பேச்சில் நிதானமும் நாகரீகமும் அரசியலாளர்களிடம் இருந்த காலம் மூப்பனாருடன் முடிந்தது. நிலவுடைமைக் காலத்தின் ஒரு பிரதிநிதி என்று திராவிட இயக்கப் பெரியவர்களால் இழித்துக் கூறப்பட்ட மூப்பனார், வாய் தவறிக் கூட முறை தவறிப் பேசியதில்லை.
இத்தனைக்கும் பல உளைச்சல்களுக்கு ஆளானவர் அவர். நிலவுடைமைக் காலத்தையும் அதன் பிரதிநிதிகளையும் எத்தனைதான் ஏளனம் செய்தாலும் அந்த அமைப்பின் மதிப்பீடுகளால் தான் கலையும் இலக்கியமும் ஒரு நல்ல தரத்தில் இருந்தது என்பதை மறுக்க முடியாது. அது போலவேதான் அந்தக் கொள்கை கொண்டிருந்த வாக்குக் கட்டுப்பாடும்.
ஒரு முறை கலைஞர் ,’பாபனாசம் பண்ணையார் காரில் போவார், காப்பி குடிப்பார்’ என்று மூப்பனாரை விமர்சித்தார். மூப்பனாரிடம் பத்திரிக்கையாளர்கள் இது பற்றிக் கேட்டனர். ‘அப்படியா சொன்னார் கலைஞர்? நல்ல கேட்டீங்களா?’ என்றார். மேலும் கேட்கவே, அவர் புன்முறுவலுடன் சொன்ன பதில்,’உண்மை தான். கருப்பையா மூப்பனார் காரில் தான் போகிறேன். கலைஞர் சொல்வது சரி தான். ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தக் காரில் தான் செல்கிறேன்,’ என்றார்.
ஆணி அடித்தது போல் இருந்த அவரது பதிலுக்குக் கலைஞரால் பதில் சொல்ல முடியவில்லை. ஒரே பதிலில் நாகரீகமாகவும், ஆணித்தரமாகவும், வாழைப்பழத்தில் ஊசி போலவும், அதே சமயம் யார் மனதையும் புண்படுத்தும் விதமாக இல்லாமலும் பேசுபவர் அவர்.
அப்படியும் ஒரு காலம் இருந்தது. தலைவர்களும் இருந்தனர்.
அந்த நாளும் வந்திடாதோ!