மஹாமஹோபாத்யாய ஶ்ரீ.உ.வே. கருணாநிதி ஸ்வாமி சன்னிதியில் அடியேன் அசட்டு அம்மாஞ்சி அனேக தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். உபய க்ஷேமம்.
மன்னிக்கவும். ‘ஸ்வாமி’ என்று போட்டது தவறு தான். அது தமிழ் இல்லை. ஆகையால் ‘சுவாமி’ என்று போடலாம் என்று பார்த்தால் அது சுப்பிரமணிய சுவாமியை நினைவு படுத்துவது போல உள்ளது. எனவே ‘ஸ்வாமி’ தான். வேறு வழி இல்லை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் மன்னிக்கவும். ‘உ.வே’ என்று போட்டது தவறா இல்லையா என்று தெரியவில்லை. ‘உபய வேதாந்த’ என்பதன் சுருக்கம் அது. சமஸ்கிருத வேதாந்தம் தமிழ் வேதாந்தம் என்று இரண்டு வேதாந்தங்களிலும் சிறந்தவர்களை அப்படிச் சொல்வது வழக்கம். ஆனால் தாங்களோ மிகப்பெரியவர். தங்களுக்கு எவ்வளவு மொழிகளில் பாண்டித்யம் என்று அளவிட முடியாது. எனவே ’N வே’ ‘where N tends to Infinity’ என்று வைத்துக்கொள்வோம். சரி தானே?
அதிருக்கட்டும். சமஸ்கிருதம் வேண்டாம் என்கிறீர்களாமே. ராமானுசர் பற்றி எழுதுகிறீர்கள் என்று சொன்னார்கள். ராமானுஜன் என்பது சமஸ்கிருதம். ஆமாம், ராமானுசர் எத்தனை தமிழ் நூல்கள் எழுதினார்? அவர் எழுதியதெல்லாம் சமஸ்கிருதம் தானே? நீங்கள் தான் அந்தத் தொடர் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்.
இல்லை இல்லை. யாரோ எழுதிக்கொடுத்து நீங்கள் பெயர் போட்டுக்கொள்கிறீர்கள் என்கிற பொருளில் நான் சொல்லவில்லை. வயதானதால் உங்களால் எழுத முடியாதே என்பதால் சொல்கிறேன். அவர் சொன்னதெல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பதால் உங்களுக்கு எப்படிப் புரிகிறது?
ஆனால் ஒன்று. உங்களுடன் பெரியாரும் அண்ணாவும் அடிக்கடி கனவில் வந்து உரையாடுவார்கள். ஒருவேளை அவர்கள் சொல்லியிருக்கலாம். ஏனெனில் ‘அண்ணா அன்றே சொன்னார்..’ என்று சொல்லிவிட்டால் ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது இல்லையா?
சரி போகட்டும். நீங்கள் காலையில் யோகாசனம் செய்கிறீர்கள் என்று படித்தேன். யோகம் என்பதும் ஆசனம் என்பதும் சமஸ்கிருதம் அல்லவா? நீங்கள் நியாயப்படி பார்த்தால் காலையில் சிலம்பம் சுற்றியிருக்க வேண்டும். எழுந்து நிற்க வேண்டாம். அமர்ந்தபடியே சுற்றலாம். எதற்குச் சொல்கிறேன் என்றால் யோகாசனம் செய்யச் சொல்லி ஆர்.எஸ்.எஸ். உங்களை அவர்கள் வழிக்குக் கொண்டுவந்து விடுவார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள். மன்னிக்கவும். சாக்கிரதையாக இருங்கள்.
இன்னொரு விஷயம். இல்லை, இன்னொரு செய்தி. ரூபாய் நோட்டில் இந்தியில் எழுதியுள்ளார்கள். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். மெல்ல மெல்ல இந்தியை உங்களிடமும் திணிக்கிறார்கள். ஒன்று செய்யலாம். அந்த இந்தி எழுத்தின் மேல் தார் பூசிவிடலாம். தெரிந்த கலை தானே. இல்லாவிட்டால் டாலர் நோட்டு மட்டுமே பயன்படுத்துங்கள். சேமிப்பில் உள்ளதை எடுத்த மாதிரியும் இருக்கும்; இந்தியை யாரும் திணிக்கவும் முடியாது. என்ன இருந்தாலும் ஆங்கிலம் நம் பாட்டன் மொழி அல்லவா? எப்படி அடியேனின் பகுத்தறிவு? எல்லாம் நீங்கள் போட்ட பிச்சை.
ஸ்டாலின் என்னும் பெயரை எப்படித் தமிழில் எழுதுவது என்று மட்டும் கொஞ்சம் சொல்லிவிடுங்கள். ‘சுடாலின்’ என்று எழுதினால் என்னவோ போல் இருக்கிறது. சரி. ரொம்ப யோசிக்க வேண்டாம். ‘அண்ணா கனவில் சொன்னார். ஸ்டாலின் என்பது தமிழ் தான்,’ என்று ஒரு போடு போட்டுவிடுங்கள். கனவில் கருத்து வருவதுதான் பகுத்தறிவு ஆயிற்றே.
இன்னொரு விஷயம். தாம்பரத்தில் ஒரு மாதா கோவில் உள்ளது. தமிழக, திராவிட இனம் சார்ந்த கலை அம்சங்களுடன் அது பெரிய கூம்பு கோபுரமும் அதன் மேல் சிலுவையும் இருக்கும். அப்படி இருப்பது பகுத்தறிவும் கூட. ஆனால் சமீப காலமாக அங்கு பிற்போக்கு பாசிச இந்துத்வ முறைப்படி தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், மணி முதலியன வைத்துள்ளார்கள். இது எத்தனை கொடூரம்? எந்த வழிபாட்டு முறைகளை நீங்கள் ஒழிக்க முற்பட்டீர்களோ அவையே இன்று மாதா கோவில்களிலும் தென்படுகின்றன. இதற்குப் பின்னும் ஆர்.எஸ்.எஸ். இருக்கலாம். தேர்தலில் உங்களுக்கு ஆதரவளித்த பேராயர்களிடம் சொல்லி வையுங்கள்.
அது இருக்கட்டும். ‘ரகுராம் ராஜன்’ விவகாரத்தில் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்காதது ஏன்? அவர் தமிழர் மாதிரிதான் தெரிகிறார். ப.சிதம்பரம் கூட அவருக்குக் குரல் கொடுக்கிறார். அவரது பெயரில் ‘ராம்’ இருப்பதால் நீங்கள் இன்னமும் போராட்டத்தில் குதிக்கவில்லையா? மோதி அரசு அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கவில்லை. எதற்கும் இருக்கட்டும். நீங்கள் ஒரு போராட்டம் அறிவியுங்கள். ஒரு அரை மணி நேரம் கடற்கரையில் அமர்ந்தது போலவும் இருக்கும். போராட்டம் நடத்தினது போலவும் இருக்கும். வீரமணியும் சும்மாதான் இருக்கிறார். அவர் வந்து பழச்சாறு கொடுத்து உங்கள் அரை மணி நேர கால வரையற்ற சாகும்வரை உண்ணா விரதத்தை முடித்து வைப்பார். மன்னிக்கவும். ‘விரதம்’ வட மொழி. ‘நோன்பு’ சரியாக இருக்குமா?
‘ஆயுர்வேதம்’ என்றொரு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். பெயரிலேயே ‘வேதம்’ இருக்கிறது. நமக்கு ஆகாது. ‘ஆயுர்’ என்பதும் வடமொழி தான். எனவே இதுவும் சமஸ்கிருதத் திணிப்பே. உடனே போராட்டம் துவங்குங்கள். கொஞ்சம் விட்டால் வை.கோ. முந்திக்கொண்டு விடுவார். பாரதியாரை விடுங்கள். ‘வேதம் வளர்த்த தமிழ் நாடு’ என்று சொல்லிவிட்டார் என்பதால் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமா என்ன? வள்ளுவர் கூட ‘கள் உண்ணாமை’ என்று ஒரு அதிகாரம் வைத்தார். அவர் பெயரைச் சொல்லிக்கொண்டே நீங்கள் மது விற்பனை செய்யவில்லையா என்ன?
‘சித்த மருத்துவம்’ தமிழர் முறை என்று சொல்கிறார்கள். ஆனால் ‘சித்த’ என்பது வடமொழியிலும் வருகிறது என்கிறார்கள். எதற்கும் தமிழறிஞர் வீரமணியைக் கேட்டுவிடுங்கள். அல்லது இருக்கவே இருக்கிறது ‘கனவு’ வழி. அண்ணா, பெரியார் யாராவது கனவில் வருவார்கள். கேட்டுப் பாருங்கள். இல்லையென்றால் சில ‘சித்த சுவாதீனம்’ இல்லாதவர்கள் இதைப் பற்றி எழுதுவார்கள்.
‘திருமங்கையாழ்வார்’ என்று ஒரு பழைய ஆள் இருந்தார். இவர் கள்ளர் மரபினர். ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாசுரங்களை அவர் பாடியுள்ளார். 9-ம் நூற்றாண்டுக்காரர். எனவே பெரியார் வழி, அண்ணா வழி நடக்க அவருக்கு வாய்ப்பில்லை. அதனால்தான் ‘செந்தமிழும் வடகலையும் நவின்ற நாவர்..’ என்று தேரழுந்தூர்ப் பாசுரத்தில் சொல்கிறார். தமிழையும் சமஸ்கிருதத்தையும் சரளமாகப் பேசிய மக்கள் இருந்த ஊர் என்னும் பொருளில் சொல்கிறார்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று போராட்டம் துவங்கலாம். திருமங்கையாழ்வார், ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலால் இப்படி எழுதினார் என்று வீரமணியிடம் ஒரு வார்த்தை சொல்லுங்கள். பொங்கி எழுந்து அவரும் வந்து விடுவார். வயதான காலத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அவரும் குழம்பியுள்ளார். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள்.
‘கச்சத் தீவை மீட்டெடுப்போம்’ என்று ஒரு நல்ல காமெடி நாடகம் நடத்துவது போல ‘ஆழ்வார்களை மீட்டெடுப்போம்’ என்று சொன்னால் கொஞ்ச காலம் காலட்சேபம் ஓடும். ‘காலட்சேபம்’ தமிழ் இல்லை தான். ‘பிழைப்பு’ என்று சொல்வது ரொம்பவும் ஒரு மாதிரி இருக்கிறது.
தொல்காப்பியர் வடமொழி பற்றிச் சொல்கிறார். அவ்வையார் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறார். பிதா, தெய்வம் எல்லாம் சமஸ்கிருதம் என்று கூட தெரியாத அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். அவர்களையும் மாற்றிவிட்டது. ‘தொல்காப்பியத்தை மீட்போம்’, ‘அவ்வையைக் காப்போம்’ என்றும் துவங்கலாம். கச்சத்தீவு மாதிரி இவையும் ‘விளங்கும்’. உங்களுக்கும் இன்னும் 2-3 ஆண்டுகளுக்கு பிழைப்பு ஓடும். பிழைப்பதற்கு சொல்லியா தரவேண்டும் ?
வடிவேலுவும் இப்போது இல்லை. சந்தானம், பரோட்டா சூரி எல்லாம் சகிக்கவில்லை. நீங்கள் தான் ஒரே கதி. எங்கள் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப் போட்டுவிடாதீர்கள். அவ்வளவு தான்.
உங்களை நகைச்சுவைக்கு என்றும் நம்பியுள்ள,
அசட்டு அம்மாஞ்சி.
சுவையான பதிவு அர்த்தமுள்ள நையாண்டி பாராட்டுக்கள் , ஒரு விண்ணப்பம் சம்ஸ்கிருதம், ஸமஸ்க்ருதம், என எழுதினால் ஒரே மாதிரியான மொழி எனப் பொருள். “ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மொழி” எனப்பொருள். “ஸம்ஸ் – செம்மையான, கிருதம் – மொழி” எனப் பொருள். இனியாவது …
LikeLike
நன்றி. திருத்திக்கொள்கிறேன்
LikeLike
அம்மாஞ்சி அசடு இல்லை சார், ரொம்பவே விவரம் சார்.
LikeLike