நேற்றும் இன்றும் மனம் ஒரு நிலையில் இல்லை. சொற்களில் நிதானம் தவறியிருந்தால் மன்னிக்கவும்.
‘செப்டம்பர் 11ற்குப் பதிலாக உலகம் டிசம்பர் 13 பற்றிப் பேசியிருக்கும்’ என்றார் அத்வானி.
இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் பற்றிப் பேசும் போது இதைச் சொன்னார். ‘பயங்கரவாதிகள் உள்ளே வந்திருந்தால், பாரதத்தின் நிர்வாகத் தலைமையும் எதிரணித் தலைமையும், அனேகமாக எல்லா உறுப்பினர்களும் மறைந்திருப்பர்’ என்றார் அத்வானி.
அது போன்ற நிகழ்வே அவிநாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான தாக்குதலும்.
தெய்வத் திரூவுருக்களைச் சேதப்படுத்திய கயவனிடம் வெடிப்பொருட்கள் இருந்திருந்தால் ? ஆயிரம் ஆண்டுப் பழமை உள்ள கோவில், இறைத் திருமேனிகள், சிற்பங்கள், நம் பண்பாட்டுச் சின்னங்கள், கோடிக்கணக்கான மக்களின் ஆதர்ச நம்பிக்கைத் தூண்கள், நம் தமிழகத்தின் / பாரதத்தின் மானம் – எல்லாம் காணாமல் ஆகியிருக்கும்.
ஒருவேளை மேற்சொன்னவாறு நடந்திருந்தால் அதன் விளைவுகள் ?
கயவனுக்கு மனநிலை சரியில்லை என்கிறது அரசு. மனநிலை சரியில்லாதவன் கோவில் சாத்தப்படும் முன் கோவிலுக்குள் ஒளிந்துகொண்டது எங்ஙனம் ? முருகப் பெருமானின் வேலைப் பிடுங்கி உண்டியலைப் பெயர்த்துள்ளான் என்கிறது செய்தி. மனநிலை சரி இல்லாதவன் செய்யும் செயலா இது? 63 நாயன்மார்களின் வஸ்திரங்களைக் களைந்து அவமானப்படுத்தியுள்ளான். பின்னர் கோவில் கோபுரத்தில் ஏறி ஒளிந்துகொண்டுள்ளான். மனநிலை சரியில்லாதவன் செய்யும் செயலா இது ?
சிசிடிவி இயங்கவில்லை என்று அரசு சொல்வது வெட்கக்கேடு. ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டதாக அமைச்சர் பெருமை பேசுகிறார். கேவலம் சிசிடிவி வேலை செய்கிறதா என்று பார்க்க அதிகாரிகளுக்கு வக்கில்லை. பணம் இல்லை என்று சொல்ல முடியாது. இன்னோவா கார் வாங்க பணம் இருந்ததா ?
கோவிலைப் பாதுகாக்க வக்கில்லாத அறம் நிலையாத் துறை இதற்குப் பின்னரும் கோவிலை வைத்துக்கொண்டிருப்பது என்ன லட்சணம் ? நிலத்தைத்தான் பாதுகாக்க திராணி இல்லை. கோவிலையே பாதுகாக்க வக்கில்லை. அப்புறம் என்ன இந்து அற நிலையத் துறை ஜம்பம் ? இதற்கு செயல் அலுவலர் ஒரு கேடு. அவருக்கு மேல் ஜேசி, பாசி என்று சீட்டு தேய்க்க என்றே அதிகாரிகள். துறைக்கு ஒரு அமைச்சர் வேறு. கேட்டால் இரண்டாண்டு ஆட்சி, காட்சி என்று எதுகை மோனையில் பேசும் அரசு.
கோவிலில் ஆள் உள்ளதா என்று பார்த்து வரக் காவல்காரர் இல்லையா ? இரவு கோவிலுக்குள் சப்தம் எழுந்தால் கூடத் தெரியாத அளவிற்கா காவலர்கள் உள்ளனர் ? என்ன கருமம் பிடித்த அரசு அலுவலகம் இது ?
கண்ட கழிசடைகளையும் அதிகாரத்தில் இருத்தினால் வெளியில் சொல்லக் கூசும் அளவிற்குச் செயல்படுகிறார்கள்.
கோவிலின் செயல் அலுவலர் சோற்றில் உப்பிட்டுத்தான் உண்கிறாரா ? அவருக்கு மேலே உள்ள அதிகாரிகள் இரண்டு முழம் கயிறு வாங்கிக் கொள்ளலாம். வெட்கக்கேடு.
மக்களின் நிலை அதைவிடக் கொடுமை. எடுத்ததற்கெல்லாம் கடை அடைப்பு, தர்ணா. ஊருக்குப் பெயரே கோவில் பெருமானின் பெயர் தான். ஆனால் ஊரே கப்சிப்.
அரசியல்வாதிகள் ( அண்ணாமலை தவிர ) புடவை வாங்கச் சென்றுள்ளனர் போல. பிறிதொரு மதத்தின் சிறு குடில் சேதப்பட்டால் கூட கொந்தளிக்கும் ஜந்துக்கள் வாய்திறக்கவில்லை. இந்து முன்னணியின் காடேஸ்வரன், ஹிந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் தவிர யாருமே பேசவில்லை என்று நினைக்கிறேன்.
தெருவுக்குத் தெரு நிற்கும் சிலையின் மீது பறவை எச்சமிட்டால் கூட கொதித்து எழும் ஊடகங்கள் – வீட்டில் இழவு போல மௌனம். என்ன ஒரு வெட்கம் கெட்ட பிழைப்பு இது ?
ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ?
பிரியமான சொந்தங்கள் / நண்பர்கள் / வாசகர்களே, வணக்கம்.
பூணல் போடுங்கள், அமோகமாக இருக்கட்டும் பிள்ளைகள். கல்யாணம் பண்ணுங்கள். சதாபிஷேகம் பண்ணிக்கொள்ளுங்கள். எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், எல்லா பூணலையும் ஏப்ரலில் இருந்து ஜூலைக்குள் போட்டே ஆக வேண்டுமா ? இந்த மூன்று மாதத்தை விட்டால் பூணல் போட வேறு மாதமே கிடைக்காதா ? அதென்ன சார் எல்லாரும் இந்த மூன்று மாசத்திற்குள்ளேயே போட்டுக் கொண்டே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ? தலை ஆவணி அவிட்டத்திற்கான ஏற்பாடா ?
கல்யாணமும் அப்படியே. திங்கள் முதல் வெள்ளி வரை கல்யாண வைபோகமாகவே இருக்கிறது. சனி, ஞாயிறு ஈ காக்காய் இல்லை. ஒரு கல்யாணம், சீமந்தம் ஒன்றும் இல்லை. சொல்லி வைத்த மாதிரி திங்கள் காலை முஹூர்த்தம் என்கிறார்கள். போனோம் என்று பேர் பண்ணிவிட்டு ஆஃபீஸ் போகலாம் என்றால் 9:00 மணிக்கு மேல் முகூர்த்தம் என்கிறார்கள். ராகு காலம் முடிய வேண்டுமாம். அதற்கு மேல் கல்யாணத்தில் பங்கு பெற்று ஆஃபீஸ் போக முடியுமா ? போனால் அங்குள்ள ராகு காலம் விடுமா ?
சரி. அப்படியே போகலாம் என்றாலும் சென்னை டிராஃபிக் விடுமா? திங்கள் காலை தான் ‘ஆமருவி எங்கே ? எங்கே ?’ என்று ஆலாய்ப் பறக்கும் ஃபோன் கால்கள். மிச்ச நாள்களில் சீந்துவார் இல்லை.
ஒரு திங்கள் கிழமை காலை, ஒரே நேரத்தில் அடையாறிலும், தாம்பரத்திலும் முஹூர்த்தம் வைத்தால் மனுஷன் எப்படிப் போவது ? ஆஃபீஸ் அவசரத்தில் எது கல்யாணம், எது பூணல், எது சீமந்தம் என்று தெரியாமல், பூணல் முஹூர்த்தத்திற்கு புடவை வேஷ்டியும், சீமந்தத்திற்கு நாலு முழம் வேஷ்டியும், கல்யாணத்திற்கு அலாரம் டைம்பீசுமாக கிஃப்ட் கொடுத்து அசடு வழிய வேண்டியதாக இருக்கிறது.
இத்தனைக்கும் எல்லா பத்திரிக்கையும் வாட்ஸப்பில் அனுப்பி, ‘பத்திர்க்கைய நீங்க பார்க்கவே இல்லியே?’, ‘பார்த்தீங்க, ஆனா பதில் போடல்லியே” ரெண்டு டிக் மார்க் வரல்லியே’ என்று ஃபோன் கால் வேறு.
மனுஷன் திங்கள் காலை ஆஃபீஸ் பிரச்னையை நினைப்பானா, இல்லை சீமந்தம், மணையில் வைத்துப் பாடுவது, காசி யாத்திரை பார்ப்பது என்று போவானா? இப்படியெல்லாம் போனால் காசி யாத்திரை போக வேண்டியது தான்.
நிஜமாகவே புரியவில்லை ஸ்வாமி. எப்படி இத்தனை கல்யாணங்களையும், பூணல்களையும், சதாபிஷேகங்களையும் சமாளிப்பது ?
இப்படிக்கு, ஒரு கல்யாண மண்டபத்தில் காத்திருக்கும், அசட்டு அம்மாஞ்சி ஆமருவி. 03-05-2023
‘Kerala Story’ கதை பொய் என்று பினரயி விஜயன், சஷி தரூர் சொல்லியிருக்கிறார்கள். பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலர் நினைக்கிறார்கள்.
‘Kerala Story’ கதை பொய் என்று பினரயி விஜயன், சஷி தரூர் சொல்லியிருக்கிறார்கள். பொய்யாக இருக்கக் கூடாதா என்று பலர் நினைக்கிறார்கள்.
இப்படி ஒன்று நடக்காமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று ஆதங்கப்பட்ட 70 வயது ஶ்ரீனிவாசனை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது 2017ல். கதை நடந்தது 2015ல்.
ஶ்ரீனிவாசன் முற்போக்கான வக்கீல். முற்போக்கு என்றவுடன் அவர் ஐயங்காராக இருக்க வேண்டும் என்பது விதி. நல்ல ப்ராக்டீஸ். நல்ல வருமானம். சென்னையில் சொந்த வீடு ( தனி வீடு). கார்.
தன் ஒரே மகள் சௌஜன்யாவை, ஐயங்கார் வழக்கம் போல், மாடர்னாக வளர்த்தார். நல்ல கல்வி. மென்பொருள் வேலை. பெங்களூரு போவேன் என்று அடம். அம்மா ஒத்துக்கொள்ளவில்லை. ஶ்ரீனிவாசன் தலையீட்டால் சௌஜன்யா பெங்களூரு சென்றாள்.
ஒரே ஒரு முறை தீபாவளிக்கு வந்து சென்றாள். பின்னர் வேலை வேலை என்று ஒன்றரை வருஷம் வீட்டிற்கு வரவில்லை. ஸ்கைப் வீடியோ மூலம் மகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 2016ல் ஒருமுறை பெங்களூரு சென்று வந்த ஶ்ரீனிவாசன், சௌஜன்யாவை அவளது அலுவலகத்தில் சந்தித்தார். ‘ஏம்மா நெத்திக்கு இட்டுக்கறதில்லையா?’ என்று கேட்டுள்ளார்.
ஒரு விடியற்காலை பெட்டியும் கையுமாக வந்து சேர்ந்தாள் சௌஜன்யா, எட்டு மாத கர்ப்பத்துடன். கல்யாணம் ? நடந்துள்ளது. கல்யாண ஃபோட்டோவில் சௌஜன்யா நெற்றியில் ஒன்றும் இல்லை. பையன் லட்சணமாகத் தான் இருந்தான், பாழ் நெற்றியுடன்.
சௌஜன்யா வேலைபார்த்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் வாசலில் தினமும் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் வந்து சந்தித்துள்ளான் மற்றொரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுகுமாரன். நட்பு, காதல், உயர் மத்திய காண்டோமினியத்தில் சேர்ந்து வாழ்தல், ‘திருமணம்’. நிற்க.
ஆன் சைட் அசைன்மென்ட் என்று துபாய் சென்ற சுகுமாரன் காணாமல் ஆனான். ஈமெயில், தொலைபேசி எதிலும் பதில் இல்லை. சௌஜன்யாவிற்கு மூன்றுமாதம்.
சுகுமாரனின் கம்பெனிக்குச் சென்று விசாரித்தால் சுகுமாரன் போலி என்பது தெரிந்தது. சுகுமாரனின் பாஸ்போர்ட் நகல் கொண்டு விசாரித்ததில், பாஸ்போர்ட்டும் போலி என்பதையும் தெரிந்துகொண்டாள். அவனது புல்லட் வண்டி வேறொருவன் பெயரில் இருந்துள்ளது. ஒரு வருடம் முன்னால் காணாமல் போய்விட்டது என்றான் அவன். ‘திரௌபதி’ திரைப்படக் கதை போல் தோன்றும்.
மேலும் விபரமாக எழுதமுடியாது. எனவே கதைச் சுருக்கம் இதோ :
வண்டியும் சுகுமாரனுடையது இல்லை. வேலையும் சுகுமாரனுடையது இல்லை. சுகுமாரன் பெயரில் வாடகைக்கு இருந்த வீட்டிற்கும் சுகுமாரன் வாடகை செலுத்துவதில்லை. ஏன், சுகுமாரனே சுகுமாரன் இல்லை.
வண்டி, வீட்டு வாடகை, போலி வேலை அமைப்புகள் எல்லாமே ஒரு அமைப்பு செய்து தருவது. அந்த அமைப்பு இம்மாதிரி பல சுகுமார்களை உருவாக்கியுள்ளது. தற்சமயம் சுகுமாரன் பாலகுமாரன் என்கிற அவதாரத்தில் பிறிதொரு சௌஜன்யாவையோ, ஜெனிஃபரையோ பாழாக்கிக் கொண்டிருக்கலாம்.
ஃபிளாஷ்பேக் முற்றும்.
2017 : சௌஜன்யா தகதகவென்று ஜொலிக்கும் ஆண் குழந்தைக்குத் தாய். யாராவது தத்து எடுத்துக் கொள்வார்களா என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.
2023 : ஶ்ரீனிவாசன் குடும்பம் சென்னையில் தட்டுப்படவில்லை. சௌஜன்யா எங்கிருக்கிறாளோ தெரியவில்லை.
கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம்.
‘கும்பகோணம் டிகிரி’ என்கிற வஸ்து இன்று லோக பிரசித்தமாயிருக்கிறது.
எங்கே பார்த்தாலும் ‘கும்பகோணம் டிகிரி’ தான்.
சென்னையில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் நூறு மீட்டருக்கு ஒன்றாக ‘டிகிரி’ நிற்கிறது.
அதென்ன ஸ்வாமி, புது டிகிரியாக இருக்கிறதே என்று பல கல்லூரிகளிலும் கேட்டுப் பார்த்தேன். யாரும் அப்படியெல்லாம் டிகிரி தருவதில்லை என்று சொன்னார்கள். அரசியல்வாதி தனக்குத் தானே டாக்டர் பட்டம் வழங்குவது போல, நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் டிகிரிபோல என்று நினைத்தேன்.
பின்னர் தான் தெரிந்தது. பீபரி காஃபி, ஏ-கொட்டை காஃபி என்கிற காலமெல்லாம் போய், இப்போது ‘கும்பகோணம் டிகிரி’ காஃபி என்கிற ஸ்திதி நடந்துவருகிறதாம். கலியுகாப்தம் என்பது போல் ‘கும்பகோண டிகிரி’யுகாப்தம் என்று பஞ்சாங்கத்தில் போடலாம் போல. எங்கும் ‘கும்பகோணம் டிகிரி’.
காஃபிக்கும் கும்பகோணத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால் ஒன்றும் இல்லை. கும்பகோணத்தில் காஃபி விளைவதில்லை. காஃபி எஸ்டேட் ஓனர்கள் கும்பகோணத்தில் இல்லை. கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர் என்னும் பிராமணர் காஃபி கிளப் வைத்து நல்ல காஃபி போட்டுக் கொடுத்திருக்கிறார். அது ஒரு ‘தரம்’ என்பதால், கும்பகோணம் ஐயர் டிகிரி காஃபி என்று துவங்கி, இப்போது நாம் ஜாதியை ஒழித்துவிட்டதால், கும்பகோணம் டிகிரி காஃபி என்று சுருங்கிவிட்டிருக்கிறது – தேசிகாச்சாரியார் ரோடு தற்போது தேசிகா ரோடு என்று ஆனதால் ஜாதி ஒழிந்தது போல. (டாக்டர்.நாயர் ரோடு பற்றி நினைக்காதீர்கள். திராவிடமாடல் போல குழப்பம் தான் மிஞ்சும்).
எது எப்படியோ, காஃபி விஷயத்திற்கு வருவோம். சில கேள்விகள் எழுந்தன. சமூக ஊடக வெளியில் உள்ள அறிவார்ந்த ஞானிகளிடம் கேட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலவற்றைப் பிரஸ்தாபிக்கிறேன். தேவரீர் தயை கூர்ந்து உத்தரம் கடாக்ஷித்தருளவேணும்.
1. கும்பகோணம் டிகிரி காஃபியைத் திருநெல்வேலிக்காரர் போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ?
2. கும்பகோணம் டிகிரி காஃபியைக் கும்பகோணம் ஐயங்கார், மத்வர், சோழியர் போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ?
3. கும்பகோணம் டிகிரி காஃபி போட கும்பகோணத்தில் ஏதாவது டிகிரி வாசித்திருக்க வேண்டுமா ?
4. கும்பகோணம் டிகிரி காஃபி என்று மதுரை சோழவந்தானில் ஒரு ஸ்தாபனம் உள்ளது. இடம் மாறினால் டிகிரியும் மாறுமா ?
5. கும்பகோணம் தவிர, வேறு எங்கும் காஃபி போடுவதில்லையா ?
6. ஸ்டார்பக்ஸ் கம்பெனிக்காரன் போடும் காஃபி கும்பகோணம் டிகிரி காஃபி ஸ்தானத்தைப் பிடிக்குமா? அல்லது அதை விட உயர்ந்ததா ? ஏனென்றால், வெள்ளைக்காரன் சொன்னால் தான் உண்மை என்று பஹுத்-அறிவில் நாம் தெரிந்துகொண்டுள்ளோம் அல்லவா ?
7. கப்புசினோ, காஃபே லாட்டே என்றெல்லாம் குழப்புகிறார்கள். இதெல்லாம் என்ன சங்கதிகள் ? ‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’ போல பிரும்மமாகக் கும்பகோணம் டிகிரி காஃபி இருக்கிறது, அதனை அறிந்தவர்கள் கப்புசினோ, காஃபே லாட்டே என்று பலவாறாகக் கூறுகிறார்கள் என்று கொள்ளலாமா ?
8. சிங்கப்பூர், மலேசியாவில் கோபி சி பொபொ, கோபி ஓ கொசோங், கோபி ஓ என்ற பல அவதாரங்களும் கும்பகோணத்தில் இருந்து எத்தனை டிகிரி ? அல்லது, 7-வது பார்வை போல் அல்லாமல் 8-வதாக அஷ்டகோணல் காஃபி என்று கொள்வதா ?
மேற்சொன்னவை தவிர்த்து, கல்யாணக் காஃபி என்றொரு அவதாரம் உண்டு. அதற்கும் காஃபிக்கும் ஸ்நானப்ராப்தி இல்லாமல், காஃபியை ஆற்றினால் டிகாக்ஷன் தனியாகவும், வெந்நீர் தனியாகவும் தெரிந்து த்வைத தரிசனத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருக்கும் வஸ்து கல்யாணக் காஃபி.
அத்வைதக் காஃபி பற்றி தெரியாதவர்கள் கொஞ்சம் அமெரிக்கா சென்றுவரலாம். பால் என்கிற கலப்பே இல்லாமல், வெறும் காஃபித் தண்ணியை லிட்டர் லிட்டராகக் குடிக்கிறார்கள். பரம்பொருள் இரண்டற்றது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு படி காஃபியைக் கொண்டு வந்து, மீட்டிங் முழுவதும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களுக்கான அத்வைத நிலை அதுதான் போல என்று எண்ணியதுண்டு.
விசேஷமாக, அமெரிக்காவில் de-caffeinated coffee என்றொரு பதார்த்தம் கண்டேன். காஃபின் இல்லாத காஃபியாம். பரம்பொருள் தன்மை இல்லாத பரம்பொருள் என்பது என்ன என்பதைப் பற்றி எண்ணிப்பார்த்துக் கைவிட்டதுண்டு. காஃபின் இல்லாத காஃபி குடிப்பதற்குப் பதில் வெந்நீர் குடித்தால் போதாதா ? என்ன லாஜிக் என்று அப்போது புரியவில்லை. ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுக்கு உதவி, ஜன நாயக நாடான பாரதத்தை உதாசீனப்படுத்தி, ஜன நாயகம் பற்றி உலகிற்குப் பாடம் எடுப்பது என்ன அமெரிக்க லாஜிக்கோ, அதே லாஜிக் தான் காஃபின் இல்லாத காஃபி குடிப்பது என்று புரிய சற்று நேரம் ஆனது.
கும்பகோணத்தில் ஆரம்பித்து, அமெரிக்காவில் நிற்கிறோம். ஏதோ குறியீடு போல தோன்றுகிறதா ? நிதர்ஸனமும் அது தானே ?
ரெண்டாம் டிகாக்ஷன் காஃபிக்கு இன்னொரு பெயர் உண்டு. கப-சுர-குடிநீர். அதுவும் பழம்பால் காஃபியும், காஃபி வகையறாவில் சேர்த்தி இல்லை. ஜாதிப்ரஷ்டம் ஆனவை.
கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம். சோஷியல் ட்ரிங்கிங் என்கிறார்கள். அந்தப் பழக்கம் இல்லாத பையனை ‘அம்மாஞ்சி’, ‘மடிசிஞ்சி’ என்று வகைப்படுத்தி, ‘பையன் ஃபார்வர்டு திங்கிங் இல்ல போல்ருக்கே’ என்கிறார்கள். ஃபார்வேர்டு கம்யூனிட்டி என்று பீத்தல் வேறு. நிற்க.
ரயிலில் ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’ என்கிற பானம் விற்கப்படுவது நீங்கள் அறிந்ததே. சந்தியாவந்தனத்தில் ( அப்படி ஒன்று இருந்தது) ஆசமனம் செய்யப் பயன்படுத்தும் நீரின் அளவே இருக்கும் அந்த ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’, டீயா காஃபியா என்று ஆராயப் புகுவது வியர்த்தம். இந்த ஆராய்ச்சிக்குப் பதிலாக ‘கருணைக்கடல் மாமன்னர் ஔரங்கசீப்பின் மத நல்லிணக்கம்’ பற்றி நூறு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதிவிடலாம்.
தேவன் கதைகளில் ‘கள்ளிச் சொட்டு காஃபி’ என்றொரு வஸ்து வருவதுண்டு. அடுத்த வேளை சாப்பிடுகிற வரை நாக்கை விட்டு நீங்காமல் இருக்குமாம். அவ்வகையான காஃபி மாயூரம் காளியாகுடியில் கிடைத்ததுண்டு. தற்போது அவ்விடத்திலும் ரயில் காஃபிதான்.
சமீபத்தில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ஒரு கும்பகோணம் டிகிரி நின்றது. நப்பாசையில் இறங்கினேன். 80களில் நெய்வேலியில் மழை பெய்த பின் பழைய சைக்கிள் டயர்களில் தேங்கியிருக்கும் மழை நீரின் வாசனையை உணர வைத்தது அந்தக் கும்பகோணம் டிகிரி. ‘சைக்கிள் டயர் காஃபி’ என்று பெயர் வைத்திருக்கலாம்.
வாசித்தவுடன் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். கவலையை விடுங்கள். காலாற நடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காஃபி சாப்பிட்டு மீண்டும் வாசியுங்கள். உங்கள் ‘கும்பகோணம் டிகிரி’ அனுபவம் குறித்து எழுதுங்கள். பயன்படும்.
—ஆமருவி
காஃபி விருத்தாந்தம் பற்றிய ஒரு வியாசம் எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் வருகிறது, தற்போதைய காலத்து எந்த வித விகாரமோ கலப்படமோ அற்ற 80களின் நெய்வேலி வாழ்க்கையின் எளிய நகைச்சுவைக் கதைகள் வாசிக்க ‘நெய்வேலிக் கதைகள்’ தொகுப்பை இங்கே வாங்கலாம். அமேஜானில் தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இங்கே வாங்கலாம்.
அதுவும், ஏதோ எடுத்தமா போனமான்னு இல்லாம, ஒரு பதார்த்தத்த முழுக்க சாப்பிடற வரைக்கும் ரெக்கார்ட் பண்ணனும்னு என்ன வேண்டுதலோ தெரியல. எல்லா கல்யாண வீடுகள்லயும் இதே வழிமுறை.
பந்தி நடக்கறத ஒரு ஓரமா இருந்து படம் எடுத்துட்டுப் போனா போறாதா ?
வீட்டுலதான் அத சப்பிடாத, இத சாப்பிடாதன்னு கொடைச்சல். கொஞ்சம் நிம்மதியா ஆற அமர குஞ்சாலாடு ரெண்டு, பாதுஷா ரெண்டு, அக்கார அடிசில் ரெண்டு தரம்னு சாப்பிடலாம்னா பொண்டாட்டி கண் கொத்திப் பாம்பா பார்க்கற மாதிரி, கேமராவ நீட்டினா என்ன சார் நியாயம் ?
அதுலயும், ஒரு மைசூர்ப்பாக எடுத்து ஒரு விள்ளல் வாய்ல போட்டுண்டப்பறம் இன்னொரு விள்ளல் கைல இருக்குமே, அதையே கேமராவுல ரெக்கார்ட் பண்ணிண்டிருந்தா என்ன கொடுமை ? எவ்வளவு நேரம் தான் வாய்ல மைசூர்ப்பாகும், பல் தெரியற மாதிரி சிரிப்புமாவே கைல இன்னொரு விள்ளல வெச்சுண்டு அசடு வழிஞ்சுண்டு உக்காண்டிருக்கறது ?
சரி, வீடியோ எடுத்துட்டேளா, அன்னண்ட போங்கோ, மிச்ச விள்ளலையும் வாயில போட்டுக்கணும்னு சொல்லலாம்னா, வாய்க்குள்ள ஏற்கெனவே ஒரு விள்ளல் இருக்கு. இப்பிடியே ஸ்லோ மோஷன்ல எத்தனை நாழிதான் உக்காந்துண்டே இருகக்றது ?
இதுல வீடியோ எடுக்கறவருக்குக் கொடுக்காம சாப்பிடறதுனால வயத்த வலி எதாவது வந்துடுமோன்னு வேற பயமா இருக்கு. பயத்தோட சிரிக்கற மாதிரி போஸ் குடுக்கறதுக்கு ஆமருவி என்ன ‘விஸ்வரூபம்’ கமலஹாஸனா ? ஊமைக்குத்து வாங்கிண்டே சிரிச்சு மழுப்ப அவரால மட்டும்தான் முடியும்.
சாப்பிடறத வீடியோ எடுக்கறதுக்குப் பின்னாடி ஏதோ கான்ஸ்பிரஸி இருக்கும் போல இருக்கு. ஆமருவிங்கறவன் என்ன சாப்பிட்டான் ? எத்தனை லட்டு உருண்டைகளை உள்ள தள்ளினான் ? ஒரு ஆள் ஒரு லட்டு சாப்பிடறதுக்கு ஆவரேஜா எத்தனை நாழியாறது ? இவன் பேரலல் பிராஸசிங் கணக்கா, ஒரே சமயத்துல எத்தனை லட்டுகளை தள்ளறான்னு இப்பிடி எதாவது டேட்டா சயின்ஸ் பிரச்னை எதாவது இருக்குமோன்னு தோண்றது.
என்ன டேட்டா சயின்ஸ் பிரச்னையானாலும் இருக்கட்டும். எடுக்கற படத்த எடுத்துக்கோங்கோ. ஆனா அத பார்யாள் கிட்ட மட்டும் காட்டாதீங்கோ, நாளைக்குக் காஃபில தீர்த்தம் விளையாடிடும்னு சொல்லலாம்னு பார்த்தா அதுக்குள்ள அடுத்த இலைக்குப் போயிட்டார் வீடியோகிராஃபர்.
இனிமேலாவது கல்யாண வீடுகள்ல சாப்பிடறத வீடியோ எடுக்காதீங்கோ ப்ளீஸ். எடுத்தாலும், அந்த வீடியோவ லட்டுகள் சாப்பிட்டவனோட மனைவி கண்ல படாம பார்த்துக்கோங்கோ.
பணி ஓய்வு பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள், நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும் போதே ( 60-70 வயது), தங்களது பூர்வீக கிராமத்தில் வாடகை வீட்டிலாவது இருந்துகொண்டு, அவ்வூர்க் கோவிலில் ஏதாகிலும் கைங்கர்யம் செய்துவரலாம்.
ஏனெனில், திவ்யதேசங்களிலேயே கைங்கர்யம் செய்ய, அத்யாபகம், வேத பாராயணம், கோவிலில் செய்ய வேண்டிய தீர்த்த, புஷ்ப கைங்கர்யங்கள் செய்ய ஆட்கள் இல்லை. மற்ற சிற்றூர்களிலும் இதே நிலைதான்.
இதே நிலை தான் பல பாடல் பெற்ற சைவக் கோவில்களிலும் என்று தெரிகிறது. தேரழுந்தூரில் உள்ள சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். அதன் நிலைமை படு மோசம்.
நேற்று, ஆதிவண் சடகோபர் திருநக்ஷத்திரத்தின் போது, தேரழுந்தூரில் நாங்கள் நான்கு பேர் மட்டுமே வீதி புறப்பாட்டிற்குச் சென்றோம். வேத, அத்யாபக அதிகாரிகள் இல்லை எனிலும், ஏதோ தெரிந்த சில பாசுரங்களைச் சேவித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதே ஊரில், ஆதிவண் சடகோபர் உற்சவம் மற்றும் தேசிகர் உற்சவத்தில் சுமார் 400 பேர் பங்கெடுப்பர் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.
பணி ஓய்வு பெற்று, பின்னர் சென்னை / மும்பை என்று குடியிருத்தல் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்வது போன்றது என்பது அடியேன் நம்பிக்கை. இட நெருக்கடி, தண்ணிர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் என்று பலதும் இடைஞ்சல்களே.
‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஶ்ரீமத் இராமானுசருடைய ஆணை.
தங்களது பூர்வீக ஊரில் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு திவ்யதேசம், பாடல் பெற்ற ஸ்தலம் என்று சில ஆண்டுகள் செலவிடலாம். நற் போது போக்காக இருக்கும்.
‘அதெப்படி பணி ஓய்வு பெற்ற உடனே கிராமத்தில் இருக்க சௌகர்யப்படும்?’ என்று கேட்கலாம். 40-60 வயது வரை ஓராண்டிற்கு ஒரு முறையாவது சொந்த ஊர்களுக்குச் சென்று, சின்ன இடம் ஒன்றை வாங்கி, சிறிய அளவிலான வீடு கட்டி, அந்த ஊருடன், மக்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது 60வது வயதில் கைகொடுக்கும்.
மருத்துவ வசதி இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அது உண்மையே. காலஞ்சென்ற என் தாயார் விஷயத்தில் நான் கண்டதும் அதுவே. ஆகவே தான் 60-70 என்கிறேன். இவ்வாறு பலரும் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தால், கிராமப் பொருளாதாரம் செழிக்கும் என்பதுடன், கிராமங்களில் மருத்துவ வசதிகளும் பெருகும். ஓய்வு பெற்ற மருத்துவர்கள் கிராமங்களுக்கு வர மாட்டார்களா என்ன ?
உலகமே கொரோனாவில் கட்டுண்டு கிடந்த போது, தேரழுந்தூரில் பெரிய பாதிப்பு இல்லை. மற்ற நோய்களும் அப்படியே. ஆக, கிராமத்திற்குச் சென்றால் ஆரோக்யமாக இருக்கலாம்.
யாரையும் குறை சொல்லவில்லை. மனதில் பட்டது. சொல்கிறேன். அவ்வளவுதான்.
960களில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உபன்யாஸங்கள் பலதையும் ஒலி வடிவில் வெளியிட்டுள்ளார்கள்.
ஆல் இந்தியா ரேடியோ ( ப்ரஸார் பாரதி ) பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளது.
1960களில் சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உபன்யாஸங்கள் பலதையும் ஒலி வடிவில் வெளியிட்டுள்ளார்கள். தலைப்பை விடுத்து அங்குலம் கூட நகராமல் நூல் பிடித்தாற்போல் திஷிதர் செய்துள்ள உபன்யாஸங்கள் ரொம்பவும் பிரஸித்தம். ஆனால் அவை வெளியில் கிடைப்பதில்லை.
அம்மாதிரியான பல உயன்யாஸங்கள் – இராமாயாணம், பாகவதம், நாராயணீயம், பாரதம் என்று பலதைப் பற்றியும் உள்ளன. அவற்றின் சுட்டிகள் கீழே. கேட்டுப் பயனடையுங்கள்.
வரும் காலங்களுக்கும் பயனுள்ள ஸத்-விஷயங்களை அளித்துள்ள தீக்ஷிதர் அவர்களின் உபன்யாஸங்களை அளித்துள்ள ப்ரஸார் பாரதிக்கும், பாரத அரசிற்கும் நன்றிகள்.
‘மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணம்’ என்று பஹுத்-அறிவு விடியல் அரசு அறிவித்துள்ளதாம். உண்மையெனில், அவ்வறிவு இல்லாததால், அசட்டு அம்மாஞ்சியின் கேள்விகள்:
1. நாட்களுக்கு மங்கலம் உண்டு என்று விடியல் நம்புகிறதா?
2. ஆடிப்பெருக்கன்று பதிவு செய்யும் மாற்று மதத்தினருக்கும் அதிகக் கட்டணம் உண்டா? உண்டெனில் அவர்களும் மங்கலத்தை நம்புகிறார்கள் என்று கொள்ளலாமா?
3. மங்கலம் இந்து மத மங்கலம் மட்டுமா? ஈத், கிறிஸ்துமஸ் முதலியவை மங்கலம் கொண்டவையா? இல்லை என்று சொல்ல அரசுக்குத் திராணி உண்டா?
4. மங்கல நாள் அன்று அதிகக் கட்டணம் சரி எனில், சாதாரண நாட்களில் குறைந்த கட்டணம் உண்டா?5. அமங்கலமான நாட்களில் பதிவு செய்தால் இலவசமா?
6. அமங்கல நாளில், ராகு காலத்தில் பதிந்தால், அரசு பணம் கொடுக்குமா?
7. விடியற்காலை, பிரும்ம முஹூர்த்தத்தில் பதிந்தால் கட்டணம் எவ்வளவு?
8. ராகு காலம், குளிகை என்று பகுத்தறிவு அரசு, பஞ்சாங்கம் வெளியிடுமா?
9. சார்பதிவாளராக இந்து அல்லாதவர் இருந்தால் அவரும் இதனைக் கடைப்பிடிப்பாரா? ஆமெனில், மத சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகாதா?
10. பேரறிஞர் பிறந்தநாள், முத்தமிழ் வித்தகர் பிறந்த நாள் முதலானவை நல்ல நாட்களா? அன்று பத்திரப் பதிவுக்கு என்ன செலவு? அந்த நாட்களில் பிரதமை வந்தால் என்ன செய்வது?
11. அஸ்வினி முதலான நட்சத்திரங்களைத் தொகுத்து, எந்தெந்த நட்சத்திரங்களுக்கு என்ன கட்டணம் என்றும் சொல்லுமா #பகுத்தறிவு அரசு?
12. பத்திரப் பதிவு செய்பவர் நட்சத்திரமும், அன்றைய நட்சத்திரமும் பார்த்து, யோகமும் ஒத்து இருந்தால், கட்டணம் யாது?
13. பதிவு செய்பவர் ஜாதகமும் கொண்டு வர வேண்டுமா?
14. பதிவு செய்பவர் ஜாதகத்துடன் பஞ்சாங்கமும் கொண்டுவர வேண்டுமா? ஆமெனில் திருக்கணிதமா, பாம்பு பஞ்சாங்கமா?
15. பதிவு அலுவலகத்தில் பிள்ளையார் கோவில் உண்டா? தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்ய அனைத்து சாதி அர்ச்சகர்கள் பணியில் இருப்பார்களா?
16. பதிவு அலுவலகங்கள் ‘அருள்மிகு மஹாகணபதி பத்திரப் பதிவு அலுவலகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுமா?
17. பதிவு அலுவலகத்தில் உள்ள பிள்ளையார் கோவில்களில் வசூல் பெருகினால், இந்து அறம் நிலையாத்துறை எடுத்துக் கொள்ளுமா?
18. இ.அ.நி. துறை, பத்திரப் பதிவு அலுவலகத்தையும் எடுத்துக் கொள்ளுமா?
19. அப்படி எடுத்துக் கொண்டால், அரசு நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் சார் பதிவாளர்களாகப் பணியில் அமர்த்தப்படுவார்களா?
சிங்கப்பூர் தனது நீர்த் தேவைகளுக்கு என்ன செய்கிறது? தெரிந்துகொள்வோம். #Singapore
‘You know, you can drink the water direct from the tap.’ டாக்ஸி ஓட்டுநர் லிம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தேன்.
‘What lah? See ghost already ya? Why mouth open so wide?’ லிம் மேலும் கேட்டதும் திறந்த வாய் மூடிக்கொண்டது. ‘Yes, I mean what I say lah. You drink water from tap and fall ill, I pay you $100’ என்றவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். சாங்கி விமான நிலையத்தில் இறங்கியதும் முதல் ஆச்சரியம் இது. இன்னும் பலப்பல ஆச்சரியங்கள் என்னை ஆட்கொள்ளப்போவதை உணராமல் மோன நிலையில் அமர்ந்திருந்தேன்.
‘சிங்கப்பூரில் எத்தனை ஆறுகள் உள்ளன?’ என்று கேட்டவுடன் திரும்பிப் பார்த்த லிம் ஒரு விரலைக் காண்பித்தார். ரஜினிகாந்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலே என் நினைவுக்கு வந்தது.
‘ஆறுகள் எவ்வளவு?’ என்றேன் மறுபடியும்.
‘ஒன்லி ஒன்’ என்றார் ஒற்றை விரலை மீண்டும் ஆட்டியவாறே.
‘அது போதுமா?’ என்றேன் ஆச்சரியத்துடன்.
‘போதாது. ஆனால் அதுவும் தேவையில்லை. ஏனெனில் நாங்கள் தண்ணீரை மலேசியாவில் இருந்து வாங்குகிறோம்’ என்றார் சிரிப்புடன். ‘காற்று தவிர அனைத்தும் வாங்குகிறோம். அதுதான் சிங்கப்பூர்’ என்று சொல்லி மகிழுந்தை நிறுத்தினார்.
சிங்கப்பூர் முழுவதற்குமான நீர்த் தேவை நான்கு குழாய்களில் இருந்து பெறப்படுகிறது. அவையாவன:
1. வெளி நாட்டு நீர் – மலேசியாவில் இருந்து பெறப்படும் நீர், சுத்திகரிக்கப்பட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
1961 மற்றும் 1962ம் ஆண்டுகளில் சிங்கப்பூர் மலேசியா இடையே இரு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. 99 ஆண்டுகள் நிகழ்வில் இருக்கும் ஒப்பந்தங்களால் மலேசியாவின் ஜோஹோர் மாநிலம் சிங்கப்பூருக்கு நீர் வழங்கும். சிங்கப்பூர் நீரை சுத்திகரித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் நடந்தது வேறு. சுத்திகரித்த நீரைத் தனது பயன்பாடு போக மலேசியாவிற்கே விற்றுப் பணம் பார்த்தது சிங்கப்பூர். இல்லாத ஒன்றை வாங்கி, பயன்படுத்தி, மீதம் உள்ளதை விற்றவருக்கே விற்பது திறமையன்றி வேறென்ன?
மலேசியாவிலிருந்து ஒரு நாளைக்கு 250 மில்லியன் கேலன் நீரை, ஆயிரம் கேல்ச்ன் மூன்று செண்ட் என்னும் விலையில் பெற்று, சுத்திகரித்து, தனது பயன்பாட்டுக்குப் போக, பெற்றுக்கொண்டதில் 12% சுத்திகரிக்கப்பட்ட நீரை மலேசியாவிற்கு ஆயிரம் கேலன் ஐம்பது செண்ட் என்னும் விலையில் விற்க வேண்டும் என்பது உடன்பாடு. இதற்கான கட்டமைப்புகள், அணைகள், நீர்த்தேக்கங்கள், நீரை இறைக்கும் இயந்திரக் கட்டமைப்புக்கள் என்று கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட்டு அதற்கான பெரும் பகுதி செலவையும் ஏற்றுக்கொண்டது.
1990ல் சிங்கப்பூர் லிங்கூ அணையைக் கட்டியது. இது மலேசியாவில் உள்ளது. கோடைக்காலத்தில் ஜோஹோர் ஆறு வற்றிவிடும். இதனால் கடல் நீர் உட்புகுந்துவிடும். அதைத் தடுக்க, ஆண்டுதோறும் பொழியும் மழை நீரை லிங்கூ அணை தேக்கி வைக்கிறது. கோடைக்காலத்தில் நீரை ஜோஹோர் ஆற்றில் விடுகிறது. இதனால் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து நீர் கிடைக்க வழி செய்யப்படுகிறது. முன்னோக்கிச் செயல்படுவது என்பது இதுவே.
மலேசியாவிடமிருந்து பெறும் நீர் மட்டுமே சிங்கப்பூரின் நீர் ஆதாரமன்று. 721 சதுர கிமீ அளவே உள்ள நாட்டில் 8000 கிமீ அளவிற்கு நீர் சேகரிப்பு வாய்க்கால்கள் அமைத்துள்ளார்கள். இவை மழை நீரை நீர்த்தேக்கங்களுக்குச் கொண்டு செல்கிறார்கள். வானிலிருந்து விழும் ஒவ்வொரு மூன்று துளி மழை நீரில் இரண்டை சிங்கப்பூர் சேமிக்கிறது என்கிறார் தற்போதைய பிரதமர் லீ ஸியன் லூங். உலக வரைபடத்தில் ஒரு சிறு சிவப்புப் புள்ளி என்று அழைக்கப்படும் சிங்கப்பூரில் 17 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. தெருவில் நடந்து செல்லும்போது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கு துவங்குகிறது’ என்னும் வாசகங்கள் கண்ணில் தென்படுகின்றன. மழை நீரைச் சேகரிக்கும் புதைகுழாய் உள்ளதை நினைவுபடுத்துவன.
நீர்த்தேக்கங்கள் மட்டும் தானா? இன்னும் வேறென்னவெல்லாம் உள்ளன?
2. மழை நீர் – 720 சதுர கிமீ அளவுள்ள நாடு தனது மொத்த அளவையும் மழை நீர்ப் பிடிப்பு பகுதியாகப் பாவிக்கிறது. வானில் இருந்து விழும் நீர் ஒவ்வொன்றும் நிலத்தடிக் குழாய்கள் முலம் 17 நீர்த்தேக்கங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு சுத்திகரிக்கப்பட்டு நாட்டு மக்களின் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நீர்த்தேக்கங்களில் நீரின் சுத்தத்தை இடைவிடாமல் கண்காணித்த வண்ணமே உள்ளனர். நீரில் உள்ள உப்பின் அளவு, நீரில் இயற்கையாக உள்ள பாசிகள் மற்றும் நுண் உயிரினங்கள் என்று அனைத்தையும் ரோபோக்கள் மூலம் கண்காத்து வருகின்றனர். ரோபோக்கள் வாத்து வடிவில் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கங்களில் அங்குமிங்கும் அலந்துகொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவற்றின் காலுக்கடியில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு நீரின் அளவு, வெள்ள அபாய அறிவிப்புகள் முதலியனவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். நாட்டில் தெருவோரங்களில் உள்ள நீர்ப் பிடிப்பு ஜல்லிக் கம்பிகளின் மீது ‘உங்கள் நீர்த்தேக்கம் இங்கிருந்தே துவங்குகிறது’ என்ற வாசகம் தென்படுகிறது. இவ்வகையாக, ஒரு தேசமே நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள நிலை உலகில் வேறேங்கும் இல்லை எனலாம்.
நீர்த்தேக்கம் பாழடைந்தும், செடிகள், விழுதுகள் நிறைந்தும், சமூகக் கேடான செயல்கள் நடைபெறும் இடமாகவும் இருப்பதைப் பல இடங்களில் கண்டிருந்த எனக்கு, பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் வீடு இருக்கிறது, பார்க்கிறீர்களா என்று கேட்ட அந்த வீட்டு முகவரிடம், ‘நீர்த்தேக்கம் இருந்தால் கொசு முதலியவை இருக்கலாம். எனவே வேறிடம் பார்க்கலாமே’ என்றிருந்தேன். முகவர் ஆச்சரியத்துடன் நோக்கினார். ‘நீர்த் தேக்கம் இருந்தால் கொசுக்கள் இருக்க வேண்டுமா? என்ன நியாயம் இது?’ என்றவர், மேலும் தொடரவில்லை. ‘பண்டான் தேக்கத்தின் அருகில் அருமையான அரசு குடியிருப்பு இருக்கிறது. காட்டுகிறேன். சுற்றுப்புறம் பிடிக்கவில்லையென்றால் வேறு வீடு பார்க்கலாமே’ என்றவரிடம் அரை மனதாக ஒப்புக்கொண்டேன்.
மகிழுந்து பண்டான் நீர்த்தேக்கத்தின் அருகில் சென்றது. ஒரு நொடியில் சுற்றுச் சூழலே மாறிவிட்டிருந்ததை உணர்ந்தேன். கீழிறங்கிப் பார்க்கையில் கதிரவன் கீழிறங்கிக்கொண்டிருந்தான். சுமார் நான்கு தொடர் ஓட்டக் குழுவினர் என்னைக் கடந்து சென்றனர். மிதிவண்டியில் வந்த விளையாட்டு வீரர்கள் போல் தோற்றம் அளித்த சிலர் பண்டான் ஏரியில் படகுப் போட்டிகள் நடத்தும் குழுவினராம். ஏரி எப்படியுள்ளது என்று பார்க்கலாமா என்று முகவரிடம் கேட்க, அவர் பாதை காண்பித்தார். ஏரியைச் சுற்றி பெரிய மதில் சுவர்கள் அமைத்திருந்தனர். மதிகளில் புற்செடிகள், அவற்றின் ஊடே படிக்கட்டுகள். படிகளின் மீதேறினால் 6 கி.மீ. சுற்றளவுள்ள ஏரியின் பிரும்மாண்டம். மறையும் கதிரொளி, செக்கர் வானம், மாபெரும் ஏரியின் கொள்ளளவு முழுவதும் கொண்ட ததும்பும் நீர். பூமித்தாயின் கருணைக் கொடை பேருருக்கொண்டு என்னை வரவேற்றதாக உணர்ந்தேன். அத்துணைத் தண்ணீரை அவ்வளவு அருகில் நான் கண்டிருக்கவில்லை. மீன்கள் துள்ளிக் குதிக்கும் பேரெழில். சடாரெனப் பறந்து வந்து மீனைக் கொத்திச் செல்லும் நாரைகள், மகிழ்ச்சியுடன் மதகின் மீது ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள், ஆங்காங்கே பாதுகாப்புக்கான அறிவிப்புகள், ‘மீன் பிடிக்கத் தடை’ வாசகங்கள் என்று அத்துணைக் காட்சிகளையும் ஒருசேர உள்வாங்கிக்கொள்ளத் தடுமாறினேன் என்பது உண்மை.
சற்றே நடந்து சென்றால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பூங்கா, அதன் அருகில் நீர்த்தேக்கத்திற்கு மழை நீரை எடுத்து வரும் கால்வாய்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், கால்வாயின் மீதுள்ள சிறு குப்பைகளை நீக்கும் காற்றடித்த ரப்பர் குழாய்கள், கால்வாயில் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (நீரின் அளவு, குப்பைகளை வலைகளைக் கொண்டு அகற்றுதல் முதலிய பணிகளைச் செய்வர்) என ஒரு மாய உலகம் என் கண் முன் விரிந்தது. இந்த இடத்தையா வேண்டாம் என்றோம் என்று சற்று வெட்கப்பட்டேன். பண்டான் அருகில் இருந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தேன்.
நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் வினோதமான பறவைகள் வருவதுண்டு. அவை மலேயா பகுதியின் பூர்வகுடிப் பறவைகளாம். தினமும் இவற்றுடன் உரையாடியிருக்கிறேன். இவை தவிரவும் நீர் நாய்கள், மீன்கள் என்று தினமும் இயற்கைக் காட்சிகளால் நிரம்பியதாகவே எங்கள் வாழ்க்கை அமைந்தது. வேடிக்கை என்னவென்றால் அவை அனைத்துமே செயற்கையாக அமைக்கப்பட்ட இயற்கை.
ஓரிருமுறை மலேய உடும்பைக் கண்டு முதலையோ என்று பயந்திருக்கிறேன். ‘No lah, we don’t have crocodiles in our reservoirs. They are mostly garden lizards. However, stay away from them for your own safety’ என்று தனது ஓட்டத்தினூடே சில மணித்துளிகள் நின்று அறிவுரை கூறிச் சென்ற சீன மூதாட்டி தற்போது நினைவிற்கு வருகிறார்.
ஆச்சரியப்படத்தக்க இன்னொரு செய்தியும் உள்ளது. 1960, 70களில் சிங்கப்பூரின் வணிக மையங்களான நியூட்டன் சர்க்கஸ், ஆர்சர்ட் சாலை முதலியன வெள்ள நீரில் மூழ்கின. காரணம் இவை கடல் மட்டத்தை விடத் தாழ்வான பகுதிகள். இயற்கையின் இந்த தடையையும் சிங்கப்பூர் தகர்த்தெறிந்தது. ‘Storm Water Storage’ என்னும் திட்டத்தால் அப்பகுதிகளில் உள்ள உபரி நீரைப் பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மூலம் சற்று தூரத்திற்கு எழுத்துச் செல்லப்படுகின்றன. குழாய்கள் சற்று சரிந்த நிலையில் அமைக்கப்பட்டன. இதன் மூலம் உபரி நீரைப் பூமியின் புவியீர்ப்பு சக்தி மூலமே தேசத்தின் ஒரு பகுதில் இருந்து இன்னொரு பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கே தனியாக அமைக்கப்பட்டிருந்த வெள்ள நீர் சேகரிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு. பின்னர் பூமிக்கு மேலே மோட்டார் பம்புகள் மூலம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து நீர்த்தேக்கங்களுக்கான கால்வாய்களுக்குள் செலுத்தப்படுகின்றன. வெள்ளத்தை வென்றதாகவும் ஆயிற்று, வெள்ள நீரைத் தேக்கியதாகவும் ஆயிற்று.
மரீனா கால்வாய் மரீனா நீர்த்தேக்கமாக மாறிய கதையைச் சொல்லாமல் சிங்கப்பூரின் நீர் மேலாண்மையைக் கடந்து செல்லவியலாது. இங்கு கடலுக்கே அணை போடப்பட்டுள்ளது. மரீனா கால்வாய் வழியே மேலதிக மழை நீர் கடலைச் சென்றடையும். அந்த நீரைத் தேக்கினால் என்னவென்று சிந்தித்தார் சிங்கப்பூரின் தந்தையும் முதல் பிரதமருமாகிய லீ குவான் யூ. மரீனா கால்வாக்குக் அணை கட்டுவது சாத்தியமா என்று ஆராயத் தனது பொறியாளர்களை ஊக்குவித்தார். விளைவு, மரீனா கால்வாய் வழியே கடலுக்குச் செல்லும் நீர் தடுக்கப்பட்டது. சுமார் 10,000 ஹெக்டேர் நீர்ப்பிடிப்புப் பகுதி உருவானது. அதிக மழையின் போது சிங்கப்பூரின் சைனா டவுன், ஜலன் புசார் முதலிய பகுதிகளில் பொழியும் மழை நீர் இக்கால்வாய் வழியே கடலைச் சென்றடையும். தற்போது தடுக்கப்பட்ட நிலையில் நீர் வீணாகவில்லை. அதிக மழை பொழிந்து, அதே நேரம் கடல் வற்றமும் (low tide) ஏற்பட்டால், மரீனா அணைக்கட்டின் 9 மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கடலில் கலக்கிறது. உயர் அலை (high tide) நேர்ந்தால், ராட்சத நீர் இறைப்பான்கள் மூலம் உபரி நீர் கடலுக்குள் செலுத்தப்படுகிறது. அப்படியாயினும் மரீனா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு ஒரே அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத்தில் அதிக அளவில் படகு விளையாட்டுகள் நடைபெறுகின்றன. மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு, மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் இவ்வணைக்கு அமெரிக்கச் சூழியல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இம்மாதிரியான பெருவியப்பளிக்கும் பொறியியல் சாதனைகளைப் பெரும் முயற்சி செய்தாவது செயலாக்க வேண்டிய தேவை என்னவென்ற கேள்வி எழலாம். அதற்கு நாம் 1965ம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து தனி நாடான போது, அப்போதைய மலேசியத் தலைவர் துன்கு அப்துல் ரஹ்மான் இங்கிலாந்து தூதரிடம் சொன்னது: ‘மலேசியா நினைப்பதைச் சிங்கப்பூர் செய்ய வேண்டும். இல்லையெனில் நீரை நிறுத்திவிடுவோம்’. இந்த அச்சுறுத்தல் தன் தலை மீது தொங்கும் கத்தியென்றுணர்ந்த லீ குவான் யூ, தனி நாடான உடனேயே நீர் ஆதாரங்களில் தன்னிறைவை அடையும் வேலைகளில் இறங்குவிட்டார். அதற்கு மரீனா தடுப்பணை ஒரு உதாரணம். ஆங்கிலத்தில் ‘Leaving no stone unturned’ என்றொரு வாசகம் உண்டு. அவ்வகையானவையே சிங்கப்பூரின் நீர் ஆதாரப் பெருக்கத்திற்கான முயற்சிகள்.
பொழியும் மழையைத் தேக்கி வைக்கலாம். ஆனால், மழை பொழிய வேண்டுமே. சிங்கப்பூரின் தந்தை லீ குவன் யூ தடாலடியானதொரு அறிவிப்பை வெளியிட்டார். ‘இனி யாரும் மரம் வெட்டக் கூடாது. மரம் வெட்டினால் சிறை மற்றும் கடும் அபராதங்கள், சாலை விபத்துக்களில், சாலையோர மரங்களுக்குச் சேதம் ஏற்படுத்தினால் கடும் அபராதங்கள்’ என்று அதிரடி நடவடிக்கைகளை எழுத்தார். பலன்: நாடு பூங்காவானது. சாலையில் வாகனங்களில் செல்கையில் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தவிர பொட்டல் வெளிகள் என்று கிஞ்சித்தும் இல்லாதபடி நாடே பச்சை மயனானது. இதனால் மழை தவிரவும் இரண்டு பலன்கள் கிடைத்தன. ஒன்று, நாட்டின் வெப்பம் இரண்டு டிகிரி அளவிற்குக் குறைந்தது; அதனால் சில தொற்று நோய்க் காய்ச்சல்கள் குறைந்தன. இரண்டு, வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்பட்ட மாசு கணிசமாகக் குறைந்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்தார் காலஞ்சென்ற பிரதமர் லீ. காற்று மாசடைவதைத் தடுக்கவும் நாட்டின் வெப்பத்தைக் குறைக்கவும் லீ சிங்கையைப் பசுமையாக்க முனைந்தார். அதன் பலனாக மழையும் பொய்க்காமல் வாரி வழங்குகிறது. அதனால் ஆண்டுதோறும் பெறும் 2400 மிமீ மழையை அனேகமாக முழுவதுமாகவே தேக்கி வைக்கிறது சிங்கப்பூர்.
சிங்கப்பூரைப் பசுமையாக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் பூமத்திய ரேகையின் மீதும் அதன் அருகிலும் அமைந்திருக்கும் நாடுகளுக்கு விஜயம் செய்தனர். அந்த நாடுகளில் என்னென்ன மரங்கள், தாவரங்கள் வளர்கின்றன என்று கண்டறிந்து, அவற்றைச் சிங்கப்பூரில் வளர்க்கத்துவங்கினர். ஏனெனில் சிங்கப்பூரும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தேசம் என்பதால்.
3. கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம்: இதன்மூலம் தேவையான அளவு கடல் நிரைக் குடி நீராக்கித் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மார்ச் 2019 வரை மூன்று கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சிங்கப்பூரின் நீர்த் தேவையில் 30% வரை அளிக்கின்றன. 2020ம் ஆண்டிற்குள் மேலும் இரண்டு நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அரசு இயற்றியுள்ள முன்வரைவுத் திட்டத்தின் படி 2060ம் ஆண்டிற்குள் நாட்டின் தேவையில் 30 விழுக்காடாவது கடலில் இருந்தே பெறப்பட வேண்டும். அரசும் தனியார் நிறுவனங்களும் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
தற்போதுள்ள மூன்று சுத்திகரிப்பு நிலையங்களிலும் ஒன்றைக்காட்டிலும் மற்றொன்றில் நவீனத் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்க மிக அதிகமான அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. இதனைக் குறைக்கும் விதமாக முடிந்த இடங்களில் எல்லாம் சூரிய சக்தியால் இயங்கும் கருவிகளை நிறுவியுள்ளது சிங்கப்பூர். ‘எலக்ட்ரோ-டிஅயொனைசேஷன்’ என்னும் முறையைக் கண்டறிந்து, கடல் நீரை மின்காந்த அலைகளின் ஊடே செலுத்தி, அதன் மூலம் அதில் உள்ள உப்புகளைக் களைய முற்பட்டு அதனைத் தனது துவாஸ் சுத்திகரிப்பு மையத்தில் பொதுப் பயனீட்டுக் கழகம் செயல்படுத்தியுள்ளது.
அத்துடன் கடலோரத்தில் உள்ள மாமரங்கள் கடல் நீரிலிருந்து நன்னீரை எப்படிப் பிரித்தெடுக்கின்றன என்று கண்டறிந்து ‘பயோமிமிக்’ முறையில் செயற்கையாக அதனைச் செய்ய இயலுமா என்றும் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது அரசு. அத்துடன் இயூரிஹலின் மீன் வகைகள் ( பல வகையான நீர் நிலைகளிலும் வாழும் மீன்கள்) எவ்வாறு உப்பு நீரை நல்ல நீராக்குகின்றன என்று கண்டறீயும் ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இம்மாதிரியான இயற்கை முறைகளைக் கையாண்டால் குறைந்த மின்சாரச் செலவில் கடல் நீரைச் சுத்திகரிக்க இயலும் என்பதால் அம்முறைகளைக் கற்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.
ஒரு க்யூபிக் மீட்டர் அளவு சுத்திகரிப்பு நீரை உற்பத்தி செய்ய ஐம்பது காசுகள் முதல் ஒரு டாலர் வரை செலவாகிறது என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்தச் செலவையும் குறைக்கவே மேற்சொன்ன நடைமுறைகள்.
4. கழிவு நீர் சுத்திகரிப்பு: நாட்டு மக்கள் பயன்படுத்தி நீரை, உலகிலேயே மிகவும் அதிகமான தரக்கட்டுப்பாடுகள் கொண்ட சுத்திகரிப்பு முறைகளைக் கொண்டு குடிநீராக மாற்றி அதனைப் பயன்படுத்துவது. மனிதர்கள் பருகும் தரத்தில் இருந்தாலும் தற்போது வரை இது மக்களுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை. இவ்வாறாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர், இரண்டாம் குழாயான நீர்த்தேக்கங்களுக்குச் சிறிய அளவில் அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்படுகிறது.
மக்கள் பயன்படுத்திய நீர் என்பதால் அந்த நீரும் மூன்றடுக்கு முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மெம்ப்ரேன் எனப்படும் மெல்லிய நீர் சலிப்பான்கள் மூலம் பலமுறை சுத்தப்படுத்தப் படுகிறது. இதன் மூலம் திடக் கழிவுகள், நுண் கழிவுகள் முதலியன நீக்கப்படுகின்றன. பின்னர் அந்த நீரின் ஊடாக அல்ட்ரா வயலட கதிர்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் பாக்டீரியா, வைரஸ் முதலான நுண் கிருமிகள் நீக்கப்படுகின்றன. இம்மாதிரிப் பல முறைகள் சுத்திகரிக்கப்பட்ட நீர் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகத் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் 2060ம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று அரசு தெரிவிக்கிறது.
இவ்வகையாகச் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றி அதன் தொழில் துறைப் பயன்பாட்டாளர்கள் கூறுவதைத் தெரிந்துகொண்டாலே அந்த நீரைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இயலும். இதற்காக அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என். சிங்கப்பூரில் உள்ள பயன்பாட்டாளர்களைப் பேட்டி கண்டது. இவ்வகையான நீரைப் பெரிய அளவில் பயன்படுத்தும் Systems on Silicon நிறுவனத் தலைவர் சி.வி.ஜெகதீஷ் சொல்வது, ‘சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை எங்கள் தொழிற்சாலையில் தொழில் தேவைகளுக்காகப் பயன்படுத்துகிறோம். அரசு நிறுவனமான பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB – Public Utilities Board) அளிக்கும் இந்த நீரை நாங்கள் மூன்று முறைகள் மறு சுழற்சி செய்து பயன்படுத்திப் பின்னரே கழிவு நீர் வாய்க்காலில் விடுகிறோம்’ என்கிறார்.
இம்முறையில் பெறப்படும் நிரைப் பற்றி தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ குவான் யூ கொள்கை ஆய்வுக் கழகத்தின் (Lee Kuan Yew School of Public Policy) பேராசிரியர் அசித் பிஸ்வாஸ், ‘சிங்கப்பூரின் இந்த மறுசுழற்சி முறைகளை உலக நாடுகள் பெருமளவில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் கடைசிச் சொட்டு நீரையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இவ்வாறு மறுசுழற்சி செய்வதற்குப் பெரிய அளவிலான மின்சக்தி தேவைப்படுகிறது. வரும் ஆண்டுகளில் குறைந்த மின்சக்தியில் நகழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதைப் பற்றி மேலும் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும்’ என்கிறார்.
‘NeWater’ – ‘புதுநீர்’ என்றழைக்கப்படும் மறுசுழற்சி நீரை ஒரு க்யூபிக் மீட்டர் அளவு உற்பத்தி செய்ய முப்பது முதல் ஐம்பது சிங்கப்பூர் காசுகள் செலவாகிறது என்கிறது அரசு.
1974ல் புது நீருக்கான முயற்சிகள் துவங்கியிருந்தன. ஆனால், தொழில் நுட்பச் செலவுகள் மிக அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அது மீண்டும் துவக்கப்பட்டு 2002ம் ஆண்டு நனவானது. ‘புது நீர்’ குறித்துப் பேசுகையில் லீ குவான் யூ சொன்னது: ‘இதைச் சாதிக்கத் தேவையான தொழில்நுட்பம் எப்போதாவது ஏதாவது வகையில் உருவாகும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.’ காலஞ்சென்ற தீர்க்கதரிசியின் நம்பிக்கை தற்போது உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருக்கிறது.
2061ம் ஆண்டு மலேசியாவுடனான நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் வரை காத்திருக்காமல், நீர் ஆதாரங்களின் தன்னிறைவை எட்டிவிட முயல்கிறது சிங்கப்பூர். 2014ம் ஆண்டு நாட்டின் நீர்த்தேவையில் 30% மறுசுழற்சி நீரால் ஈடுகட்டப்படுகிறது என்கிறது அந்த அறிக்கை.
நீரைக் கொணர்வது, சுத்திகரிப்பது என்பது வரை சரி. ஆனால், உபயோகம் எப்படி? அங்கே சிக்கனம் பேணப்படுகிறதா? என்றால் அங்கும் பெருவியப்பே காத்திருக்கிறது.
ஒவ்வொரு வீட்டிற்கும் நீர்மானி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குடும்பம் கடந்த மாதம் பயன்படுத்தியுள்ள நீரின் அளவு, தேசம் முழுமைக்குமான சராசரிப் பயன்பாட்டின் அளவு முதலியன மாதாந்திர அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு குடும்பம் தான் அதிகமாகப் பயன்படுத்திய மாதங்கள் யாவை என்று அறிந்து, அதற்கேற்றாற்போல் பயன்பாட்டை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். தற்போது வீடுகளில் கழிவறை, சமையல் அறை முதலிய இடங்களில் உள்ள குழாய்களிலும் நீர்மானிகள் பொருத்தப்படுகின்றன. நீராடுவதற்கு, கழிப்பிடப் பயன்பாட்டிற்கு, சமையலுக்கு என்று தனித்தனியாக எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்துகொள்ள வாய்ப்பாக அமைகிறது. உலகில் வேறெந்த நாட்டிலும் சிங்கப்பூர் அளவிற்கு நீர் மேலாண்மை செய்யப்படுகிறதா என்பது கேள்வியே.
நீர் மேலாண்மையில் தான் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மையில் திறன் வாய்ந்த நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது சிங்கப்பூர். அவற்றின் மூலம் மத்தியக் கிழக்கு நாடுகள், சில ஆப்பிரிக்க நாடுகள், பாரதத்தின் குஜராத், ராஜஸ்தான் முதலிய மாநிலங்கள் முதலியவற்றில் நீர் ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சிகளிலும், உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. உதா: சிங்கப்பூரின் ஹைஃபளக்ஸ் என்னும் நீர் மேலாண்மை நிறுவனம் ஜப்பானிய நிறுவனமான இத்தோச்சுவுடன் இணைந்து குஜராத்தின் பாருச் பகுதியில் நாளொன்றுக்கு 88 மில்லியன் கேலன் அளவிற்குக் கடல் நீரிலிருந்து நன்னீர் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இவற்றினாள் தனக்கு அன்னியச் செலாவணி கிடைக்க வழி செய்வதுடன், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் கருதுகோளின் வழி தனக்குத் தெரிந்த, தன்னிடமுள்ள திறமையை உலகமும் பயன்படுத்திக் கொள்ளத் தன்னிடமுள்ள 180 நீர் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் 26 நீர் தொடர்பான ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் வழிசெய்து வருகிறது சிங்கப்பூர். நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கங்கள், நீர் மேலாண்மை குறித்த புத்தாய்வுகளுக்கான பயிற்சிப் பட்டறைகள், நீர் தொடர்பான தொழில் முனைவோருக்கான பயிலரங்குகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்று உலகில் பல நாடுகளையும் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கச் செய்துவருகிறது சிங்கப்பூர்.
இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத நாடு இன்று உலகின் மற்றெல்லா நாடுகளுக்கும் பல துறைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. நீர் மேலாண்மை அவற்றில் ஒன்று. அவ்வளவே.
முன்னர் அறிவித்தபடி தொடர் கம்பராமாயண வகுப்புகள் இணையவழியில் துவங்கவுள்ளன.
மதுரை விரிவுரையாளர் முனைவர். ஜெகன்னாத் அவர்களின் தொடர் விரிவுரைக்குத் தங்களை அழைக்கிறேன்.
நாள் : ஆகஸ்டு 8, ஞாயிறு, ஆடி அமாவாசை அன்று.
நேரம் : இந்திய நேரம் காலை 11:30 மணி (சிங்கப்பூர் மதியம் 2:00 மணி)
காலம் : ஒரு மணி நேரம்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு நிகழும்.
தேரழுந்தூரில் கம்பர் விரிவுரையாளர் ஜெகன்னாத்
விரிவுரையாளரைப் பற்றிய சிறு குறிப்பு :
வைணவ சமய இலக்கியங்களை முறையாகப் பாடங்கேட்டவர்.
நாலாயிர திவ்யப் பிரபந்த உரைகளில் ஆய்வு மேற்கொண்டவர்.
தமிழ் இலக்கியங்களில் பயிற்சி உடையவர்.
கம்பன் பால் காதல் கொண்டவர்.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் குறித்தும் கம்பராமாயணக் காப்பியம் குறித்தும் பல்வேறு தமிழ் இலக்கியங்கள் பற்றியும் தொடர் சொற்பொழிவுகளும் ஆய்வுரைகளும் நிகழ்த்தி வருகிறார்.