The side that is not spoken about, generally.

காஞ்சி மடத்துடன் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு.

வைஷ்ணவன், ஸ்மார்த்தன் என்று குதிக்கும் முன்னர் மேலும் வாசிக்கவும். குதித்தேதான் ஆவேன் என்பவர்கள் வேறு பாத்திரக்கடையைப் பார்க்கவும்.

ஐம்பதுகளில் என் தாத்தா பரமாச்சாரியார் முன் கனம் பாடி, தங்கத் தோடா பெற்றார். அது தான் மடத்துடனான முதல் தொடர்பு என்று நினைக்கிறேன்.

நெய்வேலி ஸத்-ஸங்கம் மணித்வீபத்தில் பூஜ்ய ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பலமுறை சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துள்ளார். ஒரு முறை ஸத்-ஸங்கம் விநாயகர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணவும் ஸ்வாமிகள் வந்திருந்தார் என்று நினைவு. அப்போது ஆர்.எஸ்.மனோகர் ‘ஆதி சங்கரர்’ நாடகம் போட்டார்.

ஒவ்வொரு முறை நெய்வேலிக்கு வரும் போதும் ‘ஆர்ச்-கேட்’ என்கிற நுழைவு வாயிலில் பூரணகும்ப மரியாதையுன் வரவேற்பது வழக்கம். நெய்வேலியின் சேர்மன் முதற்கொண்டு ஊரே திரண்டு நின்று வரவேற்கும். ‘ஆர்ச்-கேட்’ முதல் ஸத்-ஸங்கம் வரை, சுமார் 2 கி.மீ. ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். அனேகமாக அன்று ஸ்கூலுக்குப் போவதை நாங்கள் மறந்திருப்போம்.

‘சங்கராச்சார்யார் வந்திருக்கார்’ என்று ஸ்கூலிலும் சில நேரம் அரை-நாள் லீவு விடுவதுண்டு. சைக்கிளை ஒரு மிதி மிதித்து, வீடு சென்று, வேஷ்டிக்கு மாறி, ஸத்-ஸங்கம் விரைந்து, சங்கராச்சாரியாரின் சிரித்த முகத்தைக் கண்டு, சேவித்து, ‘சந்தியாவந்தனம் பண்றயா?’ என்கிற கேள்விக்கு மழுப்பலாகப் பதில் சொல்லி, அவர் தந்த ஆப்பிள் / சாத்துக்குடி வாங்கிக் கொண்டு, ‘இந்த முறை பரீட்சையில் நல்ல மார்க் வரும்’ என்கிற நம்பிக்கையில் ஸத்-ஸங்க மண்டபத்தில் முதல் பந்தி எப்போது ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தது நினைவில் நிற்கிறது.

சங்காராச்சாரியார் வந்தார் எனில் ஊருக்கே ஒரு களை வந்து சேரும். அதுவரை மடிசாரே காட்டிப் பார்த்திராத பலர் மடிசார் உடுத்திக்கொண்டு விறு விறு என்று நடப்பதைப் பார்த்து, ‘ஓ, இவாள்ளாம் ஸ்மார்த்தாளா?’ என்று தெரிந்துகொண்டதும் நினைவில் உள்ளது. மடிசாரின் சாய்மானப் பக்கம் மட்டும் ஐயங்காரிடமிருந்து வேறுபடும் என்பதை அத்தருணத்தில் தான் கண்டுகொண்டேன். பஞ்சகச்சம் எல்லாம் ஒரே மாதிரிதான். பஞ்சகச்சம் என்றவுடன் முன்னர் எழுதிய ‘பஞ்சகச்சம் நிகழும் தருணம்‘ கட்டுரை நினைவிற்கு வருகிறது. வாசித்துக் கருத்து சொல்லுங்கள்.

எனது ‘பழைய கணக்கு’ சிறுகதைத் தொகுப்பில் ‘தரிசனம்’ என்றொரு கதை உண்டு. ஸத்-ஸங்கம் டி.ஆர்.சி. மாமாவைப் பற்றிய கதை என்றாலும் அதில் சங்கராச்சாரியார் முக்கியமான பங்கு வகிக்கிறார். எந்த சங்கராச்சாரியார் என்பதை அந்தக் கதையை வாசித்துக் தெரிந்துகொள்ளுங்கள்.

என் பெரியப்பா புலவர்.இராமபத்திராச்சாரியார் எழுதிய சில நூல்களைப் பரமாச்சாரியார் டார்ச் விளக்கு ஒளியில் வாசித்துள்ளார். ‘இதை விட பெரிய அனுக்ரஹம் இருக்குமா?’ என்று பெரியப்பா பலமுறை நெகிழ்ந்துள்ளார். பம்பாய் மாதுங்கா, சயன் கிருஷ்ண சபா உபன்யாசங்களில் இதனைச் சொல்லியும் உள்ளார்.

1997ல் ஒருமுறை கனவு ஒன்று வந்தது. நான் நதியில் இறங்கி நீராட முனைகிறேன். அம்மா கரையில் நிற்கிறார். நதியில் முங்கி எழுகிறேன். கையில் ஏதோ படுகிறது. எடுத்தால் அது ‘ஏக தண்டம்’. அத்வைத சன்னியாசிகள் வைத்திருப்பது. ‘அம்மா எனக்கு தண்டம் கெடைச்சிருக்கு’ என்று அம்மாவிடம் காட்டுகிறேன். அம்மா வேறு பக்கம் பார்க்கிறார். அங்கு ஜெயேந்திர சரஸ்வது ஸ்வாமிகள் தனது மாறாத சிரிப்புடன் கையைத் தூக்கி ஆசீர்வதித்தபடி செல்கிறார். இந்தக் கனவை அம்மாவிடம் சொல்லி, ‘ஆதிசங்கரர் மாதிரி எனக்கு சன்யாசம் வாங்கணும் போல இருக்கு. அதுக்குத்தான் ஸ்வாமிகள் சொப்பனத்துல வந்தார் போல’ என்று மறு நாள் காலையில் சொன்னேன். அம்மா அழுகிறாள்.

பம்பாயில் இருந்து லீவில் நெய்வேலிக்கு வந்திருந்த நான் மீண்டும் பம்பாய் சென்றுவிடுகிறேன். பின்னர் அம்மாவும் அப்பாவும் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சென்று சந்திக்கிறார்கள். ‘என்ன தேவநாதாசார்யார், இப்ப யாருக்குக் கல்யாணத்துக்காக வந்திருக்கேள்?’ என்று ஸ்வாமிகள் வினவுகிறார், பளீரென்ற சிரிப்புடன். (காஞ்சி மடத்தின் உதவியுடன் அப்பா பல ஏழைப் பெண்களுக்குக் கல்யாணம் செய்துவைத்துள்ளார்). அம்மா அழுதபடியே நான் கண்ட கனவைச் சொல்கிறார். ஸ்வாமிகள் புன்சிரிப்பு மாறாமல் குங்குமப் பிரசாதம் அளிக்கிறார். ‘சொப்பனத்துல சன்னியாசி வந்தா ந்ருஸிம்ஹம் வந்துருக்குன்னு அர்த்தம். உங்காத்துல ந்ருஸிம்ஹ ஆராதனம் உண்டோ?’ என்கிறார் ஸ்வாமிகள். (எங்கள் ஆசாரியன் அஹோபில மடம் ஶ்ரீமத் அழகியசிங்கர். தினப்படி பானகம் உண்டு பெருமாளுக்கு ).

‘கவலைப் படாதே. சீக்கிரம் நல்லது நடக்கும்’ என்கிற ஆசீர்வாதத்துடன் ஒரு மஹாலக்ஷ்மி டாலர் அளிக்கிறார் ஸ்வாமிகள். 1998 மார்ச் மாதம் கல்யாணம்.

‘யஞ்ஞோபவீதம் இல்லாத சன்னியாசியைப் பார்த்தாலே வைஷ்ணவன் தீர்த்தாமாடணும்’ என்று ஒருவர் எனக்கு அறிவுறுத்தினார். அவரைப் பார்த்து எனக்குப் பரிதாபமே ஏற்பட்டது. முன்னர் ஒரு முறை சிருங்கேரி ஸ்வாமிகள் நெய்வேலியில் எங்கள் பள்ளிக்கு விஜயம் செய்தார். அவரையும் சேவித்தது நினைவிற்கு வரவே, ‘இவருக்கு எப்படி ? இன்னொரு தடவை தீர்த்தாமாடணுமா?’ என்று கேலியாகக் கேட்க எத்தனித்தேன். ஏனோ மௌனமாகவே இருந்துவிட்டேன்.

காஞ்சி ஸ்வாமிகள் ‘ஸத்-ஸங்கம் மணித்வீபம்’ எனில் சிருங்கேரி ஸ்வாமிகள் ஸத்-ஸங்கம் தபோவனம்’. இரண்டுமே நெய்வேலியில் ஆன்மீகத்தைப் பரப்பிய ஸ்தாபனங்கள். இப்போத் தபோவனம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நெய்வேலி மாதிரி மிகச் சிறிய டவுன்ஷிப்பில் இரண்டு மடங்களைப் பின்பற்றும் ஸ்தாபனங்கள். மணித்வீபத்தில் கீரன் உபன்யாசம் எனில் அதைத் தொடர்ந்து தபோவனத்தில் வாரியார். ஆன்மீகத்தை விருத்தி பண்ணுவதில் போட்டி. அப்படி ஒரு காலம் இருந்தது.

அப்படியான ஸத்-ஸங்கம் மணித்வீபத்தைப் பின்னர் காஞ்சி மடம் எடுத்துக்கொண்டது தெரிந்து சந்தோஷப்பட்டேன். அதன் ப்ரவசன மண்டபத்தையும் முன்னர் இருந்தது போலவே ஆக்குவார்கள் என்று நம்புகிறேன். ஆனால், 70-80களில் நடந்த உபன்யாசங்கள் நிகழுமா ?

–ஆமருவி

25-03-2025

Leave a comment