Chennai Story aka Kerala Story

‘Kerala Story’ கதை பொய் என்று பினரயி விஜயன், சஷி தரூர் சொல்லியிருக்கிறார்கள். பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலர் நினைக்கிறார்கள். 

இப்படி ஒன்று நடக்காமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஆதங்கப்பட்ட 70 வயது ஶ்ரீனிவாசனை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது 2017ல். கதை நடந்தது 2015ல். 

ஶ்ரீனிவாசன் முற்போக்கான வக்கீல். முற்போக்கு என்றவுடன் அவர் ஐயங்காராக இருக்க வேண்டும் என்பது விதி. நல்ல ப்ராக்டீஸ். நல்ல வருமானம். சென்னையில் சொந்த வீடு ( தனி வீடு). கார். 

தன் ஒரே மகள் சௌஜன்யாவை, ஐயங்கார் வழக்கம் போல், மாடர்னாக வளர்த்தார். நல்ல கல்வி. மென்பொருள் வேலை. பெங்களூரு போவேன் என்று அடம். அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. ஶ்ரீனிவாசன் தலையீட்டால் சௌஜன்யா பெங்களூரு சென்றாள். 

ஒரே ஒரு முறை தீபாவளிக்கு வந்து சென்றாள். பின்னர் வேலை வேலை என்று ஒன்றரை வருஷம் வீட்டிற்கு வரவில்லை. ஸ்கைப் வீடியோ மூலம் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2016ல் ஒருமுறை பெங்களூரு சென்று வந்த ஶ்ரீனிவாசன், சௌஜன்யாவை அவளது அலுவலகத்தில் சந்தித்தார். ‘ஏம்மா நெத்திக்கு இட்டுக்கறதில்லையா?’ என்று கேட்டுள்ளார்.

ஒரு விடியற்காலை பெட்டியும் கையுமாக வந்து சேர்ந்தாள் சௌஜன்யா, எட்டு மாத கர்ப்பத்துடன். கல்யாணம் ? நடந்துள்ளது. கல்யாண ஃபோட்டோவில் சௌஜன்யா நெற்றியில் ஒன்றும் இல்லை. பையன் லட்சணமாகத் தான் இருந்தான், பாழ் நெற்றியுடன்.

சௌஜன்யா வேலைபார்த்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் வாசலில் தினமும் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் வந்து சந்தித்துள்ளான் மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுகுமாரன். நட்பு, காதல், உயர் மத்திய காண்டோமினியத்தில் சேர்ந்து வாழ்தல், ‘திருமணம்’. நிற்க. 

ஆன் சைட் அசைன்மென்ட் என்று துபாய் சென்ற சுகுமாரன் காணாமல் ஆனான். ஈமெயில், தொலைபேசி எதிலும் பதில் இல்லை. சௌஜன்யாவிற்கு மூன்றுமாதம். 

சுகுமாரனின் கம்பெனிக்குச் சென்று விசாரித்தால் சுகுமாரன் போலி என்பது தெரிந்தது. சுகுமாரனின் பாஸ்போர்ட் நகல் கொண்டு விசாரித்ததில், பாஸ்போர்ட்டும் போலி என்பதையும் தெரிந்துகொண்டாள். அவனது புல்லட் வண்டி வேறொருவன் பெயரில் இருந்துள்ளது. ஒரு வருடம் முன்னால் காணாமல் போய்விட்டது என்றான் அவன். ‘திரௌபதி’ திரைப்படக் கதை போல் தோன்றும்.

மேலும் விபரமாக எழுதமுடியாது. எனவே கதைச் சுருக்கம் இதோ : 

வண்டியும் சுகுமாரனுடையது இல்லை. வேலையும் சுகுமாரனுடையது இல்லை. சுகுமாரன் பெயரில் வாடகைக்கு இருந்த வீட்டிற்கும் சுகுமாரன் வாடகை செலுத்துவதில்லை. ஏன், சுகுமாரனே சுகுமாரன் இல்லை. 

வண்டி, வீட்டு வாடகை, போலி வேலை அமைப்புகள் எல்லாமே ஒரு அமைப்பு செய்து தருவது. அந்த அமைப்பு இம்மாதிரி பல சுகுமார்களை உருவாக்கியுள்ளது. தற்சமயம் சுகுமாரன் பாலகுமாரன் என்கிற அவதாரத்தில் பிறிதொரு சௌஜன்யாவையோ, ஜெனிஃபரையோ பாழாக்கிக் கொண்டிருக்கலாம். 

ஃபிளாஷ்பேக் முற்றும். 

2017 : சௌஜன்யா தகதகவென்று ஜொலிக்கும் ஆண் குழந்தைக்குத் தாய். யாராவது தத்து எடுத்துக் கொள்வார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள். 

2023 : ஶ்ரீனிவாசன் குடும்பம் சென்னையில் தட்டுப்படவில்லை. சௌஜன்யா எங்கிருக்கிறாளோ தெரியவில்லை. 

பி.கு.: பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Leave a comment