The side that is not spoken about, generally.

பாருங்கோ.. அமாவாசை பலகாரம் அடை. அப்பறம் வந்து இட்லி, உப்புமா, கொஸ்து பண்ணல்லியான்னு கேக்கப்படாது’ என்கிற டிஸ்க்ளைமர் முன்னரே சொல்லப்பட்டிருந்தாலும், வேலை மிகுதியால் மறந்துவிட்டது.

இலையில் பார்த்தால் அடை. ‘அடடே, மறந்தே போனோமே’ என்று அவியலை எதிர்பார்த்தபடி அடையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால் வந்து சேர்ந்தது திரவ வடிவிலான அவியல் போன்ற ஒன்று. ( தோசை என்கிற வழக்கமான வஸ்து இல்லை என்கிற இன்ப அதிர்ச்சியையும் எழுதியாகவேண்டும் ஸ்வாமி )

மஞ்சள் திரவத்தின் சுவை அவியல் போல் இல்லை. நிறமும் கருமஞ்சள் நிறத்தில். எப்போதோ சாப்பிட்டது போலவே இருக்கவே, ‘இது.. கார்த்தால பண்ணின..’ என்று இழுக்கத் துவங்கினேன்.

‘அடடே, ரொம்ப சமர்த்தாயிட்டேளே. கார்த்தால பண்ணின போர்க்குழம்புதான்’ என்ற பதிலால் நிலைகுலைந்து போனாலும் பதில் சொல்ல முடியவில்லை. வாயில் அடை இருந்த காரணத்தால்.

‘இல்ல.. அடைக்கு அவியல் பண்றது வழக்கம் இல்லியா ? ‘ என்றேன் ஹீன ஸ்வரத்தில்.

‘நன்னாருக்கு.. அதெல்லாம் ஸ்மார்த்தாளாத்துல பண்றது. நம்மாத்துல அவியல் என்னிக்கிப் பண்ணியிருக்கா?’ என்கிற கேள்விக்கு என் பதில் ‘ஆமாமாம். நம்மாத்துல அடை என்னிக்கிப் பண்ணியிருக்கு ? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போல எப்போதும் தோசை, தோசை, தோசை தான் என்று சொல்லலாம் என்று நினைக்க வழி இருக்கிறதா என்று பார்க்கலாமா என்று எண்ணத்துவங்கிய போது..

‘ஏதேது, போனாப் போறதுன்னு அடை பண்ணினா.. அவியல் வேற கேக்கறதா?’ என்று காதில் விழுந்ததா, அப்படித் தோன்றியதா என்று புரியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடைக்கு வெல்லம் தொட்டுக்கொள்ளலாம் என்றால் ‘அப்பா.. வெல்லம்.. சுகர் வந்துடும்’ என்று குமாரர் குறுக்கே நிற்கிறார். அவியலுக்கு நான் அடுத்த ஜென்மத்தில் ஸ்மார்தராகப் பிறக்க வேண்டும் ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் அதற்கும் வழியில்லை. நிற்க.

முன்னர் ஒரு தரம் சப்பாத்தியும் மெந்தியக் குழம்பும் என்கிற ஹிம்சைப் படலம் நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. அதைப்பற்றி கத்தாரில் இருக்கும் என் உறவினரிடம் முறையிட்டேன். அவள் சொனந்து: ‘தோபார். சப்பாத்திக்கு மெந்தியக்குழம்பு எவ்வளவோ மேல். இன்னிக்கி எங்காத்துல பூரிக்கு மெந்தியத் தொகையல் ‘ என்றாள்.

ஆகவே, சபையோரிடம் கேட்டுக்கொள்வது யாதெனில் : அமாவாசைக்குப் பலகாரம் என்ன பண்ணலாம் ? அதற்குத் தொட்டுக்கொள்ளவும் சொல்லிவிடுங்கள் (அடை-மோர்க்குழம்பு காம்பினேஷன் போல் இல்லாமல் ).

–ஆமருவி

26-05-2025

வைகாசி பரணி

One response

  1. harisivan Avatar

    தோசை மிளகாய் பொடி கொஞ்சம் பரவால்லை ஸ்வாமின்.

    அடை, சப்பாத்தி, பூரிக்கு மோர் குழம்பு, வெந்தய‌ குழம்பு/தொகையல்லாம் ரொம்ப தப்பு.

    நீர் மஹான்

    Like

Leave a reply to harisivan Cancel reply