The side that is not spoken about, generally.

‘போதும்யா உங்க அறுவை. சொன்னா கேளுங்க. ஜெய்லர், வாரிசுன்னு எவ்வளவோ இருக்கு. அத விட்டுட்டு, பழம்பஞ்சாங்கத்தப் பேசினா என்ன பண்றது? ‘ என்றார் நண்பர்.

‘சார். ஒரே ஒரு நிமிஷம். சமீபத்துல ஒருத்தர் வீட்டு முன்னாடி இருந்த கொடிக் கம்பத்த போலீஸ் ஏன் அகற்றினாங்க ? அவர் எதாவது பாகிஸ்தான் கொடிய ஏத்தினாரா ?’ என்றேன்.

‘ஓ.. அந்தக் கதையா.. சுவாரஸ்யமா இருக்கும் போல இருக்கே.. சொல்லுங்க’ என்று வலைக்குள் விழுந்தார்.

‘அதுக்கு முன்னாடி, இன்னொருத்தர் கொடி ஏத்தி, அதனால ஜெயிலுக்குப் போனார். அதப் பேசிட்டு இதப் பேசுவோம்’ என்றேன். தலையை ஆட்டினார்.

எருக்காட்ட்

எருக்காட்டூர் குப்புசாமி ஐயங்கார் பணக்காரர். மிராசு. இப்பேர்ப்பட்ட அப்பாவுக்கு பாஷ்யம்னு ஒரு பிள்ளை பிறந்தான். சிறு வயதில் ஜாலியன்வாலா பாக் படுகொலை பத்தின போராட்டத்தில் கலந்துகொண்ட பாஷ்யம் ஆங்கில அரசின் கொள்கைகளைக் கூர்ந்து கவனிக்கத் துவங்கினான். (பாஷ்யத்தின் உறவினர் கோபாலசாமி ஐயங்கார் மெட்ராஸ் சிவில் சர்வீஸ் ஆஃபீஸர். பின்னாளில் காஷ்மீரின் திவானாகவும், சுதந்திர பாரதத்தின் ரயில்வே மந்திரியாகவும் இருந்தார்.)

பிறகு சைமன் கமிஷன் வந்தது. அதை எதிர்த்துக் கல்லூரி மாணவர்களைத் தூண்டிப் போராட்டம் நடத்தினான் பாஷ்யம். திருச்சி கல்லூரி முதல்வர் பாஷ்யத்தைக் க்ல்லூரியில் இருந்து நீக்குவதாகப் பயமுறுத்தினார். படிப்பை உதறிவிட்டுத் தேச சேவையில் குதித்தான் பாஷ்யம்.

1932ல் வெலிங்டன் துரை செய்த கொடுமைகளை எதிர்த்து ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கொதித்துக்கொண்டிருந்த பாஷ்யம், தடாலடியாக ஓர் முடிவை எடுத்தான். அதை, சுப்பிரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபாலனிடம் தெரிவித்தான். வெள்ளை அரசைத் தலை குனிய வைக்க ஒரே வழி இதுதான் என்று முடிவெடுத்தான் பாஷ்யம். இப்போது அவன், அவர் ஆகிறார்.

வேணுகோபாலன் அதிர்ச்சி அடைந்தாலும், மகிழ்ச்சியே அடைந்தார். ஆனாலும், அதில் இருந்த ஆபத்துகளையும் விளக்கினார். விபரம் வெளியானாலோ அல்லது நிகழ்வு நடந்ததற்குப் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டாலோ அதோகதிதான் என்பதை பாஷ்யமும் உணர்ந்தே இருந்தார்.

ஜனவரி 26, 1932 அன்று பூர்ண ஸ்வதந்திர நாள் என்று காங்கிரஸ் முடிவெடுத்திருந்தது. அந்த நாள் தான் பாஷ்யத்தின் பிறந்தநாளும் கூட.

ஜனவரி 25 இரவு 9:30 மணிக்கு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருகில் இருந்த எலிஃபின்ஸ்டன் தியேட்டரில் ஆங்கில ராணுவ வீரர்கள் திரைப்படம் பார்த்துவிட்டு வந்தனர். அவர்களைப் போலவே உடை அணிந்து, அவர்களுடன் அமர்ந்து திரைப்படம் பார்த்தார் பாஷ்யம்.

படம் முடிந்து வீரர்கள் கோட்டைக்குள் சென்றனர். அவர்களுடன் ஒருவராகப் பாஷ்யமும் உள்ளே சென்றார். 200 அடி உயரம் உள்ள வயர்லெஸ் கம்பத்தில் ஏறி, அதில் பறந்துகொண்டிருந்த ஆங்கிலக் கொடியை இறக்கி, சர்க்கா உள்ள மூவர்ணக் கொடியைப் பறக்க விடுவது என்று திட்டம். வேணுகோபாலன், கோட்டை ரயில் நிலையத்தில் நின்றபடி, யாரும் வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டியது. யாராவது வந்தால், விசில் மூலம் தெரியப்படுத்துவது என்று ஏற்பாடு.

200 அடிக் கம்பத்திற்கு 148 அடி வரை படிகள் உண்டு. அருகில் இருந்த லைட் ஹவுஸ் ( கலங்கரை விளக்கம்) ஒளி தன் மீது படும் போதெல்லாம் குனிந்தும், மறைந்தும் நின்ற பாஷ்யம், ஒளி படாத போது படிகளில் ஏறினார். 150 அடிகளுக்குப் பிறகு வழுக்கு மரம் போல் இருந்தது. பனி பெய்து, எண்ணெய் தடவிய தேக்கு மரம் போல இருந்தது மரம். கழைக்கூத்தாடிகள் மட்டுமே ஏறக்கூடிய வகையில் இருந்த மரத்தில், அதில் பயிற்சி இல்லாத பாஷ்யம் துணிந்து ஏறினார்.

தன் இரு கால்களைப் பின்னிக் கொண்டும், இரு கைகளால் மரத்தைப் பற்றிக் கொண்டும் மேலேறிய பாஷ்யம், லைட் ஹவுஸ் வெளிச்சம் தன் மீது படாமல் பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. கீழே பாரா காவலர்கள் கண்ணில் பட்டால் ஒரு நொடியில் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக வேண்டியது தான்.

பல்லி போல் மேலேறிய பாஷ்யம், யூனியன் ஜாக் கொடியை அகற்றி, மூவர்ணக்கொடியைக் கட்டினார். மிகவும் கவனமாகக் கீழே இறங்கினார்.

மறு நாள் சென்னை திமிலோகப்பட்டது. ஆங்கில அரசு தலை கவிழ்ந்தது. கோட்டைக் காவல் ராணுவ அதிகாரிகளுக்கு அரசு கடுமையான உத்தரவுகளை வழங்கியது. பலருக்கும் தண்டனை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீஸார் கையில் சிக்கினார் பாஷ்யம். கடுங்காவல், துன்புறுத்தல் என்று தன் உடலில் பல விழுப்புண்களுக்கு இடம் கொடுத்தார்.

நேதாஜியின் தலையீட்டால் பாஷ்யத்திற்குத் தனிச் சிறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, விடுதலைப் போராளிகள் இருந்த சிறைப்பகுதிக்கு இட மாற்றம் கிடைத்தது.

Bashyam (a) Arya

முன்னர் பகத் சிங் வழக்கில் அவருக்குத் துணை போன போராளி ஒருவருக்கு 30 கசை அடி கொடுத்தான் ஓர் ஆங்கில அதிகாரி. சட்டை கிழிந்து, உடல் முழிவதும் புண்ணாகக் கிடந்த அந்த வீரனை எண்ணியபடியே இருந்த பாஷ்யம், அந்த ஆங்கில அதிகாரியைப் பழிவாங்க நினைத்தார். ஒரு நிகழ்வவில் கலந்துகொண்ட அந்த அதிகாரியைத் தன் காலணியால் மூன்று முறை அடித்து அவமானப்படுத்தினார் பாஷ்யம்.

பழைய போராளிக்குக் கிடைத்த அதே தண்டனை இப்போது பாஷ்யத்திற்குக் கிட்டியது. 30 கசையடிகள். சதைகள் பிய்ந்து, இரத்தம் சொட்ட, உடல் தளர்ந்து ஊர்ந்து வந்த பாஷ்யம், ஆங்கில அதிகாரிகளைப் பார்த்து பாரதியாரின் இந்தப் பாடலை உரக்கப் பாடினார் :

ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. 

பயனுண்டு பக்தியினாலே – நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. 

புயமுண்டு குன்றத்தைப் போலே – சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. 

ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. 

1942ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் துவங்கியது. பாஷ்யம் தனது பழைய வழிக்குத் திரும்பினார். சென்னையில் ரயில் நிலையத்தில் இருந்த போர் வீரர்களுக்கான தனி ரயில் பெட்டியில் தீ வைத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படை, தீயை அணைத்தது.

அதன் பின்னர், பம்பாயில் இருந்து ராம்நாத் கோயங்கா மூலம் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் என்று வரவழைத்து, சிறிய ரயில் பாலங்களில் குண்டு வைக்கவும், சில வெள்ளை அதிகாரிகளைக் கொல்லவும் தலைப்பட்டார். அதற்காக, விடுதலைப் போராளிகளுக்குச் சென்னைக்கு அருகில் இருந்த காடுகளில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார் பாஷ்யம். சீர்காழி சதி வழக்குடன் தொடர்புடையது இது. அச்சமயத்தில் காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்பதால் இந்தத் தீவிரவாதச் செயல்களை முடித்துக்கொண்டார் பாஷ்யம்.

அதன் பின்னர், 1946ல் காந்தி ஹிந்தி பிரச்சார சபைக்கு வந்த போது, அவர் அருகில் அம்ர்ந்துகொண்டு அவர் உருவத்தை ஓவியமாக்கினார் பாஷ்யம். விடுதலைக்குப் பின்னர், காந்தியின் சிலைகள், ஓவியங்கள், பாரதியாரின் உருவ ஓவியங்கள் முதலியவற்றை உருவாக்கினார் பாஷ்யம்.

பாஷ்யம் உருவாக்கிய காந்தி சிலை தற்போது தக்கர் பாபா வித்யாலயாவில் உள்ளது. ரிப்பன் மாளிகையில் உள்ள சத்தியமூர்த்தியின் சிலையைச் செய்தவரும் பாஷ்யமே ஆவார். நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் முண்டசு கட்டிய பாரதியின் படத்தை வரைந்தவரும் அவரே.

விடுதலைப்போரில் ஈடுபட்ட தியாகிகளுக்கு அரசு பென்ஷன் தந்தது. பாஷ்யம் (எ) ஆர்யா அதனை மறுத்துவிட்டார்.

ஜாலியன்வாலாபாக் கொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தனது தியாக வாழ்க்கையைத் துவக்கிய பாஷ்யம், 1999ம் ஆண்டு மறைந்தார். அந்தப் படுகொலையை ஆதரித்த ஒரே அரசு அன்றைய சென்னை மாகாணத்தின் ஜஸ்டிஸ் கட்சி அரசு. இன்று ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கு நாம் சிலை வைத்துக்கொண்டிருக்கிறோம். அவர்களின் வழித் தோன்றல் கட்சிகளின் கொடி ஊர் முழுக்க பறக்கிறது.

சமீபத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பெயரில் ‘பாஷ்யம்’ என்கிற நிறுவனத்தின் பெயர் இருந்தது. ஜஸ்டிஸ் கட்சியின் வழித்தோன்றலான வை.கோபாலசாமி என்னும் அரசியல்வாதி, ‘யார் அந்த பாஷ்யம்? அவர் தமிழ் நாட்டிற்குச் செய்த தொண்டு யாது?’ என்று வீராவேசமாகப் பேசினார்.

அவருக்குத் தெரியாதது – ரயில் நிலையப் பெயர் ஒரு கம்பெனியுடையது என்று. அவருக்கும், அவரது சக-கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தது – ஜாதித்துவேஷம் மட்டுமே.

‘சார், அந்த பாஷ்யம் பத்தி நம்ம புஸ்தகங்கள்ல இல்லியே’ என்றார் நண்பர்.

‘அதுதான் மதச்சார்பின்மை, செக்யூலரிஸம், தமிழ்நாடு.’

‘சரி. பாஷ்யத்துக்குக் கொடி எங்கே கிடைத்தது?’ என்றார் நண்பர்.

‘கொடி வேண்டி, திருவல்லிக்கேணி காதி பண்டார் போனார் பாஷ்யம். அவர் கேட்ட அளவில் கொடி இல்லை. ஆகவே, தன் கதர் வேஷ்டியில் மூவர்ணச் சாயம் செய்து, ‘இன்றிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது’ என்று எழுதி அதையே கொடியாக ஏற்றினார் பாஷ்யம். சரி, இப்ப அந்த மற்றொரு கொடிக்கம்பம் பத்திப் பேசலாம்’ என்றேன்.

‘அவசியமா பேசணுமா?’ என்பது போல் பார்த்த நண்பரின் கண்கள் பனித்திருந்தன.

#Azadikaamritmahotsav

3 responses

  1. muggi64 Avatar
    muggi64

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பதிவை படித்தேன். பாஷ்யம் பற்றி இதுவரை தெரியாததற்கு வருந்துகிறேன். என் நண்பர்கள் குழுக்களில் பகிர்ந்துள்ளேன். நன்றிகள் பல உங்களுக்கு. உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.

    Liked by 1 person

    1. Amaruvi's Aphorisms Avatar

      மிக்க நன்றி.

      Like

  2. PN Badri Avatar

    Bashyam metro station is named after freedom fighter it’s franchise name Bashyam constructions promoted a gated community apartments nearby Koyambedu CMRL terminal. Apparent error in your story.

    Like

Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply