உபன்யாசத்தின் போது கரண்ட் போனதா ? ஏதாவது சதியா என்ன ?
இடம்: ஸத்-ஸங்கம், மணித்வீபம். நெய்வேலி. காலம்: இரவு 8:30 மணி. 1984-86.
இவ்விடத்தில் நடந்த உபன்யாஸ அனுபவங்களைச் சொல்லி மாளாது. வாரியார் உபன்யாசம் ஒரு வகைக் கொண்டாட்டம் எனில், கீரனின் உபன்யாசம் எக்ஸ்பிரஸ் ரயில். இவர்களில் வித்யாசமானவர் ஶ்ரீவத்ஸ ஜெயராம சர்மா. ஶ்ரீமன் நாராயணீய உபன்யாசம், அதுவும் ஜெயராம சர்மாவினுடையது, என் இளம் பிராயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ஜெயராம சர்மாவின் நாராயணீய உபன்யாசத்தில் 10 நிமிஷம் மட்டும் எல்லா விளக்குகளும் அணைந்து போகும் ? ஏனென்று தெரிந்துகொள்ள மேலே வாசியுங்கள்.
மின்சாரம் நிற்கவே நிற்காத ஊரில் இந்த மண்டபத்தைல் மட்டும் 10 நிமிஷம் விளக்கு அணைவானேன் ?
நரசிம்ம ஆராதனம் எங்கள் குடும்பத்திற்கு விதிக்கப்பட்டது என்பதால் நாராயணீயத்தின் நரசிம்மாவதாரம் வீட்டில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. பெரியப்பாவும் உபன்யாசகர் என்பதால் நாராயணீயத்தில் வரும் 25வது தசகம் மற்றும் பிற புராணங்கள், கம்பராமாயணம் முதலியவற்றில் உள்ள நரசிம்ம அவதார விஷயங்கள் ஓரளவு தெரியும்.
அன்று இரவு 8:30 மணி வாக்கில் ஜெயராமசர்மா மேடையில் நாராயணீயம் சொல்லிக்கொண்டிருந்தார். மேடையின் ஒருபுறம் சர்மா, மற்றொருபுறம் குருவாயூரப்பன் படம், மாலைகளுடன்.
25வது தசகம் வந்தது.
‘ஸ்தம்பே⁴ க⁴ட்டயதோ ஹிரண்யகஶிபோ꞉ கர்ணௌ ஸமாசூர்ணய..’ என்று சர்மா துவங்கவும், மணித்வீபத்தின் அனைத்து விளக்குகளும் அணைந்தன. திடீர் இருட்டு. எங்கிருந்தோ பிரசன்னமான குருக்கள் குருவாயூரப்பனின் படத்திற்குப் பெரிய அளவிலான தீபாராதனை செய்கிறார்.
பிரம்மாண்ட இருளில் இருவர் மட்டுமே – குருவாயூரப்பன் + 25வது தசக ஸ்லோகத்தின் சூக்ஷ்ம ரூப அவதாரம்.
சர்மாவின் வார்த்தைகளில் நரசிம்மன் தோன்றிவிட்டான். ஹிர்ண்யணை மடியில் கிடத்துகிறான். ஹா என்கிற ஒலி. கூட்டத்தின் சில மூலைகளில் இருந்து உறுமல்கள். ஹிரண்யனின் குடலை உருவுகிறான். கூட்டத்தில் அர்த்தம் புரியாத சொல்லாடல்கள். திடீர் அமைதி. மீண்டும் உறுமல் மற்றும் எகிறும் ஒலி அளவு.
சர்மா மேடையில் நரசிம்மனை வரவழைத்துவிட்டிருந்தார். கூட்டத்தில் ஆங்காங்கே நரசிங்கம், மானுட வடிவில், பக்தியில் ஊறிப் போயிருந்த குழாத்தில் பலருள் ஆவிர்பத்திருந்தது. கீழே அமர்ந்தபடியே உடல் தூக்கிப் போட்டவண்ணம் ஒருவர். அம்ர்ந்தபடியே கைகளைக் கட்டிக்கொண்டு உடல் மட்டும் ஆடும் ஒருவர்.
எதுவும் புரியாத அந்த நிலை சுமார் 10 மணித்துளிகள் நிகழ்ந்திருக்கும். திடீரென்று விளக்குகள் ஒளிர்ந்தன. சர்மா மேடையில். கீழே கூட்டத்தில் ஆங்காங்கே சில சரிந்திருந்தனர். ஓரிருவர் இன்னமும் சன்னதம் அடங்காமல் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தனர். குருக்கள் அவர்கள் மீது தீர்த்தம் தெளித்தார்.
ஆம். அங்கே நரசிங்கம் வந்து சென்றிருந்தது. ந்ருஸிம்ஹ அவதாரம் நிஜத்தில் நிகழ்ந்தது. உபன்யாசம் கேட்க வந்த ஒவ்வொரு ஆத்மாவின் நினைவிலும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது. இரவு வெகு நேரம் வரை ந்ருஸிம்ஹத்தின் பாதிப்பு இருந்தது. வீட்டிற்குச் செல்லும்போது பெரும் அமைதி மனதில் எழும்பியிருந்தத்தை உணர்ந்தேன். பின்னர் வந்த இரண்டு நாட்கள், யாருடனும் அதிகம் பேசாமல் ஒரு மோன நிலையில் கழித்தேன்.

அவ்வகையிலான மறக்க முடியாத இறை அனுபவங்களை அளித்த மணித்வீபத்தில் உபன்யாச மேடையைத் தற்போது காணவில்லை. நரசிங்கம் வந்து சென்ற இடங்களில். உற்று நோக்கினால் சிம்மத்தின் காலடித் தடங்கள் தெரியலாம்.
25(1)
स्तंभे घट्टयतो हिरण्यकशिपो: कर्णौ समाचूर्णय-
न्नाघूर्णज्जगदण्डकुण्डकुहरो घोरस्तवाभूद्रव: ।
श्रुत्वा यं किल दैत्यराजहृदये पूर्वं कदाप्यश्रुतं
कम्प: कश्चन संपपात चलितोऽप्यम्भोजभूर्विष्टरात् ॥
…
25(10)
एवं नाटितरौद्रचेष्टित विभो श्रीतापनीयाभिध-
श्रुत्यन्तस्फ़ुटगीतसर्वमहिमन्नत्यन्तशुद्धाकृते ।
तत्तादृङ्निखिलोत्तरं पुनरहो कस्त्वां परो लङ्घयेत्
प्रह्लादप्रिय हे मरुत्पुरपते सर्वामयात्पाहि माम् ॥१०॥
Leave a comment