‘கரி’ நாவலைத் தமிழில் எழுதுவதை நிறுத்திவிட்டு, ஆங்கிலத்தில் எழுதலாமா என்று யோசித்து வருகிறேன்.
‘வந்தவர்கள்’ நாவலுக்கு வந்துள்ள விமர்சனங்கள், கடிதங்கள் அனேகமாக ஆங்கிலத்திலேயே உள்ளன என்பதாலும், அத்தனையும் வெளி நாட்டு மின் அஞ்சல்கள் என்பதாலும். தமிழில் எழுதுவதை வாசிக்கும் கடைசித் தலைமுறை உயர்மட்ட பிராம்மண சாதியினரது மின் அஞ்சல்கள் (அ) தொலைபேசிப் பேச்சுகளில் ஈடுபட்டதாலும். அவர்களுக்கு ‘வந்தவர்கள்’ கருப்பொருள் உறுத்துகிறது. ஆகவே நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். சிலர் ‘இதானே நிதர்சனம்’ என்கிறார்கள்.
ஆகவே, அடுத்த தலைமுறையினர் வாசிக்க வேண்டுமெனில், ஆங்கிலத்தில் எழுதுவது ஒன்றே வழி என்று தோன்றுகிறது. இது குறித்து நெருங்கிய நண்பரும் பிரபல ஆங்கில எழுத்தாளருமான ஒருவரிடம் பேசினேன். ‘இப்பவாவது புரிஞ்சுதே’ என்றார். அவர் சொன்ன காரணங்கள் மற்றும் நான் கண்ட காரணங்கள் கீழே:
1. பிராம்மணன் தமிழில் நாவல் எழுதினால் பிராம்மணர்கள் வாசிப்பதில்லை. அவர்கள் அதில் இல்லை. அதிலும் பிராம்மணச் சொல்லாடல்கள் இருப்பின், அனேகமாக விலகிவிடுகிறார்கள்.
2. பிராம்மணர்கள் வாசிப்பில் இருந்து விலகிவிட்டது நிதர்சனம். அனேகமாக மென்பொருள், வங்கி, ஆசிரியர்கள் என்று உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மிகச் சிலரே ( தமிழ் தெரிந்தால்) வாசிக்க முயல்கிறார்கள். இந்த அடுக்கில் உள்ளவர்களில் பெரும்பாலோர் நுகர்வுக் கலாச்சாரத்தில் உழன்று, இலக்கியம் என்பதெல்லாம் வெட்டி வேலை என்பதாகவே நினைக்கிறார்கள். பயின்றுவந்த கல்வியும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம அளிப்பதில்லை. நடுவாந்தர பிராம்மணர்களுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

3. பிராம்மணன் தமிழில் நாவல் எழுதினால், அதிலும் பிராம்மணனின் பிரச்னைகள் குறித்து எழுதினால், பிரசுரிக்க ஓரிரு பிரசுரங்களே உள்ளன. அதிலும் (சுவாசம் தவிர ) மீனமேஷம் பார்த்து, பிறகு சொல்கிறேன் என்று இழுத்தடித்து, பயந்து, இவன் என்ன சொல்வது என்று கோபப்பட்டு என்று பல காரணங்கள், இதை எவன் வாங்குவான் என்று பதிலும் சொல்வதில்லை. காரணம் : முந்தைய காரணமே. இன்னொன்று, தமிழ் எழுத்து உலகில் மட்டுமே நடக்கும் ஒரு வினோதம். அது தான் காரணம் 4.
4. அப்படியே தமிழில் நாவல் வெளியில் வந்தால், பிரசுரம் தினசரிகள், பத்திரிக்கைகள் என்று அனுப்பி வைத்தாலும், யாரும் மதிப்புரை செய்வதில்லை. பதிலே சொல்வதில்லை. பிராம்மண முதலாளிகள் நடத்தும் பத்திரிக்கைகள் என்று அறியப்படுவனவற்றையும் சேர்த்தே சொல்கிறேன். இதில் மாற்றமும் இல்லை. முடிந்தால், வேறு வேலை இல்லை என்றால் கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள் மேற்கோள் காட்டி எழுதும்.
5. தமிழ் தினசரி / இதழ் முதலியவற்றில் மிக உயர்ந்த சிபாரிசு இருந்தால் மதிப்புரை கிடைக்க வாய்ப்புள்ளது. எனக்கு சிபாரிசு செய்ய ஆள் உண்டு. நான் கேட்பதில்லை. தானாக வந்து ஒருவர் தமிழின் மிகப்பெரிய நாளிதழில் சிபாரிசும் செய்தார். அப்படியும் மதிப்புரை வரவில்லை.
5. பிரபல எழுத்தாளர்கள் இவற்றைக் கண்டுகொள்வது இல்லை. வேண்டும் என்றே விலக்குகிறார்கள். நூல் வந்து சேர்ந்தது என்பதைக் கூட சொல்வதில்லை. வந்ததாகவே காட்டிக் கொள்வதில்லை. ‘நான் பிராம்மணனின் நாவல்களை / ஆக்கங்களை வாசிப்பதில்லை. வாசித்தாலும் சொல்லமாட்டேன்’ என்று சொல்வதில்லையே தவிர, மற்றபடி துவேஷம் உச்சம்.
6. வெளி நாட்டில் உள்ள எழுத்தாளர்கள் இந்த வெறுப்புச் சுவருக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் ஒரே கதி தான். பிராம்மண துவேஷம் சர்வ வியாபிபோல் எல்லா நாடுகளிலும் உள்ளது. அவர்கள் நூலை வாசித்திருந்தாலும் மதிப்புரையோ / கூப்பிட்டுப் பேசவோ மாட்டார்கள்.
7. ஸ்மார்த்தர்கள், ஐயங்கார்கள் அனேகமாக ஆங்கிலத்தில் வாசிக்கிறார்கள்.
8. பிராம்மணன் நாவல் / சிறுகதை என்று எழுதினால், பிராம்மணனை இழிவாகப் பேசியோ, பிராம்மணப் பழக்கவழக்கங்களைச் சீண்டியோ, முற்போக்கு என்று இடது சாய்வாக இருந்தால், ‘போனால் போகிறது’ என்று இலக்கிய உலகம் பார்க்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் ஐயங்கார் இலக்கியம் ஒன்றில் இம்மாதிரியான விஷயங்கள் இருந்தன. பரிசுகள் வந்து சேர்ந்தன. இல்லை என்று யாராவது சொன்னால், நான் அந்த நூலின் பெயரை வெளியிடுகிறேன். ( இது ஆங்கிலத்தில் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்).
9. ஆங்கிலத்தில் எழுதினால் மேற்கு உலகில் ஏதாவது பரிசாவது கிடைக்கும்.
10. தமிழ் நாட்டின் அரசு நூலகங்களுக்கு இந்த நூல்களைக் கொண்டு செல்வது பாகிஸ்தானை அஹிம்சை முறையில் திருத்துவது போன்றது. இந்தியாவில் இருந்தபடியே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் நூலகங்களில் நூலை இடம்பெறச் செய்ய வழி உண்டு. கையூட்டு தேவையில்லை.
11. இடது, வலது, நடு செண்டர் என்று எந்த இலக்கிய அமைப்பும் கண்டுகொள்ளாது. இடதுக்கு என்று எழுத்தாளர் கூட்டம், ஊடக வெளிச்சம் உண்டு. நடு செண்டருக்கு என்று ஓரிரு அமைப்புகள் இருக்கலாம். வலதுக்கு என்று அவ்வப்போது கண்ணில் படும் ஈசல் போல் சில அமைப்புகள் இருந்தாலும், யூ-டியூப் பிரபலம், அரசியல் பிரபலம் என்று அவர்களுக்குப் பின்னால் போகுமே தவிர, எழுத்தாளர்களைக் கண்டுகொள்ளாது. நிதர்ஸனம்.
இதெல்லாம் பொய். ஆமருவி சொல்வது தவறு என்று யாராவது சொன்னால், அனேகமாக யாருக்குமே தெரியாத (வேரு ஒரு மொழிபெயர்ப்புக்கு சாஹித்திய விருது பெற்ற) விஜயலட்சுமி சுந்தர்ராஜன் எழுதிய ‘ஆலமரம்’ என்கிற நாவலைப் பற்றி எத்தனை மதிப்புரைகள் வந்துள்ளன என்று சொல்லட்டும். ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த நாவலை அவர் கைகளால் எழுதி, பிரசுரிக்க வழி இல்லாமல் அலைந்ததைத் தமிழ் இலக்கிய உலகம் அறியுமா? அந்த நாவல் அச்சாவதற்கு அவர் பணம் தர வேண்டியிருந்ததை உலகம் நம்புமா ? வக்கீல் சுமதி எழுதிய ‘கல் மண்டபம்’ என்கிற சவுண்டி பிராம்மணர்கள் பற்றிய அசாத்தியமான நாவலுக்கு உரிய மரியாதை கிடைத்ததா என்பதையும் சேர்த்துப்பார்த்துச் சொல்லட்டும். ‘அப்பம் வடை தயிர்சாதம்’ என்கிற ‘நாவலை’ மட்டும் தூக்கிக் கொண்டு வர வேண்டாம். அது பாலகுமாரன் பெயர் பெற்ற பின்னர் வந்தது. அதிலும் அவர் முதல் அத்தியாயத்தில் பாலியல் நிகழ்வுகளைச் சொல்லியே வாசகர்களை உள்ளே இழுத்திருப்பார். ( அது தொடர்கதையாக வந்தது. அது நாவல் என்கிற வகையில் சேராது).
இவை நானறிந்த சில முக்கிய காரணங்கள். இன்னும் பலதும் இருக்கலாம்.
முதல் வரியை வாசிக்கவும்.
(பி.கு.: ‘வந்தவர்கள்’ நாவல் நன்றாக விற்றுள்ளது. பரிசும் பெற்றுள்ளது. ஆனால், மதிப்புரைதான் எந்த அச்சு ஊடகத்திலும் வரவில்லை. ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அடையாறில் வீடு வாங்கியிருக்கலாம் என்று நண்பர் சொல்கிறார் 🙂 )
–ஆமருவி
03-06-2025
Leave a comment