சமீபகாலங்களில் தமிழ் எழுத்தாளர்களின் அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் கேலிக்கூத்தாகவே இருக்கும் என்பதால் அவர்களது கட்டுரைகளை வாசிப்பதில்லை என்கிற கொள்கை கொண்டவனாக ஆகிவிட்டேன். அரசியல் முதிர்ச்சி, நீள் நோக்கு, தீர்க்கதரிசனம், உண்மைப் பார்வை, உலக அரசியல் என்று எதுவும் இல்லாமல், வெற்றுப் பெருமிதங்கள், வறட்டுப் பரப்புரைகள், வெறுப்புப் பிரச்சாரம் மட்டுமே கொண்டிருக்கும் கட்டுரைகளாக இருந்ததே இதற்குக் காரணம்.
இலங்கையைச் சேர்ந்த ‘நிலாந்தன்’ என்னும் பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரைத் தொகுப்பான ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’ என்னும் நூலை எதேச்சையாகக் கண்டெடுத்தவுடன், ‘மற்றுமொரு தமிழ்க் கட்டுரையாளன்’ என்கிற எண்ணம் கொண்டது உண்மை. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து என் பள்ளி நாட்களில் இருந்தே அக்கறையுடன் வாசித்து வந்ததாலும், போராளிகள்–> தீவிரவாதிகள்–> பயங்கரவாதிகள் என்று பிரபாகரன் தனது இயக்கத்தை மாற்றிய வரலாற்றை அணுக்கமாகப் பின்தொடர்ந்து வந்து, அதனால் இலங்கைத் தமிழர்கள் பட்ட அல்லல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியவன் என்பதாலும், மேற்சொன்ன நூலை வாசிக்கத் துவங்கினேன்.

நிலாந்தன் நிஜமாகவே நல்ல வேலை செய்துள்ளார். 2012 முதல் 2016 வரை அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே ‘புலிகளுக்குப் பின்னான தமிழ் அரசியல்’ என்னும் நூல். காலச்சுவடு வெளியீடு.
Geo Politics என்பது தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களுக்குத் தெரியாத பதம். கிசி-கிசு, நிகழ்-அரசியல், வெற்று முழக்கம், வீண் பெருமிதம், பச்சையான ஜாதி வெறுப்பு, இன வாதம், நேரடியான தேசத் துரோகம் என்பதே தமிழகத்தைச் சார்ந்த தமிழ் இதழ்களில் எழுதும் கட்டுரையாளர்களை / இதழியலாளர்களை நான் வகைப்படுத்துவேன். நிலாந்தனின் கட்டுரைகள் தமிழ் நாட்டு வாசனை இல்லாமல் நியாயமாக உள்ளன. பெரிதும் Geo Politics (புவி சார் அரசியல் ), சர்வதேச பொருளியல் முதலியவற்றால் இலங்கையில் ஏற்படும் தாக்கம், வல்லரசுகளும், இந்தியா என்கிற பிராந்திய வல்லரசும் விளையாடும் பகடை ஆட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் காய்களாக இருந்ததை, இருப்பதைப் பல கட்டுரைகளில் சொல்லிச் செல்கிறார்.
தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் உள்ள தீராத வியாதியான ‘மார்க்ஸீயச் சாய்வு’ நிலாந்தனிடம் இல்லையா எனில், ‘இருக்கிறது’ என்பேன். ஆனால், அது அளவுக்கு மீறி ஊழித்தாண்டவம் ஆடவில்லை. தமிழ் நாட்டின் தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள், போலி எனத் தெரிந்தும், வேண்டும் என்றே பிரபாகரனை விதந்தோதுவதும், புலிகளின் வீழ்ச்சி என்பது தமிழர்களின் வீழ்ச்சி என்பது போன்று சித்தரிப்பதும் தங்கள் கடமை என்று வைத்துக்கொண்டுள்ளார்கள். இதற்கு, இதழியல் வெளியில் இன்னும் சுற்றிவரும் கேட்கப்படாத புலிப்பணம் காரணமாக இருக்கலாம் என்பது என் தியரி. நிலாந்தனிடம் இவை இல்லை.
உதாரணமாக, இலங்கையின் நான்காவது, இறுதி, யுத்த முடிவின் காரணத்தை நேர்மையாகக் கையாள்கிறார் நிலாந்தன். பிரபாகரனின் பிடிவாதம், ஆண்டன் பாலசிங்கத்தின் மதியுரையை மதிக்காதது, ரணில்-பிரபா ஒப்பத்தத்தைப் புலிகள் புறக்கணித்து, 2005ம் ஆண்டு தேர்தல்களில் தமிழர்கள் வாக்களிக்க விடாமல் செய்தது என்று பலதையும் நேர்மையாகச் சொல்லிச் செல்கிறார் நிலாந்தன். புத்துணர்ச்சியூட்டும் பார்வை. தமிழ் இதழியல் சாகவில்லை என்பது நல்ல செய்தியே.
முஸ்லிம்களுடன் இலங்கைத் தமிழர்களுக்கான உறவில் பழைய கசப்புகள் உள்ளன என்று சொல்லும் போது, பிரபாகரன் 300 தமிழ் முஸ்லிகளைக் கொன்றதன் வடுவைச் சொல்கிறார் நிலாந்தன் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வகையில் பல கொன்றொழிப்புகளைப் புலிகள் செய்துள்ளனர். சாதாரண கூகுள் தேடல் உங்களுக்கு விடை அளிக்கும்.
நிலாந்தனின் கட்டுரைகளில் வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, ராஜீவ் காந்தி, நட்வர் சிங், ஜே.என்.தீக்ஷித், ஏ.பி.வெங்கடேஸ்வரன் என்று பலர் வந்துசெல்கின்றனர். இவ்வகையிலான பார்வையை எந்தவொரு தமிழ் நாட்டுப் பத்திரிக்கையாளரும் ( சோ ராமசாமி தவிர ) அளித்ததாக நினைவில்லை. எம்.ஜி.ஆர். மட்டும் கண்ணில் படவில்லை.
2009ற்குப் பின்னான ஈழத் தமிழர் பிரச்னையில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் எடுத்த நிலைப்பாடுகள் பற்றி நிலாந்தன் சொல்வது நியாயமே. 2009ல் தமிழர்களின் அழித்தொழிப்பின் போது கருணாநிதி கவிதை வடிவில் கடிதம் எழுதியதைச் சாடுகிறார் இவர். தமிழகப் பத்திரிக்கையாளர் யாரும் செய்யாத செயல் ( சோ தவிர ).
தற்சமயம் ‘மென்சக்தி’ ( soft power ) என்னும் கருதுகோளின் தேவை பற்றி விரிவாக எழுதியுள்ள நிலாந்தன் நாற்றமெடுக்கும் தமிழ்நாட்டுத் தமிழ் இதழாளர்கள் வரிசையில் இலங்கையில் இருந்து வந்த வசந்தமெனத் தோன்றுகிறார், இந்த நூலின் வழியே.
அனைத்துக் கட்டுரைகளும் ஆழமாக உள்ளன என்பதே நிலாந்தனைத் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என்பது என் எண்ணம். ஒருவேளை பாதிக்கப்பட்ட நிலத்தில் இருந்து கவலையுடன் எழுதுவதால் இவ்வகையில் எழுத முடிகிறதோ என்று தோன்றுகிறது.
தமிழ் நாட்டில் காமராஜரைப் போன்ற தீர்க்க தரிசனம் உள்ள ஒருவர் முதல்வராக நீடிக்காததே ஈழப் பிரச்னையில் இத்தனைக் குழப்பங்களுக்கும் காரணமோ என்கிற எண்ணம் உருவானதைத் தடுக்க முடியவில்லை.
பி.கு.: நிலாந்தனின் தற்சமயத்து வேறு எந்த நிலைப்பாடும் அறியேன். அவரது அரசியல் தெரிந்திலேன். இந்த நூலை வாசிக்க இவை எதுவும் தேவையாக இருக்கவில்லை.
நூல் : ‘புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்’. ஆசிரியர்: நிலாந்தன். காலச்சுவடு வெளியீடு. விலை: ரு:325.
புலிகள், இலங்கைப் பிரச்னை குறித்த என் பிற நூல் மதிப்புரைகள் கீழே :
https://amaruvi.in/2015/12/20/இந்தச்-சாவுகளுக்கு-மன்னி
Leave a comment