‘என்ன சாமி, இந்தியா போனப்பறம் மறந்துட்டீரே’ என்று சூடாக ஆரம்பித்தார் அண்ணாச்சி, ஃபோனில். அண்ணாச்சி பழைய நண்பர். சிங்கப்பூரர்.
‘சவுக்கியங்களா அண்ணாச்சி?’ என்றேன், ஆபீசில் கணினியைப் பார்த்தபடியே.
‘சித்த பேசலாம்னு அடிச்சேன்’ என்றார். சிங்கப்பூரர்கள் ஃபோனில் அழைப்பதை ‘அடிப்பது’ என்பர். ‘சொல்லுங்க அண்ணாச்சி’ என்று ஃபோன் பேசும் பிரத்யேகக் கூண்டிற்குள் நுழைந்தேன்.
‘என்னய்யா செய்யறீரு நீரு ? ஐயங்கார் பத்தி நாவல் எழுதினதா இங்க வாசகர் வட்டத்துல பேசிக்கறாங்க. ஆனா ஐயங்கார் பொண்ணு பத்தி படம் எடுத்திருக்கானுவோ, நீரு ஒண்ணுமே எளுதல்லியே?’ என்றார். கொஞ்சம் உஷ்ணம் தெரிந்தது.
‘புரியல அண்ணாச்சி’ என்றேன்.
‘யோவ் சவத்தெளவு. அன்னபூரணி பார்த்தீரா இல்லியா? அது என்னன்னாவது தெரியுமா?’ என்றார்.
‘சாளக்கிராமப் பொட்டில சின்ன விக்ரஹமாட்டு இருக்கும். அதானே?’ என்றேன், சற்று சிந்தனையுடன்.
‘போம்யா. நீரு புஸ்தகம் எளுதி பாளாப்போகும். தென்கலை ஐயங்கார் பொண்ணு, அதுவும் ஶ்ரீரங்கம் கோவில் மடப்பளி பரிஜாரகர் பொண்ணு, முஸ்லிம் முறைப்படி தொழுகை பண்ணிட்டு, அசைவ பிரியாணி பண்றாளாம். கேட்டா உணவுக்கு மதம் இல்லியாம். ஆனா தொழுகை பண்ணிட்டு பிரியாணி பண்ணினா, ஐயங்கார் பொண்ணு பண்ணினா, பிரியாணி நல்லா வருதாம். நீரு புஸ்தகம் எளுதுறீரு..’ என்றார்.
‘அண்ணாச்சி, நான் சினிமா பார்க்கறதில்ல. தெரியல. ஆனாலும், நீங்க சொல்ற கான்செப்ட் பிரமாதமா இருக்கு’ என்றேன்.
‘என்னைய்யா வளக்கம் போல கொளப்புதீரு?’ என்றார். கோபம் தெரிந்தது.
‘உணவுக்கு மதம் இல்லதானே ? யாரு சமைச்சாலும் சாப்பாடு ஒண்ணுதானே’ என்றேன்.
‘யோவ், நீரு என்ன ஹிந்து பேப்பர்ல வேல செய்யுதீரா ? கம்யூனிஸ்டு ஐயங்காரா மாறிட்டீரா என்ன?’ என்றார் அண்ணாச்சி.
‘ஹிந்துவுல என்னைய எடுக்க மாட்டாங்க. போகட்டும். நான் சொல்லுகதுல என்ன தப்பு ? ஐயங்கார் பிரியாணி பண்ணினா ஆவாதா ? அடுப்பு எரியாதா ? அதே போல முஸ்லிம் பொண்ணு அக்கார அடிசில் பண்ணட்டும். புளியோதரை பண்ணட்டும். கார்த்தால எழுந்து கோலம் போட்டு, தீர்த்தாமாடி, நெத்திக்கி இட்டுண்டு, பெருமாள சேவிச்சுட்டு புளியோரை பண்ணினா ஆகாதா என்ன ? செக்யூலரிஸம் அண்ணாச்சி’ என்றேன்.
‘சுத்தமா கொழம்பிட்டீரு நீரு. இதெல்லாம் சாத்தியமா? அப்பிடி படம் எடுத்துடுவாங்களா தமிளு நாட்டுல?’ என்றார்.
‘ஆங்.. இது கேள்வி. ஐயங்கார் பொண்ணு, கருப்பு டிரெஸ் போட்டு பிரியாணி சமைக்க உரிமை உண்டுங்கற மாதிரி, முஸ்லிம் பொண்ணு ஐயங்கார் முறைப்படி உடை, பாவனைகள் செஞ்சு புளியோதரை பண்ணற மாதிரி எடுக்க எங்க தமிழ் டைரக்டர்களுக்கு தில் இல்லேங்கறீங்களா ? நாங்கள்ளாம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே..’
‘போதும்யா. உங்க டைரக்டர்கள் லட்சணம் தெரியாதா ? “இது நம்ம ஆளு” படம் எடுக்க முடியும், “விஸ்வரூபம்” படம் எடுத்து வெளியிட முஸ்லிம் அமைப்புகள் கிட்ட பர்மிஷன் வாங்கணும். “வேதம் புதிது” எடுக்க முடியும். ஆனா “ஒரே ஒரு கிராமத்திலே” படம் வெளியிட மெனக்கெடனும். இதானே உங்க தமிளு நாட்டு டைரக்டர் லட்சணம்?’ என்றார் எகத்தாளத்துடன்.
‘போங்க அண்ணாச்சி. எங்க செபாஸ்டியன் சைமன் இருக்காரு. கருத்துரிமைக் காவலர் பா.ரஞ்சித் இருக்காரு. மாரி செல்வராஜ் இருக்காரு. இவ்வளவு ஏன், பாரதிராஜாவே கூட இருக்காரு. இவங்கள்ளாம் சேர்ந்து, முஸ்லிம் பொண்ணு மடிசார் கட்டிண்டு, திலகம் இட்டுண்டு அக்கார அடிசில் சமைச்சு, திருப்பாவை சொல்லிண்டே நைவேத்யம் பண்ற மாதிரி அவசியம் படம் எடுப்பாங்க. அதுல சத்தியராஜ், கரு.பழனியப்பன், சித்தார்த், எல்லாரும் நடிப்பாங்க. அவங்கள்ளாம் அவ்வளவு தைரியமானவங்க மட்டுமில்ல, கருத்துச் சுதந்திரத்துக்காக உயிரையும் குடுப்பாங்க. சரி ஒரு வேளை அவங்களுக்கு தைரியம் இல்லேன்னா, எங்க உலக நாயகன் கமல் பத்து ரோல் பண்ணி எடுப்பாரு. ஏன்னா, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துன்னு கண்டுபிடிச்ச ஞானி அவரு. இல்லேங்கறீங்களா ? தோசைலயே ஜாதி கண்டுபிச்ச அறிவாளிகள் வாக்கிங் போயிட்டு இருக்காங்க இங்க மெரீன பீச்சுல. திருவள்ளுவரே கிறிஸ்தவர்னு கண்டுபிடிச்சு பி.எச்.டி. வாங்கினவங்க நாங்க.. போவீங்களா.. ‘ என்றேன்.
‘காவேரில தண்ணி வரும். தமிழ் நாட்டுல நவோதயா ஸ்கூல் வரும். நீட் பரீட்சை அவசியம் வேணும்னு சின்னவரு போராட்டம் நடத்துவாரு. இதெல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு. ஆனா உங்க சினிமாக்காரங்களுக்கு முதுகெலும்புன்னு ஒண்ணு எப்பவுமே கிடையாது’ என்றார் தீர்க்கமாக.
ரஜினிக்கும் கமலுக்கும் முதுகெலும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டியது என் வேலை இல்லை என்பது எனக்குத் தெரியும் என்பதால் ஃபோனை வைத்தேன்.
#அன்னபூரணி #Annapoorani
Leave a comment