முதல்வருக்கு ஒரு கடிதம்

முதலமைச்சர் அவர்களுக்கு,

வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

சில விஷயங்கள் பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன். கடந்த பல முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. போகட்டும்.

நான் கொஞ்சம் பழைய ஆள். இன்னும் கூட மின் துறை அமைச்சர் யார் என்றால் பண்ருட்டி ராமச்சந்திரன் என்பேன். அற நிலையத்துறை அமைச்சர் சவுந்தரராஜன் என்பேன். அவர்கள் எம்.ஜி.ஆரின் அமைச்சர்கள். இன்றும் நினைவில் உள்ளார்கள். அவர்கள் செயல்பாடு இன்றும் நினைவில் கொள்ளும்படி இருந்தது.

உங்கள் அமைச்சர்கள் யார் என்று தெரிய அவர்களைக் கொஞ்சம் பேசச் சொல்லுங்கள். அந்தந்த துறைகளில் சிறந்தவர்களைப் பணியில் அமர்த்துங்கள். உதாரணமாக : முன்னாள் காவல் தலைவர் நட்ராஜ் அவர்களை உள்துறை அமைச்சராக்கலாம். சட்டமும் தெரிந்தவர்.

“எங்கள் நிதி அமைச்சர் யார்? அவர் நிதி சம்பாதிப்பதைத் தவிர அவருக்கும் அதற்கும் என்ன தொடர்பு? கேப்பிடல் அக்கவுண்ட் டெபிசிட் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும் தான். ஆனால் நான் அவ்வளவுக்கெல்லாம் ஆசைப்படவில்லை. இந்த வருடம் நிதி ஆதாரங்கள் என்ன? வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு ஆகலாம்? துண்டு விழுந்தால் எப்படி ஈடு கட்டுவது? என்பது போன்ற அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். கொஞ்சமாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகப் போடுங்கள்,” என்று சொல்லலாம் என்று என் அருகில் நின்று யாரோ சொன்ன மாதிரி இருந்தது. நான் சொல்லவில்லை. இருந்தாலும், கொஞம் கணக்கு வழக்கு தெரிந்தவர்களைப் போடலாம். சி.ஏ. படித்த பலர் தனியார் துறைகளில் மின்னுகின்றனர். அவர்களைப் பயன் படுத்தலாம்.

“கல்வி அமைச்சர் என்பவர் ரொம்பப் படித்திருக்க வேண்டும் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. காமராஜும் கக்கனும் படித்தவர்களா என்ன? அதெல்லாம் வேண்டாம். ஆனால் தெளிவாகப் பேசுவார்கள். கொள்கையில் நெறியாய் இருப்பார்கள். அவ்வளவு நெறி இல்லாவிட்டாலும் கூட, கொஞ்சம் படிப்பு பற்றித் தெரிந்தவர்களாக இருந்தால் நல்லது. கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று நாலு வார்த்தை பேச முடிந்தால் நல்லது.”

இதையும் நான் சொல்லவில்லை. பக்கத்தில் அரூப ரூபத்தில் யாரோ சொல்கிறார்கள். எனக்குத் தோன்றுவது: ஓய்வு பெற்ற பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் உள்ளனர். கல்விக்கு உகந்தவர்கள். முடிந்தால் வெளி நாடுகளில் நல்ல பல்கலைகளில் பணிபுரியும் தமிழர்களைக் கொண்டு வரலாம். புதிய எண்ணங்கள் வர வழி பிறக்கும்.

மின் துறையும் அப்படியே. ஓய்வு பெற்ற, நிறைய பணி அனுபவம் உள்ள பொதுத்துறைத் தலைவர்களும், தனியார் துறையில் பெரிய பதவிகளில் இருந்தவர்களும் கிடைப்பர்.

“தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது தான். அதற்காக நடுப்பகலிலும், சாலை ஒரங்களிலும் அமைச்சர்கள் உங்களைப் பார்த்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது அவ்வளவு நன்றாக இல்லை. தினம் ஒருமுறை செய்தால் போதும் என்று நீங்கள் சொல்லிவிட்டால் நல்லது.”

ஐயையோ, இதையும் நான் சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த அரூப ரூபம் சொன்னது. வீதியில் சேவிப்பது பெருமாளுக்கும் ஆச்சாரியர்களுக்கும் மட்டுமே. அப்படி அமைச்சர்கள் சேவித்தே ஆக வேண்டும் என்றால், கோவில்களுக்குச் செல்லச் சொல்லுங்கள். தி.மு.க. உறுப்பினர்கள் தான் பகலில் கோவிலுக்குப் போக மாட்டார்கள். உங்கள் கட்சிக்கு என்ன? பகலில் போனால் தவறில்லை அல்லவா?

எம்.எல்.ஏ.க்கள் வேஷ்டி தான் கட்ட வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பேண்ட் போட்டாலும் நன்றாகவே இருக்கும். பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது வேஷ்டி அணிந்து செல்வது வழக்கம். ஆமாம். அப்படி ஒரூ வழக்கம் இருந்தது உண்மைதான். அதனாலோ என்னவோ வேஷ்டி கட்டியவுடன் விழுந்து கும்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்..

“உங்கள் அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்களையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று நான் அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்க மாட்டேன். ஆனால் நீங்கள் சந்தியுங்கள். அதுவும் ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத் முதலிய பெரிய பண்டிதர்களிடம் பேசுங்கள். ரெண்டு போடு போட்டால்தான் சரிப்படுவார்கள். தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகள் போல் அடங்கி இல்லாமல் ரொம்ப பேசுகிறார்கள். ஒருமுறை தோட்டத்திற்கு வரச் சொல்லுங்கள். எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்குத் தெரியாதது இல்லை. வக்கீல் விஜயன் விஷயத்தில் நீங்கள் ‘கவனிக்காததா’?” கடைசி வரி சத்தியமாக நான் இல்லை. அதே அரூப ரூபம் தான்.

சிங்கப்பூர், தோக்கியோ, அமெரிக்கா என்று உருப்படாத ஊர்களில் வாழ்ந்துள்ளேன். ஊர் முழுக்க ஒரு விளம்பரத் தட்டி கூட இல்லை. என்ன அரசாங்கம் நடக்கிறதோ என்னவோ. யார் பிரதமர் என்று இணையத்தைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஒன்று. ஊர்கள் நன்றாக இருக்கின்றன. சென்னையிலும் இப்படி ஊர் முழுக்க தட்டிகளே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்புறம் முதல்வர் யார் என்று தெரியாமல் போய்விடும். இலவசமாக டி.வி, கணிணி என்று கொடுத்துவிட்டதால் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வழி இல்லாமல் போய்விட்டது. அதனால் வீட்டுக்கு ஒரு தட்டி என்று இல்லாமல் தெருவுக்கு ஒன்று என்று இருக்கலாம் என்று தோன்றுகிறது. என்ன நினைக்கிறீர்கள்?

ஒருமுறை நியூயார்க் நகரின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் அருகில் தெருவில் சில போலீசார் தென்பட்டனர். சரவண பவன் சென்றுகொண்டிருந்த நான் என்னவென்று விசாரித்தேன். மூன்று நிமிடம் கழித்து சொல்வதாகச் சொன்னார்கள். ‘வி.ஐ.பி. மூவ்மண்ட்’ என்று மட்டும் சொன்னார்கள். இரண்டு கார்கள் சென்றன. கருப்பு நிறத்தில் பெரிய கார் சென்றது. பின்னர் இரு கார்கள் சென்றன. ரொம்ப உற்றுப் பார்த்தேன். கருப்புக் காரில் ஒபாமாவும் அவரது மனைவியும் தெரிந்தனர். சரியாக மூன்று நிமிடம் கழித்து போக்குவரத்து துவங்கியது.

இதை எதற்குச் சொல்கிறேன் என்று நினைக்கலாம். ‘நம்மூரில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?’ என்கிற எண்ணம் வந்தது. அதனால் சொல்கிறேன். மனது ஆசைப்படுகிறது. ஆசை தானே, படட்டுமே என்று விட்டுவிட்டேன்.

உங்கள் நல்ல மனதுக்கு உங்களுக்கு ஒரு குறையும் வராது. ஆனால் கொஞ்சம் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். காலாற நடந்த மாதிரியும் இருக்கும், மக்களுக்கு நீங்கள் சென்னையில் தான் இருக்கிறீர்கள் என்றும் தெரியும்.

மதுக்கடைகளை மூடப்போவதாகக் கேள்விப்பட்டேன். அந்தக் கட்டடங்களை சிறிய நூலகங்களாக்குங்கள். இதுவரை மது விற்ற பாவம் போகும். ‘ஐயன் படிப்பகம்’ என்று கலைஞர் பல கட்டடங்கள் கட்டியிருந்தார். ( நீங்கள் நம்பத்தான் வேண்டும். கலைஞர் தான், அவரே தான்). அந்தக் கட்டடங்களிலும் படிப்பகங்கள் செயல்படட்டும். கடலைப் பார்த்து நிற்கும் திருவள்ளுவர் திரும்பி நாட்டைப் பார்ப்பார்.

போகும்போது எதையும் கொண்டு போகப்போவதில்லை. நீங்கள் தெரியாதவர் இல்லை. ஆகவே உடல் நல்ல நிலையில் இருக்கும்போதே நல்ல விஷயங்களைச் செய்துவிடுங்கள். ஒரு நாளுக்கு ஒரு நல்ல காரியம் என்று வைத்துக்கொள்ளுங்கள் –  மக்களுக்கு, வேறு யாருக்கும் அல்ல.

எம்.ஜி.ஆரும் காமராசரும் இன்றும் வாழ்வது அதனால் தான்.

நன்றி

அசட்டு அம்மாஞ்சி.

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: