The side that is not spoken about, generally.

எல்லாம் இந்த ம. வெங்கடேசனைச் சொல்ல வேண்டும். விவேகானந்தா காலேஜில் படிப்பாராம், ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைவாராம், அறிவை வளர்த்துக் கொண்டு நமது பகுத்தறிவுத் தலைவர்களின் தண்டவாளங்களை வெளியில் எடுத்து விடுவாராம்.

ஏதோ அரசல் புரசலாகச் சொல்லிச் சென்றால் பரவாயில்லை. இலைமறை காய் மறையாகச் சொல்லிச் செல்ல வேண்டியது தானே. ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாட்டாராம். ராமசாமி நாயக்கரின் தத்துவங்களை அப்படியே ஸ்பஷ்டமாக, ஆதாரங்களோடு சொல்லி, பிம்பத்தை உடைத்துப் பெயர் எடுப்பாராம். இந்த ஆர்.எஸ்.எஸ், விவேகானந்தா காலேஜினால் விளைந்த ம.வெ. என்கிற மனிதனால் இன்று எத்தனை திராவிடக் கோட்டைகள் உடையப் போகிறதோ தெரியவில்லை.

சு.ப. வீரபாண்டியன் செட்டியார் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்? காந்தி – அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் நடைபெறுவதற்கு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதைப் பற்றித் தந்தி அடித்தார். காந்தி என்கிற ஒற்றை மனிதனின் உயிர் வேண்டுமா அல்லது பத்து கோடி பட்டியல் இன மக்களின் நிலை உயர வேண்டுமா என்று ராமசாமி நாயக்கர் தந்தி அடித்தார் என்று சு.ப. வீரபாண்டியன் செட்டியார் எழுதினார். செட்டியார் கண்டதையும் பேசுவார், எழுதுவார் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தானே? இதைக் கடந்து போவதுதானே பகுத்தறிவு? ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ் பெற்ற குழந்தை ம.வெங்கடேசன் அதைத் தோண்டுவாராம். ராமசாமி நாயக்கர் தந்தி அடித்ததாகச் சொல்லப்படும் தேதியில் உலகில் எங்கே இருந்தார், அந்தச் சமயத்தில் தந்தி பற்றிக் ‘குடியரசு’ முதலிய ஏடுகள் எதையும் எழுதவில்லை என்று தேவை இல்லாமல் ஆராய்ச்சி செய்து, சு.ப.வீரபாண்டியன் செட்டியாரின் முகத்திரையைக் கிழிப்பாராம். இது தேவையா? செட்டியார் என்றைக்காவது உண்மை பேசியிருக்கிறாரா என்று விட்டுவிட்டுப் போவீர்களா…

அது தான் போகட்டும் என்றால்.. வ.உ.சி. கப்பல் வாங்க ராமசாமி நாயக்கர் ரூ 5000 பணம் கொடுத்தார் என்று  வீரமணி என்று பெயரை மாற்றிக்கொண்டுள்ள சாரங்கபாணிக் கோனார் சொல்லியுள்ளாராம். சரி ‘யுனெஸ்கோ பார்வையில் பெரியார்’ என்கிற தலகாணி அளவுப் புத்தகம் எழுதியவர் கோனார். இல்லாத யுனெஸ்கோ விருது பற்றி இவ்வளவு பெரிய புனைவு எழுதிய சா.கோனார், வ.உ.சி. விஷயத்திலும் அப்படிச் செய்திருப்பார் என்று விட்டுவிட்டுச் செல்வீர்களா… அதை விட்டுவிட்டு, ராமசாமி நாயக்கர் கப்பல் வாங்கப் பணம் கொடுக்கவில்லை, கோனார் பொய் சொல்கிறார் என்று ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் யாராலுமே மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரங்களை அடுக்கிக் கொண்டே போனால், சமூக நீதியை நிலை நிறுத்துவதையே தன் முழு நேர வேலையாகச் செய்யும் கோனார்,  ‘திராவிட’ மாடல் ஆட்சியைப புகழ்ந்து பேசுவாரா, இல்லை ம. வெங்கடேசன் காட்டிய ஆதாரங்களை மறுப்பாரா? ஒரு மனுஷன் என்னதான்யா செய்வார் ?

சா. கோனாரைக் கிண்டல் செய்வது கிடக்கட்டும் சார்… சரி ம.வெ. எழுதிவிட்டார். இதோடு விட்டுவிடுவார் என்றால், ‘காமராஜர் ஆர்.எஸ்.எஸ்ஸைக் குற்றம்  சாட்டினாரா?’ என்கிற கட்டுரை எதுக்கு? காலங்காலமாக ‘காமராஜர் வீட்டை ஆர்.எஸ்.எஸ். கொளுத்தியது’ என்று சொல்லிக் சொல்லியே அதை உண்மை என்று ஆக்கக் காங்கிரஸ் கட்சி எத்தனை பாடுபட்டுள்ளது? இத்தனை வருட உழைப்பை ஒரே கட்டுரையில், ஆதாரத்தோடு போட்டு உடைத்தால், பாவப்பட்ட காங்கிரஸ் என்னதான் செய்யும்? எங்கள் மீது பரிதாபம் வேண்டாமா ம.வெ. அவர்களே?

இப்பொழுதெல்லாம் யாரும் எதையும் எழுதுவதே இல்லை. எழுதினாலும் படிப்பவரும் இல்லை. ஏன் இந்தக் கட்டுரைகளையாவது யாராவது படிக்கப் போகிறார்களா என்ன? ஏதாவது ரீல்ஸ் பார்த்துப் புளகாங்கிதம் அடைவார்களா இல்லை எழுதுவது, வாசிப்பது என்று இருப்பார்களா? அப்படியான ‘திராவிட’ ஆட்சிக் காலத்தில், ‘ராமசாமி நாயக்கர்தான் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தார்’ என்று திக சொல்வதையும், அதைப் பற்றி முன்னால் ‘திராவிட’ முதல்வர் ஆட்சியில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்  பேசிப் புளகாங்கிதம் அடைந்ததைப் பார்த்து ம.வெ.க்கு என்ன வந்தது? ராமசாமி நாயக்கர் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவரவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிறுவியே ஆக வேண்டுமா ? திமுகவிடம் 25 கோடி வாங்கி வயிறு வளர்த்து வரும் எங்கள் வயிற்றில் அடிக்கலாமா சார் ? கொஞ்சம் தாட்சண்யம் வேண்டாமா ?

சரி அதோடு விட்டாரா ம.வெ.? பொ.யு. 1700களில் வாழ்ந்த மதுரை ராணி மங்கம்மாள் காலத்திலேயே எழுத்துச் சீர்திருத்தம் இருந்தது என்பதை நிறுவியே ஆக வேண்டுமா? வீரமாமுனிவர்,  அதற்குப் பிறகு யாரெல்லாம் எந்தத் தீர்மானங்களில் எல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிச் சொல்லியுள்ளார்கள் என்று ஆதாரப்பூர்வமாக, சான்றுகளுடன் காட்டியே தீருவது என்று ஏதாவது வேண்டுதலா சுவாமி? உங்கள் ஆராய்ச்சிக்கெல்லாம் அளவே கிடையாதா ஐயா? ஏதோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் ‘திராவிட’ மாடலில் வயிறு வளர்த்து வருகிறோம். இது கூட உங்களுக்குப் பொறுக்கவில்லையே ம.வெ. அவர்களே?

எல்லாம் போகட்டும், பெண்களுக்குச்  சொத்துரிமை வழக்கில் ராமசாமி நாயக்கர் போட்ட தீர்மானமே காரணம் என்கிற புரட்டையாவது விட்டுவைக்கக் கூடாதா? நாயக்கருக்கு முன்னாலேயே சிலர் சொல்லியுள்ளார்கள் என்று சொல்லிச் சென்றிருந்தால் கூட எங்களுக்கும் கௌரவமாக இருந்திருக்கும். ஆனால் ஓரேயடியாக 1815ற்குப் போய், ராஜாராம் மோகன் ராயைத் தொட்டு – அங்கிருந்து கி.பி 20ம் நூற்றாண்டு வரை யாரெல்லாம் பெண்கள் சொத்துரிமை பற்றிக் கேட்டுள்ளார் என்று ஒரு ‘லிஸ்ட்’ போட்டு, இப்படிச் சம்மட்டி அடி அடித்தால் ‘திராவிட’ப் பொய்களிலேயே வயிறு வளர்க்கும் எங்களுக்கும் அடுத்த வேளை சோற்றுக்கு என்ன சார் செய்வது? ரொம்ப ஓவராப் போறீங்க ம.வெ. அடிக்காதீங்க… வயிற்றுல அடிக்காதீங்க…

வ.உ.சி கப்பல் கம்பெனி தொடர்பான கடும் கடனில் இருந்தபோது, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தமிழர்கள் அனுப்பிய தொகையைக் காந்தி வ.உ.சி.யிடம் தரவில்லை என்கிற வரலாற்றுப் புரட்டையும் கூட இத்தனை தெளிவாகத் தான் சொல்லியேயாக வேண்டுமா என்ன? ‘காந்தி ரூ. 5000 பணத்தைச் சுருட்டினார்’ என்று இத்தனைக்காலம் நாங்கள் புரட்டியதெல்லாம் வீணானது என்கிற கவலை ஒருபுறம். சரி அதை அதோடு விட்டுவிட்டீர்களா ம.வெ.? அது ரூ 5000 இல்லை என்பதையும், அது ரூ 347 மற்றும் 12 அணா என்று எப்படி ஸ்தாபித்து ஆக வேண்டுமா?

அதையும் காந்தியே வ.உ.சி.யைக் கேட்டு, அவருக்கும் பணம் வந்து சேரவில்லை என்பதை அறிந்து கொண்டு, வ.உ.சி. வேண்டாம் என்று சொன்ன பிறகும் காந்தி அவருக்கு ரூ 347-12 அணாவை அனுப்ப வைத்ததார் என்று அசைக்க முடியாத ஆதாரங்களோடு நிறுவி,  ‘திராவிட’ ஸ்டாக்குகளான எங்களை இவ்வளவு அசிங்கப்படுத்த வேண்டுமோ ம.வெ. அவர்களே?

எல்லாம் சரி. பச்சையப்பன் கல்லூரியில் பட்டியல் இனத்தவர் படிப்பதற்குக் காரணம் ராமசாமி நாயக்கர்தான் என்று நாங்கள் செல்வதால் உங்களுக்கு என்ன வந்தது? நாயக்கருக்கு முன்னால் இத்தனை பேர்கள் கேட்டார்கள், ஒரு இஸ்லாமியர் தீர்மானம் இயற்றினார், கோர்ட் கேட்டது, என்று எங்கள் வரலாற்று நாயக்கரைத் துவைத்துப் போட்டு விட்டீர்களே… எந்தப் பொய்யையுமே சொல்லக் கூடாது என்றால், நாங்கள் எல்லாம் என்னதான் செய்வது? எதெற்கெடுத்தாலும் ஆதாரம் கொடுத்தால் எங்கள் பிழைப்பு என்னவாவது?

எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம். ஆனால் இருப்பதிலேயே ஆகச் சிறந்த உருட்டான ‘தாழ்த்தப்பட்டவரை நாயக்கர்தான், திராவிட இயக்கம் தான் முதன் முதலில் அமைச்சராக்கியத’ என்கிற எங்களது பரம்பரை உருட்டை இப்படிச் சல்லிச் சல்லியாக உடைத்து ஆதாரத்திற்கு மேல் ஆதாரமாகக் கொடுத்தால் நாங்கள் வாழ்வதா இல்லை மெரினா கடற்கரையில் பேனா சிலைக்குப் பக்கத்தில் கடலில் மூழ்குவதா?

ஆனால் ஒன்று: ‘பாரதியின் உயிர்மூச்சு தமிழா? ஆரியமா?’ என்று உங்களை ஒரு கட்டுரை எழுத வைத்தோம் பாருங்கள்… அதுவே எங்களுக்கு வெற்றி. பாரதியார் சம்ஸ்க்ருதம், தமிழ் பற்றிச் சொன்னதையும் நாயக்கர் ஹிந்தி, திருவள்ளுவர், கம்பன் பற்றிச் சொன்னதையும் ஆதாரங்களுடன் காட்டிப் பாரதியாரின் ‘உயிர் மூச்சு தமிழே’ என்று நீங்கள் ஆதாரங்களுடன் நிறுவியது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால், அந்த முயற்சியில், பாரதியாரின் தரத்திற்கு எங்கள் ராமசாமி நாயக்கரை ஆக்க நீங்கள் முயற்சி செய்யாவிட்டாலும், பாரதியின் சொற்களுக்கு அடுத்தபடியாக ராமசாமி நாயக்கர் சொற்களைக் காட்டியுள்ளீர்களே… அது மட்டும் மகிழ்ச்சியே.

ஏனெனில், பாரதியார் கால் தூசிக்குக் கூட சமானம் ஆகாத ஒரு மானுடனை, பாரதி  வரிசையில் கொண்டு வந்தீர்களே, அதுவே எங்களுக்கு வெற்றிதான். 

புஸ்தகம் எழுதிவிட்டீர்கள். அதை யாராவது படிப்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். ஆனால், இந்த ஆமருவி என்கிற கிறுக்கன், தான் படித்த புஸ்தகத்தைப் பற்றி எழுதியே தீருவேன் என்று நிற்பான். அவன் எழுதியதையும் படித்துவிட்டு எங்களைச் சில வேலையில்லாத ‘தேசிய’ ஆசாமிகள் சொல்மாரி பொழிவார்கள். எல்லாக் கண்றாவியையும் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் எங்களைத் தள்ளியுள்ளதற்காக நாயக்கரை வைவதா, உங்களை வைவதா, ஆமருவியை வைவதா என்று கொஞ்சம் குழப்பமாகத்தான் உள்ளது. எல்லாம் எங்கள் தலையெழுத்து. மன்னிக்கவும். தலையெழுத்து என்பது பஹுத்-அறிவா என்று பார்த்துவிட்டு வருகிறேன்.

இப்படிக்கு,  

எத்தனை அடித்தாலும் புத்தி வராத,

 ‘திராவிட’ புரட்டர்கள்.

Leave a comment