பௌர்ணமி

ஊரின் அனைத்து வீடுகளிலும் ஒருசேர இழவு விழுந்தது போல் ஒரு பேரமைதி நிலவியது. மௌனமே நிலவினாலும் மௌனத்தின் அலறல் பேரொலியாகக் காதுப் பறைகளில் அறைந்தது. பெருமௌனத்தின் பேரழுத்தம் ஏற்படுத்தும் வலியை அன்று நான் உணர்ந்தேன்.

வாபி செல்லும் பாதை என்று ஒன்று இருந்தால் அது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

மாட்டேடார் வேன் வழியில் நின்றுவிடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். சுற்றிலும் பாலைவனம் போல் ஆள் அரவமே இல்லாத ஒரு வெறுமை. ஆங்காங்கு சில பெயர் தெரியாத பறவைகள் அமர்ந்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. இப்பாலைவனத்தில் முட்டாள்கள் போல் இவர்கள் வருகிறார்களே என்று அவை பேசியிருக்கலாம்.

ஒரு சில நெடிதுயர்ந்த பனைமரங்கள் அவ்வப்போது தென்பட்டன. அந்த மரங்களுக்குக் கீழே சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. எங்கோ அருகில் யாராவது ஒரு மனித மேய்ப்பன் இருந்திருக்க வேண்டும். சுற்றுமுற்றும் பார்த்தபடியே பயணித்தேன். யாரும் கண்ணில் படவில்லை.

வேனில் என்னைத் தவிரவும் இரு பொறியாளர்கள் இருந்தனர். வாபியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஒரு மின் ஏற்றிக் கட்டுமானம் விஷயமாக நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். இந்தப் பாலைப் பகுதியில் தான் தொழிற்சாலை கட்ட வேண்டுமா என்று ஸ்டெர்லைட்டைச் சபித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தோம்.

மாலை நெருங்கும் ஒரு புரிபடாத வேளையில் வாபியின் நகர அமைப்பு தூரத்தில் தென்பட்டது. சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆறுதல் ஏற்பட்டது. பௌர்ணமி சந்திரன் மெதுவாக மேலெழும்பிக் கொண்டிடருந்தான்.

வாபியின் நகர மையத்திலிருந்து சில மைல்கள் தொலைவில் தொழிற்சாலை இருந்த்து. எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நகரக் குடியிருப்பு வீட்டில் நுழைந்து ஒரு வழியாக இரவு உணவை முடித்த போது தான் அந்த மூவரும் வந்தனர்.

சதீஷ், சாமினாதன், தராகா பட் – மூவரும் ஸ்டெர்லைட்டில் பணிபுரியும் பொறியாளர்கள். எல்லாருக்கும் 28-29 வயது இருக்கும். மறு நாள் வேலை பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு சொந்தக் கதைகளுக்குத் தாவினோம்.

இரண்டு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சதீஷ் சென்னைக்காரன். சாமினாதன் தஞ்சாவூர். பேச்சு கல்யாணம் பற்றித் திரும்பியது. எங்கள் யாருக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. சங்கோஜப்பட்டுக்கொண்டே எங்கள் கல்யாண எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அப்போதுதான் அதுவரை தராகா பட் பேசவே இல்லை என்று உரைத்த்து. அவனுக்கும் புரிய வேண்டுமே என்று ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தோம் என்றாலும் தொழிற்சாலை, வேலை முதலியவை பற்றிப் பேசியபோது உற்சாகமாகப் பேசிய பட், சொந்த வாழ்க்கை பற்றிப் பேச்சு திரும்பிய போது மௌனியாகியிருந்தான்.

நான் சாமினாதனையும் சதீஷையும் பார்த்தேன். அவர்களும் மௌனமானார்கள்.

‘பட், உன் கல்யாண எண்ணங்கள் என்ன ? உங்கள் காஷ்மீர் பெண்கள் ரொம்பவும் அழகாக இருப்பார்களே ! உனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்ட்தா ? காதல், கீதல் ஏதாவது..’, என்று அவனிடம் விடாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அறையில் என்னைத் தவிர யாரும் பேசியிருக்கவில்லை. ஒரு கனமான மௌனம் நிலவியது. மௌனத்தின் பாரம் அழுத்தியது. உற்றுப் பார்த்தேன். பட்டின் உடல் குலுங்குவது போல் தெரிந்தது.

‘ஊர்க்கதைகள் என்றால் பட் பேச மாட்டான்’, என்றான் சாமினாதன்.

‘ஏன் பட் ? உன் கதை தான் என்ன? ஏன் பேச மறுக்கிறாய்? காதலி நினைவா?’, என்று விளையாட்டாகக் கேட்டேன்.

பெருத்த ஓசையுடன் பெய்யும் மழை போல பட் ஓவென்று அழத் துவங்கினான். மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு உரத்த குரலில் அழுதான். சாமினாதனும், சதீஷும் நான் ஏதோ கொலைக்குற்றம் செய்தது போல் என்னைப் பார்த்தார்கள்.

‘நான் என்ன கேட்டு விட்டேன் ? ஊரைப் பற்றித் தானே கேட்டேன்?’, என்றேன் நான்.

யாரும் சிறிது நேரம் பேசவில்லை. கால் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த பட் மெதுவாகப் பேசினான்.

‘உனக்கு அக்கா, தங்கைகள் உண்டா?’

நான் கேட்டதற்கும் பட் கேட்டதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குப் புரியவில்லை. ‘இல்லை, ஒன்று விட்ட அக்கா ஒருத்தி மட்டும் உண்டு’, என்றேன் நான்.

ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. அனைவரும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். எதற்கு இந்த மௌனம் என்று எனக்குப் புரியவில்லை.

‘உன் அக்கா, தங்கை, அம்மா மூவரும், உன் கண் முன்னால்..’, என்று சொல்லத் துவங்கிய பட் மேலும் பேசம் முடியாமல் மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான். 28 வயது ஆண் குரலெடுத்து அழுவது என்னவோ போல் இருந்தது.

இவனிடம் ஏன் பேச்சுக் கொடுத்தோம் என்று எண்ணியபடி நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தேன் நான்.

மீண்டும் பட் பேசத் துவங்கினான்.

‘அப்பா மாவட்ட நீதிபதி. அன்று இரவு முழு நிலவில் நான், அம்மா, அக்கா, அப்பா நால்வரும் வீட்டினுள் முற்றத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். தங்கைக்கு உடல் நலம் இல்லாமையால் உள்ளே படுத்திருந்தாள். இரவு 9 மணிக்கு வாசல் கதவு உடைபடும் அளவுக்கு தட்டப்பட்டது. முழு முகமூடி அணிந்த ஆறு ஆயுதம் தாங்கிய தீவிரவதிகள் உள்ளே நுழைந்தனர்.

‘காலி பண்ணச் சொல்லி இரண்டு வாரம் ஆகிவிட்டது. இன்னும் இங்கேயே இருக்கிறாய்’, என்று ஏக வசனத்தில் ஏசினர்.

ஒல்லியான ஒருவன் புகை பற்ற வைப்பது போல் கையை உள்ளே விட்டு சின்ன கத்தி ஒன்றை எடுத்து அப்பாவின் கழுத்தில் ஏற்றினான். இரண்டு முறை முழித்துப் பார்த்த அவர் தலை சரிந்தது.

நான் எழுந்து தடுக்க ஓடினேன். பின்னாலிருந்து ஏதோ ஒன்று என் தலையில் இறங்கியது. அரை மயக்க நிலையில் கீழே விழுந்து விட்டேன். ஆனால் பார்வையும் கவனமும் மீதம் இருந்தன.

பின்னர் நடந்ததுதான் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. என் அம்மாவையும் அக்காவையும் தங்கையையும் ஒரு சேர ஆறு பேரும் மாறி மாறிக் குதறினர். தங்கை உடல் நலம் இல்லை. அவள் அலறல் அதிகமாக இருந்த்து. அனைத்தையும் எங்கோ தொலைவில் நடப்பது போன்று என் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன. இருளின் ஆழத்தில் என் மனம் அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டிருந்த்து. கை கால் எழும்பாமல் கையறு நிலையில் நான் கிடந்தேன்.

பல முறை என் ஆழ்மன எண்ண ஓட்டம் எழுந்து பெரும் சக்தி பெற்று அவர்களைத் தாக்கியது. என் கைகள் பலம் பெற்று அவர்களின் பிடறியைப் பற்றின. ஆனால் நான் மேலே இருந்து பார்க்கிறேன் என் உடல் கீழே கிடக்கிறது. உயிர் வெளியேறத் துடித்து சற்று மேலெழுந்து பின்னர் மீண்டும் என் உடலினுள் புகுவது போல் இருந்த்து.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஆறு நாய்களும் வெளியேறின.

அம்மா மெல்ல எழுந்தார். தட்டுத் தடவி அக்காவையும் தங்கையையும் அருகருகே கிடத்தினார். அவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தினார். சுவாலை எரியத் துவங்கியதும் ‘என் செல்லமே’ என்று கதறி அவர்கள் மீது பாய்ந்தார்.

நான் மறு முறை கண் விழித்த போது மருத்துவமனையில் இருந்தேன். இந்திய அரசின் தயவால் என்னைப்போன்ற காஷ்மீர் பண்டிட்களுக்கு மஹாராஷ்டிராவில் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது. இப்போது குஜராத்தில் வேலை’, என்று சொல்லி மௌனமானான் பட்.

இருபது நிமிடங்கள் யாரும் பேசவில்லை.

ஊரின் அனைத்து வீடுகளிலும் ஒருசேர இழவு விழுந்தது போல் ஒரு பேரமைதி நிலவியது. மௌனமே நிலவினாலும் மௌனத்தின் அலறல் பேரொலியாகக் காதுப் பறைகளில் அறைந்தது. பெருமௌனத்தின் பேரழுத்தம் ஏற்படுத்தும் வலியை அன்று நான் உணர்ந்தேன்.

‘மறுமுறை ஊர் சென்று வந்தாயா?’, என்று கேட்டேன். ஏன் கேட்டேன் என்று தெரியவில்லை. மௌனத்தைன் வலியை விட்டு மீள்வதற்காக இருக்கலாம்.

’99-ல் வாஜ்பாய் அரசு ‘பண்டிட்களுக்கு மறுவாழ்வு’ என்று அறிவித்த போது ஒருமுறை சென்று பார்த்தேன். ஊருக்குள் செல்ல மனமில்லாமல் வெளியுடனேயே திரும்பிவிட்டேன்’, என்ற பட் எழுந்து தண்ணீர் குடித்து மேலே தெரிந்த முழு நிலவைப் பார்த்தான்.

(பி.கு: 1989-91ல் வி.பி.சிங். அரசின் செயலற்ற தன்மையால் வீடு, குடும்பம் இழந்த பல ஆயிரம் காஷ்மீர் பண்டிட்களில் ஒருவரான தராகா பட், தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றுகிறார்.)

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

3 thoughts on “பௌர்ணமி”

 1. நிஜ சம்பவங்கள் இதுபோல ஏராளம்..காஷ்மீர் பண்டிட்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். அக்கிரமம் செய்தவர்கள் கருவறுக்கப்படுவார்கள்.

  Like

 2. இதை ஏன் எழுதுகிறீர்கள்?. மனம் கனத்துபோகிறது. பிரச்னையின் தீவிரத்தையும் அதை சரி செய்ய விரும்பாத அரசியலையும் அறிந்தவன்

  Like

 3. திரு.பட் இருந்த இடத்தில்.ஒவ்வொரு இந்தியனும் தன்னை பொருத்திக் கற்பனை செய்து பாருங்கள்.
  அந்த வலியின் கொடுமை தெரியும்,புாியும்.
  கொச்சின் தேவதாஸ்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: