ரொம்ப கஷ்டப்பட்டு உங்க நேரம் கொடுத்தீங்க. ரொம்ப நன்றி. உங்களோட பல வேலைகளுக்கு இடையிலயும்..
அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மாத்தான் இருக்கேன். பாருங்க கட்சி ஆஃபீஸ்ல கூட யாருமே இல்ல. டீ வாங்கப் போன பையன் கூட வேற கட்சிக்குப் போயிட்டான்.
அடடே. புரியறாப்ல பேசறீங்களே.. நீங்க நிஜமாமே நீங்க தானா ?
நானே நானா யாரோ தானான்னு முன்னாடியே பாடியாச்சே. ஹா ஹா. அதனாலதான் ஹாஸ்ய நாயகன் ஹாஸன்னு சொல்லுவாங்க.
யார் சொல்லுவாங்க ?
இல்ல. பொதுவாச் சொல்லுவாங்க. யாருன்னு தெரியல.
சரி போகட்டும். கட்சி வேலையெல்லாம் எப்பிடி இருக்கு ?
வேலை இருக்கு. கட்சிதான் இல்ல. நேம் போர்டு மட்டும் நிக்குது.
ஏங்க, கட்சில யாருமே இல்லியா ?
ஏன் இல்ல ? நான் தான் இருக்கேனே. நான் தான் கட்சி. கட்சி தான் நான். தசாவதாரம் எடுத்திருக்கேன். விஸ்வரூபம் எடுக்கறதுக்கு முன்னாடி மருத நாயகமா உக்காரலாம்னு.. சரி விடுங்க.. ஆனா, நான் அப்படீங்கற எண்ணம் வந்தா கட்சி அப்படீங்கற புறவயமான எண்ணம் வந்துடும்னு நினைக்கறதால நான் வேற, கட்சி வேறன்னு நினைகக்றதில்லன்னு நீங்க புரிஞ்சுக்கணும்னு நான் நினைப்பேன்னு நீங்க எதிர்பார்க்கலாங்கறதால..
புரிஞ்சுட்டுதுங்க. நீங்க நீங்கதான். நீங்க நீங்களா இருக்க மாட்டீங்களோன்னு சந்தேகத்துல கேட்டுட்டேன். இப்ப தெளிவாயிடுச்சு.
சரியா புரிஞ்சுகிட்டீங்க பார்த்தீங்களா ? அது தான் நம்ம கட்சிக்காரங்க கிட்ட இருக்கற நல்ல பழக்கம்.
அடடே.. நான் உங்க கட்சி இல்லை. நான் பத்திரிக்கையாளர்..
இருந்தா என்ன ? இப்ப நான் கூட தான் என் கட்சில இருக்கேன். ஆனா, சைடலின் கட்சிக்காக வேலை செய்யல்லியா ? அது ஏன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சாலும், நீங்க கேட்டாலும் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்குன்னு நான் நினைப்பேன்னு நீங்க நினைச்சீங்கன்னா அதுக்கு ஒன்றிய சதி தான் காரணம்னு வாத்யார் சொன்னதை நினைவு படுத்தறேன்.
என்னங்க இது. நான் இன்னும் கேட்கவே ஆரம்பிக்கல்லியே..

எதுக்கு கேக்கணுங்கறேன். நானே சொல்றேனே. சைடலின் கட்சிக்கு வேலை செஞ்ததால, மக்கள் பாதி மையம் இல்லைன்னு ஆயிடாது. ஏன்னா அது தேர்தலுக்கான வியூகம். பல வியூகங்களே பிற்கால யாகங்களுக்குக் காரணம். வியூகங்கள் புரியணும்னா வயோதிகம் வரணும். வயோதிகம்னா வியாதின்னு பொருள் இல்ல. ஆனா, வியாதிகள் இல்லேன்னா வயோதிகம் வராதுன்னும் அர்த்தம் இல்லை. இது தான் மொத்தமான அரசியல் வியூகம். அது புரியணும்னா ஒண்ணும் வியாதி வரணும், இல்ல வயோதிகம் வரணும். இல்ல, என்னமாதிரி ரெண்டும் வரணும்.
இப்ப நிஜமாவே புரியல ஆண்டவரே..
ஆங்.. இப்ப சொன்னீங்க பாருங்க அது தான் எனக்குப் புடிக்காத வார்த்தை.
அடடே.. நான் நண்பரோட ஆண்டவர சொன்னேன். ஸ்தோத்ரம் ஆண்டவரேன்னு அவரு ஜெபக் கூடத்துல சொல்லுவாரு. அந்த ஆண்டவர்.
ஓ அதுவா. அந்த அன்பெனும் ஆண்டவர எனக்குப் புடிக்கும். ‘அன்பே சிவம்’ படத்துல கூட இந்த மாதிரி ஆண்டவர கும்பிடறவங்க எனக்கு உதவி பண்ற மாதிரி எடுத்திருக்கேன்.. நீங்க மேல கேளுங்க.
அதான் என்ன கேக்க வந்தேன்னு இன்னும் சரியா புரியல. கொஞ்சம் குழப்பமா இருக்கு.. ஒரு நிமிஷம் உக்காந்துக்கறேன்.
ஓ நீங்க இன்னும் உட்காரவே இல்லியா ? பார்த்தீங்களா இந்த நாடு இப்ப எப்பிடி ஆயிடுச்சுன்னு. வந்தவங்கள உட்கார வைக்கணும்னு நினைக்கக் கூட முடியாத அளவுக்கு இப்ப நாட்டுல ஃபாசிஸம் தலை விரிச்சு ஆடுது. அதுக்குத்தான் நான் சைடலின் கட்சியோட சேர்ந்து பிரச்சாரம் பண்ணினேன். ஏன்னா இந்த நாட்டோட முதல் தீவிரவாதி ஒரு ஹிந்துன்னு நான் முன்னாடி பேசினது உங்களுக்கு நினைவுல இருக்கும்னு நான் நினைச்சாலும் அது அவ்வளவு சுலபமா அப்படி சொல்லிட முடியாதுன்னு நான் ராஹுல் கூட ஜோடோ யாத்திரை போனபோது அவர் சொன்ன மாதிரி காதுல விழுந்ததுன்னு நினைக்கறேனு நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு தெரியும்னு நான் சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்களா என்ன ?
உட்கார்ந்துக்கறேன்னு சொன்னது இவ்வளவு பெரிய தப்பா சார். நீங்க பேசினது ஒண்ணுமே..
புரியல்லேன்னு நீங்க நினைக்கறிங்க இல்லியா ? அது தான் நான் சொல்றேன். அந்த அளவுக்கு ஃபாசிஸம் தலை விரிச்சு ஆடுதுன்னு நான் சொல்லலே, அது தான் இது.
சார், தலை சுத்துது. கொஞ்சம் எலுமிச்சம் பழம் ஜூஸ் மாதிரி கிடைக்குமா ? சாரி. நீங்களே தனியா இருக்கீங்க. இருந்தாலும் கேக்கறேன்.
ஆஹா.. அவசியம் தரேன். யாருப்பா அங்க, ஒரு லெமன் ஜூஸ் கொண்டாப்பா. ஓ சாரி. இங்க தான் யாருமே இல்லியே. நான் மட்டும் தானே கட்சில இருக்கேன். சரி நானே போயி கொண்டாந்துடறேன். கொஞ்சம் இருங்க.
வேண்டாம் சார். ரொம்ப சிரமப் படாதீங்க. வெளில ஜூஸ் கடைல வாங்கிக்கறேன்.
இல்ல இல்ல. இங்க அவசியம் வேணும். எனக்கே கூட தேவை. எலுமிச்சம் பழத்தோட தோல தலைல தேய்ச்சுக் குளிச்சா நல்லதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.
சார். என்ன சொல்றீங்க ?
வேற என்னங்க பண்றது. கட்சி ஆரம்பிச்சேன். ஊர் ஊரா சுத்தினேன். ஒரு கட்டத்துல ரொம்ப முத்திப் போய் டிவி எல்லாம் உடைச்சேன். அது வரைக்கும் கட்சிக்காரங்க பொறுமையா இருந்தாங்க. எப்ப டீவி உடைச்சேனோ அன்னிக்கி பயந்து வெளியேறிட்டாங்க. இப்ப எலுமிச்ச தோலு வாங்க ஆளில்லாம உக்காந்திருக்கேன். சமயத்துல எனக்கே என்னை நினைச்சா கொஞ்சம் பயமா இருக்கு. குணாவுல வருமே, பயம். அது குணாவா? இல்ல.. இன்னொரு படம். இலங்கைத் தமிழ் பேசுவேன். அதுல தான் நிறைய பயம் வந்தது. அப்பத்தான் பைத்தியம் மாதிரி நடிக்கத் துவங்கினேன். அப்பறம் கட்சி, டார்ச் லைட், டிவி உடைக்கறதுன்னு முத்தி, இப்ப எலுமிச்ச தோலுல வந்து நிக்கறது. இத பரிணாம வளர்ச்சியான்னு நண்பர் ஜெயமோகன் கிட்ட கேட்கணும். இல்ல டில்லில கிருஷ்ணன் இருக்கார். அவர் கிட்ட கேக்கணும். கிருஷ்ணன் கிட்ட கேக்கலாம், ராமன் கிட்ட கேக்கக் கூடாதான்னு நீங்க கேக்க நினைக்கறது எனக்குப் புரியும்னு உங்களுக்குத் தெரியும்னு நான் நினைக்கறதை நினைச்சு நீங்க சிந்திக்கத் துவங்கயிலெ..
‘ஐயோ சார். முடியல. நான் எதுவும் சிந்திக்கல. சிந்திச்சிருந்தா உங்கள பார்க்க வந்திருப்பேனா ?’
‘சரியாக் கேட்டீங்க, இப்படித்தான் சலங்கை ஒலில நான் ‘தகிட திதிமி … என் பேனா’னு ஒரு பாட்டுக்கு ஆடினேன்னு நீங்க நினைக்கலாம்னு நான் யோசிக்கறப்போ..
‘தயவு செஞ்சு என்னப் பேச விடுங்க சார். ஏதோ பொதுக்குழு கூட்டப்போறேன்னு சொல்லியிருக்கீங்க போல..’
‘ஆமா. சொன்னேன். சொன்னேன்னா சொன்னேங்கறேன். இதுல எனக்கு ஒரு குழப்பமும் இல்ல. ஆனா பொதுவா நான் குழுவுல சொன்னத பொதுக்குழுன்னு நீங்க கேட்டீங்கன்னா என்ன செய்யறதுன்னு நான் சிந்திக்க ஒரு நொடி வேண்டாமா ? என்னதா சகலகலா வல்லவனா, சிப்பிக்குள் முத்த எடுக்க முடிஞ்ச ஆளா இருந்தாலும் நீங்க இப்படி திடீர்னு கேட்டா தலை சுத்துதா இல்லியா ?’
‘ஒரு கேள்விக்கே தலை சுத்துதே.. நீங்க பேசறதுக்கெல்லாம் எங்களுக்கு எப்பிடி இருந்திருக்கும் ? போகட்டும். பொதுக்குழு கூட்டறதப் பத்தி..’
‘ஓ நல்லா கூட்டலாமே. துடைப்பம் தான் இல்ல. வாங்கிட்டு வர ஆளும் இல்ல. இப்ப கட்சில நான் மட்டுமே இருக்கறதால நானே பொதுக்குழு, அத நானே கூட்டிப் பெருக்கி வகுத்து, ‘வகுத்தான் வகுத்த வகையல்லால்’ன்னு எங்க மயிலாப்பூர் தாத்தா சொன்னாரில்ல, பாருங்க அவருக்கே பூணல் போட்டு, பொட்டு வெச்சுட்டாங்க இங்க கிண்டில இருக்கறவங்கன்னு நான் சொல்லுவேன்னு நீங்க நினைக்கறதுக்கு வழி இருக்கலாம்ங்கறதால ஜெயமோகன் எழுதின ‘விஷ்ணுபுரம்’ புஸ்தகத்துல கௌஸ்துபம் பாகத்துல வரக்கூடிய வரி ஒண்ணு நினைப்புக்கு வருது.. சொல்லட்டுமா ?’
‘வேண்டாம் சார். பொதுக்குழுவுல ஒரே ஒரு சேர் போருமா ?’
‘போதுமே. ராஜ்யசபாவுல ஒரே ஒரு சீட்டு தானே தரேன்னு சொன்னாரு தம்பி. ஒண்ணு போறுமே. என்ன சொல்றீங்க?’
‘தம்பி யாருங்க?’
‘என்ன இப்பிடி கேட்டுட்டீங்க ? நம்ம சதயநிதி பாலின் இருக்காறே.. இப்பக்கூட வரேன்னு சொன்னாரு. அவருக்குத்தான் ஒரு சேர் போட்டிருந்தேன். பொதுவா அவரு வர்றதுக்குள்ள இடத்தக் கூட்டி வைக்கறது வழக்கம். அதப் போய் ஏதோ பொதுக்குழுன்னு சிக்னல் கிடைக்காம தப்பா காதுல வாங்கிட்டு வந்துட்டீங்க போல இருக்கு..’
‘ஐயோ அவரு தூத்துக்குடி போயிருக்கார் இல்லியோ ? அத்தையோட தொகுதில வேலை நடக்குதான்னு பார்க்கப் போனாருன்னு சொன்னாங்களே..’
‘தம்பி.. இதான் பிரச்னை. மக்கள் பாதி மய்யத்த உடைக்கறதுக்கு சதி நடக்குது. ஒன்றியத்துல இருந்து உங்கள அனுப்பி எங்க கட்சிய உடைக்கப் பார்க்கறாங்களான்னு நான் கேட்பேன்னு நினைச்சீங்கன்னா நான் இன்னும் தமிழக உரிமைகளுக்காக நடத்தற வேள்விக்கான ஆரம்ப முஸ்தீபுன்னு நினைச்சுக்கற பக்குவம் இருக்கும்ங்கற நினைப்புல..’
‘புரிஞ்சு போச்சுங்க. ஒரே ஒரு நிமிஷம் இருங்க. நானே ஒரு எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்துடறேன். கூடவே கொஞ்சம் வேப்பிலையும்’
‘ஒண்ணு விட்டுட்டீங்க பார்த்தீங்களா?’
‘என்னது சார் ? ‘
‘அதாங்க.. கெஜ்ரிவால் வெச்சிருப்பரே.. விளக்குமாறு. அதையும் ஒண்ணும் வாங்கிட்டு வந்துடுங்களேன்.ப்ளீஸ். கூட்டறதுக்கு உதவியா இருக்கும்’
‘எதுக்குங்க வாங்கிக்கிட்டு.. உங்களுக்கு ஓட்டு போட்டாங்கள்ல கோயம்புத்தூர்ல. அவங்க ஆளுக்கு ஒண்ணு வெச்சிருக்காங்களாம், ரெடியா’
‘என்னது ? மாநில சுயாட்சி தானே ? அதுக்குத்தானே போராடப்போறேன்.. சிவாஜி மாதிரி. ‘
‘சிவாஜியா ? அவரு கட்சி ஆரம்பிச்சு வீணாப்போனாரே. அவரா ?’
‘அவரும் தான். அவர் கட்சி ஆரம்பிச்சு பணத்தக் கரைச்சாரு. எனக்கு பணம் குடுத்து கட்சி ஆரம்பிக்க வெச்சு, பாஜக ஓட்டக் கரச்சாங்க.. அப்படீன்னு சொல்லுவேன்னு தானே நினைச்சீங்க ? அது உண்மை இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பறது உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்னு நான் நினைப்பேன்னு நீங்க நினைக்கறது புரியுதுன்னு சொல்லணும்னு ஆசையா இருக்குங்க’
‘அப்ப்பாஆ. இந்த முறை சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சுட்டீங்க. ஆனா வழக்கம் போல புரியல. இன்னொரு தடவை சொல்லுங்க ப்ளீஸ்’
‘ஆங்.. இதென்ன போங்கு ஆட்டம் ஆடறீங்க ? பேசறதெல்லாம் தேர்தல் வாக்குறுதி மாதிரி. ஒரு தடவை சொன்னா மறு தடவை சொல்லக் கூடாது. பழமொழிய ரசிக்கணும். கேள்வி கேக்கப்படாதுன்னு சொல்லுவேன்னுதானே நினைச்சீங்க ? அதான் இல்ல..’
‘சார்.. ரொம்ப மிடில. விஷ்ணுபுரமும் கொற்றவையும் ஒரே நாள்ல படிச்சுட்டு, ரெண்டே நாள்ல வெண்முரசுவும் வாசிச்சா மாதிரி இருக்கு. கூடவே ஆமருவிங்கற சங்கி எழுதின ‘நான் இராமானுசன்’ புஸ்தகமும். தலை எல்லாம் சுத்துது சார்.’
‘அது தலை சுத்தல் இல்லீங்க. மேல ஃபேன் சுத்துது. கீழேருந்து பார்த்தா ஃபேன் சுத்தறமாதிரி இருக்கும். ஃபேன்லேர்ந்து பார்த்தா நீங்க சுத்தறமாதிரி தெரிவீங்க. இது தான் ரிலேட்டிவிட்டி விஷன் அப்டீன்னு ஆல்ஃபெரட் ஹிட்ச்காக் சொன்னாருன்னு நான் சொல்லுவேன்னு நினைக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.’
‘தெய்வமே, ஆண்டவரே, ஒரு மீட்டர் தாம்பு கயிறு இருக்குமா ? சுத்தற தலைக்கு கீழ இருக்கற சுத்தாத கழுத்துல மாட்டிக்கிட்டு, சுத்தறமாதிரி தெரியற ஃபேன்லேர்ந்து தொங்கலாம்னு நினைக்கறேன்னு சொல்றதுக்கு முயல்கையில என்னமோ வார்த்தை முட்டுதுங்கறதால நான் அழுது, அதனால நீங்க அழுதுட்டீங்கன்னா என்ன பண்றதுன்னு நினைக்கயில… ஐயோ.. நான் உங்கள மாதிரி பேசறேனே..’
‘கவலைப்படாதீங்க. நம்ம மக்கள் மீதி மையத்துக்கு ரெண்டாவது உறுப்பினரா ஆயிட்டீங்க. வாழ்த்துகள். இந்தாங்க. ஃப்ரீயா ஒரு டார்ச் லைட் வெச்சுக்கோங்க’
பி.கு.: நேர் கோணலில் நடந்தவை கற்பனையே என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைக்கும் நிலையில் இருப்பீர்கள் என்பது தெரியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக எண்ணவில்லை என்று…
–ஆமருவி
28-03-2025
Leave a reply to Ganesh Ayem Perumal Cancel reply