‘உன் முடிவு தப்பு. மாத்திக்கோ’ – பிரபல தமிழ் எழுத்தாளர்.
‘உன் முடிவு சரிதான். வாழ்த்துகள்.’ விருதுகள் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ( முன்னர் தமிழில் எழுதிக் கொண்டிருந்தார் ).
இவர்களுடன் பேசியதில் என் தரப்பு இதோ:
சவுண்டிப் பாப்பானப் பத்தி நாவல் எழுதினா சவுண்டிப் பாப்பான் தான் வாசிக்கணும். ஆனா அவன் வாசிப்பானா ? மாட்டான். ஏன்னா, வாசிக்ககூடியவனா இருந்தா அவன் ஏன் சவுண்டியா நிக்கறான்? மத்த பாப்பானுக்கு அவனப்பத்திக் கவலை இல்ல. ஏன்னா சவுண்டி எப்பயோ ஒரு தரம் வரும். அந்த நேரத்துல அவனோட வாழ்க்கையப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுமா, இல்ல காரியம் முடிஞ்சு அடுத்த வேலையப் பார்க்கணும்னு போவானானா ?
புரோகிதம் பண்றவனப் பத்தி நாவல் எழுதினா, புரோகிதம் பண்றவனா வாசிக்கப்போறான் ? ஒரு வேளை புரோகிதத்துக்குப் போனா, வயத்தக் காயப்போட்டு நூறு, ஐநூறு சம்பாத்திச்சு, மத்தியானம் ரெண்டு மணிக்கு வீட்டுக்குப் போயி ஒரு வாய் சாப்டுட்டு சாயங்காலம் எதாவது பாராயணம் இருக்கான்னு பார்த்து, தொண்டை தண்ணி வத்த கத்தி நூறு, இரு நூறு சம்பாதிப்பான். இத விட்டுட்டு, ‘ப்ராம்மண குடியேற்றம்’ பத்தி நாவல் ஒண்ணு வந்திருக்கு, அவசியம் வாசிச்சு, மதிப்புரை எழுதி, இலக்கிய சேவை பண்ணியே தீரணும்னு அவனுக்கு எதாவது தலை எழுத்தா என்ன ? அடுத்த வேளை சாதத்துக்குப் பார்ப்பானா இலக்கிய சேவைக்கு வருவானா ? ஆக, அவனும் வாசிக்க மாட்டான்.
லௌகீகமா இருக்கற சாதாரண தமிழ் ப்ராம்மணன், மிதி பட்டுண்டு ரயில்ல வீட்டுக்கு வந்து, டிவி முன்னாடி உக்காண்டு சீரியல் பார்த்துட்டு, பெரியவா ஃபோட்டோவ நமஸ்காரம் பண்ணிட்டு வீட்டிக்கு கறிகாய் வாங்கப் போவானா, இல்ல ‘அடடா.. ஒரு ப்ராம்மண எழுத்தாளன் ப்ராம்மணாள்ளாம் ஏன் பரதேசம் போனா’ந்னு நாவல் எழுதியிருக்கான். அவன் எழுதினத விடாம வாசிச்சு, அந்த நாவல்ல ‘காலம்’ ங்கறது எப்படி மறை பொருளா சொல்லப்பட்டிருக்குன்னு பார்த்து, விரிவா ஒரு மதிப்புரை எழுதணும்னு யோசிப்பானா ? ஆக, அவனும் வாசிக்க மாட்டான்.
‘டிஸம்பர் சீஸனோல்லியோ, அட்லாண்டாலேர்ந்து கார்த்தாலதான் வந்தேன். வந்த அன்னிக்கே ரங்காச்சாரி போயி ஒரு கஞ்சீவரம் வாங்கல்லேன்னா ஜன்ம சாபல்யம் கிடைக்காதே’ந்னு சொல்ற, தமிழ் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே பேசறவாள்ளாமா சவுண்டி ப்ராம்மணன் பத்தியும், பஞ்சத்துக்கு இடம் பெயர்ந்த ப்ராம்மணன் பத்தியும் தெரிஞ்சுக்கணும்னு தலையெழுத்தா என்ன ? நாரத கான சபாவுல அறுசுவை கேண்டீன் தக்காளி ரசத்துல மைசூர் போண்டா பக்கம் போவாளா, பி.ஏ.கிருஷ்ணன் ‘புலி நகக் கொன்றை’ பத்தி, சுமதி ‘கல் மண்டபம்’ பத்தி வாசிச்சுப் பேசுவாளா ?
சுஜாதா சொன்னார்,’ஐயங்கார்கள் ஒண்ணு அமெரிக்கால சாஃப்ட்வேர் பண்றா, இல்லேன்னா இங்க தளிகை பண்றா’. யாரா இருந்தாலும் தினமனி, ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமலர் இப்படி எதுலயாவது ஒரு வரி புஸ்தகத்தப் பத்தி வந்தாத்தானே தெரியும் ?
சரி. ப்ராம்மணன் ஏன் பரதேசம் போனான்னு தெரிஞ்சுண்டே ஆகணும்னு இங்க தமிழ் நாட்டுல எதாவது ஸ்காலர்ஷிப்பா கொடுக்கப்போறா ? ப்ராம்மணன் ஒழியணும்னு சொன்னவருக்கு சிலை வெச்சு சேவிச்சுண்டு இருக்கறவாள்ளாம் ‘Brahmin Migration and its Economic and Cultural Consequences to Tamil Nadu’ அப்படீன்னு பிஎச்.டி. தீஸீஸ் பண்றதுக்குப் பணம் கொடுக்கப் போறாளா ? தமிழை வளர்க்கணும்னு ஹார்வார்டுக்கு ஆறு கோடி குடுத்தாளே, என்ன வளர்ந்து கிழிஞ்சுதுன்னு ரெவ்யூ பண்ணித்தா கவர்மெண்ட் ? தமிழ வளர்க்கணும்னா கம்பர் பிறந்த தேரழுந்தூர்ல ஒரு தமிழ் ஆராய்ச்சி நிலையம் கட்டி, தமிழ்க் கவிதைகள் ஆய்வு நிறுவனம் அப்படீன்னு ஏதாவது ஒண்ணு ஏற்படுத்தி, உண்மையா தமிழை வளர்க்கணும். இன்னிக்கி அண்ணாத்துரை முதலமைச்சரா இருந்தா இது நடக்கும். ஏன்னா அவர் வாசிச்சவர். அவருக்கு அப்பறம் வந்த யாருக்காவது இது தோணியிருக்க வேண்டாமா ? இங்கிலாந்துல ஷேக்ஸ்பியர் வாழ்ந்த இடத்த எப்பிடி வெச்சுண்டிருக்கான்னு பாருங்கோ. எதுக்குச் சொல்றேன்னா, இங்க நமக்கு எதப் பத்தியும் கவலை இல்ல. ஏன்னா நமக்கு எதுவும் தெரியறதில்ல. தெரிஞ்சுக்கணும்னு ஆர்வமும் இல்ல.
ப்ராம்மண குடியேற்றம் 200 வருஷமா நடக்கறது. எங்கெல்லாம் நடந்ததுங்கறது பத்தி டாக்டர்.ஹரிப்ரியா நரசிம்மன் + ஃபுல்லர்னு ரெண்டு ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து ஒரு புஸ்தகம் எழுதினா. எந்த தமிழ் நாட்டு லைப்ரரிலயாவது கிடைக்கறதா ? எந்த நாளிதழாவது அதைப்பத்தி எழுதியிருக்கா ? தினமணி, தினமலர் எல்லாத்தையும் சேர்த்துத்தான் சொல்றேன். எங்கயாவது ப்ராம்மண சார்பு தெரிஞ்சுடப்போறதேன்னு தினமணி பார்த்துப் பார்த்து எழுதுவான். தினமலருக்கு இதெல்லாம் வேண்டாம். எப்பவாவது நல்ல கட்டுரைகள் வரும். அவனுக்கு வேண்டியது இன்னிக்கி எது விற்கும் ? என்ன சென்சேஷன் விலை போகும் ? அவ்வளவு தான். தமிழ் ஹிந்து நல்லபடியா வந்தது. ஆனா தடம் மாறி இப்ப எப்பிடி நிக்கறதுன்னு நமக்கே தெரியும். கல்கி, விகடன் எல்லாம் எப்பிடி இருக்குன்னு தெரிஞ்சுக்க பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.
இதெல்லாம் தெரிஞ்சாலும் நாம் யாரும் பேச மாட்டோம். என்ன மாதிரியான பகிஷ்காரம் பண்ணினாலும் நாம இந்தப் பத்திரிக்கைகளத் தூக்கிப் பிடிச்சுண்டு போகணும். ஏன்னா இதெல்லாம் பாப்பாரப் பத்திரிக்கை. ஆனா, பாப்பாரப் பத்திரிக்கை ப்ராம்மண மைக்ரேஷன் பத்தி எதாவது எழுதித்தா ? எதாவது ரிஸர்ச் நடத்தித்தா ? ஒண்ணும் கிடையாது. ஆனாலும் நாம வாய மூடிண்டே இருக்கணும்.
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்கோ. கம்யூனிஸ்ட்ல பல பேர் ப்ராம்மணாளா இருக்காளே ஏன்னு நினைச்சுப் பார்த்தேளா ? இந்தக் கால கம்யூனிஸ்ட்டையும் சேர்த்துத் தான் சொல்றேன். கம்யூனிஸ்ட்னு சொல்லிக்காம, ஆனா கம்யூனிஸ்டா இருகக்றவாளையும் சேர்த்துத் தான் சொல்றேன். இதெல்லாம் ஒரு அறிவார்ந்த சமூகம் யோஜிக்க வேண்டாமா ?
தினமணி, தினமலர், துக்ளக் நு எல்லாத்தையும் வெய்யறயே, உன் புஸ்தகங்களுக்கு அவாளோட ஆதரவு இல்லாமப் போயிடப் போறதுன்னு நீங்க கேகக்றேள். போகட்டுமே. இப்ப மட்டும் என்ன வாழறது ? நடிகர் விஜய் கட்சிக்கு ஆள் சேர்க்கறதுக்கு விகடன் வேலை செஞ்சுது. பத்திரிக்கை வேலைய விட்டுட்டு இவாள்ளாம் ப்ரோக்கர் வேலை பார்க்கறா ? துக்ளக்கையும் சேர்த்துத் தான் சொல்றேன்.

‘கல் மண்டபம்’ நாவலுக்கே வரேன். சவுண்டிப் பாப்பான் கதை. மேல சொன்ன மூணு ப்ராம்மணனும் படிக்க மாட்டான். மத்தவாளுக்கு ப்ராம்மணன் பத்தின பார்வையே தேவை இல்ல. இதுல சவுண்டிப் பாப்பான் எக்கேடு கெட்டா என்ன ? அதைப்பத்தி தினமணி, தினமலர்னு பல பத்திரிக்கைகள்ள வந்தா நாலு பேருக்குத் தெரியும். அத சினிமாவா எடுத்தா காலத்தால அழியாத பதிவா இருக்கும். இதுக்கு இனிமே பாலு மகேந்திரா, மகேந்திரன் இப்படி யாராவது தைரியமான டைரக்டர்கள் வந்தாத் தான் உண்டு. இப்ப இருக்கற நவரச நாயகர்களுக்கு இப்பிடி ஒரு புஸ்தகம் வந்ததே தெரிஞ்சிருக்காது. ஏன்னா, இத எந்த இலக்கிய வட்டத்துலயும் எடுத்துப் பேச ஆம்பளைகள் இல்ல. விஜய லட்சுமி சுந்தர்ராஜன் எழுதின ‘ஆல மரம்’ மாதிரியான 150 வருஷ பீரியட் நாவல் பத்தி எந்தப் பத்திரிக்கைக்காவது அக்கறை இருந்ததா ? அப்படி ஒரு அம்மா எழுதறாங்கன்னே பெரும்பாலான பத்திரிக்கைகளுக்குத் தெரியாது. 85 வயசான அவங்கள வெச்சு இங்க லிட் ஃபெஸ்ட் நடத்த இங்க யாருக்காவது துணிவு இருக்கா ? இதுல ரைட் விங், லெஃப்ட் விங்னு எல்லாக் கண்றாவியும் ஒண்ணுதான். இங்க எல்லாருக்கும் அட்வர்டைஸ்மெண்ட் வேணும். நான் நான் னு பெருமை அடிச்சுக்கணும். யூடியூப்ல பேசறவங்கள இலக்கியக் கூட்டத்துக்கு வரவழைச்சுப் பேசச் சொல்ற சமூகம் சார் இது. இதுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.

விஜய லட்சுமி சுந்தர்ராஜன் எழுதின ‘ஆல மரம்’, சுமதி எழுதின ‘கல் மண்டபம்’, நான் எழுதியிருக்கற ‘வந்தவர்கள்’ – இதெல்லாம் ஆங்கிலத்துல எழுதியிருந்தா பான் இண்டியா ரீச் கிடைச்சிருக்கும். உலக இலக்கிய அரங்குகள்ல யாராவது எடுத்துப் பேசவாவது செஞ்சிருப்பாங்க. அதுக்கப்பறம் அத தமிழ் நாட்டுல எடுத்துப் பார்ப்பாங்க. அத தமிழ்ல மொழிபெயர்க்கலாமான்னு கேட்டு யாராவது ஒரு சிலர் வரலாம். இது தான் தமிழ் பிராம்மண எழுத்தோட தலையெழுத்து. வாசகர்களுக்குப் பிடிச்சிருந்தாலும், புஸ்தகம் வித்தாலும், ப்ராம்மண விஷயங்களத் தமிழ்ல எழுதினா ப்ராம்மணனே வாசிக்க மாட்டான். ஆர்.கே. நாராயணன் எழுத்து மொதல்ல இங்கிலாந்துல வந்தது. அப்பறம் இந்தியாவுல அவர் கால்ல விழுந்தாங்க.
இவ்ளோ சொல்றேளே.. தாம்பிராஸ்னு ஒண்ணு இருக்கே. அதுக்கு இந்த மாதிரி புஸ்தகங்கள் வந்திருக்குன்னு தெரியுமா ? அவ்ளோதான் ப்ராம்மண எழுத்துக்கு, ப்ராம்மணனப் பத்தின ப்ராம்மண எழுத்துக்கு மதிப்பு. Nine yard sarees அப்டீன்னு ஒரு எழுத்து. அதுக்கு சிங்கப்பூர் லிட்டரரி ப்ரைஸ் கிடைச்சிருக்கு. அது இங்கிலீஷ்ல இருக்கு. ப்ராம்மணப் பெண்கள இழித்துப் பேசறது. ஒருவேளை இப்படி எழுதினா ப்ரைஸ் கிடைக்குமோ என்னவோ.
ப்ராம்மண எழுத்து, ப்ராம்மணனப் பத்தின எழுத்து தமிழ்ல வந்தா அத பிரசுரம் பண்ற பதிப்பகத்துக்கு ரொம்ப தைரியம் இருக்குன்னு அர்த்தம். அவ்வளவுதான்.
எழுத்தாளனுக்கு சமூக அக்கறை இருக்கணும். ப்ராம்மண எழுத்தாளன் தான் சார்ந்த சமூகத்தோட அக்கறை இருக்கறவனா இருக்கணும். ஹிந்து சங்கட்டன் வேணும். அதுக்கு சொந்த சமூகத்துல இருக்கற பிரச்னைகள், தீர்வுகள், வரலாறுன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஓடணும்னு அர்த்தம் இல்ல. மொதல்ல இந்த சமூக வரலாற்றை ஆவணப்படுத்துங்கோ. இப்ப இருக்கற மைக்ரேஷன்ல இதெல்லாம் இல்லாமலே ஆயிடும். இப்பிடி ஒரு சமூகம் இருந்தது, இன்னின்ன பிரச்னைகள சந்திச்சது, அரசாங்கம் இப்பிடியெல்லாம் பாரபட்சமா நடந்துண்டா.. அதுனால இவாள்ளாம் இபிடி வெளியேறினா. இது 200-300 வருஷமா நடந்துண்டு இருக்கு. இதப் பதிவு பண்றதுக்குத்தமிழ் எழுத்தாளர்கள்ல ப்ராம்மண எழுத்தாளர்கள் பண்ணல்லேன்னா யார் பண்றது ? ஆனா, தமிழ்ல எழுதினா கண்டுக்க மாட்டான். அதுனால இங்கிலீஷ் போக வேண்டியது தான். நூறு வருஷத்து அப்பறம் யாராவது ஒரு ஆந்த்ரொபாலஜிஸ்ட் இதை எடுத்து வாசிப்பான். ப்ராம்மண குடியேற்றம் பத்தி, சவுண்டி ப்ராம்மணன் பத்தி அன்னிக்கு ஒரு ஆத்தெண்டிக் டாக்குமெண்டா இருக்கும். ஆனா அது இங்கிலீஷ்ல இருந்தாத்தான் முடியும்.
அதுனாலதான் நான் என் முடிவ மாத்திக்கறதா இல்ல.
Leave a comment