கண்ணன் சேஷாத்ரி ‘அருமா கடலமுதன்’ பற்றிப் பேசினாலும் பேசினார் இந்த முறை அவசியம் சிறுபுலியூர் என்ற தீர்மானத்துடன் தேரழுந்தூரிலிருந்து ஒரு நாள் மாலை கிளம்பினேன். தம்பி தான் சாரதி.
பச்சை வயல்கள் சூழ்ந்த தேரழுந்தூர்- திருவாரூர் சாலையில் உள்ளது சிறுபுலியூர்.கோவில் வாசலுக்கு வந்தவுடன் தனியான ஒரு தீவிற்கு வந்தது போல இருந்தது.
எங்கும் பேரமைதி.எங்களையும் பெருமாளையும் தவிர சில நூறு கிளிகள் மட்டுமே. அவற்றின் பேச்சில் எங்களைப்பற்றிப் பேசிக்கொள்வது போல் இருந்தது.
மூச்சு விடுவதில் பிரச்சினை உள்ள ஒரு வயதான அர்ச்சகர் பாசுரம் சேவித்துக் கற்பூரம் ஏற்றினார். சின்ன திருமேனி. கிருபாசமுத்திரப் பெருமாள் (எ) அருமா கடலமுதன். சயனத்தில் இருந்தார்.
தாயார் சந்நிதி தனியாக. யாரும் இல்லாமல் ‘திரு மா மகள்’ என்னும் பெயருடைய தாயார் மோனத்தில் ஏகாந்தமாக எழுந்தருளியிருந்தார்.அந்தப் பேரமைதி வேறோர் இடத்தில் இல்லை.
சந்நிதியில் இருந்த ஒரு பழுதடைந்த பழைய சாராட்டு வண்டி (மாட்டு வண்டி?) வளமான பழைய காலத்தை நினைவு படுத்தியது. அது ஏன் அங்கு நிற்கிறது என்று கேட்கலாம் என்றால் சன்னிதியில் யாரும் இல்லை. ஆமாம். அர்ச்சகருக்கு மாதத்துக்கு ரூ.40 சம்பளம் கொடுத்தால் யார் தான் வருவார்கள்?
ஒரு வழியாகப் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் ‘இங்கெல்லாம் யாரு சாமி வர்றாங்க? உங்களை மாதிரி வெளியூர் ஆசாமிங்க வந்தாத்தான் உண்டு’ என்றபடி வந்த அற நிலைய ஊழியர் வறுமையின் பிரதிநிதியாக இருந்தார். ‘சம்பளம் மூணு மாசம் பாக்கி’ என்றார் கோவில் காவலர். அர்ச்சகரை விட இவருக்குக் குறைவாகவே இருக்கும். அதுவும் பாக்கி. அறம் நிலையாத்துறை வாழ்க.
வறுமை இருந்தாலும் காவலர் முகத்தில் இறைப்பணி செய்யும் பெருமை தெரிந்தது.
ஊரில் ஒரு வாரம் தங்கினால் ஏழெட்டு விஷ்ணுபுரம் நாவல்கள் எழுதிவிடலாம். அவ்வளவு அமைதி, இறை உணர்வு. தத்துவ விசாரணை செய்ய உகந்த திவ்யதேசம்.
‘கிஞ்சித்காரம் டிரஸ்ட்’ உபயத்தில் கோவிலில் பல வேலைகள் நடந்துள்ளது தெரிந்தது.
கோவிலை விட்டு வெளியே வரலாம் என்று த்வஜஸ்தம்பம் அருகில் நின்று அரை இருளில் மீண்டும் அமுதனைச் சேவிக்க எத்தனித்தேன். சொல்லி வைத்தது போல் அத்தனை கிளிகளும் கத்தின. ‘பார், பார், பாராளும் எங்கள் பெருமாளைப் பார்’ என்று சொல்வது போல் இருந்தது.
கோவில் வெளியில் ஒரு நாய்க்குட்டியும் சில குருவிகளும் ‘ஓடிப்பிடித்து’ விளையாடிக் கொண்டிருந்தன. கட்டப்பட்ட பசு மாடுகள் திரும்பி ஒரு முறை பார்த்து பின்னர் மீண்டும் வைக்கோல் தின்னத் துவங்கின.
காரில் ஏறும் போது தாழப் பறந்த ஒரு கிளி என் தலை மீது வந்ததும் ‘கீ கீ’ என்று கத்தியது. அது என்ன சொன்னது என்று தெரியாவிட்டாலும் ஏதோ ஆசீர்வாதம் என்று உணர்ந்தேன். ‘ஊர்க்காரர்கள் தான் வரவில்லை, ஏதோ நீயாவது வந்தாயே’ என்று சொல்லியிருக்கலாம். அல்லது ‘ஊருக்குப் போய் அருமா கடல் அமுதனைப் பற்றி வெளியில் சொல். மக்களை வரச் சொல். அருள் வழங்கப் பெருமாள் காத்திருக்கிறார்’ என்பதாகவும் இருக்கலாம்.
உங்களுக்குத் என்ன தோன்றுகிறது? இல்லையெனில் கிளி சொன்னது என்னவென்று ஆண்டாளிடம் தான் கேட்கவேண்டும்.
ஒரு முறை சிறுபுலியூர் சென்று வாருங்கள். இல்லை இந்தப் பாசுரத்தையாவது பாடுங்கள். தமிழ் கொஞ்சுகிறது.
‘கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே’
திருமங்கையாழ்வாரின் கிளியாக இருக்குமோ என்னவோ? 🙂 எங்கள் ஆசார்யன் ஸ்வாமியின் ஊர் சிறுபுலியூர். க்ருபா சமுத்திரப் பெருமாள், திருமாமகள் நாச்சியார் இருவரும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மிகவும் அமைதியாக இருப்பார்கள். நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தவுடன் மறுபடியும் போய் அருமாகடலை சேவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
LikeLike