தேவகி நிலயங்கோடு என்னும் நம்பூதிரிப் பெண்மணி, தனது 75வது வயதில், முதன்முதலாக நூல் ஒன்றை எழுதுகிறார். தன்வரலாறு என்னும் வகையைச் சார்ந்த நூல்.
1920-50களில் கேரளத்தில் நம்பூதிரிப் பெண்களின் ( அந்தர்ஜனங்கள்) வாழக்கை பற்றி எழுதுகிறார்.
பொதுவாகவே பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகம். அதுவும் அந்தர்ஜனங்கள் விஷயம் இன்னமும் கொடுமை. உடல் நலன் குன்றினாலும் வெளியில் இருந்து மருத்துவர்கள் வந்து பார்க்கக் கூடாதாம். இவர்களாகவும் மருத்துவமனைக்குச் செல்லவும் முடியாது. ஏனெனில் எப்போதும் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்லும் போது மட்டும் உடலை மறைக்கும் முண்டு எனப்படும் புடவை அல்லது வேஷ்டி போன்ற துணியைச் சுற்றிக் கொண்டும், கையில் தாழங்குடையை ஏந்தித் தங்கள் முகத்தை மறைத்தவாறும் செல்ல வேண்டும்.
நம்பூதிரி ஆண் பல தாரம். நாயர் ஜாதியிலும் சம்பந்தம் செய்துகொள்ளலாம். பெரும் நிலக்கிழார்களான நம்பூதிரி ஆண்கள் தங்கள் ஜாதிப் பெண்களை நடத்திய விதம் கொடுமை. காலை நீராடப்போவது முதல், இரவு உறங்குவது வரை அந்தர்ஜனங்கள் தங்கள் அறைகளுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
அம்மை நோய் வந்து மக்கள் இறப்பது, ஆங்கில மருத்துவம் ஆண்களுக்கு மட்டுமே என்று இருப்பது என்று பலதும் மனதைப் பிழிவன.
தேவகி நிலையங்க்கோடு எழுதியுள்ள தன் சரிதத்தில், எவ்விடத்திலும் கழிவிரக்கம், கோபம் முதலியவை தென்படவில்லை. இயல்பான வாழ்க்கை நடைமுறைகளைச் சொல்லிச் செல்கிறார் தேவகி.

யோக க்ஷேம சபை என்னும் அமைப்பு நம்பூதிரிகளின், குறிப்பாக நம்பூதிரிப் பெண்களின் நிலையைச் சீராக்க முயல்வதையும் சொல்கிறார் தேவகி. அத்துடன் யோக க்ஷேம சபை கம்யூனிஸ்ட் இயக்கமாக உருமாறுவதையும் சொல்லியுள்ளார். ஈ.எம்.எஸ், நம்பூதிரிப்பாடு, வி.டி.பட்டத்திரிப்பாடு முதலிய ஆளுமைகள் பற்றியும் கோடிகாட்டியுள்ளார் தேவகி நிலையங்கோடு.
நம்புதிரி சமூக மாற்றங்களுக்குப் பெரும் ஊக்கியாக இருந்தது தாத்ரி என்னும் அந்தர்ஜனத்தின் ‘ஸ்மார்த்த விஜாரம்’ என்னும் நிகழ்வே என்பதை உணரமுடியும் வகையில் நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
இந்த அதீதமான ஜாதி அடிமைத்தனம், பெண் அடிமைத்தனம் மற்றும் அடக்குமுறைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் என அனைத்தும் ஒருசேர நிகழ்ந்தால், அதிலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருந்தால் அந்தச் சமூகத்தில் பிரளயம் போன்ற புரட்சி ஏற்பட்டு சமூக மாற்றங்கள் நிகழும் என்பதற்கு நம்பூதிரிப் பெண்களின் வாழ்க்கை பற்றிய தேவகி நிலையங்ககோட்டின் நூல் ஓர் சிறந்த ஆவணம்.
இந்த நூலில் ஒரு இடத்தில் கூட வைக்கம் போராட்டம் பற்றியோ, காந்தியடிகள், ராமசாமி நாயக்கர் பற்றியோ குறிப்பு இல்லை.
மலையாள மூலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. மலையாள மூலத்தில் வாசிக்க முடிந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
நூல் : Antharjanam. Author: Devaki Nilayamgode. Oxford University Press.
Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply