மசாலா தோசையும் பார்ப்பன ஏகாதிபத்தியமும்

நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு

எல்லாவற்றிற்கும் ஒரு யூனிபார்ம் இருக்கிறது. இவரிவர் இப்படி இப்படித்தான் உடை, அலங்காரத்துடன் இருக்க வேண்டும் என்று இருக்கிறது.

தேர்தல் வருகிறது. அதனால் முற்போக்குவாதிகள், பேச்சாளர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்னும் கேள்வி உங்கள் மனதில் இருப்பது தெரிகிறது. முடிந்தவரை உங்களை முற்போக்குவாதியாக ஆக்க கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறேன்.

பெண்ணாக இருந்தால் தலையைப் பரத்திவைத்து, இந்துவாக இருந்தாலும் பொட்டில்லாமல் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் வாராத தலையும் குறுந்தாடியுமாக இருக்க வேண்டும். கருப்புக் கலரில் சோடா புட்டி கண்ணாடி அணிந்திருந்தால் இன்னும் விசேஷம். இப்படி நீங்கள் பொது விழாக்களில் காட்சியளித்தால் உங்களை முற்போக்காளர்கள் என்று கண்டுகொள்ளலாம். இதெல்லாம் இல்லை, வெள்ளையும் சொள்ளையுமாகவும் மீசை, தாடி முதலான அலங்காரங்கள் இல்லாமலும் இருப்பேன், ஆனாலும் முற்போக்கு என்று அறியப்பட வேண்டும் என்றால் நீங்கள் ஹிந்து நாளிதழ் தொடர்பில் இருக்க வேண்டும்.

தீவிர முற்போக்கு என்று அறியப்படவேண்டும் என்றால் கருப்புக் கலரில் துண்டு அல்லது கருப்பு சட்டை அணிந்திருக்க வேண்டும். ஒரு வாக்கியம் பேசி முடித்தபின் ‘பார்ப்பான் ஒழிக’ என்று ஒருமுறை சொல்லவேண்டும். ‘பார்ப்பனீயம்’ என்கிற பதப் பிரயோகம் மிக அவசியம். 30 நிமிடப் பேச்சில் 10 முறை ‘பார்ப்பனீயம்’ வர வேண்டும்.

உதாரணமாக நீங்கள் மசாலா தோசை பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் இப்படிப் பேசலாம். ‘மசாலா என்பது தமிழ்ச் சொல் அல்ல. சாலா என்பது இந்தி. மச்சான் என்னும் பொருள்படும். ‘ம’ என்பது மலையாளத்தைக் குறிக்கிறது. தோசை என்பது தமிழாக இருந்தாலும், அதற்கு மலையாளமுன் இந்தியும் சேர்ந்த அடைமொழி தேவைப்படும் அளவிற்கு இந்த பார்ப்பன ஏகாதிபத்தியம் இன்று நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. இதெல்லாம் பார்ப்பனீயத்தின் அடக்குமுறை வழிகள்’ என்று சொன்னால் பேச்சு எடுபடும்.

மசாலா தோசைக்கும் பார்ப்பனீயத்திற்கும் என்ன தொடர்பு என்று கேல்வி கேட்கும் அளவிற்கு யாருக்கும் மண்டைகுள் மசாலா இருக்காது. அப்படி யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தால், கேள்வி கேட்டால், இருக்கவே இருக்கிறது தெளிந்த பதில் :’ இது ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளின் கேள்வி. ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதம் தமிழகத்தில் வேறூன்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம் என்று அண்ணா அன்றே சொன்னார்’ என்று ஒரு போடு போட்டால் ஒரு பயல் வாய் திறக்க மாட்டான்.

இடதுசாரி என்று அறியப்பட வேண்டும் என்றால் அதற்கும் வழிமுறைகள் உள்ளன. முதலில் தலையில் எண்ணெய் இருக்கக்கூடாது. மூச்சுக்கு முன்னூறு நடவை ‘செங்கொடி’, ‘புரட்சி’, ‘லெனின்’, ‘மார்க்ஸ்’ என்று ஜபம் செய்யவேண்டும். மன்னிக்கவும். ஜெபம் அல்ல. செபம். மறந்தும் ‘ஸ்டாலின்’ பெயர் வரக் கூடாது. வந்தால் உங்களை ‘தி.மு.க.’ என்று எண்ண வழி பிறந்துவிடும். தி.மு.க.விலேயே யாரும் அவர் பெயரைச் சொல்வது கிடையாது. 60 வயதானாலும் ‘இளைய தளபதி’ தான். ‘மார்க்ஸ்’ ஜெபம் முடிந்தவுடன், காங்கிரஸை முதலில் சாட வேண்டும். ஒரு நிமிடம் மட்டும் தான் சாடலாம். பின்னர் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். என்று நிறைய கத்த வேண்டி இருக்கிறது. பேச்சு யாருக்கும் புரியக்கூடாது, ஆனால் தமிழில்தான் பேசுகிறார் என்று தெரியவேண்டும்.

உதாரணமாக: காவி பயங்கரவாதம் பற்றி மார்க்ஸ் சொன்னாரே, மாவோ சொன்னாரே, காஸ்ட்ரோ சொன்னாரே, செ குவேரா சொன்னாரே அப்போதெல்லாம் வாய் மூடி இருந்த மோடி அரசு, நாங்கள் சொல்லும்போது மட்டும் வாய் திறபப்து ஏன்? வள்ளுவர் சொன்ன ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதைத் தானே எங்கள் புரட்சிவீரர் லெனின் சொன்னார்? ஆகவே சொல்கிறோம் – இந்திய ஏகாதிபத்தியம் முடிய வேண்டும்; இலங்கையில் வாடும் மீன்களுக்கு இரை வேண்டும். இவை கிடைக்கும் வரை போராடுவோம்.’

அதாவது, எல்லா இடங்களுக்கும் சென்று வர வேண்டும், ஆனால் எதுவும் தெளிவாக இருக்கக் கூடாது. இது கம்யூனிசத்தின் முதல் பாடம். இரண்டு வாக்கியங்களுக்கு ஒரு முறை ‘லெனின்’, ‘மாவோ’ என்று இருக்க வேண்டும். அவ்வளவுதான். இனிமேல் நீங்கள் தான் சார் இடதுசாரி. மறந்தே போய்விட்டேன். ‘அவர் சொன்னாரே, இவர் சொன்னாரே’ என்றுதான் சொல்லவேண்டுமே தவிர என்ன சொன்னார் என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் பின்னர் நமக்குத் தோன்றியதைச் சேர்த்து ‘லெனின் சொன்னார்’ என்று சொல்லிக்கொள்ளலாம். லெனினிடம் கேட்கவா போகிறார்கள்?

தி.மு.க. பேச்சாளர் என்றால் ஒரே தகுதி இருந்தால் போதும். ‘மாநில சுயாட்சி’. இந்தத் தாரக மந்திரம், மன்னிக்கவும், முக்கிய சொல், உங்கள் பேச்சில் முழுவதும் இடம்பெறுமாறு இருக்க வெண்டும். ‘ஊழல்’ என்னும் சொல் வரக்கூடாது; கேட்பவர்கள் தி.மு.க. பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொள்வார்கள். ‘ராணியைப் பதவி இறக்குவோம்’ என்றும் சொல்லலாம். எதற்கும் ‘தமிழகத்தில்’ என்று சேர்த்துச் சொல்லவும். யாராவது ‘தில்லி’ என்று நினைக்கக் கூடாது. இது தவிர கனிமொழி, ராசா, பகுத்தறிவு, அண்ணா இதெல்லாம் வரக்கூடாது. ஓட்டு வாங்க எது பயன்படுமோ அதை மட்டும் தான் சொல்லவேண்டும். முடிக்கும் போது, ‘நாங்கள் இறைவனுக்கு எதிர் இல்ல; இறையீயத்திற்குத் தான் எதிர்’ என்று சொல்ல வேண்டும். உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. கேட்பவர்களுக்கும் புரியாது. எனவே குழப்பமில்லை.

தி.மு.க. பேச்சாளர் என்றால் இன்னொரு கடமையும் இருக்கிறது. அது ‘பார்ப்பனீயம்’ பற்றியது. ‘நாங்கள் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிர்; பார்ப்பனர்களுக்கு அல்ல’ என்று சொல்ல வேண்டும். இது உங்களுக்குப் புரியாவிட்டாலும் பரவாயில்லை. இதுவரைக்கும் சொன்னவர்கள் யாரும் புரிந்தா சொன்னார்கள்? ஆனால் இதைச் சொல்ல வேண்டியது கடமை, ஒரு சாங்கியம், சடங்கு. பகுத்தறிவு சாங்கியங்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி யாராவது ஆர்.எஸ்.எஸ். காரன் கேட்டால் என்ன செய்வது? சோ, தந்தி டி.வி. இப்படி யாராவது புறம்போக்குகள் கேட்பார்கள். ஆ..பக்கங்கள் என்று ஒரு வம்புக்காரன் இருக்கிறான். அவன் கேட்பான். அதற்காக இதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.

‘பார்ப்பனீயம் என்பது பார்ப்பனன் + ஈயம் என்று பிரிக்க வேண்டும். அதாவது ஈயத்தில் ஒரு வகை அது. இந்த ஈயம் கொஞ்சம் பள பளவென்று இருக்கும். நீங்கள் பேசினால் பதில் பேசாது. பொதுவாக ‘ஏ ஐயிரே..!’ என்றால் பதில் சொல்லாமல் வாய் மூடிப் போகும். இது சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஈரோடில் ஒரு சமூக விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உலோகம் Brahmin Lead என்று ஆங்கிலத்தில் அறியப்படும். BrPB என்பது இதன் கெமிக்கல் பெயர். மெண்டலீவ் பீரியாடிக் டேபிளில் இடம் அளிக்காமல் பார்ப்பன ஐரோப்பிய விஞ்ஞானிகள் சதி செய்து விட்டார்கள். எனவே இது தமிழ் பீரியாடிக் டேபிளில் மட்டும் இடம் பெற்றுள்ளது. நியாயமாகப் பார்த்தால் இதற்கு நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால் ஐரோப்பிய ஆங்கிலேய பார்ப்பன சதியாளர்கள் தலையீட்டால் ஈரோட்டுத் தமிழனுக்கு இந்த விருது அளிக்கப்படவில்லை.’

இப்படி ஒரு விளக்கம் தயார் செய்து கொள்ளவும். கொஞ்சம் டெக்னிக்கல் வார்த்தைகள் சேர்த்துக்கொண்டால் தமிழர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். இன்னும் முக்கியமான சடங்கு ஒன்று உள்ளது. ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புத்த ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, ஒபாமா ஜெயந்தி என்று எல்லா நாட்களுக்கும் ஒரு வாழ்த்துச் செய்தி தயாராக இருக்க வேண்டும். தீபாவளி, பிள்ளையார் சதுர்த்தி முதலியன இந்தியப் பண்டிகைகள் இல்லை என்பதாலும், செவ்வாய்க் கிரக மாந்தர்கள் மட்டுமே கொண்டாடுவதாலும் அவற்றிற்கு வாழ்த்து தெரிவிக்கக்கூடாது. அது பகுத்தறிவுக்கொள்கையின் தற்கால விதி.

நீங்கள் அ.தி.மு.க பேச்சாளர் என்றால் முதலில் நீங்கள் அன்று அந்தக் கட்சியில் இருக்கிறீர்களா என்று பார்த்துக் கொள்ளவும். பேசிக்கொண்டிருக்கும் போது அவ்வப்போது சென்னையில் இருந்து ஏதாவது அறிக்கை வந்துள்ளதா என்று ஜெயா டி.வி.யைப் பார்த்தபடியே பேச வேண்டும். எந்த நேரத்திலும் ‘கட்சி விரோத நடவடிக்கை’க்காக நீங்கள் நீக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் வாங்கும் மாமூல் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போகவில்லை என்று பொருள் கொண்டு அமைதியாக ஊருக்குப் போய் கோழிப் பண்ணை வைத்துப் பிழைத்துக்கொள்ளவேண்டும். மாறாக தி.மு.க. பக்கம் போவது போல் தெரிந்தால் அப்புறம் உங்கள் மனைவி உங்களை போட்டோவில்தான் பார்க்க முடியும். அது இதய தெய்வப் பகுத்தறிவுப் பாதை.

இதையும் தாண்டி நீங்கள் கட்சியில் இன்னும் இருந்தால், கைவசம் சில நூறு ஸ்டிக்கர்கள் வைத்திருக்கவேண்டும். அது அக்கட்சியின் அடிப்படைத் தகுதி. ஸ்டிக்கர் இல்லாததால் கட்சியில் இருந்து நீக்கம் என்று சொல்ல முடியாததால் ‘கட்சி விரோத செயல்’ என்று சொல்லி நீக்குவார்கள். அடிக்கடி உங்கள் சட்டைப் பையைத் தொட்டுப் பார்க்கவும். கைவசம் ஸ்டிக்கர் எண்ணிக்கை தெரிந்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் பேச்சாளராக இருக்க ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். நீங்கள் இந்தி பேசுபவராக இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற பம்பாய் நடிகையாக இருத்தல் அவசியம். இரு வாக்கியங்களுக்கிடையில் ‘மேலிடம்’ என்கிற பதப் பிரயோகம் இருக்க வேண்டும். மற்றபடி பேச ஒன்றும் இருக்காது. சத்திய மூர்த்தி பவனில் தினமும் நடக்கும் கைகலப்புகளில் ஏடுபட்டு ஆனாலும் அடி வாங்காமல் இருக்க வேண்டும்.

தே.மு.தி.க. பேச்சாளர் எனில்.. சரி. சரி. அப்படி இருக்க வாய்ப்பில்லை. அக்கட்சியில் பேசுவது ஒருவர் தான். உங்களுக்குப் பேச வாய்ப்பிருக்காது. பேச வேண்டும் என்றாலும் என்ன பேசுவது என்றெல்லாம் தெரியாது. எப்போது யாருடன் நண்பராக, யாருடன் எதிரியாக இருப்பது என்பது அக்கட்சியின் தலைவர்களுக்கே தெரியாத நிலையில் நீங்கள் பேசுவது சரியாக இருக்காது. ஆனால் ஒன்று. உங்கள் தலைவரின் கை படும் தூரத்தில் இல்லாமல் இருப்பது உங்கள் உடம்புக்கு நல்லது.

ம.தி.மு.க. பேச்சாளராக இருந்தால்.. மன்னிக்கவும். அந்தக் கட்சியில் பேசுவது ஒருவர் தான். ஏனெனில் அங்கு இருப்பது ஒருவர் தான். ஒரு கட்சி ஒரு உறுப்பினர் ஒரு தலைவர் ஒரு பேச்சாளர் – அனைத்தையும் செய்யும் ஒருவர் மட்டுமே உள்ள அக்கட்சிக்கு அறிவுரை சொல்ல எனக்குத் தகுதியில்லை.

பா.ம.க. பேச்சளர் எனில் முதலில் எத்தனை மரம் வெட்டினீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். கணக்கில் வீக் என்றால் பா.ம.க. உங்களுக்கு ஏற்ற இடம் அல்ல.

பா.ஜ.க. பேச்சாளர் என்றால் ? நல்ல கேள்வி. அங்கு பேச்சாளர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டில் தான் யாரும் இல்லை. இருப்பவர்கள் நாகரீகம், மரியாதை என்று பிற்போக்குத் தனமாக இருக்கிறார்கள். இராமாயணம், மஹாபாரதம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இப்போதைக்கு விளங்கப்போவதில்லை. எனவே அக்கட்சியின் பேச்சாளராக ஆக முயல வேண்டாம். ஆனாலும் உங்களை யாரும் முற்போக்குவாதிகள் என்று சொல்லப்போவதில்லை. பண்டாரப் பரதேசிகள், காவிகள் என்று அடைமொழிகள் கிடைக்கும். இது உங்களுக்குத் தேவையா?

பார்த்து சூதனமாக நடந்துகொள்ளுங்கள்.

நன்றி
அசட்டு அம்மாஞ்சி

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: