எப்படி எழுதுவது என்று கேட்கிறார்கள்.
சொன்னது போலவும் இருக்க வேண்டும், அப்படி இருக்கவும் கூடாது. ‘நீங்கள் அப்படிச் சொன்னீர்களே?’ என்றால், அப்படிச் சொல்லாதது போல தோற்றமளிக்கும் வகையில் சொல்லியிருக்க வேண்டும். ‘இல்லை அப்படித்தான் சொன்னீர்கள்’ என்றால், அதற்கு நேர் மாறாகத் தோற்றம் அளிக்கும் வகையிலும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்வதுடன், நான் அரசியல் அற்றவன் என்றும் சொல்லிக்கொள்ள வசதியாகவும் இருக்கும் படியும் எழுதத் தெரிந்து இருக்க வேண்டும்.
‘இப்படி எழுதுவது எல்லாம் சாத்தியமா சார்?’ என்று கேட்டால், சாத்தியமே என்பேன். மேலே வாசிப்பதற்கு முன் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் ‘ரயில் சீரழிவு‘ என்று தேடிப்பாருங்கள். கட்டுரையை வாசியுங்கள். பின்னர் இங்கே வாருங்கள்.
என்ன வாசித்துவிட்டீர்களா ? அப்படி எழுத வேண்டும்.
அதாவது, ரயிலில் போவதே சௌகர்யம். சாலைப் பயணங்களில் நேரம் வீணாகிறது. அத்துடன் சாலைகள் நன்றாக இல்லை. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் சாலைகள் மேம்படவில்லை. ஆனால், மேம்பாலம் மட்டும் கட்டுகிறார்கள். டோல் வசூல். ஊழல். பத்தாண்டுகள். ஆகவே ரயில் பயணம் சிறந்தது. ஆனாலும் ரயிலில் பணியாளர்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள். முன்பதிவுப் பெட்டிகளை ஆக்கிரமிக்கிறார்கள் ( ஹிந்தியில் பேசியபடி என்று சேர்த்து வாசிக்கவும்). இறங்க வழி விடாமல் கதவருகே உறங்குகிறார்கள். அவர்களுடன் பேச முடிவதில்லை. மொழி. இதைச் சொன்னால் பிரிவினைவாதம் பேசுகிறான் என்பார்கள். இதைச் சரி செய்யாமல் வந்தே பாரத் ரயில் விடுகிறார்கள். அப்படியான ஒரு ரயிலில் கழிப்பறைக் கதவு மூடவில்லை. பத்தாண்டுகள் தண்டம்.
இத்துடன் நிறுத்தியிருந்தால் நீங்கள் ஒரு சாதாரண ஹிந்துத்துவ எதிர்ப்ப்பாளர் என்று மட்டுமே சொல்வார்கள். அதனால் பகவதி ஊர்வலம், செங்கொடி ஊர்வலம் இரண்டாலும் சாலைப் போக்குவரத்து பாதிப்பு என்றும் சொல்லியாகி விட்டது. எனவே ஹிந்துத்துவ எதிர்ப்புடன் இடதுசாரி எதிர்ப்பையும் தொட்டுக் காட்டியாகிவிட்டது.
அத்துடன் தத்கால், ப்ரீமியம் தத்கால் பற்றி அவை மோசடி என ஒரு அடைப்புக்குறிக்குள்ளான தகவல். தத்கால், ப்ரீமியம் தத்கால் என்பவை மோசடி என்றால், அதிக விலைக்கு விற்பதற்காக அரசு அப்படிச் செய்கிறது என்றால், முன்பதிவு செய்வது என்பதும், ஏ.ஸி.பெட்டிகள் என்பதும், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்பவை யாவை ? ஏழை எளிய மக்களால், இணையத் தொடர்பு முதலியவை பற்றிய புரிதல் இல்லாத பாமர மக்களால் இவற்றை முன்பதிவு செய்ய முடியுமா ? ஆகவே, எல்லா வகுப்புகளையும் ரத்து செய்துவிட்டு, எல்லாப் பெட்டிகளையுமே ஏ.ஸி. இல்லாத, முன் பதிவு இல்லாத பெட்டிகள் என்று செய்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்கிற பொது உடைமைக் கொள்கையின் அடிப்படையில் செய்துவிடலாமா ? ரயில்வேத் துறை லாபத்தில் நடக்க விடவே கூடாதா என்ன ? இது தான் அறமா ? போகட்டும். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் என்பவை ஆங்கில ஆட்சிக்கலத்திலும், காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்திலும் இல்லையா ? மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம் பற்றிக் காந்தியடிகளே கட்டுரை எழுதியிருக்கிறார்.
இத்தோடு நிறுத்திவிட்டால் சூசகமாகச் செய்தி சொல்வது எப்படி ?
ராஜீவ் காந்தி காலத்தில் செய்தித் தொடர்பு வந்த விஷயம், நரசிம்மராவ் காலத்தில் ஏர்ப்போர்ட் வளர்ச்சி அடைந்த செய்தி. இதெல்லாம் குறியீடு என்று வைத்துக்கொள்ளலாம். சமீபத்தில் ஜெய்ராம் ரமேஷை வைத்து விழா ஏற்பாடு. முன்னர் ராமச்சந்திர குஹா வந்திருந்தார் என்று நினைவு. அதற்கும் முன்னர், 2-3 ஆண்டுகளுக்கு முன்னர், காங்கிரஸ் மட்டுமே ஓரளவு பன்முகச் சார்புள்ள ஆட்சி நடத்த முடியும் என்றும் சொல்லியாகிவிட்டது.
இறுதியில் ஒரு அருமையான குறீயீடு. ரயில் விஷயத்தை, வடக்கு மாநிலத்தவர் செய்யும் அட்டூழியங்களை ‘நம் எம்பிக்கள்’ பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்கிற வேண்டுகோள் போன்ற செய்தி. இதில் உள்ள சூட்சுமம் அருமையானது. ‘நம் எம்பிக்கள்’ என்று சொன்னதன் மூலம் கழகத்தும் ஒரு பச்சைக் கொடி. அவர்களுக்கு விசிறிவிடும் விதமாக ‘வடக்குக்கு எதிரான குரலாக உடனே மடைமாற்றி விடுவார்கள்’ என்று சரணாகதி தத்துவத்தைப் பறை சாற்றும் விதமான செய்தி.
வாஜ்பாய் தங்க நாற்கரச் சாலை போடவில்லை போல. ஆனால், ஜெயமோகனே தான் ‘முகங்களின் தேசம்’ நூலில் வாஜ்பாய் போட்ட தங்க நாற்கரச் சாலையைக் காங்கிரஸ் அரசுகள் பராமரிக்கவில்லை என்று, சொல்கிறார். போகட்டும். பாஜக மத்தியில் ஆட்சி அமைத்த புதிது அது. அப்போது அப்படி ஒரு பேச்சு. இப்போது ( 2024) பத்தாண்டுகளில் அரசு ( மத்திய அரசு என்று வாசிக்கவும்) சாலை வசதிகளை மேம்படுத்தவில்லை என்கிறார் தன் கட்டுரையில்.
ஏன் இப்படி ? சரி. போகட்டும். ஆனால், உண்மை என்ன ?
2014ல் 73 செயல்படும் ஏர்போர்ட்டுகள் இருந்தன. 2023ல் அந்த எண்ணிக்கை 148. ( பார்லிமேண்டில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடை இது)
2013-14ல் தேசிய நெஞ்சாலையின் நீளம் 91,287கி.மீ. 2023ல் அது 145,240 கிமீ என்று ஆனது. 70ஆண்டுகளில் போட்ட தேசிய நெடுஞ்சாலையின் நீளத்தைவிட, கடந்த 9 ஆண்டுகளில் 59% அதிகரித்துள்ளது. பிரதம மந்திரியின் கிராம சாலைத் திட்டத்தின் மூலம் 2014-2023 காலகட்டத்த்ல் 3.74 லட்சம் கிமீ நீளத்திற்குக் கிராம சாலைகள் போடப்பட்டுள்ளது. ஆனால், இது வளர்ச்சி இல்லையாம்.
2014ல் நாள் ஒன்றுக்கு 4 கிமீ என்கிற அளவிற்கு ரயில் பாதை போடப்பட்டது. 2024ல் அது நாள் ஒன்றுக்கு 7.1 கி,மீ என்று அதிகரித்துள்ளது. இது வளர்ச்சி இல்லை போலும்.
புனைவு எழுத்தில் எழுத்தாளர் ஜெயமோகனை மிஞ்ச ஆளில்லை என்பது உண்மையே, வெண்முரசு தவிர அனேகமாக எல்லா நூல்களையும் வாசித்துவிட்டேன் என்று சொல்ல முடியும், ஆனால், புள்ளி விபரங்கள் சொல்லும் செய்திகளில் எழுத்தாளரின் புனைவு வேலை செய்யாது என்று அவர் புரிந்துகொள்ள வேண்டும். புனைவில் அடித்து விடுவதைப் போலவும், ‘வெள்ளை யானை’யில் புனைவு என்கிற பெயரில் வரலாற்றைத் திரிக்க முயன்றது போலவும் கடந்த பத்தாண்டு அரசின் செயல்பாட்டைப் பற்றிப் புனைவு எழுதினால் அதைச் சரியான தரவுகளின் மூலம் வெளிக்கொண்டுவர வேண்டியது அவரது புனைவு எழுத்தின் வாசகன் என்கிற முறையில் எனக்குக் கடமை உள்ளது என்று நினைக்கிறேன்.
‘அதெல்லாம் இல்லை. இது ஒரு அரசியல் கட்சிக்கான செய்தி’ என்கிற அளவில் மட்டுமே பார்க்க வேண்டும் என்றால் வாயை மூடிக்கொள்கிறேன்.
பாஜகவை எதிர்த்து எழுத வேண்டும். ஏனெனில் தற்சமயம் அது அவ்வளவு பலம் இல்லாமல் உள்ளது. ஆகவே கொஞ்சம் குத்தி எழுதினால் பாதகம் இல்லை. குத்தினால் மட்டும் போதாது. நான் குத்துகிறேன், அதே சமயம் ராஜீவ் காந்தியையும் புகழ்கிறேன் என்பது யாருக்கோ தெரியவேண்டும். ஒருவேளை குடும்பத்தை ஆதரிக்கிறேன் என்று யாராவது சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதனால் நரசிம்மராவையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டியது. அத்துடன் நிற்காமல், தற்சமயம் புதிய பலம் பெற்றுள்ள திமுகவிற்கும் ஒரு பாலம் அமைக்க வேண்டி, ‘நம் எம்பிக்கள் பேச வேண்டும்’ என்பது. இன்னும் கொஞ்சம் குழைந்துகொடுத்து, வடமாநிலத்தவர் வருகையைச் சுட்டுவது. எதைச் சொன்னால் யாருக்கு ஏற்கும் என்று புரிந்துகொண்டு செயலாற்றுவது. ஆனால், அப்படிச் செய்யும் போது, ‘திமுக’ என்றோ, ‘காங்கிரஸ்’ என்றொ ஒரு சொல் கூட வராமல் பார்த்துக் கொள்வது. வாரம் ஒரு முறை ‘அரசியல் அற்று இருத்தல்’ என்றும் சொல்லிக் கொள்வது. இது தான் இந்தச் சமயத்தில் நமக்கு நல்லது நடப்பதற்கான வழி.
அது என்ன நல்லது என்று கேட்பீர்களானால், என்னைக் கேட்டு என்ன பலன் ? கமலஹாசன் ‘தியாகம் அல்ல, வியூகம்’ என்றாரே. அதைப் போன்ற ‘வியூகம்’ இருக்கலாம். ஆனால், இந்த விஷயங்கள் எதுவுமே வெளியே தெரியாமல் எழுத முடிகிறதே அதைத்தான் பாராட்ட வேண்டும். ஆனால் என்ன? சில ஹிந்துத்துவ அம்மாஞ்சிகள் இதைப் புரிந்துகொள்லாமல் நேரடியாகத் தனி மனிதத் தாக்குதலில் இறங்குவர் ( 2014ற்குப் பிறகான ;ஹிந்துத்துவர்கள்’ என்று வாசிக்கவும். இந்தக் கூட்டம், எந்த வாசிப்போ, தத்துவப் புரிதலோ, நுண் அரசியலோ தெரியாமல் பாஜக என்ன செய்தாலும் முட்டுக் கொடுத்துப் பலியாகும் கூட்டம். உதா: தமிழிசை எம்.பி. தேர்தலில் நின்றதை ஆதரித்த மந்தைக் கூட்டம்).
போகட்டும். திருப்பூரிலும், ஈரோட்டிலும் ரயிலில் வட மாநிலத்தவர் கூட்டம் அதிகமாக உள்ளதா ? மிக அதிகமாக உள்ளது. கட்டுக்கடங்காமல் உள்ளது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தே ஆக வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அவர்கள் ஏன் திருப்பூரில் இத்தனை எண்ணிக்கையில் வேலைக்கு வருகின்றனர் ? கடுமையான கட்டட வேலைகளில் வடமாநிலத்தவர் ஏன் இத்தனை அதிக எண்ணிக்கையில் வர வேண்டும் ? தமிழ் நாட்டில் இளைஞர்களே இல்லையா ? இந்தக் கேள்வியைக் கேட்டால் பதில் வராது. ஜெயமோகனும் கூட மதுவினால் தமிழ் இளைஞர்கள் அடைந்துள்ள சீரழிவு பற்றிப் பேச மாட்டார்கள். ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையில் கேரளத்தில் மதுப்பழக்கம் தலைவிரித்து ஆடுவது பற்றி எழுதினார். அதைப் பாராட்டி நான் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். ஆனால், தமிழகத்தில் உள்ள குடிக்கும் நிலை பற்றி அவர் பெரிய அளவில் எழுதாதது ஏதாவது உள் நோக்கம் கொண்டதாக இருக்காது என்று நம்புவதற்கு இடம் தராத வகையில் அவரது தற்போதைய ‘ரயில் சீரழிவு’ பற்றிய கட்டுரை உள்ளது.
( யூடியூப் – திருப்பூர் தொழில் வட மாநிலத்தவர் )
(யூடியூப் – திருப்பூரில் வட மாநிலத்தவர் ஏன் )
இந்தக் கட்டுரையைக் கேலி செய்து, அதிரீவிர ஜெயமோகன் மடத்துக்காரர்கள் பகடி செய்து எழுதலாம். கண்டுகொள்ளாமல் இருந்து, கட்டுரையைப் பொது வெளியில் வர விடாமல் செய்யலாம். அல்லது தீவிர ஹிந்துத்துவ வெறியனின் உளச்சிதைவுக் கட்டுரை என்று சொல்லிக் கடந்து செல்லலாம். நம் தமிழகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், நான் சொல்லியுள்ள கருத்துகள் ஒரு நிதானமான வாசகனின் உள்ளத்தில் ஓரிரு சிந்தனைகளையாவது எழுப்பும் என்று எதிர்பார்க்கிறேன்.
சரி. ஜெயமோகனின் கட்டுரையை விமர்சித்து எழுதிவிட்டாய். ஆகவே, இனி அவரது ஆக்கங்களை வாசிக்க மாட்டாயா ? என்று கேட்கலாம். நான் தொடர்ந்து வாசிப்பேன். அவரது எழுத்துக்களை வாசிக்காமல் புனைவு எழுதுவது இல்லை. எனது சமீபத்திய நாவல் ‘வந்தவர்கள்‘ 2016ல் சிங்கப்புரில் ஜெயமோகனுடன் நடந்த உரையாடல் ஒன்றில் கிடைத்த வித்தின் விளைவு. அவர் ஓர் சிந்தனையாளர் என்கிற ரீதியில் அவருடனான உறவு தொடரும். அவரது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிப்பேன், உரையாடலில் இருப்பேன். அவர் எழுத்துக்களில் உள்ள நுண் அரசியலையும் விமர்சிப்பேன். ஓர் வாசகனாக அது எனது உரிமை. யாருடனான உறவுமே பைனரியாக (Binary) இருக்கலாகாது என்பது என் கருத்து.
சமீபத்தில் காலஞ்சென்ற என் 84 வயதுத் தந்தையாருடன் 2023ல் ரயில் பயணம் செய்தேன். சென்னை -> மயிலாடுதுறை. இன்சுலின் எடுத்துக்கொள்வதாலும், வயோதிகத்தாலும் அவர் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தார். அவரை உறங்க விடாமல் 5 தமிழக இளைஞர்கள் + இளைஞிகள் அட்டூழியம் செய்தபடி எங்கள் ரயில் பெட்டியில் நடந்துகொண்டனர். பாடுவதும். ஆடுவதும், கொச்சையாகப் பேசுவதும், மேல் பெர்த்தில் இருந்து திடீரென்று கீழே குதிப்பதும் என்று மொத்தமும் அநாகரீகம். அவர்களது மதம் பற்றிச் சொன்னால் என்னை வகுப்புவாதி, கம்யூனல் என்பார்கள். 3 மணி நேரம் பொறுத்து, தாங்க முடியாமல், டி.டி.ஆரிடம் சொல்லி மேலே கட்டணம் கொடுத்து இரண்டாம் வகுப்புப் படுக்கைப் பெட்டிக்குச் சென்றோம். ஆகவே, குறிப்பிட்ட மதம் சார்ந்த தமிழக இளைஞர்கள் யாவரும் அப்படியானவர்கள் என்று நான் கட்டுரை எழுதினால் சரியாக இருக்குமா ? அந்த நிகழ்வு ஒரு யதேச்சையான தவறு, aberration என்று வேண்டுமானால் சொல்லலாம். அதைத் தாண்டி பொதுமைப்படுத்துவது அநாகரீகம், முட்டாள்தனம் என்பது என் எண்ணம்.
இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
என்னுடன் வாட்ஸப்பில் தொடர்புகொள்ள +91-9444739415. ( வாரம் ஒரு முறை பதில் அளிப்பேன்)
Leave a reply to mukhilvannan Cancel reply