்களது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிடுகின்றனர் என்று பல சான்றுகளுடன் சொல்லியுள்ளது.
குற்றம் மட்டுமே சொல்லாமல், முன்னேறுவதற்கான வழிகளையும் சுட்டி, பின்வரும் பரிந்துரைகளைத் தெரிவித்தது மெக்கின்ஸி நிறுவனம்:
- ஐஐடிக்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும்
- முனைவர் ஆய்வுப் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை மும்மடங்காக வேண்டும்
- ஆய்வுகளின் தரம் உயர வேண்டும்
- ஐஐடி இயக்குநர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்
- இயக்குநர்களைக் கட்டிப் போடும் சிவப்பு நாடாக்கள் நீங்க வேண்டும்
- ஐஐடிக்களின் நிதி நிலை அதிகரிக்கப்பட வேண்டும். பணம் மத்திய அரசிடம் இருந்து மட்டும் வரக் கூடாது
- ஐஐடிக்களில் தனியார் முதலீடுகள் அதிகமாக வேண்டும்
- ஐஐடி மாணவர் கட்டணம் + தனியார் வேலைக்கு எடுக்கும் போது ஐஐடிக்குக் கொடுக்கும் கட்டணம் உயர வேண்டும்
- ஐஐடி ஆசிரியர்களின் சம்பளம் அரசு சம்பள விகிதத்தில் இருந்து நீங்க வேண்டும்
- ஆசிரியர்கள் தரத்திற்கு ஏற்ப சம்பளம் அமைய வேண்டும். தனியார் நிறுவனங்கள் கூட சம்பளம் வழங்கலாம்
- திறமை இல்லாதவரைப் பணி நீக்கம் செய்யலாம்
மெக்கின்ஸி அறிக்கைக்கு முன்னர் பல முறைகள் இவ்வகையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக, 1995ல் தொழில் அதிபர் வி.கே.மோதி குழு அளித்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சீனா ‘Trans-Century Project’ என்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் அறிவியல் மற்றும் பொறியியலில் சீனாவை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு முன்னெடுத்துச் செல்லும் திட்டமாக உருவாக்கப்பட்டது. நாடெங்கிலும் உள்ள பொறியியல் சார்ந்த பல்கலைகளுக்கு $200 மில்லியன் வழங்கியது அந்நாடு. அதே சமயம், ஒவ்வொரு ஐஐடியும் ஆண்டொன்றுக்கு $10 மில்லியன் பெறுவதே பெரும் பாடாக இருந்தது. இந்த நிலையில் ஐஐடிக்கள் முன்னேறுவது எங்ஙனம்?
பேரா.சுகாத்மே சொல்லும் பரிந்துரை அவசியம் அமல்படுத்தப் பட வேண்டியது.
பள்ளி மாணவர்கள் NTSE – National Talent Search Exam எழுதுகிறார்கள். அவர்களில் முதல் 10,000 மாணவர்களை அரசு கவனிக்க வேண்டும். அவர்களில் கல்லூரிகளில் இருந்து வெளியாகும் 500 மாணவர்களை ‘தலைசிறந்த அறிஞர்கள்’ (Outstanding Scholars) என்று அறிவித்து, அவர்கள் மேற்கல்வி பயில எவ்வித இடையூறுகளும் இல்லாமல் அரசு செய்ய வேண்டும். அவர்கள் மேற்படிப்பிற்காக வெளி நாடுகளுக்குச் சென்றால், ஊக்குவித்து, அவர்களை மீண்டும் அழைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் பாரதம் திரும்பும் அவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலான சம்பளம் கொடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம், அவ்வகையில் சுமார் 50% அறிஞர்கள் பாரதம் திரும்பி வந்து அறிவியல் முன்னேற்றத்திற்கு வழி கோலுவார்கள் என்கிறார் பேரா.சுகாத்மே.
நான் அறிந்தவரையில், இந்த நடைமுறை சிங்கப்பூரில் அமலில் உள்ளது. சிறந்த மாணவர்கள் தங்களது 8ம் வகுப்பில் இருந்தே கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. வெளி நாடுகளில் பயிலும் பலர், திரும்பி வந்து சிங்கப்பூரில் பணியாற்றுகிறார்கள். இதைப் பற்றி மறைந்த திரு. லீ குவான் யூ அவர்கள் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
தற்சமயம் பாரத அரசு IISER – Indian Institute of Science Education and Research என்று பல ஆராய்ச்சிக் கழகங்களை நிறுவியுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே இவற்றில் சேர்ந்து பயில்கின்றனர். அவ்விடத்தில் பயிலும் 60% பேர் அமெரிக்காவில் மேற்படிப்பத் தொடர்ந்து முனைவர் பட்டம் பெறுகின்றனர். அந்த வகையில் முன்னேற்றம் தான். ஆயினும், IISERல் பயில KVPY – Kishore Vaignyanik Protshashan Yojana, JEE, SCB முதலிய நுழைவுத் தேர்வுகள் உள்ளன. இவற்றில், அறிவியலில் மிகச்சிறந்த அடிப்படை அறிவு கொண்ட மாணவர்களாலேயே வெற்றி பெற முடிகிறது. இதற்குத் தயார் செய்ய, மாணவர்களுக்கு மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும். ஏனெனில், பள்ளிக் கல்வி மாநிலங்களிடமே உள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்து வந்து, ஐஐடியில் சேர்ந்து பயின்று, இன்று அமெரிக்காவில் தொழில் அதிபர்களாகக் கோலோச்சி, தாங்கள் பிறந்த கிராமங்களுக்கும், படித்த பள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொண்டாற்றும் பலரைப் பற்றியும் ‘The IITians’ நூல் பேசுகிறது. மாநிலப் பாடத்திட்டம் சரியானதாக இருந்தால் ஏழ்மையில் உள்ள மாணவர்கள் இன்றும் ஐஐடிக்களுக்குள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.
நமது கேள்விகள்:
- மாநில அரசுகள் செய்ய வேண்டியதைச் செய்வார்களா?
- மேற்சொன்ன தேர்வுகளுக்குத் தத்தமது மாணவர்களைத் தயார் செய்வார்களா?
- அவற்றிற்கான பாடத்திட்டங்களை வகுப்பார்களா?
- குறிப்பாகத் தமிழகத்தில் ஜவகர் நவோதயா பள்ளிகளை அனுமதிப்பார்களா?
- மெக்கின்ஸி அறிக்கையின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று வெள்ளை அறிக்கை வெளியிடுமா?