கம்பன் பார்வைகள் – கவிஞர்களின் ஒருமித்த தரிசனம்

கம்பர் ஆண்டாளின் திருப்பாவையை வாசித்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்டாளின் திருப்பாவை மட்டுமல்ல, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோரின் பாசுரங்களிலும் ஆழங்கால் பட்டவராகவே கம்பர் திகழ்கிறார். 

பால காண்டத்தின் ஆற்றுப் படலத்தில் இரண்டாவது பாடலைக் கவனியுங்கள். 

நீற ணிந்த கடவுள் நிறத்தவான் 

ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்

சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்

வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே.

கோசல நாட்டில் உள்ள மேகம் என்ன செய்கிறது என்பதைக் கம்பர் சொல்வது:

மேகம் செம்மை நிறம் உடையதாக இருக்கிறதாம். அது, திருநீறு அணிந்த சிவபெருமானின் செம்மை நிறத்தைப் போன்று உள்ளதாம். அந்த மேகம், வான் வழியாகச் சென்று கடலை அடைந்து, அதன் நீரை முகர்ந்து கொள்கிறதாம். அவ்வாறு முகர்ந்தபின் அது கருமை நிறம் கொண்டதாக மாறி விடுகிறதாம். அது சந்தனத்தால் ஆன சேற்றைத் தனது தனங்களில் பூசிக்கொண்டுள்ள திருமகளைத் தன் மார்பில் கொண்ட நாராயணனின் நிறத்தை ஒத்திருக்கிறதாம்.

கம்பனின் இந்தப் பாடல் மூலம் கோசல நாட்டில் மழை வளம் மிகுந்து இருந்ததை நாம் உணர முடிகிறது. 

ஒரு மேகம் கடலில் இருந்து நீரை முகர்ந்துகொண்டு மழை பொழிவிக்கிறது என்பதை ஆண்டாளும் தன் பாசுரத்தில் சுட்டியுள்ளது நினைவிருக்கலாம். 

‘ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு, முகர்ந்து, கொடார்த்து ஏரி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்..’ 

இந்தப் பாசுரத்தில் ஆண்டாளும் மேகத்தை நாராயணனின் நிறத்துடன் ஒப்பிடுகிறாள். மழை உருவாகும் விதத்தையும் விவரிக்கிறாள். 

அறிவியல் கருத்து மட்டுமின்றி, உவமையும் ஒன்றாக இருப்பதை குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி உள்ள இந்த இரு பாடல்களும் உணர்த்துகின்றன. 

அன்னாளைய அறிவியல் அறிவு கவிஞர்களுக்கும் கூட இருந்ததை இதனால் உணர முடிகிறது. 

அது மட்டும் அல்லாமல், கவிஞர்கள் மனதில் இயற்கை நிகழ்வுகளில் கூட கடவுளர்களே  தென்பட்டுள்ளது தெரிகிறது. 

பாரதிதாசன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடா’ என்று உலகம் முழுவதும் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறான். பாரதி இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா’ என்று தீயின் சூட்டிலும் இறை நிலையைக் காண்கிறான். இயற்கையும் தானும் ஒன்று என்று உணர்ந்த பரிபூரண அத்வைத நிலை இது.

இப்படியான மஹான்கள் நடந்து சென்ற மண் நம்முடைய பாரத மண் என்பதை நினைக்கையில் எழும் உணர்வெழுச்சிக்கு எல்லை உண்டோ ?

#கம்பன் #கம்பன்சுவை #தேரழுந்தூர் #கம்பராமாயணம்

Leave a comment