கம்பன் பார்வைகள் – மலை, மழை கடவுளர்கள்

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை.

போங்க சார். ஆத்மாங்கறீங்க. உயிர் உள்ளதுக்கு மட்டும் இல்ல, உயிர் இல்லாததுக்கும் ஆத்மா இருக்குன்னு நம்பணும்கறீங்க. கொஞ்சம் கூட பகுத்தறிவா இல்லையே..

விசிட்டாத்வைதம் சொல்லும் ஜீவாத்ம, பரமாத்ம, ஜடப்பொருள் ஆகிய மூன்றும் உண்மைகளே என்பதை ஒப்புக்கொள்ள சிறிது பண்பாட்டுப் பயிற்சி தேவை. கம்பன் வழியில் முயன்று பார்ப்போம். 

கோசல நாட்டில் மழை வளம் எப்படி உள்ளது என்பதைக் கம்பன் சொல்வது : 

பம்பி மேகம் பரந்தது, பானுவால்

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;

அம்பின் ஆற்றதும் என்று அகன்குன்றின்மேல்

இம்பர் வாரி எழுந்தது போன்றதே

சிவபெருமானுக்கு மாமன் முறை கொண்ட இமயமலை, கதிரவனின் வெப்பக் கதிர்களால் அனல் போல் ஆனது என்று மேகங்கள் கருதின. எனவே இமயமலையைக் குளிர்விக்க எண்ணி, மலையின் மீது கடலைப் போல் விரிந்து நின்றன என்கிறான் கம்பன். 

கங்கை பிறந்த இடம் இமயமலை. பொதுவாகவே பிறந்த இடத்தைத் தந்தையாகவும், சென்று சேரும் இடத்தைக் கணவனாகவும் கொள்ளுதல் மரபு. அவ்வகையில் இமயமலை கங்கையின் தந்தை. 

கங்கையைத் தலையில் கொண்டவன் சிவபெருமான். ஆகவே இமயமலை சிவபெருமானின் மாமனார் ( மாமன்) நிலை பெறுகிறது. 

மனைவி மீது உள்ள மோகத்தால், மருமகன் மாமனைத் தாங்கிப் பிடிப்பது என்கிற உலகியல் நிலையின் படி பார்த்தால், இமயமலை சூரியனின் வெப்பத்தால் உஷ்ணம் அடைவதைக் கண்ட மருமகன் சிவபெருமான், உடனே அதைத் தணிக்க எண்ணி இமய மலை மீது வெண்மேகங்கள் உருவில் கடல் போல் விரிந்தான் என்று வியாக்கியானம் விரிகிறது. 

உடல் முழுதும் வெண்ணீறு அணிந்தவன் சிவபெருமான். ஆகவே வெண்மேகங்கள் சிவனைக் குறிக்கின்றன. ஆனால், வெண்மேகங்களால் குளிர்விக்க இயலாது. அவை கரிய நிறம் உடையனவாக வேண்டும். அதாவது நீர் கொண்டனவாக இருக்க வேண்டும். நீர் உண்ட மேகங்கள்  கரிய நிறம் கொண்டு,  திருமாலின் நிறத்தை  ஒத்து நிற்கும். ‘கார் மேனிச் செங்கண்’ ,’ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து’ – ஆண்டாள் வரிகள் நினைவிற்கு வரலாம்.

அருள் மற்றும் வள்ளல் தன்மை மழை வடிவில் காட்டப்படுகிறது. கருமேகம் மழையாகப் பொழிந்தபின் இல்லாமல் ஆகும். தனக்கென நீரை வைத்துக் கொள்ளாமல் முழுவதும் கொட்டித் தீர்த்துவிடும். நாராயணன் அவ்வகையானவன் என்பதைக் குறிக்கும் விதமாக இருப்பதாக வியாக்கியானம்.

மழை எவ்வாறு பொழிய வேண்டும் என்பதை ஆண்டாள் ‘ வாழ உலகினில் பெய்திடாய்’ என்று சொல்கிறாள். உலகம் உய்யுமாறு மழை வேண்டும் என்கிறாள் ‘ஆழி மழைக் கண்ணா’ பாசுரத்தில். 

அழிக்கும் கடவுள் சிவ பெருமான். அவன் மழையாகப் பொழியாத வெண்மேகமாக உள்ளான். காக்கும் கடவுள் திருமால். அவன் கரிய மேகமாகக் காட்டப்படுகிறான். 

ஆனால், மேகங்கள் ஒன்றே. அவை வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு உருவம் கொள்கின்றன. வெண்மேகம் கரிய மேகமாக ஆகிறது. அவற்றைப் போன்றே, பரப்பிரும்மம் சிவபெருமான் உருவில் அழித்தல் தொழிலையும், திருமால் உருவில் காத்தல் தொழிலையும் செய்கின்றது. 

‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’ என்னும் ஆதி வாக்கியம் இவ்விடத்தில் நோக்கத்தக்கது.

‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்னும் ஆழ்வார் பாசுரத்தையும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கின் சுவை பெருகும். 

முதல் வரியை மீண்டும் வாசியுங்கள்.

கம்பன் பார்வைகள் – கவிஞர்களின் ஒருமித்த தரிசனம்

கம்பன் பார்வைகள் – கவிஞர்களின் ஒருமித்த தரிசனம்

கம்பர் ஆண்டாளின் திருப்பாவையை வாசித்திருக்க வாய்ப்புள்ளது. ஆண்டாளின் திருப்பாவை மட்டுமல்ல, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் முதலியோரின் பாசுரங்களிலும் ஆழங்கால் பட்டவராகவே கம்பர் திகழ்கிறார். 

பால காண்டத்தின் ஆற்றுப் படலத்தில் இரண்டாவது பாடலைக் கவனியுங்கள். 

நீற ணிந்த கடவுள் நிறத்தவான் 

ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்

சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்

வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே.

கோசல நாட்டில் உள்ள மேகம் என்ன செய்கிறது என்பதைக் கம்பர் சொல்வது:

மேகம் செம்மை நிறம் உடையதாக இருக்கிறதாம். அது, திருநீறு அணிந்த சிவபெருமானின் செம்மை நிறத்தைப் போன்று உள்ளதாம். அந்த மேகம், வான் வழியாகச் சென்று கடலை அடைந்து, அதன் நீரை முகர்ந்து கொள்கிறதாம். அவ்வாறு முகர்ந்தபின் அது கருமை நிறம் கொண்டதாக மாறி விடுகிறதாம். அது சந்தனத்தால் ஆன சேற்றைத் தனது தனங்களில் பூசிக்கொண்டுள்ள திருமகளைத் தன் மார்பில் கொண்ட நாராயணனின் நிறத்தை ஒத்திருக்கிறதாம்.

கம்பனின் இந்தப் பாடல் மூலம் கோசல நாட்டில் மழை வளம் மிகுந்து இருந்ததை நாம் உணர முடிகிறது. 

ஒரு மேகம் கடலில் இருந்து நீரை முகர்ந்துகொண்டு மழை பொழிவிக்கிறது என்பதை ஆண்டாளும் தன் பாசுரத்தில் சுட்டியுள்ளது நினைவிருக்கலாம். 

‘ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு, முகர்ந்து, கொடார்த்து ஏரி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து

பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்..’ 

இந்தப் பாசுரத்தில் ஆண்டாளும் மேகத்தை நாராயணனின் நிறத்துடன் ஒப்பிடுகிறாள். மழை உருவாகும் விதத்தையும் விவரிக்கிறாள். 

அறிவியல் கருத்து மட்டுமின்றி, உவமையும் ஒன்றாக இருப்பதை குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி உள்ள இந்த இரு பாடல்களும் உணர்த்துகின்றன. 

அன்னாளைய அறிவியல் அறிவு கவிஞர்களுக்கும் கூட இருந்ததை இதனால் உணர முடிகிறது. 

அது மட்டும் அல்லாமல், கவிஞர்கள் மனதில் இயற்கை நிகழ்வுகளில் கூட கடவுளர்களே  தென்பட்டுள்ளது தெரிகிறது. 

பாரதிதாசன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழு கடல் அவள் வண்ணமடா’ என்று உலகம் முழுவதும் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறான். பாரதி இன்னும் ஒரு படி மேலே சென்று ‘ தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா’ என்று தீயின் சூட்டிலும் இறை நிலையைக் காண்கிறான். இயற்கையும் தானும் ஒன்று என்று உணர்ந்த பரிபூரண அத்வைத நிலை இது.

இப்படியான மஹான்கள் நடந்து சென்ற மண் நம்முடைய பாரத மண் என்பதை நினைக்கையில் எழும் உணர்வெழுச்சிக்கு எல்லை உண்டோ ?

#கம்பன் #கம்பன்சுவை #தேரழுந்தூர் #கம்பராமாயணம்

கம்பன் பார்வைகள் – கதையின் தரிசனம்

கம்பராமாயணம் சில பார்வைகள்.
பாலகாண்டம் ஆற்றுப் படலம். பாடல் 13.

ஒரு நூல் எழுதும் போது, அதன் தரிசனம், பார்வை, அது அளிக்கும் இலக்கு யாது என்பதை அதை எழுதுபவன் உணர்ந்திருக்க வேண்டும். கதையின் ஓட்டத்தில் அதை விட்டு அகலாமல் இருக்க வேண்டும். நாவல் வடிவில் இருந்தாலும், கிளைக்கதைகள் இருப்பினும், முதன்மைக் கதையின் தரிசனம் கெடாமல் இருக்க வேண்டும்.

அனேகமாக, அந்த மைய தரிசனம் கதையின் முதலில் வலியுறுத்தப்பட்டிருக்கும். ஏதோ ஒரு நிகழ்வின் மூலமாகவோ, அந்த மைய தரிசனத்திற்கு முரணான பார்வைகளின் மூலமாகவோ சொல்லப்பட்டு, அதன் பின்னர் அத்தரிசனம் நோக்கிய தள்ளல் இருந்திருக்கும்.

கம்பராமாயணத்தில் தன் கதையின் மைய ஓட்டத்தைக் கம்பன் பாலகண்டம் ஆற்றுப் படலத்தின் முதலாவது பாடலில் சொல்கிறான்.

பாடல் இதோ :

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

13, ஆற்றுப்படலம், பால காண்டம், கம்ப ராமாயணம்

மனிதர்கள் தவறு செய்வதற்கு ஐம்புலன்கள் காரணம். ஐம்புலங்கள் வழியாக ஏற்படும் நுகர்ச்சி, அதீத ஆசைகள் என்பனவால் தவறுகள் நிகழ்கின்றன. ஆனால், கோசல நாட்டில் ஓடும் சரயு நதிக்கரையில் அவ்வாறு நிகழ்வதில்லையாம்.

மனிதர்களின் ஐம்புல நுகர்ச்சி வழியான குற்ற எண்ணங்கள் என்னும் அம்புகள் இல்லாததால் கோசல நாட்டில் வாழ்ந்த, குற்றமற்றவர்களும், அணிகலன்களை அணிந்தவர்களுமான பெண்கள் மீதான தவறான பார்வை இல்லாதவர்களாக ஆண்கள் வாழ்ந்தனர். அவ்வகையான எண்ணங்கள் யார்க்குமே இல்லை என்பதால், கோசல நாடே தடம் புரண்டு போகாத நிலையில் இருந்தது.

மக்களின் எண்ணங்கள் சரியாக இருக்குமெனில், நாட்டின் போக்கும் சரியாகவே இருக்கும்.

மக்களின் எண்ணங்கள் சரியாக இருந்ததெப்படி ?

பிறன் மனை நோக்காப் பேராண்மை கொண்ட இராமன் பிறக்கப்போகிற நாடாக இருப்பதால், கோசல நாட்டின் நிலை ‘பூசலம்பு நெறியின் புறம் செலாக் கோசலம்’ என்கிறார் கம்பர். தசரதனுக்குப் பல மனைவியர் இருந்தனர் எனினும், கம்பன் இராமனையே தன் உதாரண புருஷனாகக் கொண்டு இராமாவதாரம் இயற்றினான் என்பதால், இராமனின் இரு-மாந்தரை-நோக்காக் கொள்கை கொண்டே இந்தப் பாடல் இயற்றினான் என்று கொள்ள வாய்ப்புள்ளது.

‘யதா ராஜா ததா ப்ரஜா’ என்பதை ஒப்பு நோக்கலாம்.

ஐம்புலன்கள் வழியாகவே துன்பம், தீய எண்ணங்கள் தோன்றும், அவற்றில் இருந்து என்னைக் காப்பாற்று என்று திருமங்கையாழ்வாரும் சொல்கிறார்.

‘உடனின்று ஐவர் என்னுள் புகுந்து, ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்’,

‘பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்’

அவ்வப்போது கம்பனின் மற்ற பாடல்களையும் அனுபவிப்போம்.

-ஆமருவி

தேரழுந்தூர் கம்பர் விழா நிகழ்வுகள் 2023

விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன்.

சென்ற ஆண்டு அக்டோபர் இறுதியில் தேரழுந்தூர் கம்பர் மேடு குறித்து ஓர் காணொளி வெளியிட்டிருந்தேன். கம்பர் மேட்டின் தற்போதைய நிலை, மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம், மாநில அரசு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த அளித்துள்ள கோடிகள், தமிழகத்தில் தமிழ் வாழ்ந்த, தேரழுந்தூரில் உள்ள கம்பர் வாழ்ந்த கம்பர் மேடு பகுதியின் சீரழிந்த நிலை என்று பலதையும் சொல்லி வருத்தப்பட்டிருந்தேன்.

நண்பர் கண்ணன் சேஷாத்ரி உடனே தொடர்பு கொண்டார். ‘இந்த ஆண்டு கம்பர் விழா செய்யலாமா, என்ன செய்யணும்?’ என்று கேட்டார். பெரும் பொருட்செலவு ஆகும் விஷயம் அது என்று அறிந்திருந்தேன். ஆதலால் சற்று தயக்கத்துடன் ‘பண்ணலாம். ஆனா..’ என்று பின்வாங்கிப் பேசியிருந்தேன்.

கண்ணன் புதுக்கோட்டை கம்பன் கழகத்தைத் தொடர்புகொண்டார். அதன் செயலர் திரு.சம்பத்குமார் அவர்கள் தேரழுந்தூர் கம்பர் கழகத்தின் ஜானகிராமனைத் தொடர்புகொண்டு இரு கழகங்களும் இணைந்து விழா செய்யலாமா என்று ஆராய்ந்தார்.

பின்னர் சம்பத்குமார், கண்ணன், பாரதி ( புதுகை கம்பன் கழகக் கூடுதல் செயலாளர் ) மூவரும் என்னுடன் கான்ஃபரன்ஸ் முறையில் பேசினர். ‘உங்க காணொளி பார்த்தேன். நீங்க என்ன செய்யணும்னு நினைக்கறீங்க?’ என்று வெளிப்படையாகவே கேட்டார் சம்பத்குமார்.

திடீரென்று  2023 ஜனவரி 7,8 வார இறுதி விடுமுறையில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம்.

பின்னர் பல தொலைபேசி காஃபரன்ஸ்கள். ஒருமுறை தேரழுந்தூர் சென்று இடங்களைப் பார்வையிடலாம் என்று முடிவானது.  ஆனால், இரு பெரும் புயல்கள் வந்தன. பயணம் ஒத்திப்போடப்பட்டது. 

நவம்பர் மாத இறுதியில் சம்பத்குமார் மற்றும் பாரதியுடன் தேரழுந்தூர் சென்றேன். கம்பர் மேடு, கம்பர் கோட்டம் முதலியனவற்றைக் கண்டு விழா எவ்விடத்தில், எங்ஙனம் நடத்துவது என்று எங்கள் வீட்டில் சந்தித்துப் பேசினோம். ஜானகிராமன் ஊரில் பெரிய விழா நடத்துவதில் உள்ள நிதர்சனச் சிக்கல்களைத் தெரியப்படுத்தினார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் அரங்கராசன் இருந்து ஆலோசனைகளை வழங்கினார். மயிலாடுதுறை தருமையாதீனக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் திருமது. முத்துலட்சுமி அவர்கள் கிராமத்தில் நடத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்களைச் சொல்லி நெறிப்படுத்தினார்.

பின்னர் விழா வேலைகள் மும்முரமாகத் துவங்கின. வாட்ஸாப் குழு துவங்கப்பட்டு, நாங்கள் ஐவரும் அடிக்கடி கலந்துரையாடினோம். 

யார் யாருக்கு என்னென்ன வேலைகள் என்பதைப் பகிர்ந்து கொண்டோம். என்னென்ன நிகழ்வுகள் இருக்க வேண்டும், அவற்றிற்குத் தகுதியானவர்கள் யாவர் என்பதைப் பலமுறை பேசி முடிவெடுத்தோம். 

நாங்கள் தேர்வு செய்த சிலர் வரமுடியாமல் ஆனதால் அழைப்பிதழ் அச்சடிக்கும் வேலை தடைப்பட்டது. நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், வேலைகள் ஸ்தம்பித்தன. 

அதே நேரம் சம்பத்குமார் அவர்கள் அயராமல் பணியாற்றி, மாற்றுப் பேச்சாளர்கள், விருந்தினர்கள் என்று கொடுத்துக்கொண்டே இருந்தார். 

இதற்கிடையில் பணிச்சுமை, உறவினர் உடல் நலக் குறைவு என்று பல சிக்கல்கள். 

சிங்கப்பூரில் இருந்து ஜோதி மாணிக்கவாசகம், தி.ரா. வரதராஜன், கண்ணன், ராஜா ராமச்சந்திரன், அமெரிக்காவில் இருந்து கிருஷ்ணன் சேஷசாயி, சென்னை டிரேடிங் ராமமூர்த்தி, புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் தலைவர் திரு.ச.ராமச்சந்திரன் மற்றும் ‘கம்பன் பாக்களின் அடிமை’ என்று மட்டுமே தன்னைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கொடையாளர் உட்பட பலர் நிதியுதவி அளித்துள்ளனர். தேரழுந்தூர், மயிலாடுதுறை சார்ந்த பலரும் கொடையளித்துள்ளனர். நாஞ்சில் பாலு அவர்களின் பேருதவி மற்றும் உழைப்பு அளவிடற்கரியது.

ஜனவரி 5ம் தேதி அன்றே நான் கிளம்பித் தேரழுந்தூர் சென்றூவிட்டேன். களத்தில் ஜானகிராமன் அயராது ஓடிக்கொண்டிருந்தார். பஞ்சாயத்து ஒன்றியம், காவல் துறை, தீயணைப்புத் துறை, மண்டப அலங்காரங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என்று அவர் பம்பரம் தோற்கும் விதமாகச் சுழன்று வேலை செய்துகொண்டிருந்தார். 

எல்லாவற்றின் பலனாக,  முதல் நாள், ஜனவரி 7, ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பர் மூர்த்தி முன் ஒரு வழிபாட்டுடன் துவங்கியது. கோ பூஜையுடன் கம்ப ராமாயண நூல்களின் ஊர்வலமும் நடந்தேறியது. அதற்கு முன்னர் கம்பர் மேட்டில் சிறிய அளவிலான அஞ்சலி செய்தோம்.

சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சுரேஷ் குமார், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுவை முன்னாள் சபா நாயகர் சிவக்கொழுந்து, பேச்சாளர்கள் ஜடாயு, மை.பா.நாராயணன், முனைவர். கலியபெருமாள், ரா.சம்பத்குமார், புதுகை பாரதி, முத்துலட்சுமி பாலு, திருச்சி ரா. மாது, ஶ்ரீ.உ.வே. கோஸகன் பட்டாச்சாரியார், திரு.சிவகுமார் , பத்மா மோஹன்என்று பல அருமையான சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடுமன்றம் என்று இரண்டு நாட்களும் வெகு விமரிசையாகக் கம்பன் தன் ஊரில் திளைத்து மகிழ்ந்தான்.

தினமலர் நாளிதழ் நிகழ்வுகள் அனைத்தையும் இரண்டு நாட்களும் வெளியிட்டது. மெட்ராஸ்மிக்ஸ்சர் என்னும் நிறுவனம் நிகழ்வுகள் அனைத்தையும் பதிந்துள்ளது. விரைவில் காணொளியாகக் கிடைக்கும்.

விழாவில் தேரழுந்தூர் கம்பர் கழகத்துடன், புதுக்கோட்டை, புதுச்சேரி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், திருச்சி, சென்னை கம்பன் கழகங்கள் பங்கேற்று, விழா சிறப்பாக நடந்தேறியது.

மாயூரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் இந்தப் பதிவை எழுதுகிறேன். நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. ஆனால், நிகழ்வு உண்மை என்பதால் கம்பன் வானுலகில் இருந்து அருள் புரிந்துள்ளான் என்பதை உணர முடிகிறது.

விழா தொடர்பான காணொலி தயாரானவுடன் வெளியிடுகிறேன்.

விழா முடிந்து மறு நாள் காலை கம்பர் கோட்டத்தில் கம்பர் திரு உருவத்தை வணங்கி வரச் சென்றேன். கம்பன் திருமுகத்தில் நிறைவான மகிழ்ச்சி இருந்ததாக உண்ரந்தேன். அந்தப் படம் இதோ:

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திரு நாடு.

வந்தே மாதரம். 

-ஆமருவி

கம்பர் விழா – தேரழுந்தூர் – அழைப்பிதழ்

ஜனவரி 7,8 தேரழுந்தூரில் நடைபெறும் கம்பர் விழா அழைப்பிதழ். அனைவரும் வருக.

சில ஆண்டுகளாக நடைபெறாமலும், நடந்தாலும் சிறிய அளவிலும் நடந்துவந்த தேரழுந்தூர் கம்பர் விழா நிகழும் சுகிருது ஆண்டு மார்கழி மாதம் 23 மற்றும் 24ம் தேதிகளில் பெரிய அளவில் நடக்கவுள்ளது. ( ஜனவரி 7,8 சனி மற்றும் ஞாயிறு).

இடம் : தேரழுந்தூர் கம்பர் கோட்டம், சன்னிதித் தெரு, தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ் நாடு.

கம்பனில் ஆழ, அனைவரும் வருக.

ஜனவர் 7 & 8 2023 தேரழுந்தூர் கம்பர் விழா அழைப்பிதழ். கம்பர் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்.

ஶ்ரீவைஷ்ணவர்கள் ஜாதக அவலம்

பிரதம மந்திரியே கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்க்கிறார் என்றால் நீங்கள் வார்டு கௌன்ஸிலரிடம் சென்று ‘அபிவாதயே’ சொல்வீர்களா என்ன ?

இதென்னடா புதுசாக என்று தெரிந்துகொள்ள மேலே வாசியுங்கள்.

ஶ்ரீரங்கம் கோவிலில் நவக்கிரங்கள் சன்னிதியில் உள்ளனவா என்று தேடிப் பாருங்கள். அவை எங்கே இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் சென்று பார்த்துவரலாம்.

இத்தனை பீடிகை எதற்கு என்கிறீர்களா ?

ஶ்ரீவைஷ்ணவர்கள் கல்யாணம் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஜாதகத்தைக் கட்டிக்கொண்டு அழுவதைப் பார்த்து, மன வேதனைப் பட்டு இதனை எழுத வேண்டியதாக உள்ளது.

பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வயது + நட்சத்திரம் + கோத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து, சரியாக இருப்பின், பெருமாள் சன்னிதியில் வைத்துவிட்டு மேலேறிச் செல்வதே சரியான முறை. சுமார் 30 ஆண்டுகள் முன்பு வரை கூட இப்படியான திருமணங்கள் நடந்துள்ளன.

காரணம் கேட்கலாம். ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு நாராயணனே பர தெய்வம். பஞ்ச சம்ஸ்காரம் / பரண்யாஸம் ஆகிவிட்டால் மற்ற தேவதைகள், நவக்கிரஹங்கள் வெறும் சக்திகளே. வேறு யாரையும் / எதையும் ப்ரீதி பண்ண வேண்டிய தேவை இல்லை.

ஶ்ரீவைஷ்ணவர்கள் அவசியம் வழிபட்டே ஆகவேண்டிய, பயந்து சேவிக்க வேண்டிய ஒன்றாக நவக்கிரஹங்கள் இருப்பின், அவை ஶ்ரீரங்கம் கோவிலுக்குள் சன்னிதியாக அன்றோ இருந்திருக்க வேண்டும் ? மதுரை கூடல் அழகர் கோவிலில் மட்டும் உள்ளதைப் பார்த்துள்ளேன். அதைப் பிற்காலச் சேர்க்கை என்பதாகக் கொள்கிறேன்.

ஏற்கெனவே முதிர்கன்னிகளாக ஶ்ரீவைஷ்ணவப் பெண்கள் உள்ள நிலையில், பல பசங்களுக்குக் கல்யாணமே நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அவற்றில் குழப்பங்கள், கூப்பாடுகள் என்று பலதும். இதற்கும் மேல் ஜாதகம் பார்க்கிறேன் என்று இனி ஒரு பொருத்தம் விடாமல் பார்த்துப் பார்த்து, கூட்டிக் கழித்து முடிப்பதற்குள் பல அசௌகர்யமான விஷயங்கள் நடந்துவிடுகின்றன. இதைப் பற்றி மேலே சொல்வதற்கில்லை.

அதிலும் பெண்ணின் தாயார்கள் போடுகிற சட்டங்கள், பெண்கள் போடுகிற கண்டிஷன்கள் – மாமியார் இருக்கக் கூடாது, நாத்தனார் என்று யாருமே கூடாது, பையன் வேஷ்டி உடுத்திக் கொள்ளக் கூடாது, கல்யாணம் ஆனவுடன் மாமியாரும் மாமனாரும் சன்னியாஸம் போக வேண்டும், சந்தியாவந்தனப் பேர்வழிகள் நோ நோ, கிரீன் கார்டு, பஞ்சள் கார்டு – இத்தனையும் தாண்டி, ஜாதகத்தில் காஃபி பொருத்தம், சிக்கரிப் பொருத்தம் என்று தூக்கிக்கொண்டு திரிந்து கல்யாணம் முடிவதற்குள் போதும் என்றாகிறது.

அடியேன் சொல்வது பலருக்கு உவக்காமல் போகலாம்.

‘சொன்னால் விரோதமிது ஆயினும் சொல்லுகேன் கேண்மினோ’. அவ்வளவுதான்.

முதல் வரியை வாசியுங்கள்.

-ஆமருவி

பாழ்பட்டு நிற்கும் கம்பன் இல்லம்

தேரழுந்தூர் கம்பர் மேடு பகுதியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த இல்லம் இருந்த இடம் த்ற்போது எப்படி உள்ளது ? சிந்திப்போம்.

தேரழுந்தூர் கம்பர் மேடு பகுதியில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த இல்லம் இருந்த இடம் த்ற்போது எப்படி உள்ளது ? சிந்திப்போம்.

கிராமம் நோக்கி நகர்வோமா ?

பணி ஓய்வு பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள், நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும் போதே ( 60-70 வயது), தங்களது பூர்வீக கிராமத்தில் வாடகை வீட்டிலாவது இருந்துகொண்டு, அவ்வூர்க் கோவிலில் ஏதாகிலும் கைங்கர்யம் செய்துவரலாம். 

ஏனெனில், திவ்யதேசங்களிலேயே கைங்கர்யம் செய்ய, அத்யாபகம், வேத பாராயணம், கோவிலில் செய்ய வேண்டிய தீர்த்த, புஷ்ப கைங்கர்யங்கள் செய்ய ஆட்கள் இல்லை. மற்ற சிற்றூர்களிலும் இதே நிலைதான்.

இதே நிலை தான் பல பாடல் பெற்ற சைவக் கோவில்களிலும் என்று தெரிகிறது. தேரழுந்தூரில் உள்ள சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். அதன் நிலைமை படு மோசம்.

நேற்று, ஆதிவண் சடகோபர் திருநக்ஷத்திரத்தின் போது, தேரழுந்தூரில் நாங்கள் நான்கு பேர் மட்டுமே வீதி புறப்பாட்டிற்குச் சென்றோம். வேத, அத்யாபக அதிகாரிகள் இல்லை எனிலும், ஏதோ தெரிந்த சில பாசுரங்களைச் சேவித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதே ஊரில், ஆதிவண் சடகோபர் உற்சவம் மற்றும் தேசிகர் உற்சவத்தில் சுமார் 400 பேர் பங்கெடுப்பர் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன். 

பணி ஓய்வு பெற்று, பின்னர் சென்னை / மும்பை என்று குடியிருத்தல் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்வது போன்றது என்பது அடியேன் நம்பிக்கை. இட நெருக்கடி, தண்ணிர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் என்று பலதும் இடைஞ்சல்களே.

‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஶ்ரீமத் இராமானுசருடைய ஆணை. 

தங்களது பூர்வீக ஊரில் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு திவ்யதேசம், பாடல் பெற்ற ஸ்தலம் என்று சில ஆண்டுகள் செலவிடலாம். நற் போது போக்காக இருக்கும்.

‘அதெப்படி பணி ஓய்வு பெற்ற உடனே கிராமத்தில் இருக்க சௌகர்யப்படும்?’ என்று கேட்கலாம். 40-60 வயது வரை ஓராண்டிற்கு ஒரு முறையாவது சொந்த ஊர்களுக்குச் சென்று, சின்ன இடம் ஒன்றை வாங்கி, சிறிய அளவிலான வீடு கட்டி, அந்த ஊருடன், மக்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது 60வது வயதில் கைகொடுக்கும்.

மருத்துவ வசதி இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அது உண்மையே. காலஞ்சென்ற என் தாயார் விஷயத்தில் நான் கண்டதும் அதுவே. ஆகவே தான் 60-70 என்கிறேன். இவ்வாறு பலரும் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தால், கிராமப் பொருளாதாரம் செழிக்கும் என்பதுடன், கிராமங்களில் மருத்துவ வசதிகளும் பெருகும். ஓய்வு பெற்ற மருத்துவர்கள் கிராமங்களுக்கு வர மாட்டார்களா என்ன ? 

உலகமே கொரோனாவில் கட்டுண்டு கிடந்த போது, தேரழுந்தூரில் பெரிய பாதிப்பு இல்லை. மற்ற நோய்களும் அப்படியே. ஆக, கிராமத்திற்குச் சென்றால் ஆரோக்யமாக இருக்கலாம். 

யாரையும் குறை சொல்லவில்லை. மனதில் பட்டது. சொல்கிறேன். அவ்வளவுதான். 

-ஆமருவி
02-10-2022

ஆலமரம் – நாவல் வாசிப்பு அனுபவம்

ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே. 

ஐயங்கார் கதைகள், ஐயங்கார் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவே. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ நிரப்புகிறது. 

படிமங்கள், நிலைகள், குழப்பங்கள், குறியீடுகள், மிகை எழுத்துகள் என்று எதுவும் இல்லாமல், நேரடிக் கதை சொல்லல் ஆசிரியரின் பலம்.  

ஆலமரம் – நாவல்

மாங்கொல்லை என்னும் தஞ்சை கிராம ஐயங்கார் மிராசுதார் குடும்பம், சுமார் 120 ஆண்டுகளில், வந்து நிற்கும் இடத்தைப் பற்றியதே இந்த நாவல்.  மிராசு சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகித் தெறித்து விழ, தெறித்த ஒவ்வொரு துளியும் எங்கே என்ன செய்தது என்பதே கதை. ‘Period Novel’  என்னும் சட்டகத்துக்குள் வரும் இந்த நீண்ட நெடிய 957 பக்க நாவல், சில இடங்களில் ஆழ்ந்து, மெதுவாகவும், பல இடங்களில் ஓட்டப்பந்தயம் போலவும் ஓடி நிற்கிறது.

தஞ்சை கிராம பிராமண மிராசுகளின் வாரிசுகள் மேற்கொண்ட இடப்பெயர்வுகள அன்னாளைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாவல் முழுவதும் தஞ்சை – சென்னை, சென்னை – தில்லி, சென்னை – அமெரிக்கா என்று மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் கண்கூடாகக் காணும் ஒன்றுதான் என்றாலும், இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தல் போல் உள்ள இந்த நாவல்  பிராமண இடப்பெயர்வைச் சுட்டும் முறையில் முதன்மையானது.  

தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் வைணவ பிராமணர்களும், ஸ்மார்த்த பிராமணர்களும் கல்வியைப் பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்க்கையில் மேலேறிச் செல்வது நாம் பலரது வாழ்விலும் கண்ட ஒன்றுதான். அது நாவலில் கண்கூடாகக் காட்டப்படுகிறது.  மிராசு வாரிசுகள் கல்வி இல்லாமல் அழிவதும் அல்லது வாழ்க்கையில் முன்னேறாமல் தத்தளிப்பதும், அவ்வாறு கல்வியைப் பற்றிக் கொண்டவர்கள் மேலேறிச் செல்வதும் நாவலில் மட்டும் அல்லாமல் யதார்த்த வாழ்விலும் நிகழும் உண்மைகள்.

கல்வி இல்லாத செல்வம் தரும் அழிவை வாசு பாத்திரமும், செல்வத்துடன் கூடிய நல்ல கல்வி தரும் மேன்மையை மைதிலி பாத்திரமும் சுட்டுகின்றன.  

பாரத விடுதலைப் போர் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. போராட்டத் தியாகிகளுக்கு தமிழ் வைஷ்ணவக் குடும்பங்களில் இருந்த / இல்லாத மரியாதையும் நமக்குத் தெரிவிக்கிறது நாவல். 

ஐயங்கார் விஷயங்கள் பலதும் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளன. நான்கு முறை சேவிக்கும் வடகலை ஐயங்கார் வழக்கம், ஒரு முறை / இரண்டு முறைகள் சேவிக்கும் தென்கலை ஐயங்கார் வக்கம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சங்கு-சக்கர தீட்சை முறை, அதைப் பெற்றவர்கள் மட்டுமே திவசம் முதலிய தினங்களில் தளிகை பண்ண அனுமதிக்கப்படும் பண்பாடு, ஐயங்கார் இல்லங்களில் தளிகை பண்ணப்படும் பக்ஷணங்கள், சாத்துமுது ( ரஸம் ) வகைகள் என்று நாவல் முழுவதும் இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றன. 

ஊரின் காவல் தெய்வத்தின் பரிவார தேவதாந்திரம் (வீரன்) ஒன்றின் சிலையை வீட்டின் பின் வைத்த நிகழ்வுடன் துவங்கும் நாவல், முடிவதும் அந்தத் தேவதையின் இடத்தில் தான். இந்த முறை நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. காவல் தெய்வங்களுக்கு வைஷ்ணவ இல்லங்களில், வழக்கங்களில் இடம் இல்லாமை சுட்டப்படுவது அருமை. சமாஸ்ரயணம் பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திர வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பது இன்றும் தொடரும் வழக்கமே. 

கல்விப் புலன் அதிகம் உள்ள பாத்திரங்கள் வந்து சென்றாலும்,  அவர்களிடம் தத்துவப் பார்வைகள் முற்றிலும் இல்லாமல் இருப்பது ஒரு வியப்பே. சித்தாந்தக் கலந்துரையாடல்கள் துளிக்கூட இல்லாமல் அக்கால வைஷ்ணவ மிராசுக் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன என்பது சிறு நெருடலே. ஆனாலும், படிப்பறிவு அதிகம் இல்லாத மிராசுகளுக்கும் அவர்தம் மனைவிகளுக்கும் சித்தாந்தம் தெரியாமல் இருக்கவே வாய்ப்புண்டு என்றும் எண்ணிக்கொள்ளலாம். 

மிராசுகள் தம் மனைவியரை விட்டு, தஞ்சாவூரில் பரத்தை மகளிர் சகவாசம் கொள்வதும் நாவல் மூலம் அறிகிறோம். அக்கால சமூக ஒழுக்கங்களில் ஒன்றாகவே இது சொல்லப்பட்டாலும், அது தொடர்பான ஒரு தலைக்குனிவு இருந்ததையும் நாவல் காட்டுகிறது. அக்காலப் பெண்கள் கணவர்களிடம் அடிபடுவது அமோகமாக நடக்கிறது. அது ஏதோ சாதாரணமான ஒரு நிகழ்வாகச் சொல்லப்படுகிறது என்றாலும், தற்காலத்தில் அம்மாதிரியான சித்திரத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாக உள்ளது.

யாரும் வசிக்காத பெரிய வீட்டை சம்ஸ்க்ருத பாடசாலைக்கு எழுதி வைக்கலாம் என்று வரும் ஒரு கட்டம்,  சுஜாதாவின் ‘கு.சி. பாடசாலை’ விஷயத்தை நினைவுபடுத்துகிறது. விறகு அடுப்பில் தளிகை பண்ணிக் கொண்டிருந்த குடும்பம் குமுட்டி அடுப்பிற்கு முன்னேறி, இறுதியில் காஸ் அடுப்பிற்கு வந்ததையும் நாவல் சுட்டுகிறது.

சுமார் பதினைந்து பேரின் மரணத்தை ஆவணப்படுத்தும் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நீண்டதொரு மௌனமே மிஞ்சியது. 

வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதை என்று ஒரு சொல்லாடலில் கடந்து செல்லலாம் என்றாலும், இந்த நாவல் தமிழ்ச் சூழலில் வேறு யாரும் தொட்டுப் பார்க்காத ஒரு சரடைப் பிடித்து செல்கிறது. ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே. 

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத நாவலாக ‘ஆலமரம்’ திகழ்வது தற்காலக் கீழ்மைகளில் ஒன்று என்று கடந்துசெல்ல வேண்டியது தான். 

நாவல்: ஆலமரம். ஆசிரியர் : விஜயலக்ஷ்மி சுந்தரராஜன். பக்கங்கள்: 957. மணிமேகலைப் பிரசுரம். விலை: ரூ 420. 

நெல்லை கண்ணன் – அஞ்சலி

நெல்லை கண்ணன் அஞ்சலி

காலஞ்சென்ற நெல்லை கண்ணன் தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்.

சிங்கப்பூர் இலக்கிய நாட்களில் இருந்து பழக்கம். கம்ப ராமாயணம் குறித்து சில மின் அஞ்சல் தொடர்புகள் உண்டு. பல பாடல்களை மீண்டும் வேறு நடையில் எழுதி அனுப்பி, பொருள் சரியாக வருகிறதா என்று அவர் கேட்டிருந்த காலங்கள் உண்டு.

அவருடனான முதல் தொடர்பு அவரை ஒர் இலக்கிய விழாவிற்காக வரவேற்று நான் எழுதியிருந்த சில குறள் வெண்பாக்கள் வழியாக. ஒரு வெண்பா ‘ நீவா சனி’ என்ற முடிந்ததாக நினைவு. இதை எழுதியது யார் என்று கேட்டு, கூப்பிட்டுப் பாராட்டினார். கிரேஸி மோகன் வடமொழிச் சொற்கள் கொண்டு வெண்பா இயற்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

நெல்லை கண்ணன்

‘ஆமருவி’ என்பதை ஏதோ புனைபெயர் என்று நினைத்து ‘பெற்றோர் இட்ட பெயர் என்ன?’ என்றார். இயற்பெயரே அதுதான் என்றதும், சொந்த ஊர் தேரழுந்தூர் என்றதும் முக மலர்ச்சியுடன் பேசத் துவங்கினார் கண்ணன். ‘ திருமங்கையாழ்வார் பாசுரம் ஒண்ணு சொல்லுங்க’ என்றவர் நான் காலணியைக் கழற்றிவிட்டு சொல்லத் துவங்கிய போது தானும் எழுந்து நின்று கேட்டார். கையைப் பிடித்துக்கொண்டு கண்களில் நீர் துளிர்க்க ‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி. வைணவர்கள் எங்கே போனாலும் பிரபந்தம்னா இளகிடுவாங்க’ என்று மனம் உருகிப் பேசிக்கொண்டிருந்தார்.

மதுரை ஆதீனம் வழக்கில் களப்பணி ஆற்றிய பெருமை உடையவர்.

பின்னாளில் கடுமையான சாதீயப் பார்வை கொண்டவராகவும், பெரும் மோதி எதிர்ப்பாளராகவும் தன்னைக் குறைத்துக் கொண்டார் என்பது பெரும் வருத்தமே.

அரசியலில் பல அணிகளில் பல நேரங்களில் இருந்தவரான நெல்லை கண்ணன், சமயத்துக்குத் தகுந்த அரசியல் நிலை எடுப்பது என்பதால் தனது மாண்பைக் குறைத்துக் கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. அவரது அரசியல் நிலைகளும், பேச்சில் நிதானம் இன்மையும் காரணங்கள்.

தொடர்ந்து நல்லாசிரியராக இருந்து இளைய தலைமுறையினர் பலருக்கும் வழி காட்டியாக இருந்திருக்க வேண்டியவர் தன் நிலையில் இருந்து தாழ்ந்து, பலரது மதிப்பில் இறங்கி, மறைந்தார்.

பேச்சாளர் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலி.

%d bloggers like this: